ஏர்வாடியாரின் படைப்புலகம் ! ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை ! பகுதி 1 கவிஞர் இரா. இரவி !

ஏர்வாடியாரின் படைப்புலகம் !

ஏர்வாடியாரின் நூல் மதிப்பீடு – ஓர் பார்வை !  பகுதி 1






கவிஞர் இரா. இரவி !

       ஏர்வாடியார் பன்முக ஆற்றலாளர்.  முதலில் கவிஞர்.  கவிதையின் மீது அளவற்ற காதல் கொண்டவர்.  அதனால் தான், தான் தொடங்கி இதழுக்கு கவிதை உறவு என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.  பெயர் சூட்டியது மட்டுமன்றி கவிதைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து கவிதைகளை பிரசுரம் செய்து வருபவர். குடத்து விளக்காக  இருந்த என் போன்ற பல கவிஞர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்து வருபவர். வளரும் கவிஞர்களின் வேடந்தாங்கலாக கவிதை உறவு இதழ் உள்ளது.

       கவிதை உறவு இதழில் ஆசிரியர் தலையங்கம், ஏழாம் பக்கம் கவிதை, மனத்தில் பதிந்தவர்கள், என் பக்கம், நூல் மதிப்பீடு இப்படி பல்வேறு பகுதிகளில் ஏர்வாடியார் எழுதி வந்தாலும், என்னை மிகவும் கவர்ந்திட்ட பகுதி நூல் மதிப்பீடு தான்.  காரணம் என்னுடைய பெரும்பாலான நூலிற்கு நூல் மதிப்பீடு எழுதி இருக்கிறார். அதனை படித்து மட்டற்ற  மகிழ்ச்சி அடைந்து இருக்கிறேன்.  நான் அடைந்த மகிழ்ச்சியை, நூல் மதிப்பீடு பிரசுரம் செய்யப்பட்ட நூல் ஆசிரியர்கள், படைப்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பது உண்மை.  படைப்பாளிக்கு படைப்பைப் பாராட்டும் போது ஏற்படும் மகிழ்ச்சி, கோடி ரூபாய் தந்தாலும் வராது. 

       மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த மண் பற்று என்பது இருக்கும்.  இருக்க வேண்டும். திருநெல்வேலி அருகே உள்ள ஏர்வாடி என்ற ஊரில் பிறந்தவர் ஏர்வாடியார்.  இராமனாதபுரம் அருகே ஏர்வாடி என்ற ஊர் ஒன்று உண்டு.  ஏர்வாடி என்ற ஊரில் பிறந்து சிலர் புகழ் அடைந்து இருக்க்லாம்.  ஆனால் ஏர்வாடி என்ற ஊருக்கு புகழ் ஏர்வாடியார் அவர்களால் தான் வந்தது என்றால் மிகையன்று. 

 சென்னையில் இராதாகிருஷ்ணன் என்றால் சிலருக்கு தெரியாது.  ஆனால் ஏர்வாடியார் என்றால் எல்லோருக்கும் தெரியும். இவர் எந்தக்கட்சியிலும் சேராதவர்.  ஆனால் எல்லாக் கட்சியிலும் இவருக்கு நண்பர்கள் உண்டு.  காரணம் அவரது பண்பு.   நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்து வருபவர்.  நீதியரசர்கள் தொடங்கி உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என்று பலரையும் நன்கு அறிந்து இருந்த போதும் நல்ல நட்பு இருந்த போதும் தனக்கென தன்னலமாக எதுவும் யாரிடமும் கேட்காத மாண்பாளர், நேர்மையாளர், செம்மையாக வாழ்பவர், திருக்குறள் போல வாழ்வாங்கு வாழ்ந்து வரும் தகைசால் ஆளுமையாளர்.

       புதுக்கவிதையின் தாத்தா கவிவேந்தர் மேத்தா அவர்களின் கண்ணீர் பூக்கள் கவிதை வெளிவரக் காரணமாக இருந்தவர் அவரது துணைவியார்.  தனது நகையை தந்து உதவி நூல் கொண்டு வந்தவர்.  அந்த நூல் வந்ததும் புகழ் பெற்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றது.  அன்று அவர் உதவ மறுத்து இருந்தால் நூல் வந்து இருக்காது.

  அதுபோலவே இன்றைக்கும் பல படைப்பாளிகளுக்கு அவர்களது இல்லத்தரசி நகை தந்து உதவி வருகிறார்கள்.  வளரும் புதிய படைப்பாளர்களின் படைப்பை பதிப்பகங்கள் நூல் வெளியிட முன் வருவதில்லை.  பல புதிய வளரும் படைப்பாளிகள் மனைவியின் நகையால், சொந்தப் பணத்தால் தான் மிகவும் சிரமப்பட்டு நூல் வெளியிட்டு வருகிறார்கள்.  வெளியிட்ட நூல்களும் உடனடியாக விற்று, போட்ட பணம் வருவதும் இல்லை.  கொஞ்சம், கொஞசமாகவே வரும்.  மொத்தமாக சேர்வதும் இல்லை. 

 இப்படி மனவலியோடு இருக்கும் படைப்பாளிக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரும் படிக்கும் கவிதை உறவு இதழில் அதன் ஆசிரியர் ஏர்வாடியார் நூல் மதிப்பீடு எழுதினால் அதனைப் படிக்கும் படைப்பாளி அடையும் இன்பத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது.  உணர்ந்தவர்கள் அந்த உணர்வை நன்கு அறிவார்கள்.  வளமிக்க இதயத்திற்கு மருந்தாக அமையும். 

       ஏர்வாடியார் நல்ல பண்பாளர். அவர் நூல் மதிப்பீடு எழுதினால் நூலின் சிறப்புகளை எடுத்து இயம்புவதாகவே இருக்கும்.  நூலில் ஏதேனும் குறை இருந்தால் அதனை எழுத மாட்டார்கள்.  நிறையை மட்டுமே எழுதி பாராட்டுவார்கள்.  மற்ற பிரபல இதழ்கள் போல வேறு யாரிடமும் நூல் தந்து, எழுதி வாங்கி பிரசுரம் செய்வதில்லை.  கவிதை உறவில் நூல் மதிப்பீடு என்றால் இதழ் ஆசிரியர் ஏர்வாடியாரே நூல் முழுவதையும் படித்து விட்டு மிக நுட்பமாக விமர்சனம் எழுதுவார்கள்.  நுனிப்புல் மேய்வது போல அன்றி முழுவதும் ஆழ்ந்து படித்து எழுதுவார்கள்.

       அதனால் தான் கவிதை உறவில் நூல் மதிப்பீடு தாமதாமாக வந்தாலும் மிகத்தரமாக வரும்.  கவிதை உறவில் நூல் விமர்சனம் வந்தால் ISI முத்திரை பெறுவது போல. தரமில்லாத சில நூல்களும் அவருக்கு வருவது உண்டு.  தரமில்லை என்று எழுதி படைப்பாளியை காயப்படுத்த விரும்பாமல் நூல் மதிப்பீடு எழுதாமல் அவர் தவிர்த்து விடுவது அவரது உயர்ந்த பண்பிற்கு எடுத்துக்காட்டாகும்.

       வளர்ந்த எழுத்தாளர், வளரும் எழுத்தாளர், வளர வேண்டிய எழுத்தாளர் என்ற பாகுபாடு இன்றி எல்லோரது படைப்பையும் சமமாக மதிப்பீடு செய்து வருபவர் ஏர்வாடியார்.  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் 120 நூல்களின் ஆசிரியர், இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் பிரபல எழுத்தாளர்.  இவர்கள் நூல் மட்டுமன்றி, முதல் நூல் வெளியிட்ட வளர வேண்டிய எழுத்தாளர் நூலையும் மதிப்பீடு பாகுபாடு இன்றி சமமாக மதித்து எழுதி வரும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.

       கலைமாமணி மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்று இருந்தாலும், பெற்ற விருதுகளை தலையில் ஏற்றிக் கொள்ளாத நல்ல மனிதர்.  அவருடைய எழுத்து தெளிந்த நீரோடை போல இருக்கும்.  படிக்கும் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதமாக இருக்கும்.

       ஏர்வாடியாரிடம் யார் அணிந்துரை கேட்டாலும், தட்டாமல் தரும் நல்ல பழக்கம் உடையவர்.  இப்படி வழங்கிய அணிந்துரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.  பல நூல்கள் வந்துள்ளன.  1996ஆம் ஆண்டில், வெளிவந்த அரிய நூல் ‘தோரணங்கள்’ நூலிற்கு தோரணமாக வழங்கிய அணிந்துரைகளின் அணிவகுப்பே தோரணங்கள் ஆகும்.

       என்னிடமும் சிலர் அணிந்துரை கேட்கிறார்கள்.  நூலைப் படித்து விட்டு அணிந்துரை வழங்கி வருகின்றேன்.  ஆனால் ஓர் அணிந்துரை எப்படி இருக்க வேண்டும்? அணிந்துரை தருபவர் எவ்வளவு அறிந்திருக்க வேண்டும்? என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக ‘தோரணங்கள்’ நூலின் ஆசிரியர் ஏர்வாடியார் தன்னுரையில் எழுதியதை பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ!
       “அணிந்துரைக்கான நூலை மட்டுமல்ல ; அத்துறைத் தொடர்பான பல நூல்களையும் முன்னரே படித்துத் தெரிந்து தெளிந்து திறன் பெற்றிருக்க வேண்டும்.  அறுவைச் சிகிச்சைக்கு முன் உபகரணங்களையும், மருந்துகளையும், பிற அவசரத் தேவைகளையும் சேகரித்த பிறகே, உறுப்பையோ, உடலையோ திறந்து பார்ப்பது போல அணிந்துரை எழுத அவர் அமர்வதற்க்கு முன் அத்துறையில் அகலமான ஆழ்ந்த அறிவு இருக்கிறதென்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்”.

       மருத்துவ உவமை மிக நன்று. ஆம் இந்த இலக்கணத்தை கடைபிடித்து தான் ஏர்வாடியார் ஒவ்வொரு நூலிற்கும் அணிந்துரை என்றாலும் மதிப்புரை என்றாலும் கடைப்பிடித்து எழுதி வருகிறார்கள்.  எந்த நூலிற்கும், அவர் முழுவதும் படிக்காமல் மேலோட்டமாக அணிந்துரையோ, மதிப்புரையோ எழுதுவதில்லை என்பதை கொள்கையாகவே கடைப்பிடித்து வருபவர்.
       கலைமாமணி முதுபெரும் எழுத்தாளர் விக்கிரமன் அவர்களின் ‘காந்திமதியின் கணவன்’ என்ற நூலிற்கு வழங்கிய மதிப்புரையில் முடிப்பு என்பது முத்தாய்ப்பு.  எடுப்பு, தொடுப்பு. முடிப்பு மூன்றும் முக்கனிகளாக இனிக்கும்.  இதோ முடிப்பு, படித்துப் பாருங்கள்.

       “நல்ல நவீனத்திற்குரிய எல்லா அம்சங்களோடும், செறிவாய், மனதிற்கு நிறைவாய் வெளிவந்திருக்கிற இந்நூலைப் படித்ததில் பேரின்பம் எய்தியிருக்கிறா நான், எழுத்து சுவையில் இன்பம் பெற விழைபவர்களுக்கு இந்நவீனத்தைப் பரிந்துரைப்பேன்.   பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பென்று வள்ளுவன் கூறுவதற்கேற்ப சிறந்த மனிதர் எழுதிய, சிந்தையில் இனிக்கிற நூல் இது.  டாக்டர் விக்கிரமன் அவர்கள் வடித்துப் பரிமாறி இருக்கிற இவ்விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என வரவேற்பதில் மகிழ்கிறேன்.

       டாக்டர் விக்கிரமன் அவர்கள் எழுதிய நவீனம் ‘காந்திமதியின் கணவன்’ என்ற நூல்.  1990 ஆம் ஆண்டு வெளிவந்தது.  அந்த நூலிற்கு அன்று எழுதிய மதிப்புரை 25 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தாலும் மூல நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அற்புதமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.  காலத்தில் அழியாத கல்வெட்டு எழுத்துக்களை செதுக்கிய எழுத்து சித்தர் ஏர்வாடியார். நேர்மையாளர், எழுத்தாளர், சிந்தனையாளர், முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்கள் மனம் திறந்து பாராட்டும் நேர்மையாளர் ஏர்வாடியார்.

       18.05.2000 அன்று கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின் 53-ஆவது பிறந்த நாளன்று வெளிவந்த நூல் “சில நந்தவனங்களில் நான்”.  இந்நூலும் மதிப்புரை அணிந்துரை தொகுப்பு நூல் தான்.  நூலின் பெயரே மிகவும் கவித்துவமாக சூட்டி உள்ளார்.

       திரு. சங்கர நாராயணன் என்பவரின் “நீலாம்பரி” என்ற கவிதை நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் கவிதைக்கு ஏர்வாடியார் தரும் விளக்கம் மிகவும் நுட்பமானது, திட்பமானது.

       “உள்ளதை உள்ளவாறு உரைப்பதற்கப்பால் உணர்ந்தவாறு உரைக்கிற, உணர்த்துகிற ஒப்பற்றதோர் கலையே கவிதைக்கலை.  இக்கலையில் கைதேர்ந்தவர்களை ‘கவிஞர்கள்’ என்று காலம் தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறது.  தமிழ் மீது பற்று கொண்ட என் நண்பர் திரு. சங்கர நாராயணன் அவர்களை அவரது கவிதைகள் இக்கணக்கில் வரவு வைக்கின்றன்.”

       இந்த மதிப்புரைகளை படைப்பாளிகள் இன்று படித்தாலும் மனம் மகிழ்ச்சி அடைவார்கள் என்று உறுதி கூறலாம்.  அந்த அளவிற்கு ஏர்வாடியார் படைப்பாளிகளை பாராட்டுவதில் கஞ்சத்தனம் கடைப்பிடிப்பதில்லை. வள்ளலாகவே மனதாரப் பாராட்டி விடுவார்.  ஏர்வாடியார் தோற்றத்தில் மிக எளிமையாக இருந்தாலும் அவரது எழுத்து மிக்க வலிமையானது.  படைப்பாளிக்கு மகுடம் சூட்டுவதற்கு இணையாக மதிப்புரை நல்கிடும் மாண்பாளர் ஏர்வாடியார்.

       ‘நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லை என்றால், நான் தற்கொலை செய்து இருப்பேன்’ என்றார் காந்தியடிகள்.  மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு என்பது மிகவும் முக்கியம்.  அதனை வலியுறுத்தும் விதமாக ஏர்வாடியார் தந்த அணிந்துரையில் இருந்து சில வரிகள் இதோ!

       ‘சிரிப்பு வாங்கலையோ சிரிப்பு’ நூலாசிரியர் திரு. கைலாசம் அந்நூல் அணிந்துரை.

       “விலங்குகளிலிருந்து நம்மை வேறுபடுத்துகிற சில இயல்புகள் நகைச்சுவை உணர்வும் ஒன்று. மனிதர்களை சிரித்துப் பார்க்க முடியுமே தவிர விலங்குகள் சிரித்ததாய் வரலாறில்லை.  சிரிப்பைச் சிறந்த மருந்து என்கிறார்கள். சிரித்து வாழ்கிறவர்களுக்கும் சிறந்த ஆயுள் உண்டு.

       அன்று ஏர்வாடியார் எழுதிய அணிந்துரையை வழிமொழியும் விதமாக தமிழ்நாடு முழுவதும் நகைச்சுவை மன்றங்கள் தொடங்கி மக்களை சிரிக்க வைத்து நோய் நீக்கி வாழ்நாளை நீடித்து வருகிறார்கள்.  மதுரையில் மீனாட்சி மிஷின் மருத்துவமனையில் நகைச்சுவை மன்றம் தொடர்ந்து மாதாமாதம் நடத்துவதுடன் வருடம் ஒருமுறை ஆண்டு விழாவும் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.  நானும் தவறாமல் சென்று சிரித்து வருகிறேன்.

       2004 ஆம் ஆண்டு வெளிவந்த நூல் ‘மலரோடு தென்றல்’ இந்நூலும் அணிந்துரை மதிப்புரைகளின் தொகுப்பு நூல் தான்.  இந்நூலில் ஏர்வாடியார் என்னுரையில் எழுதி உள்ள தொடக்கமே அணிந்துரை மதிப்புரை சிறப்பை எடுத்து இயம்புவதாக உள்ளது, பாருங்கள்.

       “கதை, கவிதை, கடிதம், கட்டுரை, நாடகம், உரைநடை, பயண இலக்கியரம் என்று எழுத்துக்கு இருக்கிற எத்தனையோ பரிமாணங்களைப் போல மதிப்பீடுகளும், அணிந்துரைகளும் கூட எழுத்தின் இன்னும் சில பரிமாணங்கள் என்றால் மிகையாகாது.  நல்ல நூலொன்றை மதிப்பீடு செய்வதற்கும் அணிந்துரை எழுதி அணி செய்வதற்கும் அந்நூல் தொடர்பான செய்திகளை அறிந்தவர்க்கே இயலும் என்பதால் அந்தந்த துறை சார்ந்த பெருமக்களிடம் தாமெழுதிய நூல்களைக் காட்டி அணிந்துரை பெறுவது வழக்கம்.  எழுத்தின் எல்லா வடிவங்களும் எனக்கு வருவதால், இந்த இனிய வாய்ப்பு அடிக்கடி கிடைக்கிறது”.

       ஆம், ஏர்வாடியார் சகலகலா வல்லவர்.  எழுத்தின் எல்லா வடிவமும் கைவரப் பெற்றவர்.  கொடி நாட்டியவர்.  சிகரம் தொட்டவர்.  எழுத்தில் இவர் தொடாத வடிவம் இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா வடிவமும் தொட்டவர்.  அவ்வப்போது முகநூலில் ‘குறும்பா’ கவிதைகளும் தற்போது எழுதி வருகிறார்கள். அதனை முகநூல் நண்பர்கள் நான் உள்பட பலரும் படித்துவிட்டு பாராட்டி வருகின்றோம்.  ஏர்வாடியார் அவர்களுக்கு நூல் மதிப்பீடு என்பது மூளை  போன்றது.  மற்ற வடிவங்கள் மற்ற உறுப்புகள் போன்றது.  கணினி தொழில்நுட்பம் அறிந்த வல்லுனர்.

       ஏர்வாடியாரின் நூல் மதிப்புரை படித்து விட்டு நூல் வாங்கும் வாசகர்கள் இருக்கிறார்கள்.  சென்னை புத்தகத் திருவிழாவில் நூல் வாங்கச் செல்லும் நண்பர் என்னிடம் சொன்ன உண்மை இது.  ஏர்வாடியார் மதிப்புரை எழுதிய நூல்களை எழுதி வைத்துள்ளேன்.  அவற்றை வாங்கி வர திட்டமிட்டுள்ளேன்.  வாங்கி வந்து எனது இல்ல நூலகத்தில் சேர்க்க உள்ளேன் என்றார்.  ஏர்வாடியர்ர் எனது நூல்களான ‘ஆயிரம் ஹைக்கூ’, ‘புத்தகம் போற்றுதும்’ நூலிற்கும் மதிப்புரை எழுதி உள்ளார்கள் என்றேன் நண்பரிடம்.  எழுதி வைத்துள்ள பட்டியலில் உள்ளன என்றார்.  மனம் மகிழ்ந்தேன்.  வெளிட்ட வானதி பதிப்பகத்தாரும் மகிழ்வார்கள் .

       ‘அக்னிச்சாரல்’ என்ற நூலிற்கு வழங்கிய அணிந்துரையில் தொகுப்பில் கவிதையின் பெருமையை ரத்தினச் சுருக்கமாகவும் மனதில் பதியும்படியும் எழுதிய வைர வரிகள் இதோ!

       “மொழிக்கு மெருகூட்டுவது கவிதை, மனிதர்களுக்கு முறுக்கூட்டுவதும் கவிதை தான்.  உணர்ச்சிகளின் உள்ளீடாகவும், உணர்வுகளைச் சுண்டியிழுக்கிற உபகரணமாகவும் விளங்குவது கூடக் கவிதை தான். என்னவெல்லாம் இருக்கும் என்றால் கவிதையில் எல்லாமும் இருக்கும் எனலாம்”.

       “கவிதை மொழியின் மூத்த இலக்கிய வடிவம் முதலில் வந்ததும் கவிதை தான்.  கவிதை தவிர்க்க இயலாதது.  தலைசிறந்ததும் கூட.  கவிதை தானாக வருவது.  நெஞ்சில் தேனாக இனிப்பது. எந்த மொழியானாலும் கவிதை எப்போதும் இருப்பது, ஆனால் இது எப்போதும் வருவதில்லை”.

       கவிதையின் மேன்மையை இந்த அளவிற்க்கு இதுவரை யாரும் அறுதியிட்டு கூறவில்லை என்று உறுதி கூறலாம்.  அந்த அளவிற்கு கவிதை குறித்தான விளக்கத்துடன் நூலிற்கு மதிப்புரை எழுதுவது என்பது ஏர்வாடியாரின் வழக்கம், பழக்கம்.

       நெல்லையில் பிறந்து மதுரையில் வளர்ந்து, சென்னையில் சிறந்த இனிய நண்பர், திரைப்படப் பாடல் ஆசிரியர் நெல்லை ஜெயந்தா அவர்களின் நிலாவனம் என்ற நூலிற்கு ஏர்வாடியார் அவர்கள் நூல் மதிப்புரையில் உள்ள முடிப்பு வரிகள் காண்க.

       “கர்மவீரர் காமராசரைக் கவிதையில் பதிவு செய்யாத கவிஞரே இல்லை எனலாம்.  ஜெயந்தா தன் பங்கைச் செவ்வனே செய்துள்ளார். 

 ‘பள்ளிக்குப் போனவர்கள், பார்த்ததெல்லாம் மாணவர்களின் புத்தகப்பையை, இவர் தான் பார்த்தார் இரைப்பையை”. 

இதமான சுகமான வரிகள் என்பதோடு எழுச்சி மிக்க என்றும் பாராட்டத்தக்க அற்புதமான கவிதை வரிகளோடு நிலாவனத்தில் நடந்து வந்த அனுபவம்; யாருக்கும் நினைவில் நிற்கும்”.

       படிக்காத மேதை காமராசர் பெயரில், மதுரை பல்கலைக்கழகமே உள்ளது. ஏழை மாணவர்களின் பசியாற்றிய வள்ளலார்.  சத்துணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல் முதல்வர் காமராசர் பற்றி நெல்லை ஜெயந்தா அவர்கள் எழுதிய வைர வரிகளை பற்றிப் பிடித்து ஏர்வாடியார் அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை மதிப்பு மிக்க உரை.  இன்று இதனை இனிய நண்பர் நெல்லை ஜெயந்தா படித்தாலும் இன்னும் பல கவிதைகள் கல்வி வள்ளல் காமராசர் பற்றி எழுதத் தூண்டும் விதமாக இருக்கும், ஏர்வாடியாரின் எழுத்துக்கள்.  காமராசர் பற்றி நான் எழுதிய ஹைக்கூ நினைவிற்கு வந்தது.

       காமராசர் காலமானதல்ல
       காலமானது
       பொற்காலம்!

       சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் எந்த நூலாக இருந்தாலும் மதிப்புரை எழுதிடும் ஆற்றல் ஏர்வாடியாருக்கு உண்டு.  பன்முக ஆற்றலாளர் பல்துறை வித்தகர்.  அனுபவம் மிக்கவர்.  ஏர்வாடியார் எழுதிய நாடகங்கள் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.  கவிதைகள் பல்வேறு வானொலிகளில் ஒலிபரப்பாகி இருக்கின்றன.

       மனத்தில் பதிந்தவர்கள் பகுதி, கவிதை உறவு இதழில் மாதம் ஒரு கட்டுரை தான் எழுதி வருகிறார்கள். அதில் முதல்வர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் என்று பல பிரபலங்கள் பற்றி எழுதிவரும் ஏர்வாடியார்.  சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரியும் சாதாரணமான என்னைப் பற்றியும் மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் என்னைப் பற்றி எழுதிய ஒரே ஒரு கட்டுரை ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை.  சென்ற இடமெல்லாம் கட்டுரை குறித்து பாராட்டாதவர்கள் யாருமில்லை.  சாதாரணமான என்னைப் பற்றியும் எழுதி விட்டதால், என் போன்ற சக கவிஞர்கள் ஏர்வாடியார் நம்மைப் பற்றி எழுத மாட்டாரா? என்ற ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.  அந்த அளவிற்கு சக்தி மிக்கது ஏர்வாடியார் எழுத்துக்கள்.

       என் போன்ற சக கவிஞர்கள் எல்லோரையும் பற்றி மனத்தில் பதிந்தவர்கள் பகுதியில் மாதம் ஒருவராக எழுத எழுத ஏர்வாடியாரின் ஆயுள் நூற்றாண்டு கடந்து நீளும் என்ற நம்பிக்கை உண்டு.  இலக்கியம் படித்தவர்களுக்கு நோய் வருவதில்லை.  குறிப்பாக தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு ஆயுள் நீளும்.  இதயம் இதமாகும் கோபம் வராது.  ஏர்வாடியார் கோபப்பட்டு நான் இதுவரை பார்த்ததே இல்லை. ‘இன்னா செய்தாரை’ திருக்குறளை படித்தது மட்டுமன்றி வாழ்விலும் கடைப்பிடித்து வருபவர்.

       ஏர்வாடியார் அவரது மகிழுந்துவை அவரே ஓட்டி வரும் பழக்கம் உள்ளவர்.  சில படைப்பாளிகள் நூல் அனுப்பிய மறுநாளே அலைபேசியில் அழைத்து ஆர்வம் மிகுதியில் நூல் மதிப்புரை கவிதை உறவில் எப்போது வரும் என்று மகிழுந்துவை சென்னை மாநகரில் ஓட்டு வரும் போது கேட்பதுண்டு.  நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் இக்காட்சியினை நேரில் பார்த்து இருக்கிறோம்.  அவரோடு மகிழுந்தில் பலமுறை பயணப்பட்டு இருக்கிறோம்.  அப்போதும் ஏர்வாடியார் எந்தவித கோபமின்றி, பதட்டமுமின்றி பண்போடு பதில் சொல்வார்கள்.  நூல் முழுவதும் படித்து முடித்து விட்டு விமர்சனம் பதிவு செய்கிறேன் என்பார்கள். கோபப்படாத நல்ல உள்ளத்தை உயர்ந்த பண்பை நான் ஏர்வாடியாரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

       மகாகவி பாரதியார் போல கவிதை எழுதுவதோடு நின்று விடாமல் எழுதியது போலவே வாழ்ந்து வரும் நல்லவர் ஏர்வாடியார்.  இவ்வளவு ஆற்றல் மிக்கவரை இலக்கிய உலகம் தமிழகம் இன்னும் பெரிய அளவில் அங்கீகாரம் செய்யவில்லை என்ற வருத்தம் ஏர்வாடியாருக்கு இல்லை. ஆனால் எனக்குண்டு.  

ஏர்வாடியார் கேரளாவில் பிறந்து இருந்தால் தலையில் வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். கேரளா அளவிற்கு இங்கு இலக்கியவாதிகளை மதிக்க தெரியவில்லை . நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள் இன்றி அரசியல் கருத்துக்கள் இன்றி கவிதை, கட்டுரை, நூல் மதிப்புரை தாங்கி வரும் ஒப்பற்ற கவிதை உறவு மாத இதழை பரவலாக எல்லோரும் சந்தா செலுத்தி வாங்கினால் ஏர்வாடியார் மனம் மகிழ்வார்கள்.  தரமான இலக்கிய இதழை தமிழர்கள் அங்கீகரிக்க முன்வர வேண்டும் என்பதே என் ஆசை.

       கவிதை உறவு இதழை கடல் கடந்து அயல்நாடுகளிலும் படிக்கிறார்கள்.  இலண்டன் கல்லூரி துணை முதல்வர் கவிஞர் புதுயுகன், சிவயோகம் மலர் ஆசிரியர் பொன் பாலசுந்தரம், பத்திரிகையாளர் ஐ. தி. சம்மந்தன், கனடா எழுத்தாளர் www.tamilauthors.com இணையத்தின்    ஆசிரியர் அகில், ஜெர்மனி தம்பி புவனேந்திரன் உள்பட பல நண்பர்கள் மின்னஞ்சல் வழி கவிதை உறவு இதழைப் படித்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

       மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுதிய நூல் மு.வ. அல்லது முன்னேற்ற வரலாறு’ நூல் மதிப்புரை கவிதை உறவு இதழில் ஏர்வாடியார் அவர்கள் எழுதியிருந்தார்கள்.  படித்து வியந்து போனேன்.  நானும் இந்த நூலிற்கு விமர்சனம் எழுதி www.eraeravi.com  என்ற எனது இணையத்தில் பதித்து உள்ளேன்.  இருந்தபோதும் ஏர்வாடியாரின் எழுத்துக்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.  நானும் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் அலைபேசியில் பேசாத நாட்கள் இல்லை எனலாம்.  அப்படிப் பேசும் ஒவ்வொரு முறையும் ஏர்வாடியாரின் எழுத்தாற்றல் பற்றி தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் பாராட்டாத நாளே இல்லை.  மனதார பாராட்டி மகிழ்வார்கள்.

       “டாக்டர் மு.வ. அவர்களின் ஆற்றல் குறித்து அதிகம் அறிந்து வைத்திருக்கிற அவரைப் போன்ற ஆற்றலாளர் பேராசிரியர் இரா. மோகன் அவர்கள் ஆய்வு நோக்கிலும், அனுபவ நோக்கிலும் ஆழமாகத் தெரிந்து, தெளிந்து நூல்கள் சிலவற்றைத் தந்து நூற்றாண்டு விழா நினைவில் தன்னையும் பதிவு செய்து கொண்டுள்ளார்”.

       மூத்த பத்திரிகையாளர் இனிய நண்பர் ப. திருமலை எழுதிய காந்தி தேசம் நூலின் மதிப்பீடு படித்தேன். நூல் என்ற கனி பிழிந்து அதன் சாறாக மதிப்பீடு வழங்கும் நுட்பம் கற்றவர் ஏர்வாடியார். 

 “கௌரவக் கொலைகள், சிறையில் சாவுகள், கந்துவட்டி, பெண்போலீஸ் தற்கொலை, ஊழல்கள் என்று சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை வாசிக்கும் போது நம்மைச் சுற்றி இத்துணை அவலங்களா என்று அச்சமுற நேர்கிறது.  சமூக அக்கறையுடன் தீர்வுகளுமாய இந்த நூல் இன்று தேசத்துக்கும் நமக்கும் தேவையானதாயிருக்கிறது. தந்திருக்கிற திருமலை அவர்களைப் பாராட்டி மகிழ வேண்டும்”.

       இந்தியாவிற்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்டிட முதல்முதலில் கோரிக்கை வைத்தவர் தந்தை பெரியார்.  அவர் சொன்ன அந்தப் பெயர் நாட்டிற்கு சூட்டாவிட்டாலும் எழுதிய நூலிற்கு சூட்டிய ப. திருமலை அவர்களின் நூலிற்கு மதிப்புரை எழுதியது மட்டுமன்றி கவிதை உறவு நூல் போட்டிக்கு வந்த நூல்களில் காந்தி தேசம் நூலிற்கு சிறந்த நூல் பரிசும் வழங்கி மகிழ்ந்தவர் ஏர்வாடியார்.

       இலண்டன் கல்லூரி துணை முதல்வர் கவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய ‘மடித்து வைத்த வானம்’ நூலிற்க்கு ஏர்வாடியார் எழுதிய அணிந்துரை நூலாசிரியரின் பின்புலத்தை படம் பிடித்துக் காட்டும் விதமாக உள்ளது.  பாருங்கள்.

       “மகாத்மா காந்தி என்ற பிரமாண்டமான படைப்பைத் தமிழுக்குத் தந்த பெருமைக்குரிய புலவர் இராமானுஜ கவிராயர் அவர்களுடைய பெயரன் என்கிற புகழோடு விளங்குகிற கவிஞர் புதுயுகன் மென்பொருளைக் கையாள்கிறவர்.  அது அவருக்குக் கை நிறைய ஊதியௌம் தருகிறது என்றாலும் மனம் நிறைகிறது என்கிற அளவுக்கு மிகச்சிறந்த கவிதைகளைப் படைக்கிறார்.

       இராமன் மிதித்ததும் கல் பெண்ணாகியது என்பார்கள். அது கற்பனை. ஆனால் ஏர்வாடியாரின் பார்வை பட்ட நூல் பிரபலமாகும் என்பது உண்மை.  எனது சமீபத்திய நூல்கள் ஏர்வாடியாரின் பார்வை பட்டு எழுத்தில் வடித்த பின்னே தான் பிரபலமானது.  என் போன்ற பல வளரும் படைப்பாளிகளின் படைப்பை தாயுள்ளத்துடன் உச்சி மோர்ந்து பாராட்டி வரும் உயர்ந்த உள்ளத்திற்கு சொந்தக்காரர் ஏர்வாடியார்.

  ‘தோன்றின் புகழொடு தோன்றுக’ என்ற திருக்குறளுக்கு இலக்கணமானவர் ஏர்வாடியார்.  புகழோடு தோன்றிய போதும் தலைக்கணம் இல்லாத எளிய மனிதர்.  இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக விளங்கிடும் மிகச்சிறந்த ஆளுமையாளர் ஏர்வாடியார்.  வாழ்க பல்லாண்டு.



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்