‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.

‘புத்தகம் போற்றுதும்’



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : கவிமுரசு   சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் 
( ஒய்வு ) திருநகர், மதுரை.

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், 
சென்னை-600 017.
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150

போன்: 044 - 24342810/ 24310769. E-mail : vanathlpathippakam@gmail.com
*****
‘புத்தகம் போற்றுதும்’ என்ற தலைப்பே வான்நிலவை வெண்மேகங்கள் தழுவிச் செல்வது போலவும், கடலலைகள் கரையினை தொட்டுத் தழுவிச் செல்வது போலவும், இது போன்ற உணர்வுகள் தானாகவே, தாமாகவே நம்மைத் தழுவிக் கொள்வது என்பது நூலாசிரியரின் தனித்திறமைக்கு நல்லதொரு சான்று எனலாம்.
இயற்கையாகவே கவிஞர்களுக்கும், பாரதியாருக்கும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உள்ளது என்றால், அது கவிஞர்களுக்கும் பெருமையல்லவா... அந்தப் பெருமை நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவிக்கும் உண்டு. பாரதியார் பணிபுரிந்த பள்ளியில் படித்ததால் .. அவர் விட்டப் பணியை, கவிதை மூலம் கவிஞர் இரா. இரவி அவர்கள் நிறைவு செய்கிறார்.
இவருடன நான் பழகிய காலம் தொட்டு, நான் உளமார இவரையும், இவர் கவிதைகளையும் நேசித்ததுண்டு.  இவரை நான் நேசித்ததை விட, இவர் கவிதைகளை அதிகமாக நேசித்தது உண்டு.
இவரின் துளிப்பாக்களில் சுருங்கச் சொல்லி, விளங்க வைக்கும் திறன் பாராட்டுக்குரியது.  ஒன்றும் தெரியாத, புரியாத பாமரரின் உதடுகள் கூட, இவரது துளிப்பாக்களை உச்சரித்தது கண்டு, மெய்சிலிர்த்துப் போனேன்.

இவரது கூரிய பேனா முனைகள் மட்டும், சீரிய அறிவாற்றல் திறனும், சிலிர்க்கத் தான் வைத்திடும். அத்தனைப் பேராற்றல் பெற்றவர் ஹைக்கூ கவிஞர் இரவி அவர்கள்.

ஒரு நூலை தொகுத்து வழங்குவது அவ்வளவு எளிதான பணியல்ல ; பல்வேறு மலர்களை நாரோடு ஒருங்கிணைத்து மலராக்கி, மணம் பெறச் செய்வது என்பது கடினமான பணி ஆகும்.  இப்பணியில் வெற்றிமாலை சூடியிருக்கிறார் என்றால், இவரின் திறமைக்கு ‘சபாஷ்’ சொல்லித் தானாக வேண்டும்.

முதல் நூலான இவரது ‘கவிதைச் சாரல்’ – என் மூலம் வெளியிட்டது எனக்குப் பெருமை.  ஏனெனில், சாரலாக நின்று விடாமல், கவிமழையாகக் கொட்டி, தனக்கென்று தனி இடம் பிடித்த இவரின் புகழ் மென்மேலும் பரவ, எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

ஐயா, முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. அவர்கள்  குழந்தைகளுக்குச் சொத்து சேர்த்து வைப்பதை விட அன்பு செலுத்துவதே முக்கியம் என்று கூறுவதை பதிவு செய்துள்ளார்.  நிகழ்காலத்திற்கு ஏற்ற கால அறிவுரையை கூறியிருப்படது மெய்சிலிர்க்க வைக்கிறது.

முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்கள் “கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்” என்னும் நூலில், அருமையான கருத்தை, தனது வெளிப்பாடாக முத்திரை பதித்திருப்பது இக்காலத்திற்குப் பொருத்தமான ஒன்று.

“தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்மாணிக்கும் சமுதாயச் சிற்பிகள் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ‘சிந்தனைப் பூக்கள் காணிக்கை’ என்று கூறிய வைர வரிகள், ஆசிரியரின் பெருமையை மெருகூட்டச் செய்கின்றன.

மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை – எனும் நூலை வடித்த, மதிப்பிற்குரிய பேராசிரியர் அருணன் அவர்கள், மூட நம்பிக்கைக் கொண்ட அவர்களுக்கெல்லாம், ஆரூடத்தின் பித்தலாட்டத்தை அறிவியல் கருத்துக்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ள ஆசிரியர், பெரியாரின் பகுத்தறிவைப் பரப்பும் நூல், மூட நம்பிக்கையை ஒழிக்கும் நூல், தன் வெளிப்பாட்டை வெளிப்படையாகக் கூறிய பேரா. அருணன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தலாம்.

‘தமிழ்த் தேனீ’ – பேரா. இரா. மோகன் அவர்கள் எழுத்து, எப்போதும் எனக்குப் பிடித்தவை. அவர் எழுத்துக்கள் எல்லாம், “தேனிற் தொட்டப் பலா” – வானில் உலா வரும் நிலா தான்”.  அத்துணைச் சுவை. இவர் வரிகள் எப்போதும் கண்விழிகள் அசையாது இவரின் மொழிகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கும்.

இருபது கவிஞர்களின் கவிமாலைகளைத் தொடுத்து மணம் பெறச் செய்து, மனமும் மகிழச் செய்த, பேரா. இரா. மோகன் அவர்களைப் பாராட்டி, வாழ்த்தலாம்.

எழுத்து வேந்தர் ‘மனம் ஒரு மர்மதேசம்’. இவர் எழுத்தில் மட்டுமல்ல மர்ம தேசம், இவர் எல்லாரிதயத்திலும் இந்திரலோக ராஜாவாக பவனி வந்து கொண்டிருக்கிறார்.  இவரிடம் எனக்குப் பிடித்த ஒன்று எளிமை, இல்லத்தின் விருந்தோம்பல் தன்மை. என் நூலை வெளியிட்டு அழகு பார்த்தப் பண்பாளர்.  நல்ல அன்பாளர்.  இவர் நூலில் இவர் கூறிய வைர வரிகள், என்னிதயத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டது.

“நீண்ட நாள் கிடைக்காதது, முயற்சி எடுத்துக் கிடைப்பது என்பது உள் மரணம் வரை உன்னிடம் இருக்கும்.  முயற்சி செய்” என்று அவர் கூறியது, முற்றிலும் உண்மை.

மர்ம தேசத்தின் இராஜாவை பாராட்டி வாழ்த்தலாம்.
மு.வரதராசன் என் போன்றோருக்கும், இளையதலைமுறையினருக்கும் மீண்டும் மு.வ.-வைக் காண வைத்த திரு. பேரா. பொன் சௌரிராஜன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இன்றைய காலத்தில் நன்றியும், கருனணயும், கருகிப் போன நிலையில், சரியான நேரத்தில் பேரா. அவர்கள் மு.வ.-வின் கருத்துக்களைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

மனித நேயத்தை வல்யுறுத்தி, மனிதனை நெறிப்படுத்தும் பணியினை இலக்கியத்தால் செய்த சகலகலா வல்லவர் மு.வ. என்பதைச் சுட்டிக் காட்டிய பாங்கு மிக அருமை.

இளையதலைமுறையினருக்கு நல்ல நேரத்தில் நல்வித்தை, விதைத்ததிலிருந்து, எதிர்காலம் பசுமையாக, வளமாக அமையும் என்பதையும் வித்திட்ட பேரா. பொன் சௌரிராசன் அவர்களை மீண்டும் வாழ்த்தலாம்.

‘தமிழ்ச்சுடர்’ முனைவர் நிர்மலா மோகன் அவர்கள் உண்மையிலேயே ‘தமிழ்ச்சுடர்’ தான்.  அதற்குச் சான்று ‘சங்கச் சான்றோர் ஆளுமைத்திறன்’ – நூலில் பதிவு செய்து இருப்பது தான்.  அவரின் பேனா முனைகள் பதிவு செய்த ஒவ்வொரு எழுத்தும், இவரின் எழுத்தாற்றல் ஆளுமைத் திறனைப் பளிச்சிடச் செய்கின்றன.

சங்கத்தமிழ் கனியை, அற்புதக் கனிச் சாறாக பிழிந்து வந்திருப்பதை வெகுவாகப் பாராட்டலாம்.  எளிய பாமர மக்களும், சங்க இலக்கியத்தைப் புரியும் வண்ணம் தன் பேனாமுனையில் பதிவு செய்துள்ளார்.

மலரிலிருந்து தேன் பெறுதல் போல, சங்கத்தமிழ் நூல்கள் எனும் மலர்களிலிருந்து தேன் எடுத்து வழங்கி உள்ளார்.

தட்டிக் கேட்கும் உரிமை கவிஞர்களுக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்களுக்கும், பேனாமுனைக்கும் உண்டு என்பதை உறுதிப்படுத்திக் காட்டியுள்ளார்.

தமிழர்களின் பெருமையை மிக அருமையாக பறைசாற்றி, தமிழிற்காக முரசு கொட்டி உள்ளார்.

முனைவர் அவர்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுதல்களுடன் கூடிய நல்வாழ்த்துக்கள்.

வண்ணமாலைகளை, தன் எண்ணப் பூக்களாக தொகுத்து, தொடுத்துத் தந்த கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி உரித்தாகுக.

சூரியன், பகலவன், ஆதவன் தானே இரவி. நிலைத்து நிற்கும் ஆதவனைப் போல, இரவியை மீண்டும் வாழ்த்துகிறேன்.


.

கருத்துகள்