ஹைக்கூ ! சென்றியு ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! சென்றியு !     கவிஞர் இரா .இரவி !

அடிக்கிற கை 
வேண்டாம் அணைக்க 
குடிகாரன் !

அனைத்தையும் ரசிக்கும் 
அடையும் மகிழ்ச்சி  
அமைதியான மனம் !

அழுத பிள்ளை 
பால் குடிக்கவில்லை 
பால் விலை உயர்வு !

அம்மா இறந்தால் 
அப்பாவும் இல்லை 
குழந்தைக்கு !

அச்சாணி இல்லாத தேர் 
முதியோர் இல்லாத 
வீடு !

அறுக்கத் தெரிந்தவனுக்கு 
ஒன்று போதும் 
அரிவாள் !

அடியாது மாடு படியாது
தவறு 
அடித்த மாடு  சண்டி  !

அத்தைக்கு மீசை முளைத்தாலும்  
சித்தப்பா அல்ல 
அத்தைதான் !

ஆடிப்பட்டம் தேடி விதை 
சரி 
நிலம் ?

ஆடிக்காற்றில் அம்மியும்
நகரும் சரி 
அம்மி ? 

இயந்திய வாழ்வை 
இனிதாக்கும் 
இலக்கியம் !  

இலை உதிர் காலம் 
இலை உதிர்ப்பதில்லை 
ஈச்சம் மரம் !

இட்டுக் கெட்டார்
இங்கு உண்டு 
தேர்தலில் வாக்கு !

உதடு வெல்லம்
உள்ளம் கள்ளம் 
அரசியல்வாதி !

உடல் பெரிது 
கண்கள் சிறிது 
யானை !

உழவன் கணக்குப் பார்த்தால்
உழக்கும் மிஞ்சவில்லை 
இன்று !

உலகில் எங்கு பிறந்தாலும் 
நிறம் கருமைதான் 
காகம் !

உலகில்  இளைஞர்கள் 
அதிகம் வா(ழு )டும் நாடு 
இந்தியா !

ஊர் கூடி 
தேர் இழுத்ததில் 
வந்தது சண்டை !

எச்சிற்  கையால் 
காக்கை ஓட்டாதவன் 
மாறினான் காதலித்ததும் !
 
நிறையை கூட்டத்தில் 
குறையை தனிமையில் கூறுவது  
நல்ல நட்பு !

ஓநாயிடம் அன்பு 
ஆட்டுக்கு தீமை 
இலங்கையிடம் இந்தியா !

கடன் வாங்கித் திருமணம் 
குழந்தைக்கு முன்பாக 
பிறந்தது வட்டி !

கண்ணுக்கு இமை
காதலனுக்கு காதலி 
காவல் !

ஒரு கை தட்டினாலும் 
ஓசை வந்தது 
மேசை மீது தட்டியதால் !

உரைத்தார் காந்தியடிகள்
உழைக்காமல் உண்பது 
திருட்டு !

கடவுளை நம்பினோர் 
கைவிடப்பட்டார் 
யாத்திரை விபத்து !

கட்டி வா என்றால் 
வெட்டி வந்தான் 
காது கேளாதவன் !

காக்கை உட்கார 
பனம் பழம் விழுந்தது 
தங்கத்தின்  விலை குறைவு !

காற்றுக்கு சாயும் 
ஒடியாது 
நாணல் !

பூனையிடம் சிக்கிய கிளியாய் 
குடிகாரனிடம் 
மனைவி !

கேழ்வரகில் நெய் 
வடிகிறது என்கிறார் 
சாமியார் !

உலகில்
எங்கும்  இல்லை 
சைவ கொக்கு !

சனி பிணம் தனியே போகாது 
வெட்டியானுக்கு இலாபம்
கோழி !

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் 
சரி 
நெல் ?

நரம்புகள் உண்டு 
எலும்பு இல்லை 
நாக்கு !

வைரம்  அறுக்க வைரம்
அன்பைப் பெற செலுத்துக 
அன்பு !

பேச்சில் அன்பிருந்தால் 
உறவாகும் 
உலகம் ! 

தன்னம்பிக்கை இழக்க 
உயிர்த்தெழும் 
மூட நம்பிக்கை !

மிதிக்காமல் 
கொத்தாது
நல்ல பாப்ம்பு !

தீண்டாமல் 
எழுப்பாது  ஓசை 
மணி !     

கருத்துகள்