அமுதும் தேனும் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அமுதும் தேனும் !


நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராயர் நகர்,
சென்னை – 600 017.  விலை : ரூ. 150.
பேச : 044 24342810 / 24310769
மின்னஞ்சல் : 
vanathipathippakam@gmail.comஇணையம் : www.vanathi.in
*****

       அமுதும் தேனும் என்ற நூலின் தலைப்பே இனிமையை பறைசாற்றுவதாக உள்ளது.  இலக்கியத் தேன் தரும் இலக்கியத் தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் தேனோடு, அமுதும் கலந்து தந்துள்ளார்கள்.  இயந்திரமயமாகி விட்ட அவசர் உலகில் பல நூல்கள் படிக்க பலருக்கு நேரமும், பொறுமையும் வாய்ப்பதில்லை.  இந்த ஒரு நூல் படித்தால் போதும், 300 நூல்கள் படித்ததற்கு சமம்.  30 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.  ஒரு கட்டுரையில் 10 நூல்களின் சாரம் தருவதில் வல்லவர் நூலாசிரியர்.

       முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டது போல,   " தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் அருகே அவர் எழுதிய நூல்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்கும்."
  உண்மை, உருவத்தால் அறிஞர் அண்ணா போல, நெப்போலியன் போல, என்னைப் போல சற்று உயரம் குறைவாக  இருந்தாலும் எழுத்தால், பேச்சால் இமயமாக உயர்ந்து நிற்கிறார்.  பேச்சு, எழுத்து இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டுவது என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.  வெகு சிலருக்கே வாய்க்கும்.எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் ஆளுமையாளர் . 

 பல்வேறு இதழ்களுக்கு மாதாமாதம் கட்டுரைகள் எழுதி வருகிறார். குறிப்பாக கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனித நேயம் உள்ளிட்ட இதழ்களில் மாதாமாதம் படித்து வியந்து வருகிறேன்.  எப்படி இவருக்கு நேரம் வாய்க்கின்றது என்று ஆச்சரியப்படுவேன்.  எழுதிய கட்டுரைகளை ஆவணப்படுத்தி, அவற்றை நூலாக்குவதும் ஒரு கலை.  அக்கலையில் வல்லவராகத் திகழ்கின்றார்.  முன்மாதிரியாகத் திகழ்கின்றார்.

       இந்த நூலில் மூத்தோர் சொல் என்ற பிரிவில் 6 கட்டுரைகளும், சுவைத் தேன் என்ற பிரிவில் 9 கட்டுரைகளும், இலக்கிய அமுது என்ற பிரிவில் 7 கட்டுரைகளும்,கவிதைத் தேன் என்ற பிரிவில் 8 கட்டுரைகளும் மொத்தம் 30 கட்டுரைகளும் உள்ளன.  கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை இந்த நூல் படித்தால் கற்றுக் கொள்ளலாம். 

 ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பு வைப்பதில் இருந்து பிரபலமானவர்களின் மேற்கோள் காட்டி, கட்டுரையின் தொடுப்பு, எடுப்பு, முடிப்பு அத்தனையும் வனப்பு.  எழுத்துத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  மேடைப் பேச்சாளர்கள் மேடையில் பயன்படுத்திடும் கருத்துக்களின் சுரங்கமாக நூல் உள்ளது.

       தினமலர் நாளிதழில் ‘என் பார்வை’ என்ற புதிய பகுதி தொடங்கி பலருக்கும் கட்டுரை எழுதிய வாய்ப்பு வழங்கி வருகிறார்கள்.  எனது கட்டுரைகள்  தந்தை பெரியார் பற்றியும் ஆத்திசூடி பற்றியும்இரண்டு வந்துள்ளன.  தினமலர் என் பார்வையில் நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய கட்டுரைகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

  மிகச்சிறந்த ஆளுமைகளான வீரத்துறவி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை விரிவாக எடுத்து இயம்பி இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை விதை விதைத்துள்ளார்கள்.  ஆன்மீகவாதி ரமணர் பற்றியும், தந்தை பெரியார் மதித்த மூதறிஞர் ராஜாஜி பற்றியும், தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்றா வைர வரிகளுக்கு சொந்தக்காரரான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பற்றியும், அவரது அற்புதமான கவிதை வரிகள் பற்றியும், இப்படி பல ஆளுமைகள் பற்றி விரிவான விளக்கம் நூலில் உள்ளது.

       கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி தமிழக அரசின் புரட்சிக்  கவிஞர் பாரதி தாசன்  விருதாளர் ஏர்வாடியார் கவிதைகளில் உள்ள நகைச்சுவைகளை மேற்கோள் காட்டி வடித்த கட்டுரை மிக நன்று. 

       இயல்பு + இதம் + இங்கிதம் = ஏர்வாடியாரின் நகைச்சுவை.

கணக்கு போல படம் பிடித்துக் காட்டியுள்ளார்.  உண்மை.  சிலர் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவரை காயப்படுத்தும் விதமாகவும், பிறர்முகம் வாடும் விதமாகவும் எழுதுவது உண்டு.  ஆனால் ஏர்வாடியார் நகைச்சுவை மென்மையானது, மேன்மையானது என்பதை பல மேற்கோள்களுடன் விளக்கி உள்ளார்.  பதச் சோறாக ஒன்று.

       பாராட்ட அழைத்து விட்டு 
   பொய் பேசக் கூடாது
   என்றால் எப்படி?
------------------------------
       சிரிக்க வைக்கிறார்கள் 
   எழுத்தில் பாக்கியம் ராமசாமி
   திரையில் வடிவேலு, விவேக் 
   மேடையில் லியோனி
   அரசியலில் எல்லோரும் 
        
      (யாரும், யாராகவும் பக். 60)
---------------------------
       அரசியலை எள்ளல் சுவையுடன் சாடிய விதம் மிக நன்று.  இதனை அரசியல்வாதிகள் படித்தாலும் சிரித்து விடுவார்கள் என்பது உண்மை.  நூலாசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதும் ஒவ்வொரு கட்டுரைய்ம் மிக நுட்பமாகவும், தெளிவாகவும் இருக்கும்.  மேற்கோள் காட்டக் கூடிய நூலின் பெயர் , கவிதை இடம் பெற்ற பக்க எண் வரை தெளிவாக குறிப்பிட்டு எழுதுவார்கள்.  இவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டவற்றில் இந்த நுட்பமும் ஒன்று.

       ஒரிசாவில் நிதிச் செயலராக இருக்கும் சிறந்த சிந்தனையாளர்.  திரு. பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்கள் சொன்ன வைர வரிகளை மேற்கோள் காட்டி ஜென் பற்றிய கட்டுரையைத் தொடங்கி உள்ளார்கள்.

      கனவு மெய்யாகப் 
    பாடுபட வேண்டும்
    மெய் '.யாகப் பாடுபட வேண்டும் !
        ...      ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.

       இந்த நூலில் உடன்பாட்டுச் சிந்தனைகள், தன் முன்னேற்றச் சிந்தனைகள், வாழ்வியல் கருத்துக்கள் என்று பல உள்ளன.  மதுரையில் உள்ள எழுத்தாளர் திரு. வரலொட்டி ரெங்கசாமி, அவரின் கருத்தையும் ஒரு கட்டுரைக்கு மேற்கோள் காட்டி உள்ளார்கள்.  சிறிய கருத்தாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் கருத்து.  படிக்கும் வாசகரை சீர்படுத்தும் கருத்து.

“உலகத்தை நம்மால் மாற்ற முடியாது.  ஆனால்
உலகத்தைப் பார்க்கும் நமது பார்வையை மாற்றிக் கொள்ளலாம்” – எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி!

 ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள் என்று பல்சுவை விருந்தாக நூல் உள்ளது.  வடை, பாயாசத்துடன் கல்யாண விருந்துண்ட மகிழ்வு இந்நூல் படித்ததில் கிடைத்தது. 

       நூலாசிரியர் நூல்கள் மட்டும் படிக்கவில்லை, தினந்தோறும் முகநூலும் படிக்கிறார்கள்.  அதில் உள்ள நல்லவைகளையும் மேற்கோள் காட்டி கட்டுரை வடித்துள்ளார்கள்.  ஹைக்கூ கவிதைகள் நூலாசிரியர்க்கு பிடித்த 12-ல், 12-வதாக எனது ஹைக்கூவும் இடம் பெற்றது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். 

  வீடு மாறிய போது 
 உணர்ந்தேன் 
 புலம் பெயர்ந்தோர் வலி!

 (கவிஞர் இரா. இரவி)

       தினமலரில் பிரசுரமான அன்றே பலரும் என்னை பாராட்டினார்கள்.

       என்னுடைய கவியமுதம் நூலிற்கு தந்த அணிந்துரையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது.  30-வது கட்டுரை இனிப்புக்கு தேன், அன்புக்கு மனைவி எனது ஹைக்கூவோடு கட்டுரை முடிகின்றது. 

       மாதா, பிதா, குரு 
   ஒரே வடிவில் 
   மனைவி  !
             (கவிஞர் இரா. இரவி)

       வானதி பதிப்பகம், தமிழ்த்தேனீ இரா. மோகன் வெற்றிக் கூட்டணியாகி விட்டது.  தொடர்ந்து முத்திரை பதிக்கும் நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  இலக்கிய விருந்தை தந்து கொண்டே இருக்கின்றன.  பாராட்டுக்கள்.

*****

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்