வழக்கறிஞர் கவிஞர் கே. இரவியின்
நோக்கில் திருவள்ளுவரின் தனிச்சிறப்பு.
கவிஞர் இரா. இரவி.
*****
திருக்குறள் உலகப்பொதுமறை, உலகம் போற்றும் உன்னத இலக்கியம். உலக அறிஞர்கள் யாவரும் பாராட்டும் வாழ்வியல்
இலக்கியம். காந்தியடிகள், இன்னொரு பிறவி
என்ற ஒன்று இருந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் ; காரணம்,
திருக்குறளை அது எழுதப்பட்ட மூலமொழியான தமிழ்மொழியில் படித்து மகிழ வேண்டும்
என்பதற்காக. காந்தியடிகளுக்கு திருக்குறளை
அறிமுகம் செய்தவர் டால்ஸ்டாய்.
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்றால் டால்ஸ்டாயின் குரு நமது
திருவள்ளுவர். ரசியாவில் உலகம்
அழிந்தாலும் அழியாத அறையில் இடம்பெற்றுள்ள அரிய நூல் திருக்குறள். உலகில் தமிழை அறியாதவர்களும் அறிந்த இலக்கியம்
திருக்குறள்.
திருக்குறளுக்கு இணையான ஒரு நூல் உலகில் இல்லை என்றே
கூறலாம். பாடாத பொருளே இல்லை எனும் அளவிற்கு
அனைத்துப் பொருளிலும் பாடி உள்ளார்.
மனிதன் மனிதனாக வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொன்னவர் திருவள்ளுவர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்கு
சிந்தனையுடன் எக்காலமும் பொருந்தும் வண்ணம் வடித்துள்ளார். தமிழ், தமிழர், தமிழன் என்ற சொற்களை
பயன்படுத்தவே இல்லை. ஆனால், தமிழின்
மகுடமாக விளங்குவது திருக்குறள். அதனால்
தான் மகாகவி பாரதியார், ‘வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான்புகழ் கொண்ட
தமிழ்நாடு’ என்று பாடினார்.
வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு திருக்குறள் ஒரு விழி என்றால்,
மகாகவி பாரதியார் கவிதைகள் மறுவிழி எனலாம்.
திருவள்ளுவர் மீதும், பாரதியார் மீதும் எல்லையற்ற அன்பு கொண்டவர். திருக்குறளை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து வடித்த
நூல் நன்று. சிறிய நூலாக இருந்த போதும்
சிந்திக்க வைக்கும் நூலாக உள்ளது. தமிழ்,
ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் நல்ல புலமை உள்ள காரணத்தால் இரண்டு மொழிகளிலும் நூல்
வடித்துள்ளார். கம்ப இராமாயணத்தின் மீதும்
ஈடுபாடு உள்ள காரணத்தால் இந்நூலில் ஆய்வில் சில மேற்கோள்களும் வருகின்றன.
திருக்குறளை பலரும் ஆராய்ந்தார்கள், ஆராய்வார்கள், எக்காலமும்,
முக்காலமும் ஆய்வுப்பொருளாக கருவாக இருந்து வருவது திருக்குறள். வழக்கறிஞர் க. இரவி அவர்களின் திருக்குறள்
ஆய்வு மிக நுட்பமானது. திருக்குறள்
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பால் கொண்டது. காமத்துப்பால் என்பதை சிலர் இனபத்துப்பால்
என்று எழுதியும் அச்சிட்டும் வருகின்றனர்.
இது தவறு என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
காமத்துப்பால் என்பது நல்ல சொல் தான்.
சிலர் அது கெட்ட சொல் என்று தவறாகக் கருதி பயன்படுத்தாமல் விட்டு
விடுகின்றனர். காமம் வேறு, இன்பம் வேறு,
பிழையான பொருளில் எழுதி வருகின்றனர்.
திருவள்ளுவர் இன்பத்திற்கு தரும் விளக்கம் மிகமிக நுட்பமானது. அந்த நுட்பத்தை வழக்கறிஞர் க. இரவி அவர்கள்
நுட்பமாக விளக்கி உள்ளார்.
“எந்த அக நிகழ்ச்சி அறத்தால் விளைகிறதோ அதுவே இன்பம்,
இது தான் குறளாசான் தரும் வரையறை! இன்பத்தின் இலக்கணம்”
அறத்தான் வருவதே இன்பம், அதாவது அறத்தின் உடனடி, நேரடி விளைவாக
வருவது தான் இன்பம். மற்ற, சில அக
நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி, குதூகலம் என்றெல்லாம் பெயர் பெற்று இன்பம் போல ஒரு
கருத்த்து மயக்கத்தைத் தோற்றுவிக்கலாமே தவிர அவை இன்பமாக மாட்டா. அவையெல்லாம் புறத்த ; புகழும் இல.
அறத்தான்
வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. 39
புறத்த புகழும் இல.
அற்புதமான திருக்குறளை
மேற்கோள் காட்டி வடித்த கருத்துக்கள் அருமை.
பிறர் கூறியன கூறாமல் வித்தியாசமாக கூறி உள்ளார் வழக்கறிஞர் க. இரவி அவர்கள்.
ஓவியம் ரசிப்பது, பூவின் வாசம் நுகர்வது இவை எல்லாம் இன்பம் அல்ல,
மகிழ்ச்சி மட்டுமே. இன்பம் என்பது
அறத்தான் வருவது என்று திருவள்ளுவர் வலியுறுத்தி உள்ளதை சான்றுகளுடன் நூலில்
நிறுவி உள்ளார். இந்த நூல் படித்த பின்பு
இன்பம் என்று இது நாள் வரை சொல்லியும், எழுதியும் வந்த எதுவும் இன்பம் இல்லை. இன்பம் என்றால் எது இன்பம் என்பதை நன்கு
உணர்த்தி உள்ளார். சிற்றின்பம் என்று
பயன்படுத்திய சொல்லும் தவறு என்பதை உணர்த்தியுள்ளார். சிற்றின்பம் என்ற சொல்லைப் பயன்படுத்தாமல்
சிறுமகிழ்ச்சி என்ற சொல்லைப் பயன்படுத்துவதே சரி என்ற முடிவுக்கு வரும் விதமாக
நூல் உதவியது.
வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பரபரப்பான வழக்கறிஞர் தொழில் புரிந்து
கொண்டே இலக்கியத்திலும் நாட்டம் கொள்வது தனிச்சிறப்பு. இலக்கிய ஈடுபாடு இதயத்தை இதமாக்கும்,
ஈரமாக்கும், இலக்கிய ஈடுபாடு தான் வாழும் காலத்திலேயே படைப்புகள் பற்றி
பேராசிரியர்கள் ஆராய்ந்து கட்டுரைகள் வழங்கும் அளவிற்கு உயர்ந்ததற்கு முதல் காரணம்
இலக்கிய ஈடுபாடு தான். படைப்பாளியைப்
பாராட்டும் முகத்தான் சென்னையில் நடந்த படைப்பாய்வு நூலாகி வெளிவந்த வெற்றியினைத்
தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மதுரையில் முத்திரைப் பதித்து வரும் திருமலை
மன்னர் கல்லூரியில் படைப்பாய்வு நடைபெறுகின்றது.
வாழும் காலத்திலேயே படைப்பாளியைப் பாராட்டும் பாங்கு மகாகவி
பாரதியார் காலத்தில் இல்லை.
இருந்திருந்தால் பாரதியார் 39 வயதில் இறந்து இருக்க மாட்டார். யானை மிதித்த காயம் பட்டு நோய்வாய்ப்பட்டு
இறந்தார். இன்றைக்கு உள்ள
விழிப்புணர்வும், மருத்துவமும் அன்றைக்கு இருந்திருந்தால் இளம்வயதில் பாரதியார்
இறந்திருக்க மாட்டார்.
சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பேச்சாளர், நிர்வாகி,
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சொல்வார்கள் ' இயங்கிக் கொண்டே இருக்க
வேண்டும் என்று' அவர் சொன்ன அந்த ஒற்றைச் சொல்லை தாரக மந்திரமாகக் கொண்டு இயங்கி
வருபவன் நான். வழக்கறிஞர் க. இரவி
அவர்களும் ஓய்வின்றி இயங்கி வருபவர் என்பதற்கு சான்றுகள் அவர் படைத்த நூல்கள். புதுவைப் பல்கலைக்கழகமும், வானவில் பண்பாட்டு
மையமும் இணைந்து புதுவையில் நடத்திய வள்ளுவரின் வாயிலில் வான்புகள் என்ற
பன்னாட்டுத் திருக்குறள் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட சிறிய நூல், ‘வள்ளுவரின்
வாயிலில்’. அதுபோல சிறிய நூலில் அரிய
கருத்துக்களை திருக்குறளின் சிறப்பை நுட்பத்தை நன்கு உணர்த்தி உள்ளார்.
வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பன்முக ஆற்றலாளர், கவிதைகள் பல
வடித்துள்ளார். இசைப்பாடல்களும் எழுதி
பாடல்களாக வந்துள்ளன. பல்வேறு நூல்களும்
எழுதி உள்ளார். www.ravilit.com என்ற இணையம் சென்று பாருங்கள்
என்று தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அய்யா சொன்னார்கள். சென்று பார்த்து வியந்தேன். அந்த இணையத்தில் இருந்து தான் ‘வள்ளுவரின்
வாயிலில்’ நூல் அச்செடுத்தேன். படித்தேன்,
பரவசம் அடைந்தேன்.
திருக்குறள் என்பது கடல்.
அதில் மூழ்கிடும் அனைவருக்கும் நல்முத்து, கருத்து முத்து கிடைக்கும். திருக்குறள் என்பது கருத்துச் சுரங்கம்,
தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும்.
திருக்குறள் குறித்து பல்வேறு நூல்கள் வந்துள்ள போதும், வழக்கறிஞர் க. இரவி
அவர்கள் எழுதிய இந்த சிறிய நூல் திருவள்ளுவரின் தனிச்சிறப்பை எடுத்து இயம்பி உள்ள
நூல். இன்பம் குறித்த இலக்கணம்
திருவள்ளுவர் போல் உலகில் வேறு யாருமே சொல்லி இருக்க மாட்டார்கள். இன்பம் என்பது பற்றிய புரிதலை திருவள்ளுவரின்
நோக்கில் விளக்கி உள்ள பாங்கு அருமை.
வழக்கறிஞர் க. இரவி அவர்களை தமிழ்த்தேனீ இரா. மோகன் அய்யா
அவர்களுடன் இலக்கிய விழாவிற்காக சென்னை சென்று இருந்த போது சந்தித்து மகிழ்ந்தேன். திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல் ஆய்வுக்
கட்டுரை எழுதுவதோடு நின்று விடாமல் திருக்குறள் வழி வாழ்ந்து வருபவர் ; புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து
இருப்பவர் ; எப்போதும் எங்கும் சினம்
கொள்ளாதவர் ; அதிர்ந்து பேசாத பண்பாளர் ;
நல்லவர் ; வல்லவர் ; அவரது இனிய மனைவி நாடறிந்த அறிவிப்பாளர் ; நல்ல
உச்சரிப்பாளர் ஷோபனா இரவியுடன் வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழகத்தின் தலைநகரில்
சென்னையில் வாழும் வழக்கறிஞர் க. இரவியின் படைப்புலகம் பற்றிய ஆய்வரங்கம். திருமலை மன்னர் கல்லூரி திட்டமிட்டு
ஒழுங்குபடுத்தி நடத்தி மகிழ்கின்றது.
படைப்பாளிக்கு இதற்கு இணையான மகிழ்ச்சி வேறு இல்லை என்றே சொல்லலாம். இதற்கு முன்பு கல்லூரியில் முதுமுனைவர் வெ.
இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் படைப்புலகம் பற்றி ஆய்வரங்கம் நடந்தது. நானும் இறையன்பு அவர்களின் படைப்பு பற்றி கட்டுரை
வாசித்து, ஓர் அமர்விற்கு தலைமை வகித்தேன்.
அப்போது அங்கு முதுமுனைவர் வெ. இறையன்பு வந்தார்கள். எழுந்து நின்றேன், என்னை அமர வைத்து விட்டு,
அவர் நின்று பேராசிரியர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை அளித்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது
அந்நாள். அந்த வாய்ப்பை வழங்கியவர்
திருமலை மன்னர் கல்லூரி பேராசிரியர் நம். சீனிவாசன் அவர்கள்.
இதுபோன்ற மலரும் நினைவுகளை மலர்விக்கக் காரணமாக இருந்தது இந்த நூல்.
கவிஞர் வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு 1330 திருக்குறளும்
பிடித்து இருந்தாலும் அவர் சிந்தையின் ஒரு மூலையில் எப்பொழுதும் ஒலித்துக்
கொண்டேயிருக்கும் ஒரு திருக்குறள் எது தெரியுமா?
யாதனின்
யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இவன் 341
அதனின் அதனின் இவன் 341
ஒருவன் எந்த எந்தப் பொருள்களின் மீது கொண்ட ஆசையை
நீக்கியிருக்கின்றானோ அவன் அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தால் வருந்துவது
இல்லை.
வழக்கறிஞர் க. இரவி அவர்களுக்கு எது சரி என்பதைச் சில நேரங்களில்
அவரது அறிவு அவருக்கு உணர்த்த முடியாத போது திருக்குறள் தீர்வுகளே அவரை
நெறிப்படுத்தியதாக நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு மட்டுமல்ல உலகில் பிறந்த மனிதர்கள் யாவருக்கும் எந்த ஒரு
பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது உயர்ந்த திருக்குறள்.
இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள இராமேசுவரத்தில் படகோட்டி மகனாகப்
பிறந்து இந்தியாவின் முதற்குடிமகனாக உயர்ந்தவர்.
தினசரி செய்தித்தாள்கள் விற்று படித்து தலைப்புச் செய்தியானவர் மாமனிதர்
அப்துல் கலாம் அவர்கள் மிகவும் நேசிப்பதும், வாசிப்பதும் திருக்குறளே. எங்கு பேசினாலும் திருக்குறளை மேற்கோள்
காட்டியே பேசுவார்கள். சாதனை மனிதராக அவர்
உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது திருக்குறள் என்றால் மிகையன்று.
கவிஞர் வழக்கறிஞர் க. இரவி அவர்கள் பன்முக ஆற்றலாளராக, கவிஞராக,
கட்டுரையாளராக, இசைப்பாடல் ஆசிரியராக, சிறந்த பேச்சாளராக, சிறந்த வழக்கறிஞராக,
சிறந்த இலக்கியவாதியாக படைப்புலகம் பற்றி ஆய்வு நடத்தும் அளவிற்கு அவர்
வளர்ந்திடக் காரணம் திருக்குறள் என்றால் மிகையன்று.
திருக்குறளை ஆழ்ந்து படித்ததோடு நின்று விடாமல் வாழ்வில்
கடைபிடித்த காரணத்தால் தான் இந்த நிலை அவரால் அடைய முடிந்தது. வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்களுக்கு
திருக்குறள் மட்டுமன்றி பாரதியார் பாடல்களை ஆழ்ந்து உணர்ந்து படித்துள்ளார். கம்ப இராமாயணத்தையும் ரசித்து, ருசித்து
படித்துள்ளார். அதன் தாக்கம் இந்த சிறிய
நூலில் காண முடிகின்றது. திருவள்ளுவரை
பல்வேறு கோணத்தில் ஆய்வு நிகழ்த்தி உள்ளார். கவிஞர், வழக்கறிஞர் க. இரவி,
திருவள்ளுவர், திருக்குறள் எழுதும் போது 1330 திருக்குறளுக்கு அதிகமாகவே எழுதி
இருப்பார், எழுதி முடித்த பின்பு தள்ள வேண்டியதை தள்ளி விட்டு 1330 திருக்குறளை மட்டுமே
தேர்வு செய்து இருப்பார் என்று இவர் கணித்து எழுதி உள்ளார். இவரது கணிப்பு உண்மையாக இருக்க வாய்ப்புண்டு.
அகத்தே இன்பம் தருவது பற்றி, அறம் பற்றி, மகாபாரத்தில் வரும் காட்சியை
எழுதி விளக்கி உள்ள கருத்து மிக நன்று.
அதிலிருந்து சில துளிகள் இதோ!
“கர்ணனிடம் வந்து அவன் உடலோடு ஒட்டிப்பிறந்த கவச, குண்டலங்களை
இந்திரன் யாசகமாகக் கேட்கிறான். கவச
குண்டலங்களைத் தந்து விட்டால், போரில் பாண்டவரகள் தன்னை எளிதில் வென்று விட
முடியும் என்று கர்ணனுக்குத் தெரியும்.
ஆனாலும் கொடுத்துச் சிவந்த கரங்களால் கவசத்தையும், இருசெவிக்
குண்டலங்களையும் அறுத்தெடுத்துத் தருகிறான் கர்ணன். புறத்தே மகிழ்ச்சி தர முடியாத இச்செயல்
கர்ணன் அகத்தே இன்பம் விளைவித்தது ஏன்?
அதைத்தான் ஈத்துவக்கும் இன்பம் என்று அடையாளம் காட்டுகின்றார்
திருவள்ளுவர்.
நான் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளராக இருந்த போதும்,
கர்ணன் பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதற்குக் காரணம் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன் என்று கூட சொல்லலாம்.
கர்ணன் திரைப்படத்தை மிகவும் விரும்பி ரசித்துப் பார்த்தவன். மனதை விட்டு அகலாத, அந்த ஒப்பற்ற காட்சியினை
நூலில் எழுதி நம் கண்முன் காட்சிப்படுத்தி ஒப்பற்ற திருவள்ளுவரின் தனிச்சிறப்பை ஒப்பிட்டுக் காண்பித்த விதம் அருமை.
பாராட்டுக்கள்.
புலால் உண்ணாமல் வாழ்வதே அறம் என்கிறார். புலால் உண்ணாமை அறம் மட்டுமல்ல. தன்னலமும் உள்ளது எனலாம். இன்றைக்கு மருத்துவர்கள் அனைவரும் உடல்நலத்திற்கு
சைவ உணவை பரிந்துரை செய்கின்றனர். 40
வயதைக் கடந்து விட்ட பலர் உடல் நலன் கருதி மருத்துவரின் ஆலோசனையின் பேரில்
அசைவத்தை கைவிட்டு சைவமாக மாறி வருகிறார்கள்.
சைவமாக வாழ்வது விலங்குகளுக்குச் செய்யும் அறமாக இருந்தாலும் நீண்ட நாள்
நலமாக வாழும் தன்னலமும் உள்ளது.
கொல்லான்
புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் 260
எல்லா உயிரும் தொழும் 260
இந்தத் திருக்குறளையும் மேற்கோள் காட்டி திருவள்ளுவரின்
தனிச்சிறப்பை உணர்த்தி உள்ளார். கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் என்ற சொல்லாட்சியின் மூலம் திருவள்ளுவர் உயர்ந்து நிற்கிறார்.
வழிபாட்டுச் சடங்குகள் பற்றிய குறிப்பே இல்லை என்று சொல்லி விட
முடியாது. எடுத்துக்காட்டுகள் மலர்மிசை
ஏகினான் (3), இந்திரனே சாலும் கரி (25), தாமரைக் கண்ணன் உலகு (103), செய்யவள்
தவ்வை (167) என்று குறிப்பிட்டுள்ளார் நூலில், வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்கள்.
திருவள்ளுவர்
கடவுள் வாழ்த்து 10 திருக்குறளும் ,கவிஞர், வழக்கறிஞர் க. இரவி குறிப்பிட்ட கடவுள் பெயர்களும்
குறிப்பிட வில்லை என்றால் நமது கைக்கு திருக்குறளே கிடைத்து இருக்காது
என்பது என் கருத்து.
கணினி யுகத்திலும், மூட நம்பிக்கைகளும், சோதிடங்களும்,
குருபெயர்ச்சி பலன்களும், போலிச் சாமியார்களும் பெருகி உள்ளது இக்காலத்தில். திருவள்ளுவர் காலத்தில் மூட
நம்பிக்கைகள் பற்றி சொல்லவே தேவையில்லை.
ஆனால் அவர் அன்றே, நான் சொல்வதற்காக எவரும், எதையும் ஏற்க வேண்டாம் என்பதை,
எப்பொருள்
யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 423
என்ற குறள் மூலம் விளக்கியுள்ளார்.
மாமனிதர் அப்துல் கலாம் சொன்னவை என் நினைவிற்கு வந்தது .
"எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள
கிரகங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் நம்பிக்கை இல்லை ." மாமனிதர் அப்துல் கலாம் கருத்து !
" நான் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போது மரண தண்டனை பற்றிய முடிவுகள்தான் எனக்கு மனவலியை ஏற்படுத்தின . மரண தண்டனையை அப்புறப்படுத்த வேண்டும் ."
மாமனிதர் அப்துல் கலாம் அவர்கள் திருக்குறளை ஆழ்ந்து படித்து அதன் வழி
நடப்பதன் காரணமாகவே பகுத்தறிவோடும், மனிதே நேயத்தோடும் கருத்துக்கள்
சொல்ல முடிகின்றது
வழக்கறிஞர், கவிஞர் க. இரவி அவர்கள், திருக்குறளின் மீது ஆழ்ந்த
ஈடுபாடு கொண்டு, படித்து, ஆராய்ந்து ‘வள்ளுவரின் வாயிலில்’ நூல் வடித்துள்ளார். இந்நூலில் எடுப்பு, தொடுப்பு யாவும் மிக
நன்று. முடிப்பில் மட்டும் எனக்கு உடன்பாடு
இல்லை. காரணம் வழக்கறிஞர், கவிஞர் க. இரவி
ஆன்மிகவாதி. கவிஞர் இரா. இரவி பகுத்தறிவுவாதி.
“அண்ணன்மார்களும், தம்பிமார்களும் செய்த முயற்சிகளைத் தந்தை
அங்கீகரிக்கவில்லை, அவர் திருவள்ளுவரை காட்டுமிராண்டி என்றே சொல்லி ஒதுக்கி
விட்டார்”.
நூலில் எழுதியுள்ள இக்கருத்தை மறுக்கின்றேன். தந்தை பெரியார் நூல்கள் பல படித்து உள்ளேன் .தனது எழுத்திலோ, பேச்சிலோ, எந்த
இடத்திலும் திருவள்ளுவரை காட்டுமிராண்டி என்று சொன்னதோ, எழுதியதோ இல்லை, இல்லவே
இல்லை. திருக்குறள் மாநாடு நடத்தி
திருக்குறளை மக்கள் மத்தியில் பரப்பியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் இலட்சியம், நோக்கம்,
எல்லாமும் ஒரே ஒரு திருக்குறளில் அடக்கி விடலாம்.
எப்பொருள்
எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355
கவிஞர், வழக்கறிஞர் க. இரவி அவர்கள், தந்தை பெரியார் பற்றிய தவறான
கருத்தை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும் அடுத்த பதிப்பில் தவறான இக்கருத்தை நீக்கி விடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து நிறைவு
செய்கிறேன்.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://www.eraeravi.blogspot.
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கருத்துகள்
கருத்துரையிடுக