மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி

மட்டை விளையாட்டு தேவையா?
கவிஞர் இரா. இரவி.
****
தலைக்கவசம் அணிந்திருந்த போதும் கிரிக்கெட் வீரர் ஹீயூஸ் காயம் ஏற்பட்டு உயிரை இழந்து விட்டார். ஆஸ்திரேலியாவில் அவர்களுக்குள் நடந்த போட்டி.  அதனால் பிரச்சனை இல்லை.  இதுவே இந்தியா, பாகிஸ்தான் போட்டியாக இருந்து, யாராவது ஒருவர் இறந்து இருந்தால் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும்.  கெட்டதிலும் ஒரு நல்லது என்பது இது தான்.

மட்டையாட்டத்தில் பயன்படுத்தும் பந்து மிக கனமான பந்து.  அந்தப்பந்து நெஞ்சில், நெற்றியில், பொட்டில் பட்டாலும் ஆபத்து.  ஹீயூஸ்க்கு கழுத்துப் பகுதியில் தாக்கியதில் உயிர் இழந்துள்ளார். இந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.  மட்டை விளையாட்டு விளையாடும் போதும் ஏற்பட்ட சண்டையின் காரணமாக உயிர்பலி நேர்ந்து உள்ளது.  மதுரையிலும் மட்டை விளையாட்டு சண்டையில் ஒரு மாணவன் இறந்தான்.

குளிர்பிரதேசத்தில் உடம்பெல்லாம் மூடி வெயில் காணாதவர்கள் ஆசையோடு வெயிலில் விளையாடிய விளையாட்டு இது.  வெப்ப பூமியிலும் அதுபோன்ற உடை அணிந்து வெயிலில் விளையாடி வருகின்றனர். ஊடகங்களில் பெருமளவு விளம்பரம் செய்வதால் இந்த விளையாட்டு குழந்தைகள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விளையாட்டில் அளவிற்கு அதிகமான ஊழல் நடந்து வருகின்றது.  விளையாட்டு வீரர்களும் கோடிக்கணக்கில் குறுக்கு வழியில் சம்பாதிக்கின்றனர்.விளம்பரப் படங்களில் நடித்து கோடிகள் ஈட்டுகின்றனர் 

யார் வெல்வது? யார் தோற்பது? என்பதை பணத்திற்காக முதலில் முடிவு செய்து கொண்டு விளையாடுகின்றனர்.  பந்தயம் கட்டுபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, தொகைக்கு ஏற்ப விளையாட்டின் முடிவை முடிவு செய்கின்றனர். இந்த பித்தலாட்டம் பற்றி எதுவும் அறியாமல் கொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நேரலைகளில் விளையாட்டை ரசித்து நேரத்தை விரையம் செய்து வருகின்றனர்.விளையாட்டை தொலைக்காட்சியில் பார்க்க வேண்டும் என்று அதற்கும் வீட்டில் சண்டை 

மட்டை விளையாட்டு வீரர் ஹீயூஸ் காயப்பட்டவுடன் கோமா நிலைக்கு சென்று நினைவு திரும்பாமலே இறந்து விட்டார்.  மிகவும் குறைந்த வயது.  25 வயதிலேயே அவர் உயிரை இழந்திட காரணமாக அமைந்தது மட்டை விளையாட்டு.  ஆபத்து இல்லாத எத்தனையோ விளையாட்டுகள் உள்ளன. ஆனால் அவைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரவதில்லை.  அதனால் அந்த விளையாட்டுகள் குழந்தைகளிடம் பிரபலம் அடையவில்லை.  கபடி போன்ற விளையாட்டுகளில் இப்படி உயிர் போகும் ஆபத்து இல்லை.

மாணவர்கள் மட்டை விளையாட்டு விளையாடும் போது சண்டை வந்தால் மட்டையால் அடித்துக் கொள்ளும் நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளன. 

மட்டை விளையாட்டு போட்டிகளில் வீரர்களை ஏலம் விடுவதும் அவர்களை விலைக்கு வாங்குவதும் நல்ல செயல் அன்று.  ஒரு மனிதனை ஏலம் விடுவது நாகரீக உலகில் ஏற்புடைய செயல் அன்று.  மேலும் ஏலம் எடுத்து சம்பாதிக்கும் வணிகத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். அவர்களும் வந்து விளையாட்டு அரங்கில் நிற்பதால் தொலைக்காட்சிகளில் அதிக முக்கியத்துவம் தந்து அவர்களை காட்டுகின்றனர்.  இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு பிரபலமாகி வருகிறது. 

 அரசியல் தலைவர்கள் சிலரும் இந்த விளையாட்டை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.  பார்த்து வருவதோடு நில்லாமல் அது பற்றி ஊடகத்திலும் சொல்லி வருகின்றனர். விளையாட்டு வீரர் புத்தகத்தை படிப்பதாக விளம்பரம் வேறு செய்கின்றனர் . இதன் காரணமாகவும் இந்த விளையாட்டு குழந்தைகளிடையே பிரபலமாக வருகின்றது.

அன்றே பெர்னாட்சா என்ற பேரறிஞர் சொன்னார். 11  முட்டாள்கள் விளையாட பதினோறாயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு மட்டை விளையாட்டு என்றார்.

 மட்டை விளையாட்டின் காரணமாக சாதிக் கலவரங்கள் வன்முறைகள் நடந்த நிகழ்வுகளும் உண்டு.  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது உண்மையான அன்பு இருந்தால் மட்டை விளையாட்டு விளையாடுவதற்கு தடை செய்யுங்கள். நாம் தான் எடுத்து கூறி அந்த விளையாட்டில் உள்ள ஆபத்தை புரிய வைக்க வேண்டும்.  மேலும் மட்டை விளையாட்டுக்கு பயன்படும் மட்டை பந்து இவற்றை வாங்கி கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

மட்டை விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுப்பதிலும் ஊழல் உள்ளது.  அரசியல் தலையீடு உள்ளது. உண்மையான திறமை மிக்க விளையாட்டு வீரர்களை தேர்வு செய்யாமல் தவிர்த்து விடுகின்றனர். 

ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர் ஹீயூஸ் விளையாடிய போது அவரது தாயாரும், சகோதரியும் இருந்து உள்ளனர்.  அவர்கள் கண் முன்னிலையில் பந்தால் அடிப்பட்டு சுருண்டு விழுந்த காட்சி சோகம்.விழுந்தவுடன் கோமா நிலை அடைந்து கடைசியில் இறந்த சோகம் சொல்லில் அடங்காது.  அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு வழங்கும் நிதி உதவி எதுவும் அவரை ஈடு செய்ய முடியாது.

1998ஆம் ஆண்டு ராமன் லம்பா தலையில் பலமாக பந்து விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.  பாகிஸ்தனை சேர்ந்த விளையாட்டு வீரர் அப்துல் அஜீஸ் மார்பில் பந்து விழுந்து அவரும் உயிரிழந்தார்.  தென் ஆப்பிரிக்கா வீரர் மார்க் பௌச்சருக்கு மட்டை விளையாட்டு குச்சி எகிறி இடது கண்ணில் பாய்ந்து பார்வை குறைபாடு ஏற்பட்டது.  

இப்படி மட்டை விளையாட்டால் உயிர் இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் காய்முற்றவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.  உயிர்க்கொல்லி விளையாட்டை புறக்கணிப்போம்.

ஆபத்தான மட்டை விளையாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும்.  ஆசையோடு ,அன்போடு ,பாசத்தோடு நாம் வளர்க்கும் குழந்தைகள் மட்டை விளையாட்டு விளையாடி பாதிப்பு அடையாமல் காக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை.  மட்டை விளையாட்டால் உயிர் இழந்தது ஹீயூஸ் அவர்களோடு முற்றுப்பெறட்டும்.  இனி எந்த உயிரும் பறிபோகாமல் இருக்க மகா மட்டமான ஆபத்து நிரம்பிய மட்டை விளையாட்டை புறக்கணிப்போம்.


.

கருத்துகள்

  1. ஒவ்வொரு விளையாட்டிலும் சில நிறைகளும், சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். முடிந்தவரை கவனமாக இருப்பது எந்த சூழலையும் எதிர்கொள்ள உதவும். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல. வாழ்க்கைக்கும்கூட.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக