இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. vanathipathippagam@gmail.com. 044 24342810
*****
நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, துறைத்தலைவராக, தகைசால் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே எழுத்து, பேச்சு என இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வந்தவர் . தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் பகுதி நேரமாக இருந்த இலக்கியப் பணி முழுநேரமாகி விட்டது. ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இலக்கிய இமயம் மு.வ.வின் செல்லப்பிள்ளையான நூலாசிரியர் முழு வீச்சுடன் இலக்கியத்தில் மு .வ . போலவே தடம் பதித்து வருகிறார். 117 நூல்களின் ஆசிரியர் என்பது அளப்பரிய சாதனை. எழுதுவது, பேசுவது இந்த இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு நாளும் இயங்கி வரும் ஆளுமையாளர்.
தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர். தமிழ்மொழியில் உள்ள தேனை வாசகர்களுக்கு விருந்தாக ஒவ்வொரு நூலிலும் வைத்து வருகிறார்கள். ‘இலக்கிய அலைவரிசை’ என்ற இந்த நூலில் ஆளுமை அலைவரிசை, இலக்கிய அலைவரிசை, கவிதை அலைவரிசை, செம்மொழி அலைவரிசை, சிந்தனை அலைவரிசை ஆகிய அய்ந்து உட்பிரிவுகளுடன் ஒவ்வொரு பிரிவிலும் 6 கட்டுரைகளும் மொத்தம் 30 முத்தாய்ப்பான கட்டுரைகள் உள்ளன.
ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமான மேற்கோள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என சிறப்பு மிக்க கட்டமைப்பு. வாசித்தால், வாசிக்கும் வாசகர்களுக்கு பிரமிப்பு. ஒவ்வொரு கட்டுரையும் 10 நூல்களுக்கு சமம். எனவே நாம் 300 நூல்கள் படித்த உணர்வு.
எப்படி இவருக்கு நேரம் வாய்க்கிறது என்று நான் வியப்பதுண்டு. மாதாமாதம் கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனித நேயம் போன்ற சீரிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். தினமலர் நாளிதழிலும் என் பார்வை என்ற பகுதியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். வாசகர்கள் பார்வையில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை சீரிதழ்களிலும், நாளிதழிலும் படித்திருந்த போதும் மொத்தமாக நூலாகப் படித்த போது சுவையாக இருந்தது. சீரிதழ்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த நூல் படித்து அறிந்து கொள்ளலாம்.
ஆவணப்படுத்துவதில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு நிகர் தமிழ்த்தேனீ இரா. மோகன் தான் என்று அறுதியிட்டுக் கூறலாம். அவர் நூல் பற்றி வந்த விமர்சனங்களை தொகுத்து. பகுத்து, வகுத்து வாசகர்கள் பெயருடன் அணிந்துரையாக நூலின் தொடக்கத்திலேயே பதிப்பித்தது நல்ல யுத்தி. தினமலரில் வாசகர் பார்வையில் நான் எழுதிய மடலும் இந்த நூலில் உள்ளது. கண்டு மனம் மகிழ்ந்தேன். என்னிடம் இல்லாத என்னைப் பற்றிய தகவலும் அவரிடம் இருக்கும்.எனக்கு தந்து உதவுவார்கள் .
வள்ளலாரின் கொள்கைகள் மிக உயர்ந்தவை. அவற்றைக் கடைபிடித்தால் நாட்டில் நிம்மதி நிலவும். அவர் பற்றி கட்டுரை படித்து பிரமித்தேன். ஒவ்வொரு கட்டுரையிலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அரசு வேலைக்கு போட்டித் தேர்வு எழுதுவோர் இந்த நூல் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். அந்த அளவிற்கு தமிழ் தொடர்பானவை உள்ளன.
ஏழைக்குழந்தைக்கு பசியாற்றி கல்வியும் வழங்கிய கல்வி வள்ளல் படிக்காத மேதை காமராசர் பற்றிய கட்டுரை, காவியக் கவிஞர் வாலியின் வைர வரிகளுடன் தொடங்கி உள்ளார். நான் எழுதிய ஹைக்கூவும் நினைவிற்கு வந்தது.
காமராசர்
காலமானதால்
காலமானது பொற்காலம் !
வாலி ! கவிதை இதோ !
நேர்மையில் – ஒரு
நெருப்புத் தமிழன் எனக் காலம் கணித்த
இந்த கருப்புத் தமிழன் ...
பெரியார் பார்வையில் பச்சைத் தமிழன்
ஆனால் அவன்-ஒரு வெள்ளைத் தமிழன் ;
வெள்ளை மனமுடை – பிள்ளைத்தமிழன்
மேற்கண்ட கவிதையே காமராசரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து விடுகிறது.
மகாகவி பாரதியாரின் வைர வரிகளுக்கு செயல்வடிவம் தந்தவர் காமராசர் என்பதை கட்டுரை உணர்த்துகின்றது.
அன்ன யாவினும் புண்ணியம்
ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் !
ஆம், ஓர் ஏழைக்கே புண்ணியம். பல இலட்சம் ஏழைகளுக்கு எழுத்தறிவித்தவர் காமராசர்.
தொண்டையே செல்வமாகக் கருதிய மாமனிதர் திரு.வி. கலியாணசுந்தரனார் பற்றிய கட்டுரை மிக நன்று. நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன்.
ஆண்களில் பலர் மனைவி இறந்தவுடன் குழந்தைகள் இருந்தாலும் மறுமணம் செய்து விடுகின்றனர். எவ்வளவு உயர்ந்த குணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் தன் குழந்தை போல கணவரின் குழந்தை மீது அன்பு செலுத்துவதில்லை என்பதே உண்மை. மாற்றான் தாய் கொடுமை குழந்தைகளின் வாழ்க்கையையே திசை மாற்றி விடுகின்றது.
இளம்பெண் விதவையானால் மறுமணம் புரியலாம். ஆனால் ஆண், மனைவி இறந்தால், குழந்தைகள் இருந்தால் மறுமணம் புரியவே கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. என் தாத்த மறுமணம் செய்தது பேரனாகிய என் வாழ்க்கை வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
திரு.வி.க. அவர்கள் கமலாம்பிகை அம்மையாருடன் ஆறு ஆண்டுகள் மட்டுமே குடும்ப வாழ்க்கை வாழ்ந்து குழந்தைச் செல்வம் இரண்டு . இறந்து விட்டார்கள். ஆயினும் இறுதி வரை மறுமணமின்றி திரு.வி.க. வாழ்ந்தார் என்ற தகவல் நூலில் படித்த போது அவர் பற்றிய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது. இப்படி பல ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆண்கள் திரு .வி .க .என்ற ஆளுமையின் உயர்ந்த பண்பை , ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தியது கட்டுரை .
‘கரும்பு தின்ன கூலியா வேண்டும்?’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப மு.வ. பற்றி எழுதிட, மு.வ.-வின் செல்லப்பிள்ளைக்கு இனிக்கும். உணர்வோடு படைத்த கட்டுரை மிக நன்று. பதச்சோறாக ஒன்று.
பத்மஸ்ரீ பட்டம் பெற மறுத்தல் :
1965ஆம் ஆண்டு இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மாணவர் உலகம் போராடிய நேரம். அப்போது நடுவண் அரசு மு.வ.-வுக்குப் பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கும் மாணவர்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கக் காரணமாக நடுவண் அரசு இருக்கிறது. அவர்கள் அளிக்கும் இந்தச் சிறப்புப் பட்டம் எனக்குத் தேவை இல்லை” என்று கூறி பட்டத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மு.வ.
இது நடந்தது அன்று. ஆனால் இன்று எனக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதையும், பரிந்துரைக்கு ஆள் பிடித்து வாங்குவதையும் நினைத்து பார்க்க மு.வ. அவர்கள் உள்ளத்தில் உயர்ந்து நிற்கிறார்.நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளன .
அய்ந்து இயலில் ஒரு இயல் மட்டுமே மேற்கோளில் காட்டி உள்ளேன். நூலில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, மேற்கோள்கள் நிரம்ப உள்ளன. ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பழமொன்ரியு ஒன்று.
கொள்ளி வைக்க ஒரு பிள்ளை
வேணுமாம் ; ஒரு பெண் வைத்தால்
எரிய மாட்டாயா நீ!
ஹைக்கூ உலகில் தடம் பதிக்கும் கவிஞர் ஆரிசன் ஹைக்கூ ஒன்று.
தமிழுக்குத் தீட்டாம்
ஆலயம் தொழுவது
சாலவும் நன்று எப்படி?
வளர்ந்தவர்கள், வளர்கிறவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா படைப்பாளிகளையும் பாராட்டும் தாயுள்ளம் படைத்த நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
முனைவர் இரா.மோகன் அவர்களைப் பாராட்டுவோம்
பதிலளிநீக்கு