நூலின் பெயர்:தெய்வத்தமிழ் ! நூலாசிரியர்:தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா ! தமிழ்த் துறைத் தலைவர்

நூலின் பெயர்:தெய்வத்தமிழ் !


நூலாசிரியர்:தமிழ்த் தேனீ முனைவர் இரா.மோகன் !

மதிப்புரை: பேராசிரியர்  முனைவர் ச.சந்திரா !
தமிழ்த் துறைத் தலைவர்  

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17.

பக்கம் 184. விலை ரூபாய் 100.பேச ;044 - 24342810 / 24310769

மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 



கோபுரவாயில்:

          ஆன்மீக நூல்கள் வாசிப்பு அருகிவரும் இந்நாளில் எவ்வயதினரும் ,எத்துறை சார்ந்தோரும் விரும்பிப் படிக்கும் வண்ணம் தெய்வத்தமிழ் என்னும் அருமை வாய்ந்த ஒருநூலை முனைவர் இரா.மோகன் அவர்கள் இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். சைவத்தின் அன்புநெறி,வைணவத்தின் சரணாகதி நெறி,இஸ்லாமியத்தின் அருள்நெறி,பௌத்தத்தின் கருணைநெறி என அனைத்து சித்தாந்தங்களும் வாசிக்கும் அனைவருக்கும் புரிபடும்விதமாக குரு- சிஷ்யன் உரையாடல்,பெரியோர்களின் வாய்மொழி,புகழடைந்தோரின் வாழ்வியல் நிகழ்வுகள் வழி மாணிக்கவாசகர்- திருவள்ளுவர் இருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு கண்ணதாசன் கம்பீரநடையிட, அவரது கரங்கோர்த்து ஆன்மீக உலா வருகின்றார் இரா.மோகன்.

வைரமா?வைடூரியமா?

          கபீர்தாசர் முதல் கண்ணதாசன் வரை,கலீல் ஜிப்ரான் முதல் ஹனீபா வரை,பரமஹம்சர் முதல் பாரதியார் வரை,சாக்ரடீஸ் முதல் ஓஷோ வரை,அரவிந்தர் முதல் ஆத்மாநாம் வரை என அக்காலம் முதல் இக்காலம் வரையுள்ள ஆன்மீகவாதிகள்  தத்துவஞானிகள் இரு புரவியாக உருமாற,கதையும் கவிதையும்  சக்கரங்களாக இருக்க ஜென் தத்துவத்தை அச்சாணியாகக்கொண்ட  இலக்கியத்தேரில் தமிழன்னையை அழகுற பவனிவரச்செய்கின்றார் இரா.மோகன்.பழமொழிகளோடு புதுமொழிகள்,அடைமொழிகளோடு பொன்மொழிகள்,கதைக்குள் கதை,கதைக்கு மறுகதை என்று சற்றே வித்தியாசமாக கதை பாதி-கவிதை மீதி என பக்கத்திற்குப்பக்கம் பக்திப்பரவசம் ததும்ப நூல் வாசிப்போர்க்கு எவ்வித  அலுப்போ சலிப்போ ஏற்படாத வகையில் தொடக்கம் முதல் முடிவு வரை கட்டுரைகள் ஒவ்வொன்றும் பட்டைதீட்டப்பட்ட வைரம்போல் ஜொலிக்கின்றன. கட்டுரை ஒவ்வொன்றின் இறுதியிலும் நூலாசிரியர், வாசிப்போர்க்கு விடும் வேண்டுகோள் தீபாவளி பலகாரம் உண்டபின் அன்னை அக்கறையுடன் ஊட்டும் லேகியம் போல உடலுக்கும் மனதிற்கும் இதம் தருகின்ற ஒன்றாக உள்ளது எனலாம்.

நீருற்றா?கோலார் சுரங்கமா?

              கத்திரிக்கோல் கதைக்கருவாகின்றது!பால்காரப்பெண் போகிறப்போக்கில் வாசிப்போர் மனதை வெண்மையாகிவிட்டுச் செல்கிறாள்!ஊசி கூட உள்மனதிற்குள் ஊடுருவி தன் பங்கிற்கு ஒரு செய்தி சொல்லிவிட்டுப்போகின்றது!எப்படி எடுத்துக்கூறினாலும் புரியவைக்க இயலாத முக்தி- ஸித்தி இவற்றை சலங்கை ஒலி நர்த்தனமாடி புரிய வைத்துவிடுகின்றது!இந்நூலில் 'உழைப்பாளி கடவுளாக மாறுவேடமிட்டு பக்கத்திற்குப்பக்கம் உலவிக்கொண்டிருக்கின்றார்!இடையிடையே சித்தர்கள் விருந்தாளிகள் போல் வந்துபோகின்றனர்!மரணம்கூட மங்கல வாசகங்களை அள்ளித்தெறிக்கின்றன!சிறுமியின் கையிலுள்ள சிவப்பு வண்ணப் பையிலிருந்து பெருந்தேவாலயம் எழுந்து விண்ணை முட்டுகின்றது!கவிஞரின் வார்த்தைகளுக்கு கடவுளே தன் கஜானாவைத் திறக்கின்றார்!அகப்பை கூட அறிவுரை கூறுகின்றது!வினாடி முள் கடிகாரத்திற்கு வெளியே வந்து ஓயாஉழைப்பின் உன்னதத்தை எடுத்துச் சொல்லிவிட்டுப் பின் தன் பணியைத் தொடர்கின்றது!இப்படியாக எத்தனை எத்தனையோ அதிவித்தியாசமானச் செய்திகள் இந்நூலை வாசிப்போர்க்கு கிட்டுகின்றன எனலாம்!

எழுதுகோலா?உளியா?

           நமக்கு நாமே நம்பிக்கை கொள்ள வேண்டும்;நம்மை நாமே ஆளவேண்டும்; "நான்" மறந்து "நாம்" ஆக  மாறல் வேண்டும்:பகைமை மறந்து பண்பு பாராட்டல் வேண்டும்;ஓய்வு மறுத்து உழைப்பு பேணல் வேண்டும்;அன்பெனும் கயிறு கொண்டு அகிலத்தை இணைக்க வேண்டும்;எதிர்மறை விடுத்து நேர்மறை எண்ணம் கொள்!-என்றெல்லாம் சொல்லவந்ததே தெய்வத்தமிழ் என்னும் நூல்!இதனை எழுதுகோலுக்கு பதிலாக ஆன்மிகம் என்னும் உளியைக் கரத்தில் ஏந்திக் கொண்டு இரா.மோகன் செதுக்கியிருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.இதுவரை காற்றோடு கலந்துவந்த கண்ணதாசனின் கவிதைவரிகள் பந்தியில் பரிமாறும் பாயசத்தில் தூவுகின்ற பூந்தியாய் கட்டுரைக்கு இனிமை சேர்க்கின்றன.மோசஸின் பத்துக்கட்டளைகள் கவியரசுவின் ஆறு கட்டளைகள் கேள்விப்பட்டிருக்கின்றோம்!இந்நூலில் இடம்பெற்ற நான்கு கட்டளைகள் இதோ!

           "மனதை அலைய விடாதீர்!
           வெகுளியை விட்டொழியுங்கள்!
           தான தருமங்கள் செய்யுங்கள்!
           சமநிலையில் இருங்கள்!"  - (கந்தரலஙகாரம்)

மனதில் பதிந்த கல்வெட்டு வரிகள்:

       "சொர்க்கத்திற்கு பாதை இருக்கிறது.ஆனால் அதில் மனிதர்கள்  யாரும் செல்வதில்லை. நரகத்திற்கு வாசலே இல்லை.ஆனால் அதில் மனிதர்கள் ஏறிக்குதிக்கின்றார்கள்!
மனமார....

      நூற்றுக்கணக்கான நூல்களை அலசி ஆராய்ந்து நூற்றைம்பதே பக்கங்களுக்குள்  வாசகர்க்கு ஓர் அரிய  ஆன்மீக விருந்தைப் படைத்திருக்கும் முனைவர் இரா.மோகன் அவர்களின் இலக்கியப்பயணம் திருக்கடவூரில் வீற்றிருக்கும் அபிராமி அம்பிகையின் தோடுகள் போல் பிரகாசிக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மதிப்புரையை நிறைவு செய்கின்றேன்."
  


.

கருத்துகள்