இந்திய இலக்கியச் சிற்பிகள் ! அ.ச. ஞானசம்பந்தன் ! நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
இந்திய இலக்கியச் சிற்பிகள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அ.ச. ஞானசம்பந்தன் !
நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018. ரூ. 50.
நூல் ஆசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்களும், அவருடைய இணை தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் நாடு முழுவதும் அறியப்பட்ட இலக்கிய இணையர். எழுத்து, பேச்சு இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வருபவர்கள். இருவரும் காதலித்து கரம் பிடித்து மணிவிழா கண்டவர்கள். காதல் இணையர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர்கள்.
இருவரும் ஒவ்வொருவரின் வெற்றிக்கு துணை நிற்கின்றனர். நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள், வங்கிப்பணியை விடுத்து, இலக்கியத்திற்காக பேராசிரியர் பணியில் இணைந்தவர். எழுத்து, பேச்சு என்ற இரட்டைக் குதிரையில் இலாவகமாக பயணிக்கும் இணையர் இவர்கள். இதற்குமுன் திரு. சொல்விளங்கும் பெருமாள், திருமதி சக்தி பெருமாள் இருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்று காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர். இவரது பணியினைப் பாராட்டும் விதமாக தமிழக அரசு இளங்கோவடிகள் விருதை அறிவித்து மகிழ்ந்துள்ளது.
புகழ்பெற்ற சாகித்திய அகாதெமி சார்பில் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மிகச்சிறந்த ஆளுமையாளர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்கள் பற்றி தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல், இன்றைய இளைய சமுதாயத்தினர் அவர் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பாக வந்துள்ள அரிய நூல், அருமையான நூல். தேனீ போல ஓய்வின்றி தமிழ் இலக்கியத்திற்காக அரும்பணியாற்றிய அரிய மனிதர் பற்றி அறிய உதவும் நூல்.
ஒன்பது தலைப்புகளில் நவரத்தினங்கள் போல ஒளிரும் விதமாக எழுதி உள்ளார்கள். அ.ச. ஞானசம்பந்தன் அவர்களின் வாழ்க்கை, இலக்கியப் பயணம், ஆய்வுகள், திறனாய்வு, பெற்ற விருதுகள், இப்படி பலவேறு பரிமாணங்களில் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
நூலின் தொடுப்பு, எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், அ.ச. ஞானசம்பந்தன் அவர்களைப் பற்றி எழுதிய ரத்தினச் சுருக்கமான வைர வரிகளுடன் தொடங்குகின்றது.
வாழ்வும், பணியும் : “அமைதி தவழும் முகம், துறவி போன்ற தோற்றம், நரைத்த முடி, முகமெல்லாம் ஒழுங்காய்ப் பழுத்த முதுமையின் அருள் மலர்ச்சி”.
இந்த வரிகளைப் படித்து விட்டு நூலின் அட்டைப்படத்தைப் பாருங்கள். அப்படியே பொருந்தும். நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் எழுதியுள்ள தொடக்கவுரை படித்துப் பாருங்கள், அவரின் பன்முக ஆளுமையைப் படம் பிடித்துக் காட்டி விடுகின்றார்.
“அ.ச.ஞா.” என்னும் மூன்று எழுத்துக்களால் அழைக்கப்படும் அ.ச.ஞானசம்பந்தன் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவர் ; திறனாய்வுத் துறையில் தடம் பதித்தவர் ; சிறந்த பேச்சாளர் ; நல்ல எழுத்தாளர் ; இனிய பண்பாளர் ; பேராசான் என்றே மாணவர் உலகால் மதிக்கப் பெற்றவர்.
இப்படிப்பட்ட ஆளுமைகளை இன்று காண்பது அரிதிலும் அரிதாக உள்ளது. இவர் போல யாரு ? என்று உலகம் போற்றும் வண்ணம் வாழ்ந்து காட்டிய மாமனிதரின் வாழ்க்கையை பாடமாக உணர்த்தும் நூல்.
பிறப்பும், வளர்ப்பும் : அ.ச.ஞா., திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லணையை அடுத்துள்ள அரசங்குடி என்னும் கிராமத்தில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் நாள் அ.மு. சரவணமுதலியார் – சிவகாமி அம்மையார் இணையர்க்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
அரசங்குடி என்ற கிராமம், அ.ச.ஞா. பிறந்த காரணத்தால் புகழ்பெற்றது என்பதை அறிய முடிகின்றது. அ.ச.ஞா. அவர்களின் தந்தை பெயர் அ.மு. சரவணமுதலியார் என்று எழுதியுள்ளதிலிருந்து, அ.ச.ஞா.வின் தந்தை பெயரின் முன்னெழுத்து வரை அறிந்து, ஆராய்ந்து எழுதி உள்ள நுட்பத்தை உணர முடியும்.
அ.ச.ஞா. அவர்கள் தந்தை, பல்வேறு நாடுகள் இலக்கியப் பயணம் மேற்கொண்டுள்ளார். உடன் தனது மகன் அ.ச.ஞா. அவர்களையும் அழைத்துச் சென்ற காரணத்தால் இவருக்கும் தந்தையைப் போலவே இலக்கிய ஈடுபாடூ வந்துள்ளது.
அ.ச.ஞா. அவர்கள் அண்ணாமலை பலகலைக்கழகத்தில் பயின்றது ; காதல் திருமணம் புரிந்தது ; அந்தக் காலத்திலேயே காதலுக்காக போராடி வெற்றி பெற்றது ; இரண்டு மகன்கள், நான்கு மகள்கள் என்று குடும்ப விபரம், தமிழக அரசுப் பணி, வானொலிப் பணி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவர், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகப்பணி, கம்பன் கழகப் பணி, சேக்கிழார் ஆய்வு மையப் பணி, உரை நிகழ்த்திய நிகழ்வுகள் என்று அனைத்தையும் விளக்கமாகவும், விரிவாகவும் எழுதி உள்ளார் நூலாசிரியர், பாராட்டுக்கள்.
திருவாசகச் சிந்தனைகள் என்ற கட்டுரையின் தொடக்கத்தில் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் வைர வரிகள் மிகப் பொருத்தம். “படிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் வயது இல்லை, அதைத் தான் பேராசிரியர் அ.ச.ஞா. செய்தார் ; விழிகள் பழுதடைந்த பிறகும் படித்தார் ; எழுதினார் ; உழைத்தார் . இறுதி மூச்சு உள்ளவரை இலக்கியத்திற்காக இயங்கிக் கொண்டே இருந்தார் என்பதை உணர்த்திடும் வரிகள்.
அ.ச.ஞா. அவர்கள் எழுத்தில், பேச்சில், குட்டிக்கதைகள் பயன்படுத்தியதை மேற்கோள் காட்டி நூலாசிரியர் எழுதியுள்ளது சிறப்பு. அ.ச.ஞா. அவர்கள் திருவாசகம், கம்ப ராமாயணம், பெரிய புராணம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கியங்களை படித்து, ஆராய்ந்து, தெளிந்து வடித்த எழுத்துக்கள் பற்றி நூலாசிரியர் மிக விரிவாக எழுதி, அ.ச.ஞா. அவர்களின் தமிழ் இலக்கியத் தொண்டை நன்கு விளக்கி உள்ளார்கள். நாடக ஆசிரியராக இருந்து நாடகத் துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.
அ.ச.ஞா. அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல், இந்த நூல் எழுதுவதற்கு உதவிய நூல்களின் பட்டியல், அவர் பெற்ற விருதுகள், பாராட்டுகள் பட்டியல் – யாவும் நூலில் உள்ளன. நூலாசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் இந்த நூலை முனைவர் பட்ட ஆய்வு நூல் போல எழுதி உள்ளார். சாகித்ய அகாதெமியின் சார்பில், இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நான்காவது நூல் எழுதும் வாய்ப்பு அரிதிலும் அரிதானவர்களுக்கு அமையும். நூல் ஆசிரியர் : தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் அவர்கள் தொடர்ந்து இலக்கியப் பயணத்தில் வெற்றிவாகை சூடிட வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக