‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

‘கவியமுதம்’


நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்  
 இந்திரா சௌந்தர்ராஜன்
93-A, 4-ஆவது குறுக்குத் தெரு, சத்ய சாய் நகர், மதுரை – 625 003.
********
மதுரையைச் சேர்ந்த நண்பர் இரா. இரவியை நான் பல்லாண்டுகளாய் அறிவேன்.  சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சிங்கமாய வலம் வருபவர்கள் எவ்வளவோ பேர்.  அதில் இரவியும் ஒருவர்!

அரசுப்பணியில் இருக்கின்ற போதிலும், அது, தமிழ் நேசத்துக்கும், சுவாசத்துக்கும் தடையாக இல்லாதபடி திட்டமிட்டுக் கொண்டு, கடமைக்கு பாதி நாள் / கவிதைக்கு பாதி நாள் என்று வாழ்ந்து வருபவர்.

இணையம் எனப்படும் கம்ப்யூட்டர் இன்று உலகப் பரிச்சயம்.  இன்று இதன் தொடர்போடு இல்லாதவர்கள் ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசிப்பது போன்றவர்கள்.  திரு. இரவி இந்த இணையத்தோடு காலம்காலமாக வாழ்ந்து வருபவர்.  இணையத்துக்குள் இவரது ஹைக்கூ கவிதைகள் ஆயிரமாயிரமாய் கொட்டிக் கிடக்கின்றன.

அப்படிப்பட்ட இரா. இரவியின் ஒரு கவிதை நூல் தான் கவியமுதம்!

புகழ்பெற்ற வானதி பதிப்பகம், வெகு அழகாய், நேர்த்தியாய் வெளியிட்டுள்ளது.  உள்ளிருக்கும் கவிதைகளும் மிக எளிய ரகம்.

வீட்டை விட்டு தெருவில் பிரவேசிக்கையில் தென்படும் அக்கம்பக்கத்தவர் போல மிக எளிமையாக மனதுக்கு நெருக்கமாய் திகழ்கின்றது.

என் கவிதைகளில் கருத்துக்கு முதல் இடம் ;  சந்தம், வார்த்தை ஜாலம், இலக்கணப்பாங்கு எல்லாம் பிறகு தான் ; என்பது போல திகழ்ந்திடும் இந்த கவிதைகள், பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மிக மிக ஏற்றவை.

சில நேரங்களில், சில கவிதைகளை வாசிக்கும் போது பொருள் புரிந்து கொள்ள, அதை எழுதிய கவிஞருக்கே போன் போட்டு பேச வேண்டி எல்லாம் நேர்ந்து விடுகிறது.  இரவியிடம் அந்த சிரமம் இல்லை, பளிச், பளிச் சென்று புரிகிறது.

‘மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்     
      மனிதனைக் கண்டுபிடித்து தந்ததும் புத்தகமே...’

என்கிறார்.  மறுக்க முடியுமா? 

அதே போல
தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு!’ என்கிறார். 
யாரால் மறுக்க முடியும்?

       ‘அவரை விதை வடிவில் உள்ள மனித விதை
       அவ்விதை பழுதானால் மனிதனுக்கு வதை!’

என்று உலக சிறுநீரக தினக் கொண்டாட்ட தினத்தில் விழிப்புணர்வுக் கவிதையில் குறிப்பிடுகிறார்.

       ‘கவியமுதம்’ கவித்தொகுப்பு முழுக்க, இதுபோல ஏராளமான எளிய கவிதைகள். 

இரவியிடம் ஒரு விஷயத்தை நட்போடு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.  சமூக விஷயங்களில் கிரிக்கெட் போன்ற விளையாட்டு, தீபாவளி போல் பண்டிகைகள் பலரால் விரும்பப்படுகிறது.  இரவிக்கு இம்மட்டில் மாற்றுக் கருத்து ... இந்த மாற்றுக் கருத்துகள் விவாதத்திற்குரியவை... விரும்புகின்றவர்கள் பக்கமும் நியாயங்கள் உள்ளது.  எனவே மாற்றுக் கருத்துடைய கவிதைகளை எழுதும் போது தன்நிலைப்பாடு இது என்று கூறுவதில் தவறில்லை.  பிறர் நிலைப்பாட்டை தவறாகக் காண்பது சிலர் வரையில் வருத்தத்தை உருவாக்கி விடும்.

கவிதைகள் வருத்தம் போக்குபவை.  தருபவையல்ல.  இரவியும் அறிவார்.  இதை மட்டும் அவர் கவனத்தில் கொண்டால் போதும், மற்றபடி கவிஞர் இரா. இரவியின் சமூக அக்கறை மிகமிக போற்றுதலுக்குரியது.  இக்கவியமுதமும் வாழ்க்கைக்கு உரியது.  வாழ்த்துகிறேன்.
.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com 
இணையம் www.vanathi.in

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்