கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி, மதுரை. நூல் விமர்சனம் ! கவிஞர் ச. கோபிநாத் சேலம்

 கவியமுதம் !  நூல் ஆசிரியர்  கவிஞர் இரா.இரவி, மதுரை.




நூல் விமர்சனம் ! கவிஞர் ச. கோபிநாத் சேலம்

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com 
இணையம் www.vanathi.in

சாதிக்கத் துடிக்கும் மனிதர்களுக்கு உழைப்பும் சுறுசுறுப்பும் தெளிந்த சிந்தனையும் இன்றியமையாத தேவை. சுறுசுறுப்பு, உழைப்பு, தெளிந்த சிந்தனை ஆகியவை ஒருங்கே அமைந்த சாதனை மனிதராய் கவிதை, கட்டுரை, நூலாய்வு போன்ற தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார் கவிஞர் இரா.இரவி.
ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் கவிஞர், வாசகர்களுக்கு தன் புதுக்கவிதைகளை வாசிக்க பரிமாறியிருக்கும் நூலே கவியமுதம். நூலின் அட்டைப்படமும் கட்டமைப்பும் வாசகர்களை வாசிக்கத் தூண்டுகிறது.

நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் – தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி, பெண்ணின் பெருமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூக சித்திரிப்பு, உணர்ச்சி ஊர்வலம் என பல பிரிவுகளின் கீழ் தன் கவிதையை வகைப்பிரித்து வாசகர்களுக்கு கவிவிருந்து படைத்திருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சாதிக்க இன்றியமையாத தேவை தன்னம்பிக்கை. அத்தகைய தன்னம்பிக்கையே மனிதனை சாதிக்கத் தூண்டும் என்பதை,

“என்னால் முடியாது
என்றே நினைத்தால்
முயன்றது முடியாது!
யாரை நீ நம்பாவிட்டாலும்
உன்னை நீ நம்பு!
நினைத்தது கிட்டும்!”

என நம்பிக்கைத் தெம்பூட்டுகிறார்.

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர்களின் பெருமைகளையும் பறைசாற்றும் தமிழ் – தமிழர் நலம் பிரிவில் தமிழின் பெருமைகளை மிடுக்கோடு கூறும் கவிஞர் “தமிழன் அன்றும் இன்றும்” எனும் கவிதையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பேகன், பாரி, மனுநீதிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகாலன், இராஜராஜ சோழன் போன்றவர்களை பட்டியலிட்டு பெருமைப்படுத்துகிறார்.

தந்தை பெரியார், கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா என சாதனையாளர்களின் சரித்திரம் பேசும் சான்றோர் திறத்தில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் செயல்பாடுகளை,
“விதையில்லா பொருள்கள் விளையும் நிலத்தை
வீணாக்கும் என்றார் யாரும் கேட்கவில்லை!

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை
நாட்டை ஆள்வோரை கவனிக்கச் சொன்னார்!”
என பெருமைபட பட்டியலிடுகிறார்.

“ஒரே ஒரு புன்னகை செய்தாள்
ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!”

என காதல் உணர்வை கவிதையின் வழி நம்முள் கடத்துகிறார் கவிஞர்.
மாறிவரும் பருவநிலை, புவி வெப்பமயமாதல், தண்ணீருக்கான போராட்டம் என மனிதர்கள் வாழும் பூமியை தங்கள் சுயநலத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வாழத்தகுதியற்றதாக மாற்றி வருகின்றனர். மனிதர்கள் மரங்கள் நடுவதை கடமையாக ஏற்று செய்ய வேண்டும் என கட்டளையிடும் கவிஞர்,

“பூ தந்தேன்!
காய் தந்தேன்!
கனி தந்தேன்!
நிழல் தந்தேன்!
காற்று தந்தேன்!
மனிதன் பரிசாக தந்தது கோடரியை!”

என மரங்களின் வேதனையை மனிதர்கள் உணரச் செய்கிறார்.

“சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா” என்ற திரைப்பாடலைப் போல மண்ணின் மைந்தரான கவிஞர் மதுரையின் சிறப்பை,

“ஈடு இணையற்ற எங்கள் மதுரை!
நாடு போற்றும் நல்ல மதுரை!”

என மதுரையின் சிறப்புகளை பட்டியலிட்டு பெருமை கொள்கிறார்.
ஹைக்கூ, நூல் விமர்சனம், கட்டுரை என எல்லா தளங்களிலும் முத்திரை பதித்தவர் கவிஞர் இரா.இரவி என்பதற்கு இந்த நூலும் ஒரு சான்று. அவரின் படைப்புலக மகுடத்தை அலங்கரிக்கும் மற்றுமொரு மாணிக்கமாகத் திகழும் இந்நூல் வாசகர்களுக்கு தமிழமுதத்தை கவியமுதமாய் பரிமாறியிருக்கிறது.

நூல் விமர்சனம்
கவிஞர் ச. கோபிநாத்
சேலம்
9790231240

கருத்துகள்