அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அழகிய முதல் துளி ! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !



உயிர்எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம்,
கருமண்டபம், திருச்சி-1. விலை : ரூ. 60.


கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களின் முதல் நூல். புதுக்கவிதைகளின் தொகுப்பு நூல். உயிர்எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, புதியபார்வை, கணையாழி, புதுவிசை, தாமரை, மணல்வீடு போன்ற இதழ்களில் பிரசுரமான கவிதைகளை நூலாக்கி உள்ளார்கள். மறக்காமல் கவிதைகளை பிரசுரம் செய்த இதழ்களுக்கு நன்றியை நன்கு பதிவு செய்துள்ளார்.
‘அழகிய முதல் துளி’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. பாராட்டுகள். சங்க காலத்தில் 30-க்கு மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள், என்பார்கள். அவ்வை என்ற பெயரில் 3-க்கு மேற்பட்டவர்கள் இருந்ததாக ஆய்வுகள் சொல்கின்றன. பெண் கவிஞர்கள் எண்ணிக்கை இன்று குறைவாகவே உள்ளதே. அதிலும் நூலாக்கி உள்ள பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. பல பெண் கவிஞர்கள் திருமணத்திற்குப் பின் எழுதுவதையே நிறுத்தி விட்டேன் என்று சொல்பவர்களும்உண்டு. கவிஞர் அ. ரோஸ்லின் அவர்கள் புதுக்கவிதை உலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். நீலநிலா உள்பட பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.செம்பா 40 இலக்கிய விழாவிற்கு சிவகாசி வந்து இருந்த பொது இந்த நூலை வழங்கினார்கள் .ஹைக்கூ கவிதைகள் எழுத முயலுங்கள் வரும் என்று சொன்னேன் .எழுதுவதாகச் சொன்னார்கள் .
முதல் நூலே முத்தாய்ப்பாக வந்துள்ளது. திரு. சமயவேல் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் இருண்மை கவிதைகள் புரியாத கவிதைகள் எழுதுபவர்கள் உண்டு. எழுதிய கவிஞரே வந்து விளக்கம் சொன்னால் தான் புரியும். ஆனால் அ. ரோஸ்லின் கவிதைகள் எளிதில் புரியும் வண்ணம் உள்ளது. பாராட்டுகள். முதல் முறை படித்து விட்டு இரண்டாம் முறை படித்தால் தெளிவாக புரிந்து விடுகின்றன. உருமாறும் வார்த்தைகள் என்ற தலைப்பிட்டு எழுதியுள்ள நூல். நூல் ஆசிரியரின் என்னுரையும் கவித்துவமாக உள்ளது.
அழகிய முதல் துளி!
குப்பை மேட்டுகளைக் கிளறிக் கொண்டிருக்கிறாள்
காயத்திரி! துருவேறிய ஆணிகள்
கரடுமுரடான
கண்ணாடிகள்
புளித்த காற்றினில் பரவிக் கிடக்கும்
நோயின் வாசனை அமிழ்ந்த
கருநிறக் கழிவுக்குள்
இருந்தது
அவள் ஆதிப் பயணத்தின்
அழகிய முதல் துளி !
இக்கவிதை படிக்கும் போது நம் மனக்கண்ணில் குப்பை கிளறும் சிறுமி கண்முன் வருகிறாள். இதனால் அவளுக்கு நோய்கள் பரவும் என்ற பல்வேறு தகவல்களை ஒரு கவிதை தந்து விடுகிறது. நூலில் மொத்தம் 76 புதுக்கவிதைகள் உள்ளன.
கடந்து போன !
கடந்து போன
ஒவ்வொரு கணத்திலும்
உன் நினைவு
எழாமலில்லை
எனினும் அவை
எத்தடயமும்
இன்றியே
நகர்ந்து செல்கின்றன
இந்த
இரவைப் போல.
ஊடலின் காரணமாக காதலர்கள் பிரிந்து விட்டாலும் அவரவர் பற்றிய நினைவுகள் மனதிற்குள் ஒவ்வொரு கணமும் வந்து போகும். மனதிற்குள் போராட்டம் நடக்கும் நினைவலைகள் அடிக்கும். ஆனால் அதன் சுவடுகள் வெளியே தெரிவதில்லை. அதற்கான உவமையாக இரவை எழுதி முடித்தது முத்தாய்ப்பு.
இயற்கையின் மீது நேசமும், பாசமும் நூல் ஆசிரியர் கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களுக்கு நிரம்ப உள்ளது. மரம் வெட்டுவதற்கான கண்டனத்தை வித்தியாசமாக பதிவு செய்துள்ளார்.
இரத்தத்தின் ஓசை!
மலைச் சரிவுகளில்
ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது
முறிக்கப்பட்ட
மரங்களுக்கான
மண் மூடிய
இரத்தத்தின் ஓசை !
வழக்கமாக எல்லோரும் எழுதும் விதமாக மானே தேனே என்ற வர்ணனைகள் தவிர்த்து புதிய சொல்லாடல்கள் கொண்டு மாறுபட்ட கோணத்தில் புதுக்கவிதைகள் வடித்துள்ளார்.
உனக்களிக்க !
உனக்களிக்க அநேகமுண்டு
என் மணற்பரப்பில்
புதிதென்று கிடைக்கும்
இன்னும் எவரும்
அகழாய்ந்திடாத
அன்பின் சொல்லுயிர்
சான்றுகளும்
சில அழியா
கல்வெட்டுகளும்.
வெட்டவெளியில் நாம் நடந்து பார்த்தால் உணரும் உணர்வை நல்ல கவிதையாக்கி நூலாசிரியர் உணர்ந்த உணர்வை வாசகரையும் உணர வைத்து வெற்றி பெறுகின்றார்.
எல்லை !
விழி எட்டும் தொலைவு
கடந்தாயிற்று
கடக்க கடக்க
விரிகிறது
விழி எட்டும் தொலைவு.
இயற்கையின் விரிந்த பரப்பையும் நம் சிறிய விழிகளின் பெரிய விசாலப் பார்வையையும் நன்கு உணர்த்தி உள்ளார்.
மரங்களில் மிக அழகானது, ரம்மியமானது எல்லோருக்கும் பிடிக்கும் பேன்சாய் மரம் பற்றிய கவிதை மிக நன்று. இக்கவிதையைப் படித்து விட்டு பேன்சாய் மரம் பார்க்கும் போதெல்லாம் இக்கவிதை நினைவுக்கு வரும்.
பிரயாசை !
உனக்கான கனவுகளை
நிறைக்கும் கற்பனைகளை
ஆர்த்தெழும் பசுமைகளை
சிலிர்க்கும் மலர்களை
தேடலுக்கான வேர்களை
உயிர்ச் சந்ததியை
ஒரே தொட்டிக்குள்
எப்படி வளர்த்தாய்
என் பேன்சாய் மரமே.
கவிதைகளில் காட்சிப்படுத்துதல் ஒரு யுத்தி, இக்கவிதை படிக்கும் போது கவிதையின் வரிகளின் மனக்கண்ணில் விரிந்து காட்சியாகின்றது பாருங்கள்.
மறக்க இயலாதவைகளின்!
மறக்க இயலாதவைகளின்
பட்டியலில் இணைந்திருக்கிறது
புதியதொன்று
நீரலையின் மேற்புறத்தில்
தத்தளிக்கிறது ஓர் இறகு.
இப்படி நூல் முழுவதும் ரசனைக்குரிய கவிதைகள் உள்ளன. வாங்கிப் படித்துப் பாருங்கள். நூலாசிரியர் கவிஞர்
அ. ரோஸ்லின் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்