மரண தண்டனைக்கு எதிராகக் குரல் தரும் மனித நேய இமயம் நீதி அரசர் கிருஷ்ணய்யர் பற்றி இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை எழுதிய நூல்

மரண தண்டனைக்கு எதிராகக் குரல் தரும் மனித நேய இமயம் நீதி அரசர்
கிருஷ்ணய்யர் பற்றி இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் ப .திருமலை எழுதிய நூல் ...
உடலும் மனமும் ஒரு சேர வலிக்கும்போது ரயில் தண்டவாளம் போல அதற்கு இணையாக ஏதேனும் ஒரு மகிழ்வான நிகழ்வும் உடன் வருவதை என் வாழ்வில் பலமுறை கண்டிருக்கிறேன். அப்படி ஒரு இனிதான நிகழ்வு இப்போது.
இம்மாத (நவம்பர்) துவக்கத்தில் சோக்கோ மேலாண்மை அறங்காவலரும் வழக்கறிஞருமான நண்பர் மகபூப் பாட்சா அவர்களிடம் "நீதியரசர் கிருஷ்ணய்யரின் நூறாவது பிறந்தநாளையொட்டி புதியதரிசனம் இதழிற்கு ஐந்து பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதப் போகிறேன்" எனச் சொல்லி சில தகவல்களைக் கேட்டேன். பேசி முடித்த பின்னர் "கொஞ்சம் பெரிதாக கட்டுரை எழுதலாமே. அப்படி எழுதினால் வரும் 15-ம் தேதி கிருஷ்ணய்யர் பிறந்தநாளன்று புத்தகமாக வெளியிடலாம் என்றார். மனதுக்குள் ஒரு பக்கம் மகிழ்வு என்றாலும் இன்னொரு பக்கம் குறைந்த கால அவகாசமே இருக்கிறது சாத்தியமா? என யோசித்தேன். என் மைன்ட் வாய்ஸ் அவருக்குக் கேட்டிருக்கும் போலிருக்கிறது. "உங்களால் முடியும்" என்றார்.
வாழும் ஒரு வரலாற்று நாயகர் (வி.ஆர். கிருஷ்ணய்யர்) குறித்து எழுதும் போது அதிக சிரத்தையுடன் எழுதவேண்டும் என்பதை நான் உணர்ந்திருந்தேன். அதனால் கூடுதல் கவனத்தைப் பாய்ச்சினேன். புத்தகம் தயாரானது. எழுதிக்கொடுத்ததோடு சரி. அதனை வாசித்து திருத்தம் பார்த்து, அட்டை வடிமைத்து அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு அதீத அக்கறையுடன் செய்தவர் சோக்கோ பாட்சா அவர்கள். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி
"மனித நேயத்துக்கு வயது நூறு" என்ற தலைப்பிலான இந்த புத்தகம் வரும் 15-ம் தேதி (சனிக்கிழமை) எர்ணாகுளத்தில் ஒய்.எம்.சி.ஏ. இன்டர்நேஷனல் கெஸ்ட்ஹவுஸ் அரங்கில் வெளியாகிறது. வெளியீட்டு நிகழ்ச்சியில் நீதியரசர் சந்துரு, நீதியரசர் கிருபாகரன், நீதியரசர் செல்வம், மேனாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யரும் பேசவிருக்கிறார். மனித உரிமையின் காவல்தெய்வம் கிருஷ்ணய்யர் குறித்து நூல் எழுதியிருப்பதும் அவர் முன்பாகவே சிறப்பான நீதிபதிகள் வாயிலாக அது வெளியிடப்படுவதும் உள்ளபடியே எனக்கு பெரும் மகிழ்வைத் தருகிறது. பாட்சா போன்ற நண்பர்களின் நகர்த்தலால் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்

.பத்திரிகையாளர் ப .திருமலை

கருத்துகள்