தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு; திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரை தலைப்பு : நூல் !
தொகுப்பு : கவிஞர் இரா. இரவி நாள் : 26-04-2015 விழா ஏற்பாடு;
திரு. வரதராசன், புரட்சிக்கவிஞர் மன்றம்
*****
நூல் நிலத்தை அளக்கப் பயன்படும். செங்கல் அடுக்கும் போது சமம் பார்க்க பயன்படும். ஒழுங்குபடுத்துவது, செம்மைப்படுத்துவது நூல். மாந்தரை செம்மைப்படுத்துவது எதுவோ? பண்படுத்துவது எதுவோ? அதுவே நூலாகின்றது. நூல் ஒன்று கீழே இருந்தால் மிதிபடக் கூடாது என்கிறோம். காரணம் சான்றோர் எழுத்திற்குத் தரும் மதிப்பு. பல பொருள்களில் பயன்படுவது நூல்.
நூல் எழுதுவதற்கே ஒரு பா இருந்தது நூற்ப்பா என்றனர். ஆசிரியரிடம் இருந்த நூலிற்கு ஆசிரியப்பா என்றனர். அகவல் போல ஓசை எழுப்பும் பாடலை அகவல் பா என்றனர். சின்நூல் சமணசமயத்தினருடையது, நன்னூல் சமணர்களுடையது. தென்னூல் தஞ்சை பாலசுப்பிரமணி எழுதியது. இந்நூல் புலவர் குழந்தை இயற்றியது. பின்னர் தான் நூல் என்பது பொதுப்பெயர் ஆனது. வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தவர், இங்கு வந்து தமிழ் கற்று தமிழில் நூல்கள் வடித்தார். சமணர்கள், கிறித்தவர்கள், சைவர்கள், வைணவர்கள் அனைவருக்கும் சமயம் கடந்த பொதுச்சொல்லாக நூல் ஆனது.. தமிழ் தமிழர் பரந்து விரிந்த எண்ணத்தோடு இருந்தது தெளிவாகின்றது.
இளங்கோவடிகள் சமணர். சிலப்பதிகாரத்தில் மற்ற கடவுள்கள் பற்றியும் பாடி உள்ளார். தமிழில் எல்லா மதத்தவருக்கும் நூல்கள் உள்ளன. கிறித்தவர்களுக்கு தேம்பாவணி, சைவர்களுக்கு பெரிய புராணம், வைணவர்களுக்கு இராமாயணம், மகாபாரதம் உள்ளன. கடவுள் இல்லை என்று மறுப்பவர்களுக்கு இராவண காவியம் உள்ளது. வள்ளலார் பொதுநிலை அருட்பா எழுதினார். சன்மார்க்க வழி கற்பித்தார். அவரிடம் முன்பு பல தெய்வங்களை வழிப்பட்டீர்கள் என்று கேட்டதற்கு, அப்போது என் அறிவு, அவ்வளவு குறைவு என்றார். உலகில் உள்ள எல்லோரும் வாழப் பிறந்தவர்கள், யாரையும் வாழவிடாமல் செய்வது மாந்தநேயம் அன்று. எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்றார் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார்.
உலகத்தை உங்கள் கையில் கொண்டு வருவது நூலகம். அப்துல் ரகீம் என்ற எழுத்தாளர் அவரது நூலில் ஒரு பணக்காரர் பற்றி எழுதி உள்ளார். ஒருவர் திட்டமிட்டார் : உழைத்து பொருள் ஈட்டுவது, 40 வயதில் வேலைகளை நிறுத்தி விடுவது : 40 கோடி டாலர்கள் ஈட்டுவேன் என்று கணக்குப் போட்டு உழைத்தார். 40 வயது ஆனதும் ஈட்டுவது நிறுத்தினார். 56 கோடி டாலர்கள் சேர்ந்தது, ஒரே ஒரு பெண் குழந்தைக்கு ஒரு பகுதியை ஒதுக்கினார். நண்பர்களுக்கு 1500 டாலர்கள் கொடுத்தார். மீதம் இருந்த பணத்தில் 1726 நூலகங்கள் அமைத்தார் என்பதை எழுத்தாளர் அப்துல் ரகீம் அழகாக எழுதி உள்ளார்.
கெடுப்பது அல்ல நூல், எடுத்துக் கொடுப்பதே நூல், செம்மைப்படுத்துவது நூல், பாரசீக கதை ஒன்று உண்டு. வென்ற மன்னனிடம் அவரது தளபதி, போரிட்டு தோற்ற மன்னனின் மணிமுடியையும், தங்கப்பேழையையும் கொண்டு வந்து கொடுத்து, இந்த மணிமுடியை நீங்கள் பயன்படுத்தலாம், தங்கப் பேழையை அணிகலனாக அன்னைக்குத் தரலாம் என்றார். என்னிடம் தோற்றவரின் மணிமுடியை நான் அணிய மாட்டேன், அன்னைக்கு அணிகலனுக்கு தங்கப்பேழையையும் தர மாட்டேன். இரண்டையும் வைத்து அதன் மீது இரண்டு நூல்களை வைக்கலாம் என்றார் மன்னர். அந்த மன்னர் வேறு யாருமல்ல அலெக்சாண்டர் தான்.
நூலின் பயன் பார்க்க வேண்டுமானால் எந்த நூலிலாவது பற்று வைக்க வேண்டும், நூலின் ஆழத்திற்குப் போக வேண்டும், நூல் படிக்கும் இன்பத்திற்கு இணையான இன்பம் இவ்வுலகில் வேறில்லை.
நூலகம் என்பது குழந்தைகளுக்கு பாலகம், முதியோர்களுக்கு மேலகம், நூலின் பயன்பாடு மிகுதி. ஆங்கிலத்தில் ‘NEWS’ என்றார்கள் . நான்கு திசைகளையும் பற்றி சொல்வார்கள். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு நான்கின் சுருக்கம்.
இங்கிலாந்தில் இருக்கக் கூடியவர் அவர், பிறந்தது ஜெர்மனி. 25 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. 25000 நூல்கள் படித்தார். அவர் பொதுவுடைமை பற்றி மிகச்சிறந்த நூல் எழுதினார். அவர் தான் காரல்மார்க்சு. படிப்பதை நிறுத்தாவிட்டால் ஞாயிறுதோறும் கட்டி வைத்து 25 சவுக்கடிகள் தருவோம் என்றாலும், படிப்பதை நிறுத்த மாட்டேன், சவுக்கடிகளை வாங்கிக்கொண்டு திரும்பவும் படிப்பேன் என்றார் காரல்மார்க்சு. அந்த அளவிற்கு வாசிப்பை நேசித்தவர்.
சாக்ரடீசு சென்ற இடமெல்லாம் கேள்விகள் கேட்பார். அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது. நஞ்சை குடித்து விட்டு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அப்போது சொன்னார்கள் : பேசுவதை நிறுத்துங்கள், அப்போது தான் நஞ்சு விரைவாக வேலை செய்யும். விரைவில் இறப்பீர்கள், துன்பம் இல்லை என்றனர். சாக்ரடீசு சொன்னார், இன்னும் கூட நஞ்சு கொடுங்கள், குடித்து விட்டு பேசுகிறேன், ஒருபோதும் பேசுவதை நிறுத்த மாட்டேன் என்றார். அப்போது வெளியே பாடல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. அருகில் உள்ளவரை அந்தப்பாடல் கேட்டு எழுதி வாருங்கள். நான் படிக்க வேண்டும் என்றார். இப்போதுமா படிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு சாக்ரடீசு சொன்னார், போகுமுன் ஒன்றை தெரிந்து கொண்டு போகிறேன் என்றார். அவ்வளவு பெரிய அறிஞர் சொன்னார். எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்று. எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் அந்த ஒன்று. பெரிய அறிஞரின் அடக்கம் பாருங்கள்.
விவேகானந்தர் சொன்னார், என்னிடம் உலகில் தலைசிறந்த சிந்தனையாளர் ஒருவர் பெயர் சொல் என்றால், ‘புத்தர்’ என்றே சொல்வேன் என்றார். ஆனால் புத்தரோ அவருடைய சீடர் ஆனந்தன் கேட்ட கேள்விக்கு சொன்ன பதில் பாருங்கள் : உங்கள் அளவிற்கு ஞானம் பெற்றவர்கள் யாரும் இருக்கிறார்களா? என்றார். அதற்கு புத்தர், மூடிய கையைக் காட்டி உள்ளே என்ன இருக்கிறது? சொல் என்றார். தெரியவில்லை என்றார், என் கைக்குள் இருப்பதே உனக்குத் தெரியவில்லை, என் கூட்டுக்குள் இருப்பது உனக்கு எப்படித் தெரியும். என் கையில் உள்ளது. ஒரே ஒரு அரச இலை. உலகம் முழுவதும் பல இலைகள் உள்ளன. நான் அறிந்தது ஒரு இலை அளவு தான் என்றார் புத்தர். புத்தரின் அடக்கம் பாருங்கள்.
சங்க காலத்திலேயே கருமருந்து இருந்து இருக்கின்றது. ஆனால் நாமோ கருமருந்தை கோயில் விழாவிற்கு வேட்டு வைக்க மட்டுமே பயன்படுத்தினோம். ஆனால் வெள்ளையர்கள் கருமருந்தை அழிவுக்கும் பயன்படுத்தினர். நீராவியில் நாம் இட்லி, புட்டு அவித்தோம், அவர்கள் தொடர்வண்டி, கப்பல் இயக்கினார்கள்.
படிப்பவரைப் பொறுத்துத் தான் எந்த நூலும் பயன் தரும். மருத்துவர் கையில் உள்ள கத்தி, போகப் போடும் உயிரை வாழ்விக்கும். கொலைகாரன் கையில் உள்ள கத்தி வாழ வேண்டிய உயிரைக் கொன்று விடும். கத்தி நன்மைக்கும் பயன்படும், தீமைக்கும் பயன்படும், பயன்படுத்துவதில் உள்ளது நன்மையும், தீமையும்.
திருக்குறள் ஆய்வுரை எழுதியவர் ஓர் உவமை எழுதினார். குளத்தில் தங்கக்காசு உள்ளது, இரண்டு அடி தூரம் கையை விட்டேன், கிடைக்கவில்லை, மேலும் விட்டேன், கிடைக்கவில்லை, திருக்குறள் மிக ஆழமானது, ஒவ்வொருவருக்கும் அவரவர் எடுத்துக் கொள்ளும் அளவு தான் கிட்டும், திருக்குறள் முழுமையும் யாருக்கும் கிட்டாது.
தன்நிலையை உயர்த்த வாய்ப்பாக இருக்கும் நூல். நூல் போன்று, நூலகம் போன்று உயர்ந்தது உலகில் வேறு இல்லை. நூல்-புத்தகம்-ஏடு என்றும் சொல்வதுண்டு. போந்தகம் என்றால் பனைமரம் என்று பொருள். பனை ஓலையில் எழுதுவதால் பொத்தகம் என்றனர். பின்னர் புத்தகம் ஆனது. பொந்து இருக்கும் மரம் பனைமரம் என்பதால் போந்தகம் என்றனர்.
ஓலைச்சுவடி என்றால் சம்மான ஓலைகளை சுவடி சேர்த்தல். இதுவே சோடு என்றானது, பின்னர் ஜோடி என்றனர். சுவடி என்ற சொல்லை ஜோடியாக்கி விட்டோம். சுவடனை – சோடனையானது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புத்தகசாலைக்கு சுவடிச் சாலை என்று பெயர் சூட்டினார். பெரிய புராணத்தில் புத்தகம் என்ற சொல் வருகின்றது. பனைஓலையும் பக்குவமாக இருக்க வேண்டும், அதிகம் வளைந்ததாகவோ, அல்லது வளையாத்தாகவோ அல்லாமல் பதமாக வளைந்த ஓலையை வெந்நீரில் காய வைத்து உலர்த்த வேண்டும். பின்னர் மஞ்சள் தடவ வேண்டும். இதற்கு பின்பு தான் எழுதுவதற்குப் பக்குவம் அடையும் ஓலை. நூல் என்பதை பல்வேறு சொற்களில் பயன்படுத்தி உள்ளனர். முறை, திருமுறை, கணக்கு, (மேற்)கணக்கு, (கீழ்)கணக்கு, திரட்டு, திரட்டி, தொகை, (பத்துப்)பாட்டு, இப்படி பல சொற்களுக்கும் நூல் என்றே பொருள். அவ்வை, நூலை பட்டாங்கி என்பார். திருவள்ளுவர், நூலை விதை என்பார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொல்வார், நூல் என்பது விதைநெல் என்று. ஒரு விதைநெல் பல நெல்மணிகளை விளைவிப்பது போல ஒரு நூல் பல நூல்களை உருவாக்கும்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே, தொல்காப்பியர் சொன்னது, சொல்லின் பொருள் பார்த்த பார்வையில் தெரியாது, ஆழமாகப் பார்க்க வேண்டும், இயல்பாக தண்டனை என்ற சொல் பயன்படுகிறது அடிக்குச்சியால் அடிப்பது, சிறையில் இடுவது, தூக்கிலிடுவது என அனைத்தும் தண்டனை என்ற சொல் இடம்பெறுகிறது.
தண்ணீர் இருந்து வரும் தாமரைக்கு தண்டு என்கிறோம். மேலே வந்த கீரையை கீரைத்தண்டு என்கிறோம். மரம் தண்டிலா இருக்கு என்கிறோம். தண்டு என்ற சொல் தடியானது, ஊன்றுகோலுக்கும் தடி என்றார்கள். தண்டபாணி, தண்டல் நாயகன், தண்டோரா இப்படி பல சொற்களுக்கு மூலம் தண்டு. புல், மரத்திற்கு தண்டு என்று இருந்த சொல், பின்னர் தங்கம், வெள்ளி உலோகங்களின் பொருட்களுக்கும் தண்டு என்ற சொல் வந்தது. இப்படி சொல்லை ஆயும் இன்பத்திற்கு இணையான இன்பம் இல்லை. தண்டு என்ற சொல் வழி பிறந்ததே தண்டனை என்ற சொல்.
படைப்பாளி எப்படி இருக்க வேண்டுமென்றால், படிப்பாளிகளையும் படைப்பாளியாக்க வேண்டும். இந்தக் கொள்கை கொண்டு இருந்தால் கல்லார் இல்லார் என்ற நிலை வரும். கணவன், மனைவி கல்லாமல் இருந்தால் கற்பிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் கற்பிக்க வேண்டும். கடமையை, கற்பித்தலை செய்ய வேண்டும். எல்லோரையும் கற்றவராக்க வேண்டும். பெண்கள் இன்று எல்லாத் துறையிலும் உள்ளனர். காரணம் கல்வி. நூல் வாசித்தல்.
வேலு நாச்சியாரிடம் குயிலி என்ற தோழி இருந்தாள். அவள் வெள்ளையர்கள் துப்பாக்கி, பீரங்கி என்று குவித்து வைத்திருந்த கிடங்கிற்கு சென்று தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு எரிந்து கிடங்கை எரித்தாள். குயிலி வரலாற்றில் இடம் பெற்றாள். ஈழத்தில் நடந்த போராட்டத்திற்கு முன்னோடி குயிலி தான். (சொல்லும் போது அவர் கண்ணில் கண்ணீர் வந்தது).
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்று சொல்பவரைத் தடுத்து, பெண்கள் அனைவரும் படிக்க வேண்டும், தாய்மொழி, தாய்நாடு காக்க பெண்களுக்கு சொத்துரிமை, சொல்லுரிமை வழங்கிடல் வேண்டும்.
*****
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக