கவியமுதம் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !

கவியமுதம் !


நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !


நூல் அணிந்துரை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் !


முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி !
‘ஒன்றே செய்க - ஒன்றும் நன்றே செய்க – நன்றும் இன்றே செய்க – இன்றும் இன்னே (இப்பொழுதே) செய்க” என்னும் அமுத மொழியைப் பொன்னை போல் போற்றுவதோடு, தம் வாழ்நாளில் எப்போதும் பின்பற்றியும் வருபவர் கெழுதகை நண்பர் இரா. இரவி. 

அவரது எண்ணம், சொல், செயல் என்னும் மூன்றிலும் இமைப்பொழுதும் நீங்காமல் உடனிருப்பவை முதற்கண், மோனையைப் போல தமிழுணர்வு ; அடுத்து, எதுகையாக முற்போக்குச் சிந்தனை ; முத்தாய்ப்பாக, உடன்பாட்டுப் பார்வை.

அன்னைத் தமிழுக்குக் கேடு நேர்ந்தால் – தமிழர் வாழ்வினுக்குத் தீங்கு என்றால் – தமிழ்நாட்டிற்கு ஏதேனும் இன்னல் சூழ்ந்தால், துடித்தெழுந்து குரல் கொடுப்பவர் இரவி. 

எப்போதும் சிரித்த முகத்துடன் மெல்லினமாகக் காட்சி அளிக்கும் அவர், அப்போது வல்லினமாய் மாறி, கடுமையாகவும் காரசாரமாகவும் தம் கருத்துக்களைப் புலப்படுத்துவார் ; தெறிப்பான மொழியில் தம் சிந்தனைகளை வெளிப்படுத்துவார் ; ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்பது போல் தம் எண்ணங்களைப் பதிவு செய்வார்.

கவிஞர் கம்பதாசன் ‘தமிழ் அமுதம்’ என்னும் தலைப்பில் பாடிய கவிதையில், ‘தமிழ் என்றால் அமுதத்தின் ஊற்று’ என்றும், ‘தமிழ் என்றால் இனிய கற்கண்டு’ என்றும், ‘தமிழ் என்றால் மாசற்ற தங்கம்’ என்றும், ‘தமிழ் என்றால் குழந்தையின் உள்ளம்’ (கம்பதாசன் கவிதைகள், ப. 209), என்றும் போற்றிப் பாடுவார் ; தமிழுக்குப் புகழாரம் சூட்டுவார். 

கம்பதாசனின் ‘அடிச்சுவட்டில் இரா. இரவியும்’, ‘உலக மொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி’ என்றும், ‘இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் மொழி தமிழ்மொழி’ என்றும், ‘மனித நேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி’ என்றும், ‘காந்தியடிகள் மனதாரப் புகழ்ந்திட்ட தமிழ்மொழி’ என்றும்,. தமிழ்மொழியின் உயர்வினையும் தனித்தன்மையினையும் செவ்வியல் பண்பினையும் நிரந்தினிது, தம் கவிதைகளில் கூறுகின்றார் ; ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கினைச் சற்றே வளர்த்து, ‘தமிழ் எங்கள் உயிருக்கு மேல்’ என உணர்ச்சிப் பெருக்குடன் முழங்குகின்றார். 

‘ஒப்பற்ற தமிழுக்குப் பிறமொழிக் கலப்பு நஞ்சு’ என மொழியும் கவிஞர்,

“என்ன வளம் இல்லை தமிழ்மொழியில்?
       ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்?”

எனத் ‘தமிங்கிலம்’ பேசுவோரை நோக்கி வினவுவது மனங்கொளத்தக்கது.

‘தமிழா நீ பேசுவது தமிழா?” என வினவும் கவிஞர், தமிழின் அருமையைத் தரணியே அறிந்திருந்தும், தமிழன் இன்னமும் அறியாததை  நினைந்து மனம் வருந்துகின்றார்.

“தாயை மறந்தாலும் தமிழை மறக்காதீர!
       தாயினும் உயர்ந்தது தமிழ் என உணர்வீர்!”

எனத் தமிழர்க்கு அறிவுறுத்தினார்.

பேகன், பாரி, மனுநீதிச்சோழன், சிபிச்சக்கரவர்த்தி, திருவள்ளுவர், கரிகாலன், இராஜராஜ சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் என வாழையடி வாழை என வந்த தமிழன் பரம்பரை அன்று நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் கூறி, இன்றைய தமிழன் வேடிக்கைத் தமிழனாய் – வாடிக்கைத் தமிழனாய் – கேளிக்கைத் தமிழனாய் மாறிப் போன இழிநிலையையும் ஒப்பிட்டுக் காட்டி,

“தமிழா! உன் நிலையை மாற்று!  தமிழரின் பெருமையை நிலைநிறுத்து!” எனக் கவிஞர் ‘தமிழன் அன்றும் இன்றும்!’ கவிதையின் வாயிலாக வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் தமிழர் உடையான வேட்டிக்குத் தடை என்றதுமே வெகுளியின் உச்சத்திற்கே சென்று,

“தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி!
       தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி?”

எனக் கூரிய கேள்விக்கணையினைத் தொடுக்கின்றார் கவிஞர்.

கவிஞரின் கண்ணோட்டத்தில் ‘தமிழுக்கு மகுடமாக விளங்குவது – தமிழரை வாழ்விக்க வந்தது’ வள்ளுவம்! தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே!’ என்னும் திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் ; சிறக்கும்.

“காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
       டால்ஸ்டாயின் குரு செந்நாப் புலவராம் திருவள்ளுவர்”

எனத் திருவள்ளுவருக்குக் கவிஞர் சூட்டும் மணிமகுடம் நனி நன்று.  ‘1330 திருக்குறளை மனப்பாடம் செய்வதை விட, 10 திருக்குறளின் வழி நடப்பது நன்று’ என்பதே இளைய தலைமுறைக்குக் கவிஞர் விடுக்கும் செய்தி ஆகும்.

       இரவியின் படைப்பாக்க நெறி குறித்து இரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.  ‘இரவி, முற்போக்குச் சிந்தனைகளின் முகவரி’. 

பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தை பெரியாரின் வழியில் தம் வாழ்வையும், வாக்கையும் அமைத்துக் கொண்டுள்ள இரவி  நல்லும் வகையெல்லாம் தம் கவிதைகளின் வாயிலாக முற்போக்குச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கொள்கைகளையும் விதைத்துச் செல்கின்றார்.

‘தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார்?’ என்னும் கவிதையில்,

‘எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேட்டிடும் துணிவைத் தந்தவர் என்றும், ‘ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர்’ என்றும், ‘சமரசம் செய்து கொள்ளாத கொள்கைக்காரர்’ என்றும், ‘அறியாமை இருளை அகற்றிய அறிவுச் சூரியன்’ என்றும் தந்தை பெரியாருக்குப் புகழாரம் சூட்டுகின்றார் கவிஞர்.

       எட்டாக் கனியாக இருந்த கல்வியை, ஏழை, எளிய மக்களுக்கும், எட்டும் கனியாக்கிய காமராசரை
மக்கள் கவிஞர் பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சொற்களைக் கொண்ட ‘அறிவுக் கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழர்!’

என இரவி குறிப்பிட்டிருப்பது போற்றத்தக்கது.
       கவிஞர் இரவியின் பார்வையில் அறிஞர் அண்ணா,

‘அறிவின் சிகரம்!  ஆற்றலின் அகரம்! நடமாடும் சொற்களஞ்சியம்! புத்தகதாசர்! ஆவார்.

       இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் வாடிய போதும், தொண்ணூற்றி ஐந்து ஆண்டுகள் வரை கொள்கை குன்றாய் வாழ்ந்து காட்டிய நெல்சன் மண்டேலா, கவிஞர் இரவியின் மொழியில், ‘ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரல்!’

       ‘நூற்றாண்டு கடந்தும் வாழ்கிறார் நெஞ்சில்!’ என்னும் கவிதை, காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த வீரத் திருமகளாம் வள்ளியம்மை பற்றிய கவிஞரின் உணர்ச்சிமயமான சொல்லோவியம் ஆகும்.

       திரையுலகில் தம் பாட்டுத் திறத்தாலும், பாடும் திறத்தாலும் முத்திரை பதித்த கண்ணதாசன், காவியக் கவிஞர் வாலி, பின்ணணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் ஆகியோரைக் குறித்து இரவி தீட்டியுள்ள கவிதைகளில் அருமையும் எளிமையும், அழகும் ஆற்றலும் கொலுவிருக்கக் காண்கிறோம்.

       குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா, ஓயாத உழைப்பிற்குச் சொந்தக்காரரான சிவந்தி ஆதித்தனார், இயற்கையாகி விட்ட இயற்கை நேசர் நம்மாழ்வார், நேர்மையின் சின்னமாக வாழ்ந்து காட்டிய நீதியரசர் சந்துரு என்றார் போல புகழொடு தோன்றி, தங்கள் துறைகளில் முத்திரை பதித்த கொள்கைச் சான்றோர்களைக் குறித்தும் கவிஞர் இரவி இத்தொகுப்பில் அற்புதமான கவிதைகளைப் படைத்துள்ளார்.

       தந்தை பெரியார் முதலாக, நீதியரசர் சந்துரு வரையிலான சான்றோர் பெருமக்களே, கவிஞர் இரவியின் படைப்புள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தினை ஏற்படுத்தி, அவரிடம் இருந்து, முற்போக்கான சிந்தனைகளும் பகுத்தறிவுக் கொள்கைகளும் கவிதைகளின் வடிவில் அவ்வப்போது வெளிப்படுவதற்கு வலுவான அடித்தளத்தினை அமைத்துத் தந்துள்ளனர்.  இத்தகைய ஆற்றல்சால் ஆளுமையாளர்களின் வாழ்வும் வாக்குமே ஒரு படைப்பாளி என்ற முறையில் இரவியைச் செதுக்கியும், செம்மைப்படுத்தியும் வந்துள்ளன எனலாம்.

       சமூக அவலங்களைக் குறித்துப் பாடும் போது, ஒரு கலகக்காரராக வெளிப்படும் இரா. இரவி, மலரினும் மெல்லிய காதலின் செல்வியைச் சித்தரிக்கும் போது, மென்மையானவராக மாறி விடுகின்றார்.  ‘உதவாது இனி ஒரு தாமதம் – உடனே எழு தமிழா!’ என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வழியில் வீச்சும், வீரியமும், விறுவிறுப்பும், வேகமும் கொண்ட சொற்களைக் கையாண்டு வெடிப்புற எழுதிச் செல்லும் கவிஞர், காதலின் மென்மையையும், மேன்மையையும் பாடும் போது வேறு அவதாரம் எடுக்கிறார்.

       “ஒரே ஒரு புன்னகை செய்தாள்
        ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தது!”

என்றாற் போல் காதிலியின் கடைக்கண் பார்வையையும், புன்முறுவலையும், முத்தத்தையும் எளிய, இனிய சொற்களைக் கையாண்டு, அழகிய சொல்லோவியங்களை வடித்தக் காட்டுகின்றார்.

       ‘ஒரே மாதிரி உருவம் கொண்டவர்கள் ஏழு பேர் உலகில் இருப்பார்கள்’ என்பது கவிஞரைப் பொருத்த வரையில் முழுப்பொய்யாம்.  உள்ளம் கவர்ந்த காதலியைப் போல அழகிய உருவம் கொண்ட வேறு ஒருவரும் இந்த உலகில் இல்லவே இல்லையாம்! ஏனெனில் அவளைப்போல் அவள் மட்டுமே இருக்க் முடியுமாம்!

“நடந்து வரும் நந்தவனம் ! 
 நடமாடும் நயாகரா!
 வளைய வரும் வானவில் ! 
 வற்றாத ஜீவ நதி!
 பசிபோக்கும் அட்சயப் பாத்திரம் 
 பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம்...
 மண்ணில் உள்ள சொர்க்கம் 
 மாறாத நிரந்தர மார்கழி!”

எனக் காதலியை வருணித்துக் கவிஞர் புனைந்திருக்கும் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் சொற்களில் சுட்டுவது என்றால், ‘அழகின் சிரிப்பு! உயிருள்ள அழகின் மேய்ச்சல்!!”

பாடுபொருள் எதுவாயினும், இரவியின் பாடுமுறையில் உடன்பாட்டுச் சிந்தனையே மேலோங்கி நிற்கும். பெண்ணின் பெருமையைப் பேசும் போது அவர், அடுப்படியில் முடங்கி விடாமல், தொலைக்காட்சிச் தொடர்களுக்கு அடிமையாகி வீணே காலத்தைக் கழிக்காமல்,

“முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
       முயன்றிடு பெண்ணே முடியும் உன்னால்!”

எனப் பெண்ணினத்திற்கு நம்பிக்கை ஊட்டுவார் ; கல்பனா சாவ்லா, அனிதா வில்லியம்ஸ் போல, ‘சாதிக்கப் பிறந்தவள் பெண்!’ எனப் பறைசாற்றுவார்.  சராசரியாக வாழ்ந்தது போதும், இனி ஆணுக்குச் சரி நிகர் சம்மாக வாழ்ந்து காட்ட வேண்டும்!’ என அறிவுறுத்துவார்.

       ‘தன்னையே கொல்லும் சினம்’ எனச் சினத்தினால் வரும் கேட்டினைக் குறித்துப் பாடும் கவிதையையும்,

       “இன்னா செய்தாரிடம் திருக்குறள் வழி நடந்தால்
        இந்த வையகம் முழுவதும் அமைதி நிலவும்”

என்றே நம்பிக்கையுடன் முடித்திருப்பார் இரவி.

       “நல்லதை மட்டும், கேட்கும், பார்க்கும்,
        படிக்கும் ஆண்டு ஆகட்டும்!

       தீயவை எங்கும், எதிலும் நிகழாத ஆண்டு ஆகட்டும்!”
என்னும் கவிஞரின் உடன்பாட்டு மொழியில் அமைந்த புத்தாண்டு வாழ்த்தும் இங்கே நினைவுகூறத்தக்கது.

       ‘நம்பிக்கைச் சிறகுகள்’ என்னும் நூலின் முதற்பகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளின் தலைப்புகளைக் கொண்டே இரவியின் படைப்புள்ளத்தையும் அவரது படைப்பாக்க நெறியையும் நாம் அடையாளம் கண்டுவிடலாம்.

      “மண்ணில் உள்ளது சொர்க்கம்! 

       திறந்தே இருக்கும் வாசல்!
       உன்னை நீ நம்பு! 
       பொழுதைத் திட்டமிடு!
       இறுதி செய்யப்பட்டது வெற்றி!

       நம்பிக்கைச் சிறகுகள்! 

       இருக்கும் திறமைகளை இனிதே பயன்படுத்து! 
       வெற்றி வசமாகும்!      
       வாழ்க்கை வசந்தமாகும்! 
       வரலாறு படைத்திடு!

கவிஞர் இரா. இரவியின் படைப்புள்ளம் ஈன்று புறந்தந்துள்ள பதினான்காவது நூல் இது!

பதினான்கு என்ற எண்ணுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.  கம்பராமாயணத்தில் கைகேயி தயரதனிடம் இராமன் ஏழிரண்டு ஆண்டுகள்-14 ஆண்டுகள் கானகம் செல்ல வேண்டும் என வேண்டியதில், ‘மன்னும் ஒரு குறிப்பு உண்டு! ‘பதினான்கு ஆண்டுகள்’ என்பது ஒரு தலைமுறையைக் குறிக்குமாம்.  நீதித்துறை சார்ந்த நண்பர் ஒருவர் இத்தகவலைத் தெர்வித்தார். 

தம் படைப்பு ஒவ்வொன்றும் – ஹைகூ கவிதையோ, புதுக்கவிதையோ, திறனாய்வோ எதுவாயினும் – அடுத்த தலைமுறைக்கு, குறிப்பாக, இளைய தலைமுறைக்கு செய்தி வழங்குவதாக – அதனைச் செதுக்குவதாக; வடிவமைப்பதாக அமைய வேண்டும் என்பதே தாயுள்ளம் கொண்ட ஓர் உண்மையான படைப்பாளியின் குறிக்கோளாக இருக்கும்.  கவிஞர் இரா. இரவியின் எழுத்து ஒவ்வொன்றும் அத்தகைய குறிக்கோளுடனேயே அமைந்திருப்பது கண்டு நெஞ்சார வாழ்த்துகின்றேன்.

புதியதோர் உலகம் செய்வோம் ; அதற்குத் தொடக்கமாக – அடித்தளமாக – கெட்ட போரிடும் உலகினை வேரோடும் சாய்ப்போம்!

மதுரை 625 019
07-12-2014                                                          

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக