தமிழும் மலரும் ! நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தமிழும்  மலரும் !




நூலாசிரியர் : தேசிய நல்லாசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தென்றல் புத்தக நிலையம், 923, கீழ வெளிச் சாலை, முறையூர்.
பேச : 04577 248136   மின்னஞ்சல் : csv.tamil@gmail.com 
விலை : ரூ. 50.

*****
       நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிபாரதி சி. சக்திவேல் அவர்கள் 10 நூல்களின் ஆசிரியர்.  இந்த நூல் 11-வது நூல்.  மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் தலைமையில் பாடிய கவியரங்கக் கவிதைகளையும், மற்ற கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள்.  தமிழும்  மலரும் ! என்ற தலைப்பில் மரபும், புதிதும் கலந்த பூ மணக்கும் தமிழ் விருந்து வைத்துள்ளார்கள்.
       நூலாசிரியர், “நிறைகுடம் தளும்பாது” என்பதற்கு இலக்கணமாக மிகவும் அமைதியாகவும், மென்மையாகவும் பேசிடும் நல்லவர்.  கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் அணிந்துரையுடன் முத்தாய்ப்பாக வந்துள்ளது. 07-12-2014 அன்று நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் கவிதை பாடிய 200 கவிஞர்களுக்கும் இந்த நூலை நன்கொடையாக வழங்கினார்கள்.  கவிதை ஆர்வலர்களுக்கு இந்த நூல் பெரிய கொடை தான்.
       தொடக்கத்தில் கடவுள் வாழ்த்து மரபுப் பாடல்கள் உள்ளன.  எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால் அப்பாடல்கள் பற்றி கருத்து எதுவும் சொல்வதற்கில்லை.  மற்ற பாடல்களை மிகவும் விரும்பி ரசித்துப் படித்தேன், மிக நன்று.  பாராட்டுக்கள்.

       பேராசிரியர், நூலாசிரியர், தேசிய நல்லாசிரியர் என்பதால் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக வடித்த கவிதை நன்று.  எல்லா ஆசிரியர்களும் இவர் கவிதை போல மாறினால் நாடு நலம் பெறும்.  மாணவ சமுதாயம் ஏற்றம் பெறும்.

       அறிவுலகின் வீதியிலே!
       அன்னை போல அன்பு காட்டி 
       அரவணைக்கணும்
       அவனி காக்க ஆசிரியர் 
       அறிவு ஊட்டணும்
       சொல்லும் போது கருத்திலெல்லாம் 
       தெளிவு காட்டணும்
       சொன்னபடி வாழ்க்கையிலே 
       நடந்து காட்டணும் !

பெரிய பாடல் இது.  பதச்சோறாக சில வரிகள் மட்டும் எழுதி உள்ளேன்.
       உலகப்பொதுமறை படைத்த  திருவள்ளுவரை வாழ்த்தி எழுதிய கவிதை நன்று.  திருக்குறள் படிப்பதோடு நின்று விடாமல் அதன் வழி வாழ வேண்டும் என்று வலியுறுத்தி வடித்த கவிதை நன்று.

       வள்ளுவரை வாழ்த்தவோ?

       வள்ளுவர் தம்மை வாழ்த்துவ தென்றால்
       நல்லொளியை நாம் பெற வேண்டும் – தினம்
       தெள்ளிய தமிழில் புகழ்தல் ஒழித்து
       சொல்லிய வகையே ஒழுகிடலாம்!

       மகாகவி பாரதியார் எழுதியபடி வாழ்ந்தவர்.  வாழ்ந்தபடி எழுதியவர்.  அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து உள்ளார்.  பாரதி பற்றிய கவிதை ஒன்று.

       இவனைப் போல் இனி ஒருவன்!

       வறுமையில் உழன்ற கவி 
       வரலாற்றில் வாழுங் கவி
       சீர்திருத்தம் செய்த கவி 
       செயலாலே உயர்ந்த கவி
       எங்கள் கவி தமிழ்க்கவி 
       பாரதியொரு மகாகவி

       
       இன்றைக்கு உள்ள மருத்துவ முன்னேற்றம் அன்றைக்கு இல்லை.  இருந்திருந்தால் பாரதியை யானை மிதித்த காயத்தை ஆற்றி பிழைக்க வைத்து இருக்கலாம்.  39 வயதிலேயே இறந்த கொடுமை நேர்ந்து இருக்காது.  இப்படி பல நினைவுகளை மலர்வித்தது கவிதை.

       காதலிக்காத கவிஞர்கள் உண்டு.  ஆனால் நிலவை நேசிக்காத கவிஞர்கள் இல்லை.  அனைத்துக் கவிஞர்களின் பாடுபொருள் அழகு நிலா.  இவரும் நிலா பற்றி கவிதை வடித்துள்ளார். 

       நிலா!

       வானம் என்னும் கடலிலே 
       வண்ண நிலா மிதக்குது
       விண்ணில் மின்னும் விளக்கது 
       கண்ணைப் பறிக்கும் நிறமிது
       தாவிக் குதித்து ஆடுமே 
       தங்க நிலா வீதியில்
       நாளைப் போகப் போகிறேன் 
       நானும் அந்த நிலவுக்கு !

       குழந்தைப் பாடல் போலவும் பாடல் உள்ளது. 
       கேள்விப்பட்ட பாட்டி வடை சுட்ட கதையை மாற்றி யோசித்து வடித்த கவிதை நன்று.

       நரியும் காகமும்!

       கவ்வி இருந்த வடைதனை 
 காலடியில் வைத்ததாம்
       காகா என்று கரைந்ததுமே 
 கடிதில் பாட்டை முடித்ததாம்
       வடையை நம்பி நரியுமே 
 வாயைப் பிளந்து நின்றிட
       வடைவிழாது போகவே 
 வாட்டமுற்றுச் சென்றது.

       தான் படிக்காத போதும் தமிழகத்தையே படிக்க வைத்தவர் கல்வி வள்ளல் காமராசர்.  படிக்காத மேதையின் பெயரில் மதுரையில் பல்கலைக்கழகமே உள்ளது. அவர் இல்லை என்றால் தமிழர்களுக்கு கல்வியும் இல்லை. பதவியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.  அவர் பற்றிய கவிதை  நன்று.

       அறிவுக்கதவைச் சரியாய்த் திறந்த அருந்தமிழன் காமராசர்!

       ஆடுமாடு மேய்க்கச்சென்று காடுகரை அலைந்து வந்த
       பாடுபடும் குழந்தைகளை இழுத்து வந்தார் – பள்ளி
       நாடிவர நண்பகலில் இலவசமாய் உணவளித்து 
       கோடிபெறும் பொன்னின்மிகு கல்வி தந்தார்!

       இக்கவிதைக்கான தலைப்பினைத் தந்தவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன்.  நானும் இந்தத் தலைப்பில் கவிதை எழுதி கவியரங்கில் கவிதை பாடினேன்.  என் நூலிலும் சேர்த்துள்ளேன். 

       உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அன்னைக்கு இணையான உறவு எதுவுமில்லை.  குற்றவாளி என்றாலும் அன்னை தன் மகனை வெறுக்காமல் அன்பு செலுத்துவாள்.  தன்னை உருக்கு மகனின் வாழ்க்கைக்கு ஒளி தரும் ஒப்பற்ற உயர்ந்த அன்னை பற்றிய கவிதை நன்று.

       அன்னை!

       பசி போக்க உணவுண்டு நோய் போக்க மருந்தருந்தி
       பத்தியங்கள் காத்திருந்தாள் அன்னை! – நான்
       உறங்காமல் பலபொழுதும் கரைகின்ற வேளையிலும்
       ஊஞ்சலிட்டு உவந்தவரும் அன்னை!

       இன்றைய தமிழர்களின் நிலையை, தமிங்கிலம் பேசிடும் அவல நிலையை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று.

       எனவே இனிமேல் பொறுப்பதில்லை !

       எனக்குத் தெரியும் இந்தத் தமிழன்
       சடுதியில் தமிழை மறப்பான் என்பது!
       தானும் பேசான் ; தமிழையும் படியான் ;
       தாய்மொழிக்கும் உதவான் ; குழந்தைக்கும் உதவான் ;
       தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசுவான்!

       ஆசிரியர் மாணவனுக்கு அறிவுரை கூறும் விதமாக வடித்த குழந்தைப்பாடல் நன்று.

       பாரினிலே சிறக்க வேண்டும்!

       உயிர்களுக்கு அன்பு காட்டு 
 உண்மை மறவாதே – தம்பி
       உயர்ந்தநெறி ஊக்கத்தோடு 
 உழைக்கத் தவறாதே
       படிப்பதைக் கடைபிடிக்க வேண்டும் 
 பண்பு கெடாதே ! – தம்பி
       பாரினிலே சிறக்க வேண்டும் 
 எண்ணம் விடாதே!

       தமிழும்  மலரும் ! நூல் படித்தால் தமிழ் உள்ளமும் மலரும்.  தமிழுணர்வும் பிறக்கும். 
       நூலாசிரியர் தேசிய நல்லாசிரியர் பேராசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.  கவியரங்கங்களிலும் முழங்குங்கள்.  வாழ்த்துக்கள்.

.

கருத்துகள்

கருத்துரையிடுக