முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .!

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளிவர உள்ள கவிஞர் இரா .இரவியின் 
14 வது நூலான கவியமுதம் நூலிற்கு முது முனைவர்  வெ  .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .!
கவியமுதம் எனும் கதம்பம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
*****

தமிழ்மொழியின் மேன்மை குறித்தும், அதில் உள்ள இலக்கியங்களின் செறிவு குறித்தும் எப்போதும் பெருமிதம் கொள்பவர் இரவி. அவருடைய நெறியே ‘இயக்கம்’.  சலசலத்து ஓடும் நதியைப் போல அவருடைய சுறுசுறுப்பும், செயல்பாடுகளும்.  அவர் எழுத்தின் மூலம் இழந்த பொருள் அதிகம்.  ஆனாலும் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு எழுதிக்கொண்டும், அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டும் வருபவர்.  கணினி என்கிற தொழில்நுட்பத்தை அவரைப் போல் அன்றாடம் கையாளுபவர்கள் குறைவு.

‘கவியமுதம்’ என்கின்ற தலைப்பே கவித்துவமானது.
அமுதம் மனித ஆயுளை மட்டுமல்ல ; தேவ அயுளையே நீட்டிக்கும் அற்புத ஆற்றலுடையது என்று நம் புராணங்கள் புகல்கின்றன.  அமுதம் என்பது கனவு ; அதுவும் பசியோடு இருப்பவர்கள் உயிர் வாழ உதவும் உணவு என்றும் வழங்கப்படுகிறது.

‘கவியமுதம்’ மூலம் கவிஞர் இரவி வழங்கியது ‘உணவு’ அல்ல, ‘உணர்வு’.  தமிழுணர்வை ஊட்டும் விதத்தில் இதிலுள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.

‘வென்றவர்களின் வரலாறு படித்திடு !
       வென்று நீயும் வரலாறு படைத்திடு’

என்கின்ற அவருடைய கவிதை மாமனிதர்களின் சரிதங்களை வாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் உந்துசக்தியை உணர்த்துகின்றது.  சின்ன வயதில் ‘நாட்டுக்குழைத்த நல்லவர்கள்’ வரிசையில் உள்ள நூல்களை வாசிப்பதன் மூலம் எங்களுக்குள் வைராக்கியம் வைரம் பாய்வதுண்டு.

”காதலர்களின் கண்கள்
       கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன”

என்று மென்மையான உணர்வுகளையும் மழைத்துளி மலரில் விழுவது போல அழகான பதிவு செய்யவும் இரவியால் இயலும்.

       முத்திரை வலி என்கிற கவிதையில்

       “உன் புகைப்படத்தை
       அஞ்சலில் அனுப்ப வேண்டாம்”

எனத் தொடங்கி அதற்கு அவரளிக்கும் காரணம், கவித்துவம் நிரம்பிய மகத்துவம்.

       “பாட்டு இல்லாத பேசி” நகைச்சுவை நிரம்பிய கவிதை.
உயர்ந்த மனிதர்களைப் போற்றும் விதமாகவும் இரவியின் எழுதுகோல் தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறது.

கவிஞர் இரவி, கவிதை, கட்டுரை, விமர்சனம் எங்கின்ற தளங்களில் ஏற்கனவே பலருடைய நல்லெண்ணத்தைப் பெற்றவர்.  சுற்றுலாத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிற அனுபவத்தையும், அதன் மூலம் அவர்களுடைய இயல்புகள் பற்றிய தெளிவையும் பெற்றவர்.  அவர் பெற்ற அனுபவச் சாரத்தை இனி புனைவு இலக்கியங்களை சிறுகதை, புதினம் போன்றவற்றில் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே அவர் மீது என் நம்பிக்கையின் வெளிப்பாடு.

வாழ்த்துபவர்
முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.




.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்