ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம் நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்


நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன் 

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

ஓவியா பதிப்பகம், 17-16-5எ, கே.கே. நகர், வத்தலக்குண்டு – 642 202.
பேச : 76675 57114  விலை : ரூ. 100

*****
       நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களை சென்னையில் நடந்த விழாவில் அம்மா மித்ராவின் ஹைக்கூ கவிதை விருது வாங்க மனைவியுடன் வந்து இருந்தார்.  முகநூலில் சந்தித்த நண்பரை நேரடியாக சந்தித்து மகிழ்ந்தேன்.  முகநூல் கவிதைகள் குறித்தான பாராட்டை இருவரும் பகிர்ந்து கொண்டோம்.  பின்னர் அலைபேசியில் பேசியபோதும் கவிதைகளை நூலாக்குங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.  வேண்டுகோளை நிறைவேற்ரி உள்ளார்.  நூலின் பதிப்பாளர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்கலள் வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே எனக்கு அனுப்பி விட்டார், மதிப்புரைக்கு.

       சொற்களை சூட்சுமமாக அடுக்கி, மனதை வருடும் விதமாக, சிந்திக்க வைக்கும் விதமாக, அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, படைப்பாளி உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கும் உணர்த்தும் விதமாக வடிப்பதே கவிதை.  இந்நூலில் காதல் கோட்டை இயக்குனர் அகத்தியன் அவர்களும், மணிமேகலை பிரசுரம் முனைவர் லேனா. தமிழ்வாணன் அவர்களும் அழகிய அணிந்துரை வழங்கி உள்ளனர்.  நூலினை மிக நேர்த்தியாக வடிவமைத்து அச்சிட்டு பதிப்புரையும் நல்கி உள்ளார் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா.

       நூலின் பெயரே மிக வித்தியாசமாக உள்ளது.  கவிதை நூலிற்கு திரைப்படப் பெயர் போல சிந்தித்து சூட்டியுள்ளார்.  அட்டைப்பட வடிவமைப்பும் கவிதைகளுக்குப் பொருத்தமான ஓவியங்கள் வரைந்த ஓவியர் சுந்தர் அவர்களுக்கும் பாராட்டுகள்.

       நூலாசிரியர் கவிஞர் நூர்தீன் அவர்கள் முகநூலில் கவிதை எழுதாத நாளே இல்லை என்று சொல்லுமளவிற்கு தினந்தோறும் எழுதி வருபவர்.  ஹைக்கூ கவிதைகள் மட்டுமல்ல, புதுக்கவிதைகளும் தனக்கு வரும் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக நூல் உள்ளது. 

       மழைக்குத்  தெரிவதில்லை
       வித்தியாசம்
       அடுக்குமாடிகளும்
       குடிசைகளும்
       அதற்கு ஒன்று தான்
       பொழுதுபோக்காகவும்
       ஏழைகளுக்கு போராட்டமாகவும் பெய்கிறது.

       மழையை கவிஞர் கூர்ந்து பார்த்த பார்வையின் விளைவே இக்கவிதை.  நடைபாதையில் வசிப்பவர்கள், குடிசையில் வசிப்பவர்கள் மழையை விரும்புவதில்லை.  காரணம், மழை அவர்களுக்கு இன்னலையே தருகின்றது.  ஆனால் பணக்காரர்கள் பங்களா வாசலில் அமர்ந்து மழையை ரசித்து மகிழலாம்.  ஒரே மழை சிலருக்கு இன்பமாகவும் பலருக்கு துன்பமாகவும் அமைவது படம் பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார்.

       நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றது.  குறிப்பாக திரைப்படத் துறையினர் ஒரு பேய்ப்படம் வசூலாகி விட்டது என்ற காரணத்திற்காக வரிசையாக பேய்ப்படம் எடுத்து வருகின்றனர்.  படைப்பாளிகள் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக்க் கொண்டால் படைப்பில் தரம் இருக்காது. உலகில் எங்குமே இல்லாத பேயை இருப்பதாக்க் காட்டுவது பித்தலாட்டம்.  நூலாசிரியர் மூட நம்பிக்கைகளைச் சாடும் விதமாக பல கவிதைகள் வடித்துள்ளார்.  பதச்சோறாக ஒன்று.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக
ஆலமரம்
யாரோ கிளப்பிவிட்டபுரளியில்
மரத்தைச் சுற்றிலும்
பிரார்த்தனைத் தொட்டில்ட்டினார்கள்
புத்திர பாக்கியமில்லாதவர்கள்
வறுமை
வாட்டிய பூசாரியும்
செழிக்கத் தொடங்கினார்புத்திர பூஜையில்
மனிதன் உயிர் வாழ
சுவாசம் தரும் மரம்
மனிதனை எப்படித் தரும்?  
நம்பிக்கை வீண் போகவில்லை
தொட்டில் கட்டியவர்கள்
யார் யாருக்கு குழந்தைப்பேறு
கிடைத்ததோ தெரியவில்லை
வருடா வருடம்
பெற்றெடுக்கிறாள்
பூசாரியின் மனைவி.
      
       கவிதையை எள்ளல் சுவையுடன் முடித்து பகுத்தறிவு விதைத்துள்ளார்.  பாராட்டுக்கள்.

       ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.  ஆனால் புத்த பிட்சுகளோ பேராசை பிடித்து சிங்கள மதவெறி பிடித்து மனிதநேயமற்ற முறையில் இலங்கையில் பேசி வருகின்றனர்.  அவர்களுக்கான கவிதை மிக நன்று.

       போதிமரத்தையெல்லாம்
வெட்டி விற்று விட்டானா? புத்தன்
       வெப்பம் தாங்காமல் மதம் பிடித்து
மனித ரத்தக் குடித்து
       தாகம் தீர்த்துக் கொள்கிறார்களே
புத்த பிட்சுகள்.

       இலங்கையில் தமிழினப் படுகொலையை சுட்டுவதாக உள்ளது.  காதலைப் பாடாத கவிஞர் இல்லை.  காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை.  நூலாசிரியர் கவிஞர் வலங்கைமான் நூர்தீன் அவர்களும் காதலைப் பாடி உள்ளார்.  காதல் கவிதையிலும் இயற்கை நேசம் தெரியும் விதமாக எழுதி உள்ளார்.

       நீ கொடுத்த
ஒற்றை முத்தத்தில்
என்னில் பறக்கின்றன
ஆயிரம் பறவைகள்
உன் கேசத்தை எதற்கும்
கலைத்து வை.
அதிலாவது கூடு கட்டட்டும்
மரங்கள் காணா 
அப்பறவைகள்.

       வித்தியாசமாக கற்பனை செய்து வடித்த கவிதை நன்று.  எங்கே பறவைகளைக் காட்டுங்கள் என்று காதலி கேட்கக் கூடாது.  கவிதையாக ரசிக்க வேண்டும்.  அவ்வளவு தான்.  கவிதைக்கு பொய்யும் அழகு புரிந்திடல் வேண்டும்.

       சிறுகதை வடிவிலும் சில கவிதைகள் உள்ளன.
       முத்தம் பற்றிய கவிதைகள் சில வந்தாலும் சிறப்பாகவே உள்ளன.

       சிக்கு முக்கி
கற்களாய்
முத்தத்தால்
உரசிக் கொண்ட போது
தேகம் பற்றி எரியும்
மோகத் தீயால்
உன்னால் நானும்
என்னால் நீயும்      
அணைக்கப்பட்டு
ஃபீனிக்ஸ் றவைகளாகும் போது
மீண்டும்
பற்றிக் கொள்ளும் இதழ்கள் !

       முத்தம் பற்றிய மலரும் நினைவுகளை மலர்வித்து வெற்றி பெறுகின்றது கவிதை.  படைப்பாளி உணர்ந்த உணர்வை படிக்கும் வாசகருக்கும் உணர்த்தி விடுகிறார்.  இனிமை நினைவுகள் வந்து விடுகின்றன.  நாம் மிகவும் நேசித்தவர்கள் புரியாமல் திட்டும் போது, கேட்கும் கேட்காதது போல ஆகி விடுவதுண்டு. அன்பானவர்கள் திட்டி அதற்கு செவிமடுத்தால் உள்ளத்தில் ஏற்படும் ரணம் சொல்லில் அடங்காது.

       சொல் அம்புகளால்
தாக்கி ரணப்படுத்தி
அதில் நீ
மகிழ்வதாக      
நினைக்கிறாய். 
உனக்கெப்படித் தெரியும்
அதற்காக நீ என்       
வாயடைக்கும் போதே
நான் பூட்டிக் கொண்டது      
என் காதுகளையும் என்று !

       நீண்ட நெடிய கவிதைகள் மட்டுமல்ல, சொற்சிக்கனத்துடனும் சில கவிதைகள் உள்ளன.

ஒருமுறை பூத்தால்       
மரணதண்டனை மலர்களுக்குநீ மட்டும் தினமும்  
பூத்துக் கொண்டேயிருக்கிறாய்!

       .  இந்த நூல் கண்டிப்பாக அடுத்தடுத்த பதிப்புகள் வரும்.  வாழ்த்துக்கள்.  அடுத்த பதிப்பில் பதிப்பக முகவரி தமிழிலும் இடம் பெறட்டும்.  ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.96 ஆம் பக்கம் " கோவில் " என்பது கோவல்  என்று அச்சாகி உள்ளது . அடுத்த பதிப்பில் திருத்திடுங்கள்.

நூலின் தலைப்பில் உள்ள கவிதை அடுக்கு மாடி குடியிருப்பின் இன்னலை நன்கு உணர்த்தி   உள்ளது .

பிரமாண்டமான
தோட்டத்துடன் கூடிய
பெரிய கிராமத்து
வீட்டை விற்று
ஆசையுடன் புதிதாய்
நகரத்தில் வாங்கிய
அடுக்குமாடி குடியிருப்பில்
ஏழாவது தளத்தில்
எண் நூறு சதுரடி வீட்டில்
பாப்பா தேடுகிறாள்
இரவில் சோறு ஊட்டும்போது 
முற்றத்தையும் நிலாவையும் !

.திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற பிறந்த ஊரை பெயரோடு இணைத்துக் கொண்டு பிறந்த மண் பற்றாளர் வலங்கைமான் நூர்தீன் தொடர்ந்து எழுதிட வாழ்த்துக்கள்


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





கருத்துகள்

  1. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம் - நூல்ஆசிரியர் : கவிஞர் வலங்கைமான் நூர்தீன்

    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

    ஓவியா பதிப்பகம், 17-16-5எ, கே.கே. நகர், வத்தலக்குண்டு – 642 202.
    பேச : 76675 57114 விலை : ரூ. 100 = அருமையான நூல் விமர்சனம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு https://www.facebook.com/rravi.ravi

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக