கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !

கவியமுதம் !


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
இ1, சில்வர் ஸ்ட்ரீக் அடுக்ககம், 3, மேடவாக்கம் சாலை, கீழ்கட்டளை, சென்னை – 600 117.  
உலாபேசி   99414 69028.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com 
இணையம் www.vanathi.in

********
கவிஞர் இரா. இரவி, தமிழ் கவிதையின் அனைத்து வகைமைகளிலும் வடம் பிடித்தவர் ; குறிப்பாக ஹைகூவில் தடம் பதித்தவர்.  சொல்லில் விறுவிறுப்பு, செயலில் சுறுசுறுப்பு – இது இரவியின் தனிச்சிறப்பு.  நூலின் முகவுரையில் திரு. வெ. இறையன்பு அவர்கள் குறிப்பிடுவது போல, இரவி – ‘சலசலத்து ஓடிக்கொண்டேயிருக்கும் நதி’ – மனித நதி ; மற்றொரு வைகை போல – மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகிப் போனவர் ; ஒன்றிப் போனவர்.

‘வாழ்வது ஒரு முறை, வாழ்த்தட்டும் தலைமுறை’ எனத் தம் வாழ்வியல் நெறியை அடுத்தவர்கட்காகவும் அர்த்தப்படுத்திக் கொண்டவர், இரவி.  இணையதளத்தின் மூலம் உலக உறவு பிணைக்கும் ‘கணினி பூங்குன்றன்’.  தமிழ் ஹைகூக்கள், ‘ஹைக்கூ திலகம்’ என்று அவருக்கொரு தலைமையிடத்தைக் கொடுத்திருந்தாலும், இந்தக் ‘கவியமுதம்’ – ஒரு - தனியிடத்தைக் கொடுக்கும்.

‘அறு’சுவை – அமுதுச் சுவை என்றாலும், கவிஞர் அதை ‘ஒன்பான்’ சுவைகளில் உருவேற்றித் தருகிறார்.  ஒன்பது உள் தலைப்புகள்.  ஒரு நல்ல சமையலின் கைப்பக்குவம் அதன் மணத்திலேயே புலப்படுவது போல, இவரது கவிப்பக்குவத்தின் மணத்தை, தலைப்புகளிலேயே நுகர முடிவது, அருமை!

1)     இளைய தளம் – ‘நம்பிக்கைச் சிறகுகள்’ : இளைஞர்க்கு முதலிடம்.  ‘இளைய பாரதத்தை’ வரவேற்றார் பாரதியார்.  ‘இளைஞர் இலக்கியம்’ படைத்தார் பாவேந்தர்.  இளைஞர்களுக்கு ‘அக்கினிச் சிறகுகள்’ அர்ப்பணித்தார் அப்துல் கலாம்.  கவிஞர் இரவி, ‘நம்பிக்கைச் சிறகுகள்’ தருகிறார்.

கூற வந்த கருத்துக்கள் போய்ச் சேர வேண்டிய இடம் எது – என்பதில் கவிஞர் தெளிவாயிருக்கிறார்.  உளவியல் பாங்கில் இளைய மனங்களைப் பக்குவப்படுத்தி நம்பிக்கையை விதைப்பது நல்ல உத்தி.

இளைஞனை, ‘தன்னிகரில்லாதவன் நீ என்பதை அறி’ என, உற்சாகப்படுத்துகிறார் ; ‘தாழ்வு மனப்பான்மையைத் தூக்கியெறி’ என்று ஆலோசனை கூறுகிறார்.  ‘உன் வாழ்க்கை உன் கையில் உள்ளது’ என்று சுட்டிக் காட்டுகிறார்.

வா, ‘விண்ணில் அல்ல ; மண்ணில் உள்ளது சொர்க்கம்’ என்பதோடு, பார், ‘திறந்தே இருக்கிறது வாசல்’என்றும் அழைக்கிறார்.

இலக்கியத் தேனீ இரா. மோகன் அவர்கள் குறிப்பிடுவது போல, ‘நம்பிக்கைச் சிறகுகள்’ பகுதியின் உள்தலைப்புகளைத் தொடுத்தே – ஒரு வெற்றிமாலையாக்கிச் சூட்டுகிறார், கவிஞர் இரா. இரவி.
விவேகானந்தரின் ‘மனித உருவாக்கம்’ (MAN MAKING) கவிஞர் இரவியின் கவிதைகளில் ‘இளைஞர் உருவாக்’கமாக (YOUTH MAKING) வெளிப்படுவதைக் காண முடிகிறது.
2)     மொழி வளம்      - ‘தமிழ், தமிழர் நலம்’
பாவேந்தர், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்றார் ; கவிஞர் இரவி,
ஒரு படி மேலே போய், ‘தமிழ் எங்கள் உயிருக்கு மேல்’ என்று பதிவு செய்கிறார்.  ‘தாயினும் உயர்ந்தது தமிழ்’ எனவும் உணர்த்துகிறார்.

தமிழ் – மொழிச் சிறப்பைப் போற்றிப் பாடும் கவிஞர், மொழிச் சிதைவைச் சீற்றத்துடன் சாடுகிறார்.
‘என்ன வளம் இல்லை தமிழ்ச் சொற்களில்?’ என்று வெடிக்கிறார்.  ‘இருப்பவன் பிச்சை எடுத்தல் அநியாயம்’ என்று முகத்தில் அடிக்கிறார்.
‘சொற்களின் சுரங்கம் நம் சுந்தரத் தமிழ் ;
       சுவைகளின் அரங்கம் நம் முத்தமிழ்’
என்று தன் வாதத்தை அடுக்குகிறார்.
‘உயர்தனிச் செம்மொழி’ – தமிழின் சிறப்பு ; பிறகு, ஏன் மொழிக் கலப்பு? ‘கலப்படம் மொழியில் – குற்றமே’ – என அச்சுறுத்தி,
‘கலப்பு, தாவரத்தில் நன்மை தரலாம் ;
       கலப்பு, மொழிக்குத் தீமையே தந்திடும்!’
என்றும் எச்சரித்து, ‘தமிழா, தமிழ் பேசு ; தமிழாய்ப் பேசு’ என்கிறார் கவிஞர் இரவி.

       தமிழ் மறை ‘திருக்குறளை’ முன்னிலைப்படுத்துவதில் முதன்மை-யாயிருக்கிறார், கவிஞர் இரவி.

       ‘1330 திருக்குறளை மனப்பாடம் செய்வதை விட
       பத்து திருக்குறள் வழி நடப்பது நன்று’ –

திருக்குறளை வெறும் ‘மேற்கோள்’ நூலாக்கி விடாமல், வாழ்வில் மேற்கொள்ளும் நூலாகக் கொள்வது நம் கடமை என்பதை உணர்த்துகிறார்.

       ‘தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன ;
       தேசிய நூல் மட்டும இல்லையே, ஏன்?’ என்ற கவிஞரின் – கேள்வியின் ஆதங்கமும்,

       ‘உலகப் பொதுமறையைத் தேசிய நூலாக்க
       உமக்குத் தயக்கம் ஏன்?’ –

என்கிற அவரது தேசியக் கேள்வியின் நியாயமும் – ‘சரி’ என்பதற்கான அவரது வாதங்களும் அருமை.

3)     சான்றோர் திறம் – இது, பன்னிரு திரட்டு.

       இப்பகுதியில், பெரியார், காமராசர், அண்ணா என முத்திரை பதித்த பல்துறை வித்தகர் 12 பேர் பாடல் பெறுகிறார்கள்.  அவரவரையும் ஓரிரு வரிகளில் அடையாளப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

       ‘தமிழகத்தில் பெரியார் பிறக்காது போயிருந்தால்
       தமிழகம் அறியாமை இருளிலேயே இருந்திருக்கும்’
‘அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த
       அருந்தமிழர் – காமராசர்!’
‘அறிவின் சிகரம் அறிஞர் அண்ணா ;
       ஆற்றலின் அகரம் அறிஞர் அண்ணா!’

என, மூவரையுமே அறிவின் வழி கவிஞர் பொருத்திக் காட்டுவது, சிறப்பு – அவர்தம் ஏனைய பண்புகளும் பணிகளும் பட்டியலிட்டிருந்தும்.

கவிஞர் இரவி, தென்னாப்பிரிக்க நெல்சன் மண்டேலாவை,
‘கருப்பு இனத்தின் விடுதலையின் வீர நெருப்பே ;
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே!’

என்று பாராட்டுகிறார்.  இரண்டாவது வரி அற்புதம்! ‘கருப்பு இருளன்று ஒளி’ என்கிற சிந்தனை அழகு! (பாரதிகூட தன் வசன கவிதையில் இருட்டை – ‘குறைந்த ஒளி’ என்று கூறி கவுரவப்படுத்துவார்).

       மண்ணோடு சேர்த்து மரத்தையும் நேசித்த மாமனிதர் – வேளாண் விஞ்ஞானி – பசுமைக் காதலர் நம்மாழ்வார்.  இயற்கையெய்தி விட்டாலும்,

       ‘இறுதியாக இருக்கும் இயற்கையிலும்
       உறுதியாக இருக்கும் அவர் முகம்!’
என்று – தன் சொல்வெட்டால் ஒரு கல்வெட்டு படைக்கிறார் கவிஞர் இரவி.
       ‘நடுவுல சில பக்கங்கள்’ ..............
4)     காதல் செவ்வி : இது ஓர் ‘இனியவை நாற்பது’
       நாற்பது குறும்பாக்கள் ; காதல் குறும்புப் பாக்கள்.  வள்ளுவரின் மூன்றாம் பால் மன்மத முலாம் பூசி வருகிறது.  ‘மலரினும் மெல்லிது காமம்’ ; சிலரதன் செவ்வி தலைப்படுவார்’.  அப்படித் தலைப்பட்ட சிலரில் கவிஞர் இரவி ஒருவரோ?
       ‘சொல்லித் தெரிவதல்ல – இது’ என்பதனால் – அந்த நெருப்பு உணர்வுகளைக் கறுப்பு எழுத்துகளில் – அச்சடித்தே கொடுத்து விட்டார் போல.  இரவியின் மையில் இந்தப் பகுதியே ‘மையல்’ பூத்து நிற்கிறது.
       படிக்கும் ஒவ்வொருவரும், ‘இது என்னுணர்ச்சிப் பாடல்’ என எண்ணி மகிழும் தன்னுணர்ச்சிப் பாடல் தொகுப்பு – காதல் வகுப்பு!
       ‘காதல், கண்களால் உச்சரிப்பது’
       ‘கண்களின் கொடுக்கல் வாங்கல் – காதல்’
       ‘தூங்கும்போது காணும் கனவில் அவள் ;
       தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள்!
       கலாம் என்னை மன்னிக்கட்டும்!’
       ‘உன் மீது – ஆசை வைத்திருக்கும் எனக்கு
       ஆசையை அறவே அழி – என்ற
       புத்தனைப் பிடிக்கவில்லை’
இப்படி, ‘சாம்பிள் டோஸ்’களில் அடங்குவதல்ல ‘அது’ ; அதை எவரும் ‘அப்படியே முழுசாக அனுபவிப்பது தான் சரியாயிருக்கும்!
5)     பெண்மை நலம் :  ‘பெண்ணின் பெருமை’
       ‘அ’கரத்தைக் கடவுளுக்கு உவமை கூறுவார் வள்ளுவர்.  அந்தக் கடவுளே அன்னை என்கிறார், கவிஞர் இரவி.
       ‘’அ’வில் தொடங்கும் அற்புதம், அன்னை’ என்கிற கவிஞர். மனித குலமும் மற்ற உறவுகளும் அவளில் தானே தொடக்கம் என்பதையும் அடுத்த வரிகளில் அழகாகப் படம் பிடிக்கிறார்.
       ‘கருவறையில் சுமந்த கடவுள் அன்னை’ என்று சொற்கோயில் கட்டுகிறார்.  ஆனால், நடைமுறையில் பெண்ணின் நிலை?
       ‘சராசரியாக வாழ்ந்தது போதும், பெண்ணே ;
       சரிநிகர் சமமாய் வாழ வேண்டும் பெண்ணே!’ என்று
பெண்ணுக்குச் சமநிலை விரும்புகிற கவிஞரால், சமாதானம் அடைய முடியவில்லை.
       ‘வியத்தகு சாதனைகள் நிகழ்த்துபவள் பெண்!’ என்பதால்,
       ‘சாதிக்க முயன்றிடு பெண்ணே, உன் கடமை!’ என்று ஊக்குவிக்கிறார்.  அன்பால் இந்த மண்ணை அளந்த அன்னை தெரசா, ஆற்றலால் விண்ணை அளந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் – என, சாதனைப் பட்டியலைச் சாட்சியாக்குவது சாதுரியம்.
       பெண் சிசுக் கொலையைக் கண்டிக்கும் கவிஞர்,
       ‘காட்டுமிராண்டிக் காலத்தில் கூட சிசுக் கொலை இல்லை ;
       கணினி யுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை!’
என்று நம் ‘நாகரிகத்’ தின் தலையில் ‘நச்’சென்று குட்டுவது நெத்தியடி!
6).     சூழல் நலம் :       ‘சுற்றுச் சூழல் விழிப்புணர்வு’
       இன்றைய அவசியமும், அவசரமும் என்பதால், சுற்றுச் சூழலுக்கு ஒரு பகுதியே ஒதுக்கியுள்ளார், கவிஞர் இரவி.
       மழை, மரம், காடு – என மரியாதை செய்ய வேண்டியவற்றுக்கெல்லாம் ‘இறுதி மரியாதை’ செய்து விடுவோமோ – என்கிற அச்சம், கவிஞர் – மழையும் மரமுமே பேச விடுகிறார்.
       என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி?
       ‘நாங்க பூமிக்கு வர மரங்கள் உதவுகின்றன!’
       ஆனால், அந்த மரத்தின் ஆதங்கம்?
       அறிணை மரம் நான்,
       பூ காய் கனி நிழல்
       காற்றும் அளித்தேன் ;
ஆனால்,
       ‘உயர்திணை மனிதனோ
       நன்றி மறந்து பரிசளித்தான் ;
       கோடரியை!’
காரணம்,
மனிதனின் மனக்கோளாறு, என்கிற கவிஞர்,
அது சரியாக,
‘காடு – அதை நாடு’
‘வனம் சென்று ரசித்து வா ;
மனம் செம்மையாகும் சிந்தித்து வா!’ 
என்கிறார்.
ராபர்ட் ப்ராஸ்ட்டும், வேர்ட்ஸ்வொர்த்தும் கூட கவிஞருக்கு நன்றி பாராட்டுவார்கள் என நம்பலாம்!
       ‘வருங்காலத் தலைமுறைக்குச் சொத்து வைக்காவிட்டாலும்
       வளமிக்க இயற்கைக் காடு தரும் பசுமைச் செழிப்பை விட்டு வைப்போம்!
மனதில் பதியும் வரிகள்!
7)     நாளும் நகரமும் :
       கவிஞர் இரவி, புத்தாண்டை வரவேற்கிற போது கூட,
       ‘மூடப்பழக்கங்கள் முற்றாக ஒழியும் ஆண்டாகட்டும் ;
       மூளையைப் பகுத்தறிவு பயன்படுத்தும் ஆண்டாகட்டும்’
என்று பாடுவது, இவர், ஈரோட்டுப் பாதையில் நடந்த பாவேந்தர் வழிப் பாவலர் என்பதை நிரூபிக்கும்.
       ‘இனிக்கவில்லை பொங்கல் ; கசந்தது தமிழருக்கு!
       இனியாவது நதிகளை இணைக்க முயலுங்கள்!’
என்று எழுதுகிற இவர், ஒட்டுமொத்தத் தமிழர்களின் குரலாக எதிரொலிக்கிறார் – இதில், அவரது, சமூக அக்கறை புலப்படுகிறது.
       ‘மரத்துக்கு அழகு பூக்கள் பூப்பது ;
       மனிதர்க்கு அழகு உழைத்து வாழ்வது!’
‘உழைப்பு’, உயிரியற்கை’ என்பதை அழகாகச் சொல்லும், உழைப்பாளர் தினச் செய்தி ; அருமை, அந்த உவமை!
8)      சமூக தளம் : ‘சமூகச் சித்தரிப்பு’
சாதி வெறி, வறுமைக் கொடுமை, ஆபாச நஞ்சு, புகை போதை – போன்ற சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான அறச்சீற்றம்.
‘இளவரசன் முடிவு – கொலையோ, தற்கொலையோ,
       இரண்டுமே அவமானம் சமுதாயத்திற்கு’.
சாதிவெறிக்கு நல்ல சாட்டையடி!
ஓடுகிற ஆறுகள் நஞ்சானது போக,
ஊடகங்களில்,
‘ஆபாச நஞ்சு ஆறாக ஓடுகின்றது’
என்பது, ஓர் எச்சரிக்கைப் பதிவாக –எதிர்கொள்ள வேண்டிய ஒன்று.
பணம் – பத்தும் செய்யும்.  கறுப்புப் பணம், மதுப் பணம், ஊழல் பணம் – என இன்று, நோக்கும் போக்கும் மாறிப் போன,
‘இந்தியாவின் பணத்தில் காந்தியடிகள் படம்
      இனி அச்சடிப்பதை உடனே நிறுத்துங்கள்!’
என்கிற கவிஞரின் கோரிக்கை – ஓர் அறப்போராட்டத்திற்கான முழக்கமாகவே அமைகிறது.
9).    உணர்புலம் ‘உணர்ச்சி ஊர்வலம்’
      பார்வை இழந்த ஒருவரின் உணர்வுப் பதிவுகள், ‘விரல்களே விழிகளாக’ கவிதை – கவி ஞாயிறு தாராபாரதியின், ‘பார்வை விரலின் நுனியில் தான் – எனக்குப் பகலும் இன்னொரு இரவு தான்’ என்ற வரிகளை – இணைத்துப் பார்க்கச் சொல்லும்.
      ‘காலமெல்லாம் எங்களுக்குக்
      கண்ணாமூச்சி விளையாட்டானது’
என்னும் வரிகளால் நம் கண்களைக் கலங்க வைத்தாலும், அது கழிவிரக்கமாகி விடாதபடி –
      ‘விழியிருந்தும் அறிவுப் பார்வையற்றோர் உண்டு ;
      விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு!’
என்று – கவிஞர், தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட வரிகளோடு முடித்திருப்பது முத்தாய்ப்பு.!
      ‘மனக்கவலை நீக்கும் மருந்து’ – புத்தகம்
      எதெதிலோ எளிதாகத் தொலைந்து போகிற, போன -
      ‘மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம்!’
என்ற அற்புதமான வரியில் புத்தகத்தை அடையாளப்படுத்தும் கவிஞர் இரவி,
      ‘தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம்!’
ஒளி-ஒலி ஊடகங்களால் மறைந்தும், மறந்தும் வருகிற வாசிப்புப் பழக்கத்தை மீட்டெடுக்கும் இயக்கம் உருவாக்க வேண்டிய நிலையில், இந்தக் கவிதை, ஓர் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாகிறது.
       கவிஞர் இரா. இரவியின் ‘கவியமுதம்’ நூலின் தொடக்கக் கவிதையிலும், நிறைவுக் கவிதையிலும் வியத்தக்க ஓர் இயைபு அமைந்து விட்டது. 
       ‘மண்ணில் உள்ளது சொர்க்கம்’ என்று துவங்குகிற நூல், அந்தச் சொர்க்கம் எதுவெனச் சுட்டிக் காட்டி – ‘மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம்!’ – என நிறைவடைவது சிறப்பு.
       கவிஞர் இரா. இரவியின் கவித்துவத்தின் முழுமையையும், மொழி, இனம், சமூகம் சார்ந்த கருத்துக்களின் முதிர்ச்சியையும், முத்திரையிட்டுக் காட்டுகிற நூல் அவரது ‘கவியமுதம்’. 
ஒரு தாய்மனப் படைப்பாளியின் தூய்மையும் துலங்குகிற நூல் இது.
       வரவேற்போம் ; வாழ்த்துவோம்!



.

கருத்துகள்