நீங்காத நினைவுகள் ! நூல் ஆசிரியர் :எழுத்தாளர் திரு. ஐ.தி. சம்பந்தன் !இலண்டன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
நீங்காத நினைவுகள் !
நூல் ஆசிரியர் :எழுத்தாளர் திரு. ஐ.தி. சம்பந்தன் !இலண்டன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!
சுடரொளி வெளியீட்டுக் கழகம், CHUDEROLI PUBLICATION SOCIETY,
15, RUTLAND ROAD, LONDON E 7 8PQ TEL 0208 552 6599, itsampanthan@hotmail.com
*****
இலங்கையில் பிறந்து வாழ்ந்து புலம் பெயர்ந்து இலண்டனில் வாழும் இனியவர் திரு. ஐ.தி. சம்பந்தன் அவர்கள். இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் இரண்டு கவிதைப் போட்டிகள் நடத்தியது. இரண்டிலும் கலந்து கொண்டு பரிசு பெற்றேன். அதன் பின்னர் நூலாசிரியர் ஐ.தி. சம்பந்தன், அவரது உற்ற நண்பர் அய்யா பொன். பாலசுந்தரம் இருவரும் எனக்கும் நண்பரானார்கள். நூலாசிரியர் திரு. ஐ.தி. சம்பந்தன் அவர்களின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது, சென்று வந்தேன், அன்பான மனிதர்.
அவர் பிறந்தது முதல் 75 ஆண்டு கால அனுபவத்தை சுயசரிதை போன்று இல்லாமல் முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூர்ந்து மலரும் நினைவுகளை நீங்காத நினைவுகள் என்ற பெயரில் நூலாக்கி உள்ளார்கள். இந்த நூல் வெளியீட்டு விழா இலண்டனிலும், அறிமுக விழா இலங்கையிலும் நடைபெற்றது. அழைப்பிதழ்கள், மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தார்கள். விழா சிறக்க வாழ்த்து அனுப்பினேன். வெளியிட்டவுடன் இந்தியா வந்த இனியவர் திரு. பொன். பாலசுந்தரம் அவர்கள் மூலம் நூலை அனுப்பி வைத்து இருந்தார்.
நூலாசிரியர் திரு. ஐ.தி. சம்பந்தன் அவர்கள் இலங்கையில் நடந்த இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட துன்பத்தை, போராட்டத்தை, சந்தித்த சோகத்தை, அனுபவத்தை, சந்தித்த மனிதர்களை மிகத் துல்லியமாக பெயர்களுடன் பதிவு செய்துள்ளார். நாட்குறிப்பு எழுதிடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். மிக நுட்பமாக பல்லாண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டுவது போல எழுதி உள்ளார்.
இந்த நூலில் உண்மையற்ற செய்தி எதுவுமில்லை என்று உறுதி கூறலாம். உண்மை வாக்குமூலமாக நூலை நல்லநடையில் எழுதி உள்ளார். இலங்கை பற்றி வெளிவந்த நூல்களில் இந்நூல் சிறப்பான நூல் என்று சொல்லுமளவிற்கு பல அரிய தகவல்கள் நூலில் உள்ளன.
ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாற்றுச் சுவடுகளை நூலில் பதிவு செய்துள்ளார். ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தாமல் அமைதியாக, அமைதியான வழியில் போராடி வரும் போராளி.
ஆயுதம் ஏந்தாமல், பேனாவை ஏந்தி சுடரொளி வெளியீட்டுக் கழகம் தொடங்கி உலகளாவிய கவிதைப் போட்டிகள் இரண்டு முறை நடத்தி, சுடரொளி என்ற இதழ் நடத்தி தன்னால் முடிந்த பங்களிப்பை இலக்கியத்தின் மூலம் ஈழத்தமிழருக்காக செய்து வந்ததை, செய்து வருவதை தம்பட்டம் இல்லாமல் மிக அடக்கமாக எழுதி உள்ளார்.
தந்தை செல்வா தொடங்கி சமீபத்தில் நிகழ்வு வரை நூலில் எழுதி உள்ளார்.இலங்கையில் சொந்தமாக அச்சகம் நடத்தியவர். இவரது அச்சகத்தை இவர் இலங்கையில் இல்லாத போது இவரது மனைவியும் நடத்தி இருக்கிறார். பின்னர் நண்பர் ஒருவருக்கு குறைந்த விலையில் அச்சகத்தை விற்பனை செய்துள்ளார். வாங்கிய நண்பர் அச்சகத்தை பெரிய அளவில் வளர்த்தார். இன்றளவும் இவரோடு குடும்ப நண்பர்களாக பழகி வருகின்றனர். இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் உள்ளன.
நூலில் இருந்து சில துளிகள்.
தீவிர முருக பக்தனான ஐயாத்துரை, மாரிமுத்து என்பவருக்கு இரண்டாவது மகனாக 1935ஆம் ஆண்டு யூன் 26ஆம் திகதி நான் பிறந்தேன். பிறக்கும் குழந்தைகளுக்கு இரண்டு பெயர்களைச் சூட்டும் இராமுடையார் குடும்பத்தினர் வழக்கத்தின்படி ஐயாத்துரை சோமாஸ் கந்தமூர்த்தி என, என் பெயர் பிறப்பு சான்றிதழில் பதியப்பட, ஐயாத்துரை திருஞானசம்பந்தன் என்ற பெயர் பாடசாலைப் பதிவு பெயராயிற்று. காலப்போக்கில் ஐயாத்துரை திருஞானசம்பந்தன் என்பதன் சுருக்கமாக ஐ.தி. சம்பந்தன் என்ற பெயரிலேயே பலருக்கும் அறிமுகமானேன்.
ஐ.தி. சம்பந்தன் என்ற பெயர் விளக்கம் தொடங்கி பொன்மனம் படைத்த அவரது நண்பரும் எனது நண்பருமான அய்யா பொன். பாலசுந்தரம் அவர்கள் பற்றியும் எழுதி உள்ளார். அதில் சில துளிகள் :
" பொன். பாலாவின் சில அரிய குணாதிசயங்கள் தான் பத்திரிகை உலகில் அவர் முன்னணியில் இருக்க உதவியதை நான் அறிவேன். அவரின் சுறுசுறுப்பு, கண்ணியம், கடமை தவறாமை, பொறுப்பைப் பேணல், நேரத்தைக் கடைப்பிடிப்பது போன்றவைகளில் அவருக்கு நிகர் அவரே தான்."
இதில் ஒரு சொல் கூட மிகையன்று. திரு. பொன். பாலா அவர்களுடன் சில நாட்கள் இருந்து இருக்கிறேன். அவர் திட்டமிட்டு செயல்படுபவர். நாளை, வெளியூர் செல்ல வேண்டுமென்றால், இன்றே, அனைத்தையும் திட்டமிட்டு எடுத்து வைத்து விடுவார். குறித்த நேரத்திற்கு முன்பாகவே அங்கு இருக்க வேண்டும் என்பார். நேரத்தை மதிக்கும் நுட்பம் கண்டு வியந்து இருக்கிறேன். இந்த நூலில் அவர் பற்றி எழுதியதை படித்து உணர்ந்து ரசித்தேன்.
சென்னையில் நடந்த சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற சென்று இருந்த போது நூலாசிரியர் ஐ.தி. சம்பந்தன், திரு. பொன்.பாலா, மதுரையிலிருந்து வந்து இருந்த தமிழ்த்தேனீ இரா. மோகன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்பட பலரும் கலந்து கொண்ட நிகழ்வு நூலில் எழுதி மலரும் நினைவுகளை மலர்வித்து விட்டார்.
நூலாசிரியர் ஐ.தி. சம்பந்தன் அவர்கள் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக, தன்னால் முடிந்த பங்களிப்பை செய்தவர். பல இன்னல்களை சந்தித்தவர். இவர் போல பலர், உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களின் சோக வாழ்க்கையை எடுத்து இயம்பும் நூல் இது.
முதல் உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி 2000ஆம் ஆண்டு நடந்தது. ‘வருக தமிழர் பொற்காலம்’ என்ற தலைப்பு. 2-வது உலகத் தமிழ்க் கவிதைப் போட்டி ‘புதுயுகத் தமிழர்கள்’ என்ற தலைப்பில் நடந்தது. போட்டிகள் பற்றிய விரிவான செய்திகள் நூலில் உள்ளன. கவிதைப் போட்டிகளுக்கு உரிய வைத்திய கலாநிதி நவரத்தினத்திற்கு நன்றி பதிவு செய்துள்ளார்.
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள், இலண்டன் வந்த தகவல், அவரின் தமிழ்ப்பற்று பற்றி விரிவாக நூலில் எழுதி உள்ளார்.
இலண்டன் புதினம் ஆசிரியர் இராஜகோபால், நடன ஆசிரியர் ராகினி இராஜகோபால் இணையர் பற் றியும் நூலில் எழுதி உள்ளார். அவர்கள் மதுரை வந்த போது சந்திந்து இருக்கிறேன். எனது படைப்புகளை புதினம் இதழில் பிரசுரம் செய்தார்கள். இப்படி நூல் முழுவதும் பழகிய நண்பர்கள் பற்றியே எழுதி இருந்ததால் மிக ஆர்வமாக படித்தேன். கனடாவில் கறுப்பு யூலை 1983 நூல் வெளியீடு பற்றிய தகவல் உள்ளது. ஜூன், ஜூலை என்பதை யூன், யூலை என்று எழுதி உள்ளது நூலாசிரியரின் தமிழ்ப்பற்றுக்கு எடுத்துக்காட்டாகும்.
முக்கியமானவர்களை சந்தித்த வண்ணப்புகைப்படங்கள் நூலில் இறுதியில் உள்ளது. அதில் நூலாசிரியருடன் நான் இருக்கும் படமும் உள்ளது. படித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது. ஈழத்தமிழர்களின் இன்னல் கூறும் ஆவண நூல் இது. நூலாசிரியர் ஐ.தி. சம்பந்தன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூலை மிகச் சிறப்பாக பதிப்பித்த லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகத்திற்கும் ,கடந்து வந்த பாதையை ஒளிவு மறைவு இன்றி அப்படியே பதிவு செய்த நூல் ஆசிரியர் எழுத்தாளர் ஐ.தி .சம்பந்தன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .
ஈழத்தமிழர்கள் இலங்கையில் சந்தித்த வேதனைகளை, சோதனைகளை ,தாக்குதல்களை மிக விரிவாக எடுத்து இயம்பும் நூல் .
நூலாசிரியர் ஐ.தி. சம்பந்தன் அவர்கள் ,பொன் மனம் படைத்த பொன் பால சுந்தரம் போன்று பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து பிறந்த மண்ணைப் பிரிந்த வலியோடு ,வேதனையோடு வாழ்ந்து வருகின்றனர். ஐ.நா. மன்றம் தலையிட்டு தனித்தமிழ் ஈழம் உருவாக்க முன் வர வேண்டும். தெற்கு சூடான் போல தனி ஈழமும் மலர வேண்டும் . புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஈழம் திரும்பி சுதந்திரமாக வாழ வேண்டும் .இப்படி பல சிந்தனைகளை உருவாக்கியது இந்த நூல் .
கருத்துகள்
கருத்துரையிடுக