மாசில்லா ம.பொ.சி. வாழ்க! கவிஞர் இரா. இரவி

மாசில்லா ம.பொ.சி. வாழ்க!

கவிஞர் இரா. இரவி

குப்பத்தில் பிறந்து கோபுரமாக உயர்ந்தவர்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்!
ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயரை தாயன்பால்
ஞானம் பெற்று சிவஞானம் என்று மாற்றியவர்!
ஏட்டுக்கல்வி படித்து மூன்றாம் வகுப்பு மட்டும் தான்
ஏனைய வாழ்க்கைக் கல்வி எண்பத்தி ஒன்பது வரை!
விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்
விடுதலையை உயர்மூச்சாக உணர்த்திக் காட்டியவர்!
மீசை மட்டுமன்றி மனசும் பெரிதாகப் பெற்றவர்
மட்டற்ற இலக்கிய நூல்கள் பல வடித்தவர்!
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழரை
செந்தமிழ்நாடு முழுவதும் அறிந்திட வைத்தவர்!
வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின்
விவேகமான வீரத்தை நூலாக வடித்தவர்!
தமிழறிஞர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்றவர்
தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம் பெற்றவர்!
சிலப்பதிகாரத்தை சிறையிலேயே கரைத்துக் குடித்தவர்
சிலம்புச்செல்வர் பட்டத்தை சேதுப்பிள்ளையிடம் பெற்றவர்!
பறிபோக இருந்த திருத்தணியை மீட்டுத் தந்தவர்
பாமரராக பிறந்து படித்தவராக வளர்ந்தவர்!
சிங்காரச் சென்னையை தமிழகத்தோடு சேர்க்க வைத்தவர்
சினத்தோடு எழுமலையும் எங்கள் மலைகள் என்றவர்!
மதிப்புறு முனைவர் பட்டத்தை பல்கலைக்கழகங்கள்
ம.பொ.சி.-க்கு சென்னையும் சிதம்பரமும் தந்து மகிழ்ந்தன!
மேலவைத் தலைவராக இருந்து அழகு சேர்த்தவர்
மேதையாக இருந்த போதும் அடக்கமாய் வாழ்ந்தவர்!
தமிழக வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்தவர்!
தள்ளாத வயதிலும் தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்!
ம.பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கள் மண்ணிலும்
மக்கள் மன்ங்களிலும் கல்வெட்டாகப் பதிந்தது!

கருத்துகள்