பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி !

பழமொன்ரியு !             கவிஞர் இரா .இரவி !

தேவை விளம்பரம் 
பூக்கடைக்கும் 
காகிதப்பூக்கள் !

பணிவு கூட்டிடும் 
கர்வம் குறைத்திடும் 
புகழ் !

வாத்தியார் பிள்ளை மக்கல்ல
ஆசிரியர் பிள்ளை 
பேராசிரியர் ! 

ஆசைப்படலாம் முடவன்
கொம்புத் தேனுக்கு 
கடையில் கிடைக்கும் !

நாலு பெண்கள் கூடினால் 
வேற்றுமையல்ல  ஒற்றுமை 
மகளிர்  சுய உதவிக்குழு !

நாய் விற்ற காசு குரைக்காது
தெரிந்தது 
நாயின் முகம் !

நிலையாமை ஒன்றே 
நிலையானது 
வாழ்க்கை !

நீர் உயர 
நெல் உயரவில்லை 
அழுகியது நெல் ! 

பெண் புத்தி பின் புத்தி 
பின்னால் வருவதை 
யோசிக்கும் புத்தி !  

பொறுத்தார் பூமி ஆளவில்லை 
இழந்தார்கள் 
பூமியை !

அதிகம் வேண்டும் 
ஞாபகம் 
பொய்யனுக்கு ! 

பிறந்ததும் 
கற்றது நீச்சல் 
மீன்குஞ்சு !

பழம்தான் 
இனிப்பதில்லை
மிளகாய்ப்பழம் !

எடுத்தால்  ஓடாததால்   
எடுக்கவில்லை படம் 
பாம்பு !

பசுமரத்தாணியாகப்  பதிகின்றன 
ஊடகத்தில் காட்டும் 
கெட்டவைகள் !

பழகப் பழக 
புளிக்கும் பால்
இனிப்பால் காதலி !

பாம்புக்கு பால் வார்ப்பு 
இலங்கைக்கு உதவும் 
இந்தியா !

பாம்பு  என்றால் 
படையும் நடுங்கும் 
அஞ்சுவதில்லை பருந்து !

பிள்ளையில்லா வீட்டில் 
துள்ளவில்லை வருத்தத்தில் 
கிழவன் !

உருவத்தில் சிறியது 
உடல் நலத்திற்கு நல்லது 
மிளகு !

மூர்த்தி சிறியது 
கீர்த்தி பெரியது 
மிளகு !

பல் போனால் 
சொல் போகவில்லை 
செயற்கைப் பற்கள் !

தோளுக்கு மிஞ்சினால் 
தோழனாகப்  பழகினால் 
நீடிக்கும் உறவு !

பிள்ளையார் பிடிக்க 
குரங்காய் முடிந்தது 
அணு உலை !

சிப்பியில் விழும் 
எல்லா மழைத்துளியும் 
முத்தாகாது !

நல்ல மரத்தில் புல்லுருவிகள் 
கல்வித்துறையில் 
தனியார் !

வயதாகும் முன்பும்    
நரை வரும் 
இளநரை !

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் 
எல்லாப் பிள்ளைக்கும் வாயுண்டு 
பேசத்தெரிந்த பிள்ளை பிழைக்கும் !

பயம் கொள்ளவில்லை 
புலிக்குகை புகுந்த மான் 
குகையில் இல்லை புலி !
 
இரண்டும் ஒன்று 
தவளை அரசியல்வாதி 
தன் வாயால் கெடுபவர்கள் !

தீட்டின மரத்திலேயே 
கூர் பார்த்தனர் 
கட்சி மாறி !

பசுத்தோல் போர்த்திய 
புலியாக 
தலைவர்கள் !

தோலிருக்க 
சுளை முழங்கி 
அரசியல்வாதி !

வாய்ப்பந்தல் 
நிழல் தராது 
தேர்தல் அறிக்கை !

நெற்றிக்கண் கண்டால் 
நடுங்குகின்றனர் 
இக்காலப் புலவர்கள் !நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்