‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. புரிந்துரை : கவியருவி; கோவை கோகுலன்,

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
புரிந்துரை :
கவியருவி;  கோவை கோகுலன்,
செயலர் , வசந்தவாசல் கவிமன்றம்
9/68, பெரியார் நகர், நேரு நகர் கிழக்கு, விமான நிலையம் அஞ்சல், கோவை. அலைபேசி 98422038022
மின்னஞ்சல்  kovaivasanthavasal@rocketmail.com 
-------------------------------------

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17. 
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150


பாராட்டுக்குரியவர்கள் மற்றவர்களை பாராட்டுதல் என்பது தமிழரின் பண்பட்ட நாகரீகம்.  நஞ்சை நில குணம் கொண்ட அந்த நல்லோர் வரிசையில், பாராட்டுக்குரிய பண்பாளர், நண்பர் இரா. இரவியும் ஒருவர்.  கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், உரைவீச்சாளர், இணையதள இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவரின் நற்குணங்களில் ஒன்று தான் தன்னைப் போன்ற, தன்னிலும் மூத்து முதிர்ந்த படைப்பாளர்களை, பண்பாளர்களை பணிதலும், பாராட்டுதலும் கொண்ட நற்குணமாகும். அதற்கான சரியான சான்று தான் இவரது ‘புத்தகம் போற்றுதும்’ என்கிற நூற்புதையல்.

தமிழ் இலக்கியப் புலத்தில், கவிப்புலத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டதோடு தனது இலக்கிய முன்னோர்களையும், எழுத்துலக முன்னோடிகளையும் முன்னோர் உழவாக்கி, அவர்களது படைப்புகளை பாங்குற அறிந்து, பயனுறப் புரிந்து அதனால் விளைந்த நல்லுணர்வுச் செய்திகளை நாட்டோர்க்களித்து நலம் கண்டிருக்கும் திரு. இரவி அவர்களின் இந்த ‘புத்தகம் போற்றுதும்’ என்கிற புரிந்துணர்வு நூலில் அவர் சொல்லியிருப்பதை விட சொல்லாமல் நமக்கு உணர்த்தியிருக்கும் புலப்பாடுகளே அதிகம்.

இந்நூலில் ஒரு தனிச்சுவையை நான் காண்கிறேன்.  சான்றோர் பெருமக்களின் கட்டுரைகள் பலவற்றை தனது நூலின் ஆய்வுக்களமாக்கிக் கொண்டு தன் நோக்கில் பயணிக்கும் இவர், அவற்றில் பெரிதாக எடுத்துக் கொண்டது என்னவென்றால், அக்கட்டுரையாளர்கள் தங்களது படைப்புகளில், மற்றவர்களைப்பற்றி குறிப்பிட்டுள்ள நன்றிக்குரிய நற்குறிப்புகளைத் தான்.  அவற்றை எல்லாம் இவர் கூர்ந்தளித்து இந்நூலில் கட்டுரையாளர்களோடு அவர்கள் காட்டியுள்ள நற்பேராளர்களையும் அவர்களோடு இவருக்கிருந்த தொடர்புகளையும் இந்நூலில் குறிப்பிட்டு தனது நன்றியறிதலை அவர்களுக்குமாக சேர்த்தளித்தது இவரது நற்பண்பை நடுகல்லாக நிலைக்க வைத்திருக்கிறது.

எக்காலத்துக்கும் பொருந்தி வரும் விருந்தாக பல சான்றோர்களால் படைக்கப்பட்டிருக்கும் இந்த பொற்புதினங்களை, தனது நூலறிவால் நுகர்ந்து நுண்ணறிவால் தெளிந்து இனி எக்காலத்துக்கும் பொருந்தும் அருமருந்தாக தமிழ் விருந்தாக்கி இந்த நூலை இவர் தந்திருப்பது தனிச்சிறப்பு.  வாசகர்கள் இந்நூலைப் படித்து முடித்தவுடன் மலைஅளவு மகிழ்வுச் சூழலில் திளைத்தவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வைத்திருக்கும் எழுத்துவண்ணம் இவருக்கு கைவண்ணமாகி விடுகிறது.

நல்லோர்களை, நல்லனவற்றை எங்கிருந்தாலும், எவரிடமிருந்து வரினும் அவற்றையும், அவர்களையும் மனமுவந்து பாராட்டுகின்ற பண்பு அசாதாரணமானதாகும்.  இவரது மற்ற நூல்களிலிருந்து இந்நூல் மாறுபட்டு, தனிக்கொடி ஏந்தி, தனிப்படை திரம், தரணியில் தமிழ்வலம் வரவேண்டிய தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

எவரையும் ஏகடியம் செய்யாமல், எவரிடத்திலும் குறைகளைத் தேடாமல், நல்ல நிகழ்வுகளையும், அவர்கள் நிறைவுகளையும் தேடிப்பிடித்து சிலாகிட்டதில் திரு. இரவியவர் எப்போதும் முன்னோடியாக, முதல்வராக இருப்பவர் என்பதை நிரூபணம் செய்கிறது இந்நூல்.  படைப்பாளர்கள் அனைவரும் இவ்வழியைப் பற்றினால் எழுத்துலக ஏற்றங்கள் விரைவில் சாத்தியமாகி விடும்.  இவரின் இம்முயற்ச்சி தன்னலமற்றது.  தகை சான்றது.  நாளை எழுத்துலகம் இவரிடமிருந்து நிறைய எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
நன்றியும் வாழ்த்துகளும்.மனம் நிறை மகிழ்வுடன்

கோவை கோகுலன்
19-02-2015
கோவை
*****

கருத்துகள்