இதயச் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இதயச் சிறகுகள் !




நூல் ஆசிரியர் : கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அருள் வெளியீடு, 
jeganraja2005@rediffmail.com,
அலைபேசி : 77086 83188, விலை : ரூ. 150

*****
       இதயச் சிறகுகள், நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  எண்ணச் சிறகுகளை விரித்து கவிதை வடித்துள்ளார் அருள்தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்கள். நூலினை அவரது தந்தை திரு. அ. அருள்ராஜ் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.  தான் ஒரு அருள்தந்தை என்ற வட்டம் தாண்டி மனிதநேயத்தோடு சிந்தித்து மகாகவி பாரதியார் போல ரௌத்திரம் பழகி புதுக்கவிதை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

       ஆயர் ஜீடு பால்ராஜ் அவர்கள் ஆசியுரை பேரருட்திரு. ஜோமிக்ஸ், அருள்திரு. முனைவர் ம. அருள் அம்புரோசு, அருட்திரு. ம. சார்லஸ், பணி. செபஸ்தியான், சகோ. முனைவர் புஷ்ப ரஞ்சிதம், தமிழாசிரியை அ. மார்கிரேட் மேரி ஆகியோரின் வாழ்த்துரையும் நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்த்து உள்ளன.

       காதல் கவிதைகளை, கதையில் படித்தால் பாராட்டுவார்கள்.  திரைப்படத்தில் கைதட்டி ரசிப்பார்கள். ஆனால் சொந்த வீட்டில் கால் அரும்பினால் எதிர்ப்பார்கள்.  இந்த மனநிலையை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.

       நிழலில் காதலுக்குக் கைதட்டி
       நிஜத்தில் காதலர்களைக் கைது செய்தால்
       எந்தன் உடலில் கவிதை வெப்பமடிக்கும்
       கல் கடவுளருக்கு படையல் அமைத்து
       கடவுள் உறையும் மனிதருக்கு 
       பாடை அமைத்தால்
       என்னுள் 
       கவிதை புயலடிக்கும்...
       கோவில் விழாவில் 
       கோஷ்டி மோதல்
       உருண்டன தலைகள் 
       சாமிச்சிலை கடத்தல்
       கோவிலுக்குக் காவல் 
       இப்படிச் செய்திகளைப் பார்த்தால்
       எந்தன் கவிதை 
       நாத்திகப்படும்.
       கேட்டேன், கேட்டேன் என்று முடியும் நீள்கவிதை ஒன்று மிக நன்று. திரைப்படப் பாடலை நினைவூட்டும் விதமாக உள்ளது. அதிலிருந்து பதச்சோறாக சில வரிகள்.

       பிறருக்கு உழைக்கும் வியர்வை கேட்டேன்
       பிறர் பாராட்டும் சாவைக் கேட்டேன்
       தமிழ் பேசும் நா கேட்டேன்
       தாய்ப்பால் அருந்தும் குழந்தை கேட்டேன்
       சாதிஅற்ற கட்சி கேட்டேன்
       விதியை வெல்லும் மதியைக் கேட்டேன்
       உள்ளம் உரசும் காதல் கேட்டேன்
       கள்ளம் இல்லா வாழ்வு கேட்டேன்.

       மனிதாபிமானமுள்ளவர்களால் ஈழத்தில் நடந்த கொடூரம் பற்றி கவிதை பாடாமல் இருக்க முடியாது. அருள் தந்தை கவிஞர் அ. ஜெகன் அவர்களும் ஈழத்து சோகத்தை கவிதையில் வடித்துள்ளார்.  

       என்ன செய்யப் போகிறாய்? புத்தாண்டே?
       குறவுயிரும் குத்துயிருமா ஈழத்தில்
       குடிகுடியா எம்பொறுப்பு சாகையில்
       இழுத்துக்கட்டி சண்டியரா நிக்கிறவங்க
       இதயத்தை கொஞ்சந்தான் திறப்பியா?
       சிங்கள் இராணுவ கொலைவெறிக்கு
       சின்ன சின்ன வழியில் உதவிசெஞ்சு
       தமிழ்உறவின் தொப்புள்கொடி அறுப்பதற்கு
       தமிழ்நாட்டில் கத்திக்குச் சாணை பிடிப்பியா?

       கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதிகளை உருவாக்கி சண்டைகளுக்கு வித்திட்டு வரும் மூலகாரணியை சாடும் விதமாக வடித்த கவிதை ஒன்று.

       வெண்ணூல் தரித்த 
       வியாபாரிகளே
       மனிதர்களுக்குள் ஏனடா வர்ணங்கள்? 
       வர்ணங்களுக்குள்
       ஏனடா சாதிகள்? 
       மண்ணுக்குள் புதைந்தாலும்
       நெருப்புக்கள் எரித்தாலும் 
       மிஞ்சுவதென்ன
       சாதியா! சாம்பலா!

       அருள்தந்தையாக இருந்த போதும் மதங்கள் கடந்து உரக்க சிந்தித்து மானுட நேயத்துடன் கேள்விகள் பல கேட்டு கவிதைகள் வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.

       என்னடா நியாயம்? வெளுத்துப் போச்சு சாயம்!
       நந்தனை கொளுத்தி 
       வேகம் என்றவர்களே
       இன்னும் கொளுத்த 
       நெருப்போடு நிற்பவர்களே
       பாதிக்கப்பட்டவன் 
       வெடித்து எழுந்தால் – உன்
       அக்கினி குண்டங்களென்ன 
       எரிமலைகளே கைகட்டும்!.

       எதிர்பாராது இருந்து நேரத்தில் வந்த சுனாமி சுருட்டி போட்டது.  பலரின் வாழ்வை முடித்து வைத்தது. சிலரின் வாழ்வை சேதப்படுத்தியது.  ஒரு சிலரை சோகப்படுத்தியது.  சுனாமி பற்றியும் கவிதை வடித்துள்ளார்.

       சுனாமி இயற்கை சீற்றமா? செயற்கை மாற்றமா?

       கடவுளே 
       உனக்கு கண்ணில்லையா? 
       கடலே
       உனக்கேன் அகோரப்பசி? 
       அலையே 
       நீயேன்
       பிணதின்னியானாய்? 
       அன்னை பூமியே 
       பெற்றெடுத்த
       வயிற்றுக்குள் 
       வாரியெடுத்துக் கொண்டதேன்?

       ஊடகங்களின் பொய்யான விளம்பரங்களாலும், திரைப்படங்களின் கதை அமைப்பின் காரணமாக தொலைக்காட்சி தொடர்கதையமைப்பின் காரணமாக ஒருவனுக்க்கு ஒருத்தி என்ற உயர்ந்த நமது தமிழ்ப்பண்பாடு நாளுக்கு நாள் சிதைந்து வருவது கண்டு வருத்தப்பட்டு வடித்த கவிதை நன்று.

       கறைபடும் கலாச்சாரம்!

       கல்லூரியென்றால் பகடிவதை வேண்டும்
       பேருந்தென்றால் படிக்கட்டில் தொங்க வேண்டும்
       விரல்களிலிருந்து சிகரெட் பிடிக்க
       கொள்கையாகக் கொண்டுள்ள இளையோரிடத்தில்
       என்ன கலாச்சாரம்?

       நூலாசிரியர் கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்கள், அவருடைய கவிதை எந்த வகை கவிதை என்பதை, அவரது மொழியிலேயே காண்போம்.

       என் கவிகள் 
       அறியாமை இருளகற்ற
       உரசிப் போடும் 
       தீக்குச்சிகள்!
       தோல்வி கண்டு துவள் வேண்டாம்.  துணிவுடன் திரும்பவும் முயல வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று.

       தோல்விகள் 
       சிதைக்கும் பழிகளல்ல 
       செதுக்கும் உளிகள் !

       தன்னம்பிக்கை விதைக்கும் விதமான கவிதைகளும் நூலில் நிரம்ப உள்ளன. அவற்றில் ஒன்று காண்க!

       விழிப்பு !

       விருட்சங்கள் உறங்கும் 
       விதைகள் நாம்
       விழித்துக் கொண்டால் 
       வெற்றி விருதுகள்
       நம்மைத் தாங்கும்.

       கவிதையில் கணக்கு ஒன்று சொல்கிறார். இவர் சொல்லும் வாழ்க்கைக் கணக்கை கடைபிடித்தால் வாழ்க்கை இனிக்கும்.

       வாழ்க்கைக் கணக்கில் !

       நட்பைக் கூட்டி
       மகிழ்ச்சியைப் பெருக்கி 
       அன்பை வகுத்து
       கவலையைக் கழித்தால் 
       வாழ்க்கை வாழப்படும்.

       வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல உயரம் செல்ல வெற்றிப்-படிக்கட்டுகள் எவை என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார்.

       வெற்றிப்படிகள்!
       துன்பங்களிலும் 
       துவளாமலிருக்கும் 
       துணிவு
       தோல்வியிலும் 
       தோற்காமலிருக்கும் 
       தோழமை
       முள்ளின் 
       முனையிலும் 
       முன்னேறும் முனைப்பு
       இதயச் சிறகுகள் கவிதை நூல் படிக்கும் வாசகர்களுக்கும் கற்பனைச் சிறகுகள் முளைக்கும் கவிதைகள் வடிப்பார்கள்.நூல் ஆசிரியர்  கவிஞர் அருள்தந்தை அ. ஜெகன் அவர்களுக்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .இந்த நூலை புனித  மரியன்னை மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் நாட்டு நலத் திட்ட முகாமில் சிறப்புரையாற்றிய போது பரிசாக வழங்கிய இனிய நண்பர் முனைவர் ஞா. சந்திரன் அவர்களுக்கு நன்றி.

-- 

.

கருத்துகள்

கருத்துரையிடுக