என் வானிலே.. . நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

என் வானிலே..

.
நூல் ஆசிரியர் : கவிஞர் வேலு கணேஷ் !
பேச : 98428 48860

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு, சேலம்-636 015.  விலை : ரூ. 50. பேச : 98429 74697
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

       நூலாசிரியர்  கவிஞர் வேலுகணேஷ் அவர்கள் கிராமர் மீடியா என்ற நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருபவர் என்பதால் திரைப்பட இயக்குனர்களின் தொடர்பின் காரணமாக, நட்பின் காரணமாக, திரைப்பட இயக்குனர்கள் லியாகத் அலிகான், சிங்கம்புலி மற்றும் திரு. செம்பை மணவாளன், கவிஞர் சு. பீர்முகமது ஆகியோரிடம் அணிந்துரை வாங்கி உள்ளார்.  அவர்களும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அணிந்துரை வழங்கி உள்ளனர்.

       கவிஞருக்கு இயற்கை நேசிப்பு என்பது அவசியம்.  இயற்கை ரசிக்க மனம் இருப்பவர்களால் மட்டுமே இயற்கை பற்றி கவிதை எழுதிட முடியும்.

       பூக்களின் புலம்பல் !

       யாரங்கே? பூங்காவின் வாசலை இழுத்து மூடுங்கள்
       மலர்கள் வாழும் சோலைக்குள் 
       மனிதர்களுக்கு என்ன வேலை?
       மலரின் அருமை புரியுமா?
       கல்லறைக்கும்-கட்டிலறைக்கும் 
      கற்சிலைக்கும்-சடலத்திற்கும்
      எங்களை கசக்கிப் பிழிபவர்களே – உங்கள் 
      வருகையை நிறுத்திக்                                                                                 கொள்ளுங்கள்.

       ஆம், மலர்கள் என்பது கண்டு ரசிப்பதற்கு மட்டுமே செடியிலிருந்து பறித்து மாலையாக்கி மகிழ்வதற்கு கண்டனத்தை மலர்கள் பேசுவது போலவே கவிதையாக வடித்த யுத்தி நன்று.

       உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னத செயலால் மக்களின் மனங்களில் வாழும்      மாமனிதர் பென்னிகுக் பற்றியும் கவிதை வடித்துள்ளார்.

       கர்னல் பென்னிகுக்!
       கண்ணீர் கண்ட நிலத்தில் 
       தண்ணீர் தவழச் செய்தவர்
       தாகம் கண்ட நாக்கில் 
      தேகம் நனைத்தவர்!

       தன் நாட்டில் இருந்த சொந்த சொத்துக்களை விற்று, பெற்று வந்த பணத்தில் அணை கட்டி விவசாயிகளின் நெஞ்சம் இனிக்க வைத்த மாமனிதரை பலரும் முன்மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தால் நாடு செழிக்கும்.  ஊழல் ஒழியும் அமைதி நிலவும்.

       கவிஞர்கள் கவிதை எழுதத் தொடங்குவதே முதலில் காதல் கவிதை பிறகு தான் சமுதாயக் கவிதை.  இவரும் காதல் கவிதை வடித்துள்ளார் ஊறுகாய் போல, சாப்பாடு போல அல்ல.

       அறிந்தும் அறியாமலும்!

       ஏதோ சில தருணங்களில் 
       நாம் சந்திக்கும் போதெல்லாம்
       என் விழிகளை – முத்தமிடும் 
       உன் கண் இமைகள்
       அறிந்தும் அறியாமலும் !

       மனிதாபிமானமுள்ள எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமை பற்றி குரல் கொடுக்காமல், படைக்காமல் இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை.  குறிப்பாக தமிழ் இன உணர்வு உள்ளவர்களால் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.

       மௌனம்!

       அய்யகோ தமிழா! 
       அழியுது தமிழ்இனம் !

       நம் உடன்பிறவாச் சகோதரன்
       உடல் மண்ணில் புதைந்து கிடக்கு !

       நம் உடன்பிறவாச் சகோதரி
       தேகம் தெருவில் சிதைந்து கிடக்கு ... 

       இன்னும் மௌனம் எதற்கு?   
       மிச்சம் இருக்கும் மழலைகள் புதைக்கப்படுவதற்காகவா?

       இளைஞர்கள் பொறுப்போடு வாழ் வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தத்துவம் சொல்லும் விதமாக வடித்த கவிதை ஒன்று.

       தொலைத்தேன்!

       சிறுவயதில்-படிப்பைத் 
       தொலைத்தேன் விளையாட்டால்
       பருவ வயதில் – திருமணத்தைத் 
       தொலைத்தேன் கேலிக்கூத்தாய்
       முதுமை வயதில் – பணம் சேமிக்காததால் 
       தொலைத்தேன்                                                                                            வாழ்க்கையை.

       காதல் என்பது சுகமான அனுபவம். எல்லாக் காதலும் வெற்றி பெறுவதில்லை.  சில காதல்கள் மட்டும் வெற்றி அடைந்து திருமணத்தில் முடிகின்றன.  பல காதல்கள் தோல்வி அடைந்து மனதில் சுவடுகளாக நிலைபெறுகின்றன.

       நினைவுகள்!

       நிஜங்கள் அழிவதில்லை
       நீ என்னை பிரிந்தாலும் 
       என் நினைவுகளை வெறுத்தாலும் 
       நினைத்துக் கொண்டே இருப்பேன்.

       பலவேறு பொருள்களில் புதுக்கவிதைகள் மட்டுமல்ல, ஹைக்கூ கவிதைகளும் உள்ளன.  ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் இரண்டு வகை கவிதைகள் உள்ளன.

       மலரை மனிதர்கள் பறிப்பதற்கான கண்டனத்தை புதுக்கவிதை மட்டுமன்றி ஹைக்கூ கவிதையிலும் நன்கு பதிவு செய்துள்ளார்.  நூலாசிரியர் கவிஞர் வேலுகணேஷ்.

       உன் காதலை வளர்க்க
       என் உயிரைப் பறிக்கிறாய்
       கதறியது மலர்!

       காதலர் தினம் அன்று ரோஜா மலரை காதலிக்கு வழங்கிடும் காதலர்கள் கவனிக்க வேண்டிய ஹைக்கூ இது.

       கண்டதும் காதல் என்பார்கள்.  காதலின் முன்னுரை கண்களால் தான் தொடங்குகின்றது.  முடிவுரையும் கண்களால் கண்ணீராக வருவதும் உண்டு.  காதலியின் கண்ணை வர்ணிக்கும் விதம் நன்று.

       கவிதை சொல்லிடும்
       காதல் புத்தகம்
       கண்கள்!

       சாதியின் பெயரால் மனிதன் மோதி விலங்காக மாறி வருகின்றான்.  பகுத்தறிவை பயன்படுத்துவதே இல்லை.  சாதி பற்று என்று தொடங்கி வெறியாக மாறி மோதி வீழும் அவலம் நாட்டில் நடந்து வருகின்றது.

       ஜாதிகள் உண்டு
       ஆனால் மோதிக் கொள்வதில்லை
       பூக்கள்.

       பூக்களை அக்ரினை என்கிறோம்.  ஆனால் அவைகளுக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லையே என உணர்த்துவது சிறப்பு.  மின்சாரத்தை கவனமாக கையாள வேண்டும் என்பதையும் ஹைக்கூவில் உணர்த்தி உள்ளார். 

       மறந்தாய் போல் கை வைத்தேன்
       அதற்கு மறதி இல்லை
       தூக்கி அடித்தது – மின்சாரம்

       குறுக்கு வழியில் கோடிகள் திரட்டலாம் என்று அரசியலுக்கு வருகிறார்கள்.  ஆனால் தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் சறுக்கலையும் சந்தித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

       எட்டிப்பிடிக்கும் ஏணிப்படி
       எந்நேரத்திலும் சறுக்கலாம்
       அரசியல்!

       வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்.  அந்தப் பொன்மொழியை வழிமொழிந்து வடித்த ஹைக்கூ நன்று.

       மரணத்தைத் தள்ளிப் போடும்
       மத்தாப்பு
       நகைச்சுவை.

       நூலாசிரியர் கவிஞர் வேலு கணேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். இயந்திரமயமான சென்னையில் வாழ்ந்து கொண்டு இலக்கியத்திலும் தடம் பதிப்பதற்கு வாழ்த்துக்கள்


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்