கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரைகள்

கவியமுதம்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரைகள் 

‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : நீதியரசி எஸ். விமலா
*****
கவிதையின் தாக்கமும், நோக்கமும்
மலர்களும் தேனைப் பெய்யும்
மதுகரம் ஈர்த்தே உய்யும்
அலர்கின்ற தாமரை தான்
அணி பெறும் மாலையாகும்
புலர்கின்ற பொழுதில் தோன்றும்
புதுப்புது வண்ணம் கண்டு
மலர்கின்ற சொற்கள் தாமே
மனங்கவர் கவிதையாகும்
       பாருங்கள்! கவிஞர் இரா. இரவியின் கவியமுதம் பருகியதால் என் மதிப்புரையும் கூட கவிதை வரிகளால் தொடக்கம் பெறும் அளவு.  அந்தக் கவிதைகள் அற்புத கவிதானுபவத்தை பெற்றிலங்குகின்றன.
       ஆங்கிலக் கவிதை உலகில் எஸ்.டி. காலரிட்ஜ் போன்றவர்கள் யாத்தளித்த ஒப்பற்ற புனைவையும், புனைவின் அரிதாரப் பூச்சின் அடியில் ஒப்பனையை ஓரம் கட்டும் உண்மைக் கீற்றுகளையும், ஊடும் பரவுமாறு ஒருங்கே பிணைத்து வார்த்தை நெசவு செய்திருக்கிறார் கவிஞர்.
       ஆற்றின் சலசலப்பாகவும், காற்றின் சுறுசுறுப்பாகவும் மட்டும் இருந்து விடுவதல்ல கவிதையின் வீரயம்.  அது காலங்களை மாற்றவும், காரியங்களை ஆற்றவும் செய்தால் தான் கவிதையின் தாக்கம் நோக்கத்தை எட்டியது எனப் பொருள்.
       கவிஞரின் கவியமுதம், தமிழ் இலக்கியக் காதலர்களின் புத்தக அலமாரிகளில் நிரந்தரமான ஓர் இடம் பிடிக்கும் நிச்சயமான வாய்ப்பை பெற எனது வாழ்த்துக்கள்.

நீதியரசி ச. விமலா
எண். 41, கிரீன்வேஸ் ரோடு,
ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
-----------------------------------------------------------
கவியமுதம் ! 
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 மதிப்புரை : கவிதை உறவு, பிப்ரவரி 2015
1980-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற போலந்து நாட்டுக் கவிஞர் க்ளைஸ் லாமியோஸ் சிறந்த கவிதைகளுக்கான கூறுகளாகக் குறிப்பிடும் நான்கில் ஒன்று வலிந்து எதுகை மோனைகளைத் திணிக்கக்கூடாது என்பதாகும். 
ஒரு நல்ல கவிதையை எளிமை தூக்கிப்பிடிக்கிறதென்றால் இயல்பான மொழி அதைத் தாங்கிக் கொள்கிறது எனலாம். எளிதில் புரிந்துவிட்டால் அது கவிதை இல்லையோ என்கிற சந்தேகமும், புரியாதது போலிருக்கிற வரிகளே கவிதை என்கிற தீர்மானமும் தவறு என்பதை, எளிமை இலகுவாகு உடைத்துப் போட்டு விடும். சுற்றி வளைக்காமல் சொல்வதாக இருந்தால், கவிஞர் இரவி புரிகிற மாதிரி எழுதியிருப்பதால், அது கவிதை இல்லை என்று கணக்கிட்டு விடக்கூடாது.
அழகான கவிதை பொதுவாக எளிமையாக இருக்கும். எளிமையே கவிதையின் வெற்றி என்பார் காப்பியக் கவிஞர் வாலி அவர்கள். எனவே கவிஞர் இரவி எளிமையான வரிகளாலும், செறிவான செய்திகளாலும் வெற்றி பெற்றுள்ளார் எனலாம். கவியமுதம் எனும் இத்தொகுதியில் எல்லாக் கவிதைகளும் திகட்டாத அமுதமாகவே இருக்கின்றன.
முடியாது என்று முடங்காதே,
முடியும் என்றே முயன்றிடு ! 
என்ற தொடக்க வரியே நம்பிக்கை தருகிற நல்ல வரி. அதுபோலவே வெற்றி பெற வேண்டும் என்ற வெறி எளிதில் கிடைத்து விடாது என்பதை அறி, வெற்றி என்பது கனவாகவோ அன்றி நினைவாகவோ, வேட்கையாகவோ இல்லாமல் வெறியாக இருக்க வேண்டும் என்பது கவிஞரின் கருத்து. 
முடியாது என்று எடிசன் நினைத்திருந்தால் முற்றிலும் இருட்டாகவே இருந்திருக்கும் உலகம் என்பது ஏற்கத்தக்க சிந்தனை. யாரோ ஏற்றுகிற வெளிச்சத்தில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் எப்போது ஏற்றப்போகிறோம்? எனக் கேட்கத் தோன்றுகிறது. 
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் இப்போது நல்ல நேரம். திருக்குறள் உலக நூல். இதை முதலில் தேசிய நூலாகவேனும் இப்போது முழங்கப்படும் போது 1330 திருக்குறளை மனனம் செய்வதை விடவும் 10 குறள் வழியேனும் நடக்கலாமே... என்று இரவி அவர்கள் ஒரு கவிதையில் கூறுவது அருமை. 
கர்மவீரர் காமராசர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், அழ. வள்ளியப்பா, டி.எம். சௌந்திரராசன், கவிஞர் வாலி, கவியரசர் கண்ணதாசன், ஒபாமா போன்ற பெருமக்களையெல்லாம் தமது கவிதை வரிகளால் பூச்சொரிந்து வாழ்த்தி உள்ளார் கவிஞர் இரவி. 
கர்மவீரர் குறித்த கவிதையில்,
காட்டுக்குச்சி பிடித்த கரங்களையெல்லாம்,
ஏட்டுப் புத்தகங்களை ஏந்த வைத்தவர். 
என்று பாடியிருப்பது அழகு. காதல் கவிதைகளையும் அவர் குறை வைக்கவில்லை. கவிதையிலும் காதலைக் குறை வைக்கவில்லை. தூக்குத்தண்டனை பெற விழைகிறானாம் ஒருவன். காரணம் தூக்கிலிடுமுன் கடைசி ஆசையைக் கேட்பார்களாம். அவனுடைய கடைசி ஆசை காதலியைப் பார்ப்பது தான் என்பானாம். அப்போதாவது காதலியைப் பார்க்கலாமல்லவா? என்பது நளினமான கற்பனை. 
மொத்தத்தில் திகட்டாத தமிழமுதம் இக்கவியமுதம். 
--------------------------------------------------------------------------------------.கவியமுதம் ! 
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.!
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-17. மிகத் தரமான தாள்கள் பக்கங்கள் : 172, விலை : ரூ. 100 .
நாவல் பழம் ருசித்த நாவின் வண்ணம்! நற்சிந்தனை வளர்த்த வள்ளுவரின் முழு உருவம்! நவீனக் கணினிக்குள்ளும் இயற்கையின் மஞ்சள் மலர்கள்! நல்ல தரம் மிகுந்த கைபேசி! நமது கதிரவக் கவிஞரின் பெயர், அருகே புகைப்படம்! நனைந்த மஞ்சளின் துணைகொண்டு மேலே கவியமுதம் கீழே வானதி பதிப்பகம் என எழுதிய எழுத்துக்கள்!
இவை தான் கவிஞர் இரா. இரவி அவர்களின் கவியமுதம் என்ற கவிதை நூலின் முன் அட்டையின் முழு அழகு!
பின்பக்க அட்டையோ புகைப்படத்துடன்
பிற கவிஞர்களையும்
பின்பற்ற வைக்கும்
புதிய அழகு!
தாளின் தரம்! தகுந்த இட்த்தில் புகைப்படம்! கவிஞரின் ரசனைக்கும், புத்தக நேசிப்பிற்கும், சான்றிதழ் அளித்திருக்கிறது.
நூலை விரித்தவுடன் முகமும் மலர்கிறது. காரணம் இவ்வுலகமே நேசிக்கும் இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் முகமும், வரிகளும் முதல் வரிகளாய் இருப்பதால்.
அடுத்ததாய் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் நல்ல வரிகளை எடுத்துக்கூறி ஏழு பக்க நீளத்திற்கு அழகை நீட்டித்து இருப்பது சிறப்பு.
முதல் பகுதியே நம்பிக்கைச் சிறகுகள் என்ற தலைப்பில் துவங்குவதால் வாசிப்பும், நம்பிக்கையோடு துவங்குகிறது. நம்பிக்கை வீண் போகவில்லை என்பதை படித்தவுடன் உணர்ந்தேன்.
வாய்ப்பு எனும் வாசல் தேடி
நீ சென்றால் கதவைத் தட்ட வேண்டாம்!
திறந்தே இருக்கும்! என்ற வரிகள் வாசிக்கும் போதே நரம்புகளின் வழியாக நம்பிக்கை பாய்கிறது.
சான்றோர் திறம் பகுதியில்,
உன்னத மனிதர்களை ஒருங்கிணைத்து தன் மான (மன) எழுத்துக்களால் அழுத்தமாக பதிவு செய்திருப்பது அருமை!
ஒரு நொடி போதும்! என்ற தலைப்புக் கவிதையில்,
ஊடலை உடைக்க, ஒரு நொடி போதும்!
ஒருபோதும் அனுமதிக்கவில்லை
தன்முனைப்பு! என்ற வரிகள்.
மனித மனத்தின் கண்ணாடி
அசைக்க முடியாத மலை! முத்திரை வலி! போன்ற தலைப்புக் கவிதைகள் அன்பின் ஆழத்தை அளந்து காட்டியிருக்கிறது.
தோகை மயில் என்ற தலைப்பில்
தோகை விரித்து ஆடினால் பார்க்க
மேகமும் மழையாய் வரும்!
என்ற வரிகள் புதிய கற்பனை மிகமிக அழகு!
ஏன் வருகிறது தீபாவளி? கவிதை
பண்டிகைத் தொல்லைக்கு நல்ல தீர்வு!
தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா? என்ற கவிதை வரிகள், தமிழரின் உரிமைக்கு உரத்த குரல் கொடுத்திருக்கிறது.
அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட தாள்
அவ்வளவு தான் அடிமையாகாதீர்கள்!
என்ற வரிகள், பணம் மட்டுமே உலகம் என்போருக்கு நல்ல அறிவுரையாக அமையும்!
கணக்கேதும் பார்க்காமல் கதிரவக் கவிஞர் (இரா. இரவி)
முழுக்க முழுக்க சமுதாய நோக்கத்தோடு கவியமுதத்தைப் படைத்திருக்கிறார்! இளையதலைமுறையினரின் உள்ளத்திற்கு இந்நூல் சத்துணவு அளித்திருக்கிறது! எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்! வளமான பாரதத்திற்கு உள்ளத்தின் வலிமையே முக்கியம்!
மதிப்பிற்குரிய கவிஞருக்கு,
பல எழுத்தாளர்களின் விமர்சனம் நடுவே என் விமர்சனம் இருப்பதைக் கண்டு, சிகரத்திற்க்கு நடுவே அகரத்தையும் பெருமைப்படுத்த முடியுமா? என்ற இன்ப அதிர்ச்சி என்னும் எழுந்த்து. பெருமைப்படுத்தியதற்கு எனது நன்றியை அளிக்கின்றேன்.
எழுத்தோலை விருது பெற்றதற்காக தங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்! ஓர் கவிதை வடிவில்,
வாழ்த்துக் கவிதை !
விடியலில் உலகை வெல்ல வேண்டுமென துள்ளியே எழுந்தாலும் மெல்ல மெல்ல நேரம் நகர்த்தி பணிமுடிக்க நாளைய நாளையும் நாசுக்காய் கடன் கேட்பர் சிலர்! கதிரவக் கவிஞரே!
சொந்தப் பணி ஒருபுறமிருக்க சுற்றுலாப் பணி மறுபுறமிருக்க இலக்கியப் பணிக்கு ஒதுக்கிய நேரத்தை எப், பொழுது அளித்தது?
ஒரு நடுநிசிப் பொழுது ஆசி வழங்கி அளித்ததா? வைகறை ஏதும் வாய்ப்பு வழங்கியதா? பதவிக்குள் குடியிருக்கும் பயணப்பொழுது தந்த பங்களிப்பா? உணவு இடைவேளையையும் உறங்கும் காலவேளையையும் சுருக்கி நீர், சில்லரையாய சேகரித்த சிறுசிறு பொழுது கொடுத்ததா? காலத்தின் கைப்பிடிக்குள் சிக்காமல் காலத்தை கைபிடித்து அழைத்துச் செல்லும் திறமையில் பெற்றதா?
எப்படி இருந்தாலும் சரி! தமிழை சிப்பியின் முத்தாய் சிறப்பிக்கட்டும் உமது இலக்கியப் பணி!
--------------------------------------------------------------------------------------
கவியமுதம்! 
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
வாழ்த்துரை : குமுதம் வார இதழ் !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பு(து)த்தகம் ! 
கவிஞர் இரா. இரவியின் கவிதைகள் ஒவ்வொன்றிலிருந்தும் தமிழின் தமிழனின் உயிர்த் துடிப்பு கேட்கிறது. சமூக அவலங்களை எதிருக்கும் ஒரு கலகக் குரல் கேட்கிறது. மொழியின் ஆன்மா தெரிகிறது. முற்போக்குச் சிந்தனையின் முகவரி தெரிகிறது. காமராசரையும், பெரியாரையும், பாரதிதாசனையும் இன்னும் பல அறிஞர்களை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உழைப்பு தெரிகிறது. எதிர்காலம் குறித்த நம்பிக்கை விதையை விதைக்கும் போக்க்கு தெரிகிறது. காதலின் வலிமையும், மேன்மையும் தெரிகிறது. மொத்தத்தில் கவிதைகள் அனைத்திலும் கவிஞரின் உள்ளம் தெரிகிறது. .
------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்:கவியமுதம் ! 
நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா ! neraimathi@rocketmail.com
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. 
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in
கோபுர வாயில்:
வெற்றிக்கான இலக்குகள் பதினான்கு; புத்தபெருமானிடம் கேட்கப்பட்ட வினாக்கள் பதினான்கு; ஈரேழு லோகங்கள் பதினான்கு ;நல்லாட்சிக்கானப் பண்புகள் பதினான்கு;இதிகாசமாம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் பாடங்கற்றுக்கொண்ட ஆண்டுகள் பதினான்கு;இடைச்சொல்லில் இடம்பெறும் பொருட்கள் பதினான்கு;கவிஞர் இரவி அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையும் பதினான்கு .ஆம்..அவரது பதினான்காவது நூலான கவியமுதம் இலக்கிய வாசகர்களுக்கெனப் பாங்காய்ப் பகிர்ந்து பந்தியில் பரிமாறப்பட்டிருக்கின்றது.
பகுப்பும் தொகுப்பும்:
ஆதவன் ஒன்று;அகம்புறம் இரண்டு;திருக்குறள் பகுப்பு மூன்று;திசைகள் நான்கு;புலன்கள் ஐந்து;திருமுருகன் வதனம் ஆறு;மகளிர் பருவம் ஏழு;கவியமுதம் என்னும் இரா.இரவியின் நூற்பகுப்பு எட்டு! இந்நூலில் பகுத்தறிவுப் பகலவன் முதல் நெம்புகோல் நெல்சன் மண்டேலா வரை, வார்த்தை சித்தர் வாலி முதல் இயற்கை சித்தர் நம்மாழ்வார் வரை,தில்லையாடி வள்ளியம்மை முதல் அழ.வள்ளியப்பா வரை,ஆற்றல் நாயகன் அண்ணா முதல் நீதி நாயகன் சந்துரு வரை,கர்மவீரர் காமராசர் முதல் தனக்குத் தானே கவிதாஞ்சலி எழுதிச் சென்ற கண்ணதாசன் வரை,தெய்வகுரலோன் டி.எம்.எஸ்.முதல் செய்திச் சிகரம் சிவந்தியார் வரை -என மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்ற சான்றோர்கள் அனைவரையும் புதுக்கவிதை வடிவில் பூமராங்க்-போல் வாசிப்போர் மனதில் புகவைக்கின்றார் கவிஞர் இரவி.
பாற்கடலா?நூற்கடலா?
திருப்பாற்கடலைக் கடைந்தால் மட்டுமே அமிழ்தத்தில் பங்கு உண்டு என்பது புராணச் செய்தி!கவி இரவியின் இந்த நூற்கடலை வாசகர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு கடையவேண்டாம்!இஷ்டப்பட்டு வாசித்தாலே போதும்!கவியமுதம் தானாக கரத்தில் கிட்டும்!ஆம்!எட்டுவிதமானத் தலைப்புக்களில் இதுவரை அறிவுக்கு எட்டாதச் செய்திகளை இலக்கிய இலக்கண நயத்துடன் இரட்டைவட தங்கச்ச் சங்கிலியாக தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கவி இரவி!
பாட்டியலா?பட்டியலா? தமிழின் அருமை, மாமதுரையின் பெருமை,தமிழனின் பெருந்தன்மை,வாசிப்பின் மேன்மை -என அத்தனையையும் எடுத்துக் கூற முடியாமல் கவிஞர் இரவி பரிதவித்துப்போகும் அளவிற்கு பட்டியல் நீண்டாலும் கவித்துவம் நிறைந்திருப்பதால் வாசிப்போர் மனதில் அத்தனையும் ஆழப்பதிகின்றது என்பதே உண்மை !
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு இதோ! காந்தியை அரையாடை மனிதராக்கியது மதுரை!
காந்தியின் இறுதியாடை இருக்குமிடமும் மதுரை!
ஜல் ஜல் நாட்டிய ஒலி கேட்கும் மதுரை!
ஜில் ஜில் ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரை!"(ப.134)
அகமா?புறமா?
கவியமுதம் நூலை வாசிக்கும் பொழுது ஒருபுறம் நம்பிக்கை கதவு திறக்கின்றது!மறுபுறமோ நாயகி வீட்டு ஜன்னல் மூடுகின்றது!கவிஞர் பல வேளைகளில் சமூக மோசநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.சிலவேளைகளில் பாசவலையில் சிக்கித்தவிக்கவும் செய்கின்றார்.இதோ நம்பிக்கை நட்சத்திரமாக,
தோல்விக்கு தோல்விகொடு நீ!
ஓய்வுக்கு ஓய்வுகொடு நீ!(ப.16)
அதீத அன்பிற்கு சான்றாக,
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை! நீ
அழித்தக் கோட்டை நான் போடுவதே இல்லை!(ப.98)
கவிதையா?காவியமா?
கவி இரவியின் இந்நூலில் கழைக்கூத்தாடி கவிதையின் கருவாகின்றான்.அகவிழியுடையோர் கல்நெஞ்சத்தையும் கரையவைக்கும் உருவமாய் ஆகின்றனர்.வாடகைவீடு குறித்த வாட்டமான கவிதை நம்மைக்கேட்காமலேயே நம் இதயத்திற்குள் புகுந்துவிடுகின்றது!கவிதைகளில் அஃறிணை உயிர்கூட அறிவுரை கூறவருகின்றது!ஆம்!மயில் நம் மனக்கவலை தீர்க்கின்றது!விதைகள் பயணிக்க ,விருட்சமோ உயிர்பெற்று, நம்மை நோக்கி உன்னத வினாவை எழுப்புகின்றது!தற்கால சமூக இழிநிலையால் இரா.இரவியின் கவியோட்டத்தில் மணி கூட ஒலிக்க மறுக்கின்றது!
சர்க்கரைப்பொங்கல் கூட கசக்கின்றது!புத்தகம் காமதேனுவைக் காண பூவுலகு தாண்டி சொர்க்கலோகம் செல்கின்றது!மலைகள் வாசிக்கும் நம்முடன் மனம்விட்டுப் பேசுகின்றன!வாழ்த்துமொழிகள் ஒரு பக்கம் என்றால் ,சமுதாயத்தின் தாழ்நிலையைச் சாடி வசவுமொழிகள் மறுபக்கம் என கவியமுதம் புத்தகம் நகருகின்றது!பக்கத்திற்குப் பக்கம் பகுத்தறிவு இந்நூலில் பறைசாற்றப்படுகின்றது!மொத்தத்தில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் நமக்குத் தேவையானப் பொருட்கள் கைசேர்வதுபோல் பலதரப்பட்ட செய்திகளும் அறிவுரைகளும் இந்நூலின்வழி வாசகர் மனத்தைச் சென்றடைகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல!
சாட்டையடி கவிதை:
சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
சரிநிகர்சமானமாய் வாழவேண்டும் பெண்ணே!(ப.106)
முரண் நயம்:
பெரியார்!அவர் ஒருவர்மட்டுமே பெரியார்!
பெரியார்முன் மற்ற அனைவருமே சிறியார்!(ப.54)
கண்ணீரைப்பொழியவைக்கும் வரிகள்!(விழியிழந்தோர்)
கண்ணாமூச்சி விளையாடி கால்தவறி விழுவீர்கள்!
காலமெல்லாம் எங்களுக்கோ கண்ணாமூச்சி 
விளையாட்டானது!(ப.156)
மனதார....
காலத்தோடு கைகோர்த்துச் சென்று கவிதை பல படைத்துவரும் இரா.இரவி அவர்கள் இலக்கியவானில் மென்மேலும் ஒளிர்விட்டு பிரகாசிக்க என் போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இதுவரை இந்நூலை வாசிக்காதோர் ரூ.100 அளித்து வாங்கிப்படியுங்கள்!
இந்நூலை வாங்கி வாசித்தோர் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள்!
---------------------------------------------------------------------------------
கவியமுதம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை கவிஞர் முனைவர் ஆ .மணிவண்ணன் உதவி ஆணையர் காவல் துறை ,மதுரை .
நம் வாழ்க்கையில் 19 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முன் வாழ்ந்த அறிஞர்களின் சாதனைகளைப் பேசி உளம் மகிழ்ந்து பாராட்டுவோம்.அவர்கள் தமிழுக்கு எங்ஙனம் உழைத்து தங்கள் வாழ்க்கைப் பதிவினை நிறைவேற்றினார்கள் என மெய்சிலிர்ப்போம்.அத்தகைய நினைவு கூர்தல் கண்டிப்பாகத் தேவை.அத்தகையப் பாராட்டுதல் உணர்வு இல்லையென்றால் வளரும் சமுதாயம் நம்மை நன்றியுணர்வு அற்றவர்கள் எனக் கூட விமர்சித்து விடலாம்.
பல தடவை பல அறிஞர்கள் அவர்களது மறைவுக்குப்பின்னரே பாராட்டப்படும் போது நாமாகவே நாணி நமது தலையைத் தாழ்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகி நம்மை அவமானப்படுத்தும். பலர் தாங்களாகவே பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்து உண்மையில் தொண்டாற்றிய அறிஞர்களை விட குறைந்த சில காலம் பாராட்டுப் பெறுவதுண்டு. உண்மையான அறிஞர்களின்,உழைப்பாளிகளின் உழைப்பு வெளிச்சத்துக்கு வரும் போது தானாகவே கீழேத் தள்ளப்படுவதையும் நாம் கண்டிருக்கின்றோம்.
வாழ்ந்தவர்களை எங்ஙனம் வாழ்த்துகின்றமோ அதே அளவு வாழும் அறிஞர்கள், உழைப்பாளிகளின் உழைப்பைப் பாராட்டுதல் நம் கடமை. மேற்கூறிய இரண்டு வகையினையும் நான் ஆற்றி வருவதாகவே நினைக்கின்றேன்.
என் பணியின் காரணமாக பாராட்ட மனமிருந்தாலும் பலரை உடனுக்குடன் பாராட்ட வழியில்லாமல் வருந்துவதுண்டு.
அங்ஙனம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது இலக்கிய நண்பர் கவிஞர் இரா. இரவி பாராட்டப்பட வேண்டியவர்.
தன் குடும்பச் சூழ்நிலையால் கல்லூரிச் சென்று நேரடிக் கல்விப் பயில இயலாமல் தொடர் கல்வித் துறை மூலமாக பட்டம் படித்தவர். 
இன்று சில பல்கலைக் கழகங்கள் அவர் எழுதியக் கவிதைகளைத் தங்கள் பாடப் பத்தகத்தில் வைத்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.
அதை விடச் சிறப்பாக அவரிடம் நான் கருதுவது தமிழை வைத்து அவர் பிழைக்கவில்லை.
தொடர்ச்சியாக நான்கைந்து இலக்கிய மேடைகள் கிடைத்தவுடன் தொடர்ந்து மேடைகளைத் தங்கள் தொழில் களமாக மாற்றித் தன் தலைக்கும் தமிழறிவுக்கும் விலை நிர்ணயிக்காத தமிழ் ஆர்வலர்.
பொருளாதாரம் தேவைத் தான் என்றாலும் அதற்காக தன் நாவினைச் சுழற்றி நடித்து கச்சேரி நடத்தத் தெரியாத தமிழ் ஆர்வலர்.
நான் பழகும் 20 ஆண்டுகளும் தொடர்ந்து இடைவெளியில்லாமல் நாள்தோறும் தமிழுக்கு உழைப்பவர், அதனால் தான் என் நண்பராகத் தொடர்ந்து விளங்குகின்றார். நாங்கள் கடந் 20 ஆண்டுகளாக தமிழுக்கு ஏதோ சிறு வகையில் உழைக்கின்றோம் என்று நினைக்கின்றேன்.பலர் கொஞ்ச காலம் தொடர்வது, பின் பல காலம் காணாமல் போய் தங்கள் தேவைக்குத் தீடிர் எனத் தோன்றுவது போன்று நாங்கள் இல்லை. எதையாவது செய்து கொண்டே உள்ளோம்.
என்னைப் போல் பல இடங்களுக்கு,மாவட்டங்களுக்கு பணிமாறுதல் இல்லாமல் பெரும்பாலும் தனது சுற்றுலாத்துறையில் மதுரை மாவட்டத்தில் பதவி உயர்வு அடைந்து மாவட்ட சற்றுலா உதவி அலுவலராக இருப்பினும் ஓய்வு நேரத்தை தொடர்ச்சியாக நம் தமிழுக்கு கைம்மாறு பாராது 14 நூல்கள் படைத்துள்ளார்.
நூல் வெளியிடும் போதெல்லாம் படி ஒன்றினை வழங்கி கருத்தினைக் கூற அன்பு வேண்டுகோள் விடுப்பார்.
நூல்கள் கிடைத்தவுடன் இரவு ஓய்வின் போது உடனுக்குடன் தொலைப் பேசியில் பாராட்டிவிடுவேன்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வானதி பதிப்பகம் வெளியிட்ட "கவியமுதம்" நூலின் படியினை இரண்டு வாரங்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் தந்து விட்டுச் சென்றதை பல அலுவல் நெருக்கடிக்கிடையில் படித்து பெருமையடைந்தேன்.
எளிய மனிதர்களுக்குக் கூட புரியும் வகையில் நாம் அன்றாட நிகழ்வுகளைத் தலைப்பாகக் கொண்டு கவிதைகள் புனைந்துள்ளார்.
அச்சகத்துறையில் தொடர்ந்து தனக்கென தனி இடத்தைத் தக்க வைத்துள்ள வானதி பதிப்பகம் தமிழகத்தின் முன்னணித் தமிழறிஞர்கள் நம் தமிழக அரசின் உயர் அதிகாரி இறையன்பு அய்யா, எனது மானசீக தமிழ் பேராசிரியர் முனைவர் இரா மோகன் ஆகியோரது அணிந்துரையுடன் வெளியிட்டு சிறப்புச் சேர்த்துள்ளது.
வாழ்த்துவது என் கடமை. நம் கடமை.தமிழ் கூறு நல்லுலகத்தின் கடமை.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம்www.vanathi.in
-------------------------------------------------------------------------------------
கவியமுதம் ! 
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
விமர்சனம் - கவிஞர் புதுயுகன் !
கல்லூரி துணை முதல்வர், இலண்டன்
எட்டு கோப்பைகளில் கவியமுதம் !
இனிய நண்பர் கவிஞர் இரா இரவி அவர்களின் 14-வது நூல் வானதி பதிப்பகம் வெளியிட்டு பலரது பாராட்டைப் பெற்றிருக்கும் கவியமுதம். 
நூலினுள், நம்பிக்கைச் சிறகுகள், உணர்ச்சி ஊர்வலம் என எட்டு கோப்பைகளில் பரிமாறி இருக்கிறார் இந்தக் கவியமுதத்தை. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு வைரம் என்று பொழுதைத் திட்டமிடு எனச் சொல்லும் கவிஞர் வரலாறு படைத்திடு என்று அதே பக்கத்தில் அறிவுறுத்துகிறார். விநாடிகளை வைரங்களாக பார்கத் தெரிந்தவராலேயே வரலாறு படைத்திட முடியுமன்றோ!
தமிழுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கி பல கவிகள் செய்திருக்கிறார் இவர். அதில் முக்கியமானது உலகின் முதல் மொழி உருக்குலையலாமா? என்ற கேள்விக்கவி.
தமிங்கலம் பேசுவதை உடன் நிறுத்திடுவோம். என்று தமிழ்க்கடலில் திமிங்கல வேட்டை நடத்துகிறார். 
பகுத்தறிவுச் சிந்தனையை தவறாமல் தொடர்ந்து முன்னிறுத்தி வருபவர் கவிஞர் இரவி அவர்கள். தமிழர்கள் வாழ்வில் உடனடித்தேவை பகுத்தறிவே என்று முழங்கி 'எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? எதனால்? எனக் கேட்டுப் பழகு என்கிறார். எல்லாமறிந்த புத்தர், ஏதுமறியாத புது சிசு - இவர்கள் இருவர் தவிர மற்ற அத்தனை பேருக்கும் கேள்விகள் தோன்றவே செய்யும் என்ற பொன்மொழியை நினைவுபடுத்துகிறார்.
இன்றைய தேசச் சூழல்களையும் தனது கவிதைகளில் வைத்திருக்கிறார் இந்நூலில். 
திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் பல கவிதைகளில் செய்திருக்கும் இவர், திருக்குறளை தேசிய நூலாக்கும் முயற்சிகள் அதிகரித்து வரும் இவ்வேளையில் அதையே கோரிக்கையாக வைத்தும் ஒரு கவிதை செய்திருக்கிறார். 
அதைப்போல வேட்டிக்குத் தடை என்ற செய்தியை வரிந்து கட்டிக்கொண்டு இப்படி விளாசுகிறார் தமிழ்நாட்டில் தமிழர் உடைக்குத் தடையா? என்ற கவிதையில்; 
தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி! 
தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி? 
பெரியார், காமராசர், கவியசு கண்ணதாசன்,கவிஞர் வாலி என இவரது நெஞ்சம் கவர்தவர்கள் பலரை நெஞ்சினிக்க தமிழால் அலங்கரிக்கிறார். அதில் என்னைக் கவர்ந்தவை நெல்சன் மண்டேலா மற்றும் தில்லையாடி வள்ளியம்மை பற்றிய கவிதைகள் தாம். 
கருப்பு இருளன்று ஒளியென்று உணர்த்தியவரே என்று முன்னவரை போற்றுகிறவர் பின்னவரின் வாழ்வு மொத்தத்தையும் தனது கவிதையில் எழுதி நம் மனதில் ஒரு பெருமித மழையை பொழியச் செய்து போகிறார். வள்ளியம்மை பற்றிய கவிதை இந்தத் தொகுத்தியின் சிறந்த கவிதை என்று சொல்லி விடலாம். 
அதுமட்டுமல்ல இவர்களை எல்லாம் புதிய தலைமுறைகளின் தலைகளுக்குள் பதிவிறக்கம் செய்ததற்கே கவிஞர் பாராட்டுக்குரியவர் ஆகிறார்! 
உன் புகைப்படத்தை 
அஞ்சலில் அனுப்ப வேண்டாம் 
... பதிக்கும் முத்திரைகள் 
உனக்கு வலிக்கா விட்டாலும் 
எனக்கு வலிக்கும் 
கனமான கவிதைகளுக்கு நடுவே காதல் மணமும் தான் கமழ்கிறது! 
சாதிவெறி, உழைப்பாளர் பெருமை, புகையிலை கொடுமை என்று பல சமூகப் பதிவுகளையும் இவரது கவிதைகளில் பார்க்க முடிகிறது. 
நூல் முழுதும் பொருத்தமான படங்கள் கவிதைகளுக்கு உற்ற தோழிகளாக வலம் வருகின்றன. முனைவர் இரா மோகன் அவர்களும் முதுமுனைவர் இறைஅன்பு அவர்களும் நூலுக்கு நல்ல அணிந்துரைகள் கொடுத்திருக்கிறார்கள். 
நிறைவான இந்தக் கவிதைகளைப் படைத்த கவிஞரைப் பற்றி ஒரு சுவாரசிய செய்தி - அவரே சமீபத்தில் முகநூலில் பதிவிட்டது. 
இவரது மகனது பாடப் புத்தகத்தில் இவர் எழுதிய 10 ஹைகூக்கள் மனப்பாடப் பகுதியாக - மகனின் பெருமையாக, தந்தையின் மகிழ்வாக  அமைந்திருந்ததாம். இது உழைப்பின் புன்னகை. மதிப்பெண் இருந்தும் கல்லூரி செல்ல இயலாத சூழல். அங்கிருந்து கிளம்பி இப்படி விரிந்திருக்கிறார் இந்த விருட்சம் என அறியும் போது நமது மனங்கள் கரங்கள் இல்லாமலே கரவொலி செய்கின்றன. 
இதுவும் இவரது கவிதைகளில் ஒன்று என்றே கருதுகிறேன். இப்படி, புத்தகப் பக்கம் தாண்டி வாழ்கையின் பக்கங்களிலும் கவிதை எழுதுபவர்களே நல்ல கவிஞர்கள். 
இவரது கவிப்பணி வெண்பனிப் போல குளிர்ச்சியாய், மகிழ்ச்சியாய் மேலும் தொடர வாழ்த்துக்கள். மொத்தத்தில் கவியமுதம் எட்டு கோப்பைகளில் பல்சுவை அமுதம்! 
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.comஇணையம் www.vanathi.in
----------------------------------------------------------------------------------------
கவியமுதம்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் கவிஞர் ஞா. சந்திரன்
முதுநிலைத் தமிழாசிரியர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.comஇணையம் www.vanathi.in
புலிப்பால் இரவியின் புலமையில் கவியமுதம் ....
எதார்த்த சொற்களால், எளியவரும் புரியும் வண்ணம் அரிய கருத்துக்களை அழகாகச் சேர்த்திருக்கிறார். தமிழுக்குப் புகழை சேர்த்திருக்கிறார் ஹைகூ திலகம் இரா. இரவி. இவரின் கவியமுதம் அனைவரும் பருக வேண்டிய அமிழ்தம்.
திறந்தே இருக்கு வாசல். வெற்றி கிட்டும் வரை நம்பிக்கைச் சிறகுகளால் இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்தி வரலாறு படைத்திடு, வாழ்க்கை வசமாகும் என்று முத்தான சொற்களால் முயற்சிக்கும் இளைஞர்களுக்கு முதுகு தட்டிக் கொடுத்துள்ளார்.
உலகமொழிகளின் மூலம் தமிழ்மொழி. இம்மொழி உருக்குலையலாமா? என்ன வளம் இல்லை தமிழ்ச்சொற்களில்? தமிழை நினைக்காதவன் தமிழனா? தமிழா! நீ பேசுவது தமிழா? தமிழைத் தமிழாகப் பேசிடப் பழகு! தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வை தட்டி எழுப்பியிருக்கிறார்.
எழுச்சியின் வழிகாட்டிகளான காமராசர் முதல் கலாம் வரை கவிதையில் தொட்டிருக்கிறார்.
பெண்ணின் பெருமைகளையும், தினங்களின் சிறப்புகளையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
மதுரையின் பெருமைகளை மல்லிகை மணமாய் பரப்பியிருக்கிறார்.
காதல் கொலைகளை கடிந்ததோடு, சாதிவெறியர்களைப் பற்றியும் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
வாடகை வீட்டில் குடியிருப்போரின் மனவோட்டத்தை நகலாக அல்ல! அசலாகக் கவிதை வரிகளில் வடித்திருக்கிறார்.
சிற்பம் செதுக்கும் நுணுக்கத்தோடும், ஓவியம் வரையும் கவனத்தோடும் கவியமுதம் நூலைப் படைத்திருக்கிறார்.
இளைஞர்களே!
இந்நூலை இதயத்திலிருந்து (சு)வாசியுங்கள்! இதயம் இதமாகும் ; வாழ்க்கை வசமாகும் ; எல்லாம் நலமாகும். வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------------------
கவியமுதம் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
விமர்சனம் ; மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை
thirugeetha@gmail.com
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.comஇணையம் www.vanathi.in
வாசிப்போரை வசீகரிக்கும் கவியமுதம்
கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதிய கவியமுதம் கவிதை நூலை வாசித்து முடித்தபோது சமூக யாத்திரை மேற்கொண்ட உணர்வு. நிகழ்கால நிஜங்களின் நிதர்சனத்தைக் காணமுடிந்தது.
நம்பிக்கைச் சிறகுகள், தமிழ் - தமிழர் நலம், சான்றோர் திறம், காதல் செவ்வி (ஒரு நத்தையால் மூன்றாண்டுகள் தூங்கமுடியும். என்னவளே நீ என்னோடு இருந்தால் என்னாலும் முடியும்), பெண்ணின் பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நாளும் நகரமும், சமூகச் சித்திரிப்பு (வால்மார்ட் என்ற பெயரில் விரைவில் வால்முளைக்காத குரங்கு வர உள்ளது) உணர்ச்சி ஊர்வலம் (படிவங்கள் நிறைவு செய்யும்போது பார்த்தால் நிரந்தரமுகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும்) என்ற தலைப்புகளின் கீழ் தோழர் இரா. இரவி வடித்திருக்கும் கவிதைகள் வாசித்தவுடன் மனதை வருடவும் செய்கிறது. நெகிழவும் வைக்கிறது. நம்பிக்கையையும் தருகிறது. காதல் உணர்வை சுவாசிக்கவும் வைக்கிறது.
கவிதையென்பது ஒலிநயம் அமைந்த சொற்களின் கட்டுக்கோப்பு. அஃது இன்பத்தை உண்மையுடன் இணைப்பது, அறிவுக்குத் துணையாக கற்பனையைக் கொண்டிருப்பது என்பது ஜான்ஸன் என்பாரின் கூற்று. இசை தழுவிய எண்ணமே கவிதை.என்று கார்லைல் என்பார் வரையறுக்கின்றார். மனிதச் சொற்களால் அடைய முடிந்த மகிழ்வூட்டவல்லதும் செம்மை நிறைந்த கூற்றே கவிதையாகும். இது மாத்யூ அர்னால்டு கவிதைக்குக் கூறும் இலக்கணம். இவையனைத்தும் தோழர் இரா. இரவி அவர்களின் கவிதைகளில் காணமுடிகிறது.
ஹைகூ திலகமாக திகழும் இவர் இன்றைக்கு நீண்ட கவிதைகள் மூலம் சமூகத்தைப் பார்த்திருக்கிறார். ஹைகூ எப்படி இருக்க வேண்டும்? ஹைகூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916 சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்.
சமீபத்திலே மார்டன் ரிவ்யூ என்ற கல்கத்தா பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒரு லிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வது என்னவென்றால், இங்கிலாந்து, அமெரிக்கா என்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக்கவிதை சிறந்தது. காரணமென்ன?
ஜப்பானிய கவிதையில் வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பது கிடையாது. கூடை கூடையாகப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன், எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று. வானத்து மீன், தனிமை, மோனம், மலர்களின் பேச்சு, இவற்றிலே ஈடுபட்டுப்போய், இயற்கையுடன் ஒன்றாகி வாழ்பவனே கவி. என்கிறார். தோழர் இரா. இரவி அவர்கள் இயற்கையுடனும் சமூகத்துடனும் ஒன்றிய கவி. அதனால்தான் அவரிடமிருந்து வந்திருக்கிறது கவியமுதம்.
வாசிக்கவும், சமூகத்தின் முகத்தை அறியவும் உதவும் கண்ணாடி இந்த கவிதை நூல். வாசிக்க வாய்ப்பளித்த கவிஞர் இரவி அவர்களுக்கு வாழ்த்துகள். வாசியுங்கள் நீங்களும் உணர்வீர்கள்.
----------------------------------------------------------------------
கவியமுதம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : கவிஞர் வசீகரன்
கவித்திருமகன் இரா. இரவி அவர்களுக்கு வசீகரன் எழுதும் வணக்கம். நலம், வளம் பெற்று சிறந்து வாழ்க! தங்களது கவியமுதம் நூலைப் படித்தேன். புதுக்கவிதை, மரபுக்கவிதை, இரு வரிகளில் கண்களைக், கருத்தைக் கொள்ளை கொண்ட கவிதை என புதிய வழியில் பின்னி பெடலெடுத்து விட்டீர்கள். இந்தியா தோற்றதற்கு நன்றி என்ற ஈழ நலன் குறித்த கவிதை, கண்களை நனைத்து விட்டது. மண்ணில் தெரியும் வானவில் என்று தோகைமயிலைப் பற்றித் தொடங்கும் வரியில் உங்கள் கவிவண்ணம் முத்திரையிடுகிறது. யானை மலை பற்றிய படப்பிடிப்பு அதனைக் காணும் ஆவலைத் தூண்டுகிறது. தமிழ், தமிழர் நலன், பெண்களின் சிறப்பு, அன்னையின் அருமை என பேசிச் செல்லும் கவிதைகள், ஒரு தங்கத்தமிழ்க் கவியை எமக்கு அடையாளம் காட்டுகின்றன. 172 பக்கங்களில், பளபளப்புத்தாளில் போட்டு கண்ணையும், கருத்தையும் கவர்ந்து விட்டீர்கள் கவித்தோழரே!
இந்நூல் இலட்சம் படிகளைத் தாண்டி விற்றுச் சாதனை புரிந்து தமிழ்த் திருமகனின் பெருமையை உயர்த்தட்டும், நன்றி! .வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com இணையம் www.vanathi.in
------------------------------------------------------------------------------
கவியமுதம் !
ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சனம் :பா.வெங்கடேஷ் ! ( G.R.T).
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.comஇணையம் www.vanathi.in
கவிஞர் ரவி அவர்களின் 14 வது நூலான கவியமுதம் படித்து பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் , இதோ நூலைப்பற்றி என் பார்வை.
ஹைகூ கவிதை மட்டும் போதும் என்று தன் எல்லையை வகுத்துக்கொள்ளாமல் புதுக்கவிதை புனைவதிலும் முயற்சி செய்து புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார் கவிஞர் ;
புத்தகத்தின் முகப்பிலேயே முனைவர் வெ.இறையன்பு மற்றும் பேராசிரியர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரை நூலுக்கு அழகு ...
தமிழ் , தமிழர் நலன் என்ற தலைப்பில் தமிழின் தொன்மையும் ,அழகையும் நயமாக பாடியிருக்கிறார்...
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு
ஒப்பற்ற தமிழுக்கு பிறமொழி கலப்பு நஞ்சு !
இல்லங்களில் தமிழ் பேச்சை குழந்தைகள் கடைபிடிக்கவும்,பெயர்களில் தமிழை பயன்படுத்தவும் அன்பாக கட்டளையிடுகிறார்.
கவிஞர் தான் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதையின் வழிகாட்டியான தந்தை பெரியார் முதல் நீதியரசர் சந்துரு வரையான சான்றோர்கள் பற்றிய போற்றுதல் அவருடைய விசாலமான சிந்தனைக்கு உதாரணம் ;
தமிழ்மொழிப்பற்று , திருக்குறள் தேசிய நூலாக வேண்டுகோள் , சமூக அக்கறை இவைகளைத் தாண்டி கவிஞரின் உள்மனதில் நிழலாடும் காதல் சிந்தனைகளை அழகிய பாக்களாக வடித்துள்ளார் ..
மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம்
மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம்
இவ்வரிகள் மூலம் புத்தக வாசித்தல் விழிப்புணர்வை இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்துக் கூறுகிறார். என்றும் சுறு சுறுப்பாகவும் , இளமையாகவும் இயங்கிக்கொண்டிருக்கும் கவிஞர் ரவி அவர்கள் கவியமுதம் போன்ற மேலும் பல அமுதசுரபிகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அளித்திட வேண்டுகிறேன் ..
-------------------------------------------------------------------------------
‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் யாழ். சு. சந்திரா
பேராசிரியர், மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை.
அமுதும் தேனும்

ஹைக்கூ கவிஞர் பதினான்காவது நூல் கவியமுதம்.  ஹைக்கூவில் தொடங்கியவர் கட்டற்ற கவிதைத் தடத்தில் செய்த இந்தப் பயணமும் புதிதாகத் தான் இருக்கிறது.  இந்த நூலில் எனக்குப் பிடித்த கவிதைப் பக்கங்கள் தமிழ் சார்ந்தனவே.

உறவுச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துத் தமிழின் சொற்களஞ்சியத்தை விவரிக்கிறார். உலக மொழியால் முன்னெடுத்துச் சொல்லப்படும் ஆங்கிலத்தின் சொல்லாட்சி வறுமையையும் ஒப்பிட்டுக் காட்டுவதில் ஒரு மொழியியல் அறிஞர் போல ரவி தென்படுகிறார்.

தமிழா நீ பேசுவது தமிழா? என்ற புகழ் பெற்ற தொடரை அடியொற்றி ஒரு நீண்ட கவிதையைத் தர முற்படும் இரவி ஈழச்சொந்தங்களை அந்தக் கவிதையில் இணைத்துப் பேசுவது நம்மையும் ஈரப்படுத்துகிறது.

வள்ளுவரில் தொடங்கி பெரியார், காமராசர், அண்ணாய, வள்ளியம்மை, மண்டேலா, வாலி, வள்ளியப்பா எனச் சான்றோர் பற்றிய கவிதைகள் எல்லாம் நடைச் சித்திரமாக அந்த நாயகர்களை நம் முன்னே நிறுத்துகின்றன.

அதென்னவோ காதல் கவிதைகளில் மட்டும் தோழர் இரவியின் எழுதுகோல் அதிகமான கவித்துவத்தைத் தருகிறது.

       “உச்சி எடுத்துச் சீவ வேண்டாம் என்று
                     அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய்!
              இன்று வரை உச்சி எடுப்பதில்லை
                     கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை!

என்பதைப் போல நீ அழித்த கோட்டை நான் போடுவதே இல்லை. 
 என்ற கவிதையைச் சொல்லலாம்.

       ஒட்டுமொத்த நூலிலும் ‘அ’ வில் தொடங்கும் அற்புதம்! என்ற தலைப்பே சிறந்த கவிதை எனலாம்.

       கவிதையைப் படிக்கலாம் ; ரசிக்கலாம் ; சுவைக்கலாம் ; ரசித்ததைச் சுவைத்ததைச் சொல் என்றால்

  பசியை உணரலாம், சாப்பிட்டால் நீக்கிக் கொள்ளலாம், வயிறு நிறையலாம், விருந்துண்டு மகிழலாம், பசியைச் சொல் என்றால்?

       கவியமுதம் உண்டால் உணர்வில் செரிக்கலாம் ; உயிர் வளர்க்கலாம் ; உண்டு உணர்ந்ததை – செரித்ததை உரைக்கத் தெரியவில்லை.  அமுதும் பருகி இமையாத் தேவர்களால் இலக்கியத்தில் நிலைக்கலாம்.  அமுதம் உண்டாலே ஆயுள் வளரும் என்றால் அமுதம் தந்தவர்?

       ஆண்டுகள் பலவாக நூல் பெருகி இலக்கிய உலகில் இறவா புகழ் பெற்றுச் சிறக்க பிறவா யாக்கைப் பெரியோனைப் பணிந்து வாழ்த்துகிறேன்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்