இசை மேதை டி.எம். சௌந்தரராசன் பாடல்களில் சிகரம் தன்னம்பிக்கைப் பாடல்கள்! கவிஞர் இரா. இரவி

24.3.2015 அன்று மதுரையில் நடக்க உள்ள 

இசை மேதை டி.எம். சௌந்தரராசன் பிறந்த நாள் விழா கவியரங்கில் வாசிக்க உள்ள கவிதை 

இசை மேதை    டி.எம். சௌந்தரராசன் பாடல்களில் சிகரம்
தன்னம்பிக்கைப் பாடல்கள்!
கவிஞர் இரா. இரவி
*****
படிப்பறிவு இல்லாத பாமரனையும்
பாடல் பாட வைத்து தமிழைக் கற்பித்தவர்!

காதல் பாடல்கள் கைகள் என்றால்
தத்துவப் பாடல்கள் கால்கள் ஆகும்!
தன்னம்பிக்கைப் பாடல்கள் இதயம் போன்றது !

இதயமின்றி மற்ற உறுப்புகளின் இயக்கம்,
சாத்தியமில்லை எனபது சத்யம்!

சௌந்தரமான குரலுக்குச் சொந்தக்காரர் சௌந்தரராசன் !

காதல் பாடல்கள் குழம்பு என்றால்
தத்துவப் பாடல்கள் ரசம் ஆகும்!
தன்னம்பிக்கைப் பாடல்கள் சோறு போன்றது !

சோறின்றி குழம்பு, ரசம் இருந்து ரசனையில்லை.

காதல் பாடல் தலைப்பில் பாட மறுத்ததால்
காதலுக்கு எதிரி அல்ல நான்!

தன்னம்பிக்கை எனக்குள் வளர்த்தது தன்னம்பிக்கை பாடல்!
தன்னம்பிக்கையுடன் தன்னம்பிக்கையைத் தேர்ந்தெடுத்தேன்!

ஒரு மனிதன் காதலின்றி வாழ்ந்திடலாம்!
ஒரு மனிதன் தத்துவம் அறியாமலும் வாழ்ந்திடலாம்!
ஒரு மனிதன் தன்னம்பிக்கையின்றி வாழ்வது கடினம்!

காதலா? தத்துவமா? தன்னம்பிக்கையா? என்று 
கேள்விகள் எழுப்பினால் தன்னம்பிக்கையே விடையாகும் !

அச்சம் என்பது மடமையடா! பாடிப் பாருங்கள்!
அச்சம் அகத்திலிருந்து அறவே அகன்று விடும்!

சின்னப்பயலே சின்னப்பயலே பாடிப் பாருங்கள்!
சிந்தனையில் அனைவருக்கும் தெளிவு பிறக்கும்!

திருடாதே பாப்பா திருடாதே பாடிப் பாருங்கள்
திருட்டுக்குணம் குழந்தைகளிடம் அற்றுப் போகும்!

உழைத்து வாழ வேண்டும் உச்சரித்துப் பாருங்கள்!
உழைப்பின் உன்னதம், உயர்வை உடன் உணர்வீர்கள்!

ஏழையாகப் பிறந்து ஏழையாகவே வாழாதவர்!
ஏழ்மையை தன்னம்பிக்கையால் தரைமட்டமாக்கியவர்!

மதுரையில் பிறந்து மதுரையின் பெருமைகளில் ஒன்றானவர்!
மதுரையின் புகழை உலக அரங்கில் உயர்த்தியவர்!

தாய்மொழி தமிழ் இல்லை, சௌராட்டிரம் என்ற போதும்
தமிழ் அன்னையின் அன்பை முழுவதுமாகப் பெற்றவர்!

நடிகர் திலகமே நடுங்கிய குரலுக்குச் சொந்தக்காரர்!
மக்கள் திலகமே மிரண்டிட்ட குரலுக்குச் சொந்தக்காரர்!

இருவரின் புகழுக்கும் உயர்வுக்கும் காரணமானவர்!
இருவரிடமும் எந்த உதவியும் என்றும் கேட்காதவர்!

ஆறு முதல் அறுபது வரை அனைவரும் விரும்பிடும்
அற்புதமான ரம்மியமான குரலுக்குச் சொந்தக்காரர்!

ஆயிரக்கணக்கில் பாடல்கள் பல பாடிய போதும்!
அகந்தையைத் தலையில் ஏந்திக் கொள்ளாதவர்!

தோல்வியால் துவண்ட உள்ளங்களை தூக்கி நிறுத்தியவர்!
தோல்விக்கு அஞ்சாத குணத்தை பயிற்றுவித்தவர்!

தன்னம்பிக்கையை தன் பாட்டால் விதைத்தவர்!
தன்னம்பிக்கையின் சின்னமாக என்றும் விளங்கியவர்!

டி.எம். சௌந்தரராசன் என்றால் தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை என்றால் டி.எம். சௌந்தரராசன்

உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும்
பாடல்களால் உலகத்தமிழர்களின் உள்ளங்களில் வாழ்பவர்!

வாழ்க பல்லாண்டு!
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்