மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மே... மே... ஆட்டுக்குட்டி !
சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன்
நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர தெரு, பாரிமுனை, சென்னை – 600 108.
விலை : ரூ. 60
*****
மின்மினி இதழின் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பல்வேறு இதழ்களில் எழுதிய சிறுவர்களுக்கான பாடல்களை தொகுத்து மே... மே... ஆட்டுக்குட்டி என்று தலைப்பிட்டு மணிவாசகர் பதிப்பகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளார்கள். நூலின் அட்டைப்படம் வடிவமைப்பு, உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளது. நூலாசிரியரே வடிவமைப்பாளர் என்பதால் பொருத்தமான ஓவியங்களும் இருப்பதால் படிக்க ஆர்வமாக உள்ளன. குழந்தைகள் விரும்பிடும் நூலாக வந்துள்ளது.
“அறிவுக் கோவிலாம் மகாத்மாகாந்தி நூலகத்தின் வாயிலாக பல்லாயிரக்கணக்கானோர் படிக்க உறுதுணை புரியும் படிக்காத மேதை திரு. கு. மகாலிங்கம் அவர்களுக்கு”
இந்த நூலை காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு. குழந்தைக் கவிஞர் பணிச்செல்வர் பா. வெங்கட்ராமன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது. குழந்தைக் கவிஞர் வள்ளிப்பா அவர்களின் புகழ் பரப்பும் பணியினை செவ்வன செய்து வருபவர். மதுரை மேலூர் அருகே நடந்த குழந்தைகள் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து வந்து சிறப்பித்தார்கள். சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன். நூலாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்கள் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார்.
குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா. கோதண்டம் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று. திரு. ச. மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களின் பதிப்புரையும் நய உரையாக உள்ளது. ஹைக்கூ உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து மின்மினி இதழ் நடத்தி வரும் நூலாசிரியர் கன்னிக்கோவில் இராஜா குழந்தை இலக்கியத்திலும் கவனம் செலுத்தி குழந்தைப்பாடல்கள், சிறுகதைகள் எழுதி வருகிறார். பாராட்டுக்கள். கு ழந்தை இலக்கியத்தில் வெகுசிலரே ஈடுபட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை பெருகிட இந்த நூல் உதவும். இந்த நூல் படித்தவுடன் குழந்தைப் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பிறந்தது.
இந்த நூலில் 47 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களை குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டும். படித்தால் தமிழ்மொழி அறிவும், பொது அறிவும் வளர்ந்திட உதவும். பதச்சோறாக பாடல்களிலிருந்து சில வரிகள் மட்டும்!
நூலகம் அமைக்கலாம் வாங்க!
நமக்குக் கிடைக்கும் பணத்திலே
நிறைய நூல்கள் வாங்கலாம்!
நமது வீட்டின் அறையிலே
சிறந்த நூலகம் அமைக்கலாம்!
இந்த நூலை வாங்கி பள்ளிகளில் குழந்தைகளுக்கு பரிசளிக்கலாம்!
பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் நன்கு பதியும் வண்ணம் வாசித்தலின் நேசிப்பை உணர்த்தும் விதமாக பாடல்கள் எழுதி உள்ள நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
குழந்தைகளை முதுகில் ஏற்றி யானை விளையாட்டு விளையாண்ட மலரும் நினைவுகளை மலர்விக்கும் விதமாக பாடல் உள்ளது.
யானை வருது! யானை வருது!
தந்தை முதுகில் குழந்தைச் செல்லும்
காட்சி தானுங்க!
விந்தை இல்லை இதுவும் கூட
மாட்சி தானுங்க!
தமிழின் சிறப்பை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக வடித்த பாடல் நன்று.
தமிழின் சிறப்பு.
ல, ள, ழ உச்சரிக்கும் போதினிலே
வேறுபாடறிந்து ஒலித்திடலாம்.
ழ’கரமே தமிழின் சிகரமென்ற
சிறப்பை நாமும் அறிந்திடலாம்!
மரம் நடுவது மழைக்கான வரவேற்பு. மரமே மரமே மழையின் வருகையை முடிவு செய்கின்றது. மரத்தின் பயனை விளக்கும் பாடல்.
மரம் நடு! மாசு தடு!
தூசி நிறைந்த நகர்ப்புறத்தில்
மரத்தை நட்டு வளர்ப்பதே
மாசு அற்ற நகரத்தை
மகிழ்வாக்க காணும் வழிகளாம்!
தூசி நிறைந்த நகர்ப்புறத்தில்
மரத்தை நட்டு வளர்ப்பதே
மாசு அற்ற நகரத்தை
மகிழ்வாக்க காணும் வழிகளாம்!
இன்றைக்கு மாணவர்கள் வகுப்பறையிலேயே ஆசிரியரைத் தாக்குவதும் சக மாணவனை அடிப்பது, கொலை செய்வது என்று இதுவரை கேள்விப்பட்டிராத அளவிற்கு அவலங்கள் நடைபெற்று வருகின்றது. இவற்றிறுகு மூல காரணம் குழந்தைகளுக்கு நன்நெறி போதிக்காததே! உடனடியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் நன்நெறி வகுப்பை தொடங்கிட வேண்டும். நன்னெறி போதிக்கும் பாடல் நன்று.
உதவும் குணம்! உயர்ந்த குணம்!
உதவி நாமும் செய்யும் போது
உள்ளம் மகிழ்வு கொள்ளுது
உதவி பெற்ற நண்பர் மனதில்
கல்வெ ட்டாய்ப் பதியுது!
இன்று குழந்தைகள் பெற்றோர்களுடன் சேர்த்து தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து இரவு, நெடுநேரம் கழித்தே உறங்குகின்றனர். இதனால் அதிகாலை எழுவதற்கு வாய்ப்புஇன்றி தாமதமாக எழுகின்றனர். பள்ளி செல்வதில் அதிக பரபரப்பு நிகழ்கின்றது நாள்தோறும் அதிக எழுந்திட அறிவுறுத்தும் பாடல் நன்று.
கதிர் முன் எழு!
அதிகாலை எழுந்தால் அனைத்தும் இங்கே
அழகாய் தானே ஆகுது
கதிரவனைப் போல நாளும் நாமும்
கடமை செய்து வாழ்வோமே!
அழகாய் தானே ஆகுது
கதிரவனைப் போல நாளும் நாமும்
கடமை செய்து வாழ்வோமே!
நூல் முழுவதும் ஒவ்வொரு கவிதைகளும் நெடிய பாடல்களாக இருந்த போதும் பதச்சோறாக நான்கு வரிகள் மட்டும் எழுதி உள்ளேன். மற்றவை வெள்ளித்திரையில் காண்க என்பதைப் போல, மற்றவை நூல் வாங்கி படித்து அறிக!
இந்த உலகில் மிகவும் மதிப்பு மிக்கது அன்பு ஒன்றே. அன்பால் எதையும் சாதிக்கலாம். அதிகாரத்தால் சாதிக்க முடியாததையும் அன்பால் சாதிக்கலாம் அன்பை கற்பிக்கும் பாடல் நன்று.
அன்பை விதை!
வனத்தில் தானே இந்த எழிலும்
வாடிக்கை யாய் நடக்குதாம்
மனத்தில் அன்பை விதைத்துத் தான்
விலங்குக் கூட்டம் மகிழுதாம்.
வாடிக்கை யாய் நடக்குதாம்
மனத்தில் அன்பை விதைத்துத் தான்
விலங்குக் கூட்டம் மகிழுதாம்.
இந்த நூலின் தலைப்பில் உள்ள பாடல் மிக நன்று. குழந்தைகள் ஆட்டுக்குட்டி என்றால் மிகவும் விரும்புவார்கள். அதனோடு விளையாடுவார்கள். ஆட்டுக்குட் டி பற்றிய பாடல் நன்று.
மே. மே. மே. மே. ஆட்டுக்குட்டி
அம்மா அப்பா என் மீது
அன்பு செலுத்தப்படும்
இனிய நண்பன் ஆட்டுக்குட்டி!
அன்பு செலுத்தப்படும்
இனிய நண்பன் ஆட்டுக்குட்டி!
இந்த நூலை குழந்தைகளுக்கான பாட நூலில் இடம்பெறச் செய்யலாம். குழந்தைக் கவிஞர் வள்ளியப்பாவின் வரிசையில் இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவும் இடம் பிடித்து விட்டார். பாராட்டுக்கள்.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கவிஞர் கன்னிக்கோவில் இராஜா பாராட்டிற்கு உரியவர்
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி நண்பரே