தமிழ்நாட்டில் தமிழ்க்கொலையா ? கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாட்டில்  தமிழ்க்கொலையா ? கவிஞர் இரா .இரவி !

சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் 
செந்தமிழில் வழக்காட இன்னும் முடியவில்லை !

மீனாட்சியம்மன் திருக்கோவில் கருவறையில் 
மதுரத்தமிழ் இன்றும் அனுமதிக்கவில்லை !

அங்காடிகளின் விளம்பரப் பலகைகளில் 
அழகு தமிழ் இன்னும் இடம் பெறவில்லை !

தமிழர்கள் பேசிடும் பேச்சு வழக்கில் 
தமிங்கிலம் மிக  வேகமாக பரவிவிட்டது !

பத்துச் சொற்கள் தமிழன் பேசினால் 
பத்தில் எட்டுச் சொற்கள் ஆங்கிலமானது !

பத்திரிகைகளும் போட்டியிட்டு  பரப்புகின்றன தமிங்கிலம்
பைந்தமிழைத் தின்னும் திமிங்கிலமானது தமிங்கிலம் !

பண்பலை வானொலிகளும் பரப்புகின்றன தமிங்கிலம்
படிக்காத பாமரப் பாட்டி பேச்சிலும் கலந்தது தமிங்கிலம் !

தொலைக்காட்சிகளும்  தொல்லை தொடர்கின்றது 
தவறாமல் தினமும் நடக்குது தமிழ்க்கொலை ! 

நிகழ்ச்சிகளின் பெயர்களில் ஆங்கிலம் 
நிகழ்ச்சியில் பேசுவோரின் பேச்சில் தமிங்கிலம் !

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இனி 
என்னாகும் நம் தமிழ் தயவுசெய்து சிந்திப்பீர் !

உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக !
உரிய மதிப்பினை நம் தமிழுக்குத் தந்திடுக !

.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்