மரபு மலர்கள் ! ( மரபு கவிதைகள் ) நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஒளியகம் பதிப்பகம் ,எண் 20.மல்லிகைத் தெரு ,வானொலி நகர், உழவர்கரை ,புதுச்சேரி .605010. பேச 9486268398.
விலை ரூபாய் 150.
ஈழத் தமிழர்களுக்கு அடுத்த படியாக தமிழைத் தமிழாகப் பேசி வருவது புதுவைத் தமிழர்கள்தான் .அந்த புதுவை மண்ணில் இருந்து மண் மனம் மாறாத மரபுக் கவிதைகள் .அட்டைப்பட வடிவமைப்பு உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன பாராட்டுக்கள் .
கலைமாமணி. வில்லிசை வேந்தர் புலவர்
இ .பட்டாபிராமன் அவர்களின் அணிந்துரை மிக நன்று. கலைமாமணி ,சந்தப்பாமணி, புலவர் அரங்க நடராசன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று.பாட்டறிஞர் கலைமாணி புலவர் இலக்கியன் தகவுரை கவிதை நடையிலேயே உள்ளது சிறப்பு .இரண்டு அணிந்துரைகளும் இரண்டு விழிகளாக உள்ளன .தகவுரை இதயமாக உள்ளது.
நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் தன்னுரையில் இந்நூல் முதல் நூல் என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .முதல் நூல் மட்டுமல்ல முத்தாய்ப்பான நூஒலாக உள்ளது .பாராட்டுக்கள்.
இந்நூலில் இயற்கை என்ற பிரிவில் 20 கவிதைகளும் ,தமிழ் என்ற பிரிவில் 7 கவிதைகளும் , பெண்கள் என்ற பிரிவில் 6 கவிதைகளும் , குமுகாயம் என்ற பிரிவில் 45 கவிதைகளும் , சான்றோர் என்ற பிரிவில் 31கவிதைகளும் ஆக மொத்தம் 109 மரபுக் கவிதைகள் நூலில் உள்ளன .கவிதை ரசிகர்களுக்கு நல் விருந்தாக உள்ளது .
.
மரபு என்பது மாறாதது .திட்டமிட்டது .ஒழுங்கானது .சூரியன் போல இருப்பது .மரபுக் கவிதை என்பது நம் பெற்றோர்களின் மாறாத அன்பு போல மாறாத வடிவில் உள்ளவை .தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பவை .உரம் சேர்ப்பவை .பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் சங்க இலக்கியம் இன்றும் இனித்திடக் காரணம் அவை மரபுக் கவிதைகள் .
மரபு என்பது மாறாதது .திட்டமிட்டது .ஒழுங்கானது .சூரியன் போல இருப்பது .மரபுக் கவிதை என்பது நம் பெற்றோர்களின் மாறாத அன்பு போல மாறாத வடிவில் உள்ளவை .தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்பவை .உரம் சேர்ப்பவை .பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் சங்க இலக்கியம் இன்றும் இனித்திடக் காரணம் அவை மரபுக் கவிதைகள் .
மரபுக்கவிதை எழுதிடும் ஆற்றல் என்பது வரம் போன்றது. எல்லோருக்கும் மரபு எழுதும் ஆற்றல் வாய்ப்பதில்லை . நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் அவர்களுக்கு மரபுக் கவிதை வடிக்கும் ஆற்றல் நன்கு கைவரப்பட்ட காரணத்தால், மரபுக்கவிதைகளில் சொல் சிலம்பம் ஆடி உள்ளார்கள் .தமிழ்ச் சொற்களின் களஞ்சியமாக நூல் உள்ளது. கவிதை ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
மற்ற மலர்கள் ஒரே நாளில் வாடி விடும் .இந்த மரபு மலர்கள் என்றும் வாடாதவை .வாசம் மிக்கவை .பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .நீண்ட கவிதைகளாக இருந்த போதும் மிகவும் பிடித்த சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன். இயற்கை பற்றிய கவிதைகள் முழுவதும் படிக்கும் போது இயற்கையை நம் மனக்கண் முன் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .நூல் ஆசிரியர்.
இயற்கை எழில் !
வயலில் விளைந்த பயிர்கள் தரையில் வளர்ந் திருந்தே .
நயனுறக் கற்றோர் பணியும் முறையை நவின்றிடுதே
கயந்தனில் துள்ளிடும் மீன்கள் சுவைத்திடுங் காட்சியதே
கயலைப் பிடிக்க முனைவர் சிறுவர் களிப்புடனே !
என்ன வளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன் கையை எந்த வேண்டும் பிற மொழியில் ? என்பதை பறை சாற்றும் விதமாக தமிழ் உணர்வு விதைக்கும் , விதமாக தமிழன் பெருமை விளக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார் .உலகின் முதல் மொழியான ஒப்பற்ற தமிழ் பற்றி வடித்த கவிதைகள் யாவும் மிக நன்று .தமிழ் உணர்வை விதைக்கும் கவிதைகள் .
தமிழ் மொழி !
என்றன் உடம்பில் என்பில் இரத்த
ஊனில் உயிரில் கலந்தவள் !
இதயந் தன்னில் இருகண் அவற்றின்
வாக்கில் செயலில் நுழைந்தவள் !
சங்கம் கண்ட மதுரை மண்ணில்
புங்கம் கொள்ளை வளர்த்தவள்
தரணி போற்றும் இலக்கி யங்கள்
இலக்க ணங்கள் கண்டவள் !
அம்மா என்றால் சும்மா இல்லை .அம்மா என்பது ஈடு இணையற்ற உன்னத உறவு . உலகில் உப்பற்ற உறவு தாய் .தாய் பற்றி வடித்த கவிதை மிக நன்று .
தாய்தன்னின் திருக்கோவில் தரணிதனில் யாண்டுமிலை
தாய்மையினில் உயர்ந்தபோது தாங்கிடுநற் பெண்ணினமே
தாயாகி உமையவற் சம் பந்தார்க்குப் பாலளித்தாள்
தாய்மையிலே அடங்கிடும் தங்கநிகர் குணமனைத்தும்
.
உலகிலுள்ள சொற்களிலே உயர்ந்த சொல்லே அம்மா தான்
பலன் நோக்கா (து ) இரவுபகல் பணிவிடைகள் செய்திடுவாள்
பலநாள் தன் பசி மறந்து பாச மக்கள் பசி தீர்ப்பாள்
பலர் முன்னார்ச் சான்றோனாய்ப் பணியமர்த்தி உயந்திடுவாள் !
கல்வியின் சிறப்பை , தமிழ் இலக்கியத்தின் சிறப்பை உணர்த்தும் விதமான கவிதை நன்று .
ஆழ்ந்து படித்தல் அழகு !
முன்னோர் அருளிய மூதுரை ஆத்திசூடி
நன்னெறி போன்ற நலந்தரு - நன்னூல்கள்
வாழ்நாளில் என்றும் வழித் துணையைக் கொண்டாட
ஆழ்ந்து படித்தல் அழகு .
ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான படுகொலை ஈழத்தில் நடந்தது .தமிழர்கள் குரல் தந்த போதும் தடுக்க முடிய வில்லை .அன்று மத்தியிலும் , மாநிலத்திலும் ஆண்டவர்கள் ஈழத் தமிழரின் மீது இரக்கம் காட்டவில்லை என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார் .ஈழம் பற்றி சிந்தித்து வடித்த கவிதை நன்று
குற்றவாளிகள் !
இடுகல்லாய் ஊமையராய் ஏனென்றே கேட்காமல்
நடுவரசின் அடிபணிந்து நத்திவாழ்ந்த தமிழரசும்
விடுவிக்க வழியற்ற வீரமிகு தமிழினமும்
கொடுமைகண்டு குமுறாத குற்றவாளி உணர்வீரே !
கொடுமை இளைத்த கொடூரன் தேர்தலில் தோற்றது உலகத் தமிழர்களுக்கு ஆறுதலான தகவல் .போர்க்குற்ற விசாரணை விரைந்து முடித்து ஐ .நா .மன்றத்தால் விரைவில் தூக்கில் இட வேண்டும் . திருக்குறள் பற்றி ,சுற்றுச் சுழல் பற்றி, வாழ்வியல் நெறி பற்றி பல்வேறு கவிதைகள் நூலில் உள்ளன. பாராட்டுக்கள் .
புதுவையின் பெருமைகளில் ஒன்றான புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பற்றிய கவிதை மிக நன்று .புதுவையில் வாழும் நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் பற்றி ஆழ்ந்து சிந்தித்து உணர்ந்து கவிதை வடித்துள்ளார்கள் .
புரட்சிக் குயில் !
பாரதி தாசனின் பாடல்கள்
காரிருள் நீக்கிடும் கதிரவனே !
ஆரிய மாயையை அழித்திட்ட
கூரிய வேலென நின்றதுவே !
பாடிய பாடலோ ஏராளம் !
ஓடியே ஒழிந்தன மூடங்கள்
நாடியே பெற்றனர் நல்வாழ்வு
தேடியே வந்தது புகழுமிவண் !
நூல் ஆசிரியர் நல்லாசிரியர் பாவலர் தேவகி ஆனந்த் அவர்கள் மரபு மலர்கள் ! ( மரபு கவிதைகள் ) நூலில் தமிழன் பெருமையை தமிழரின் பெருமையை நன்கு உணர்த்தி உள்ளார் மனித நேயத்துடன் ஈழத் தமிழர்களுக்காக குரல் தந்து உள்ளார் .இவரது கவிதைகளை புதிய உறவு உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் படித்து இருக்கிறேன் .மொத்தமாக நூலாகக் கண்டத்தில் மகிழ்ச்சி .பாராட்டுக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு