தத்துபித்துவம் ! நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தத்துபித்துவம் !
நூல் ஆசிரியர் : ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

விழிகள் பதிப்பகம், 8/எம்/39, 7ஆம் குறுக்குத் தெரு, !திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை –
 600 041.  94426 51520  விலை : ரூ. 60
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
       ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் அண்ணன் திரு. தங்கவேல் அவர்கள் சகலகலா வல்லவர்.குடும்பத்திற்காக திருமணம் புரியாமல் வாழ்ந்தவர்.  அவரது மரணம் தந்த வலியின் காரணமாக வடித்த நூல் இது.  தத்துபித்துவம் நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது.  இதன் விளக்கம், அவரது மொழியிலேயே காண்போம்.

       ‘’இந்நூலில் தத்துவம் போலச் சில உண்மைகள் உளவாகலாம்.  அவ்வாறே பித்துற்ற தன்மையில் பிறந்த காரணத்தால் சில பித்துவங்கள் போல உளவாகலாம்.  எனவே தத்துபித்துவம் எனப் பெயரிட்டுள்ளேன்”.

       ஒவ்வொரு கவிதையும் நான்கு வரிகளில் வெண்பா போல இருந்தாலும் வெண்பா இல்லை. ஹைக்கூவும் இல்லை.  வாழ்க்கை தத்துவங்கள் சொல்லும் புதுப்பா இது.  அரிய, பெரிய கருத்துக்களை நான்கே வரிகளில் உணர்த்திடும் உன்னத நூல்.  விழிகள் பதிப்பகத்தின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பாராட்டுக்கள்.

       புலம் பெயர்ந்த, வலி மிகுந்த வாழ்க்கையிலும், தமிழை நேசிக்கும், வாசிக்கும், சுவாசிக்கும் புலம் பெயர்ந்த தமிழன் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் அணிந்துரையில் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை நேசிப்பை, 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அன்பை குறிப்பிட்டுள்ளார்.

       நம்மில் பலர் கடந்த கால கசப்புகளை, கவலைகளை எண்ணி எண்ணி நிகழ்காலத்தை வீணடித்து வருகிறோம்.  அவர்களுக்கான கவிதை ஒன்று மிக நன்று. 

       புதன்கிழமை மனத்திற்குள் 
 புதன் மட்டும் நிறைந்திருக்கும்
       செவ்வாயின் நினைவு வந்து 
 சிக்கல்கள் நிரப்பாது.
       இயந்திரமயமான உலகில் சில மனிதர்கள் இயந்திரமாகவே மாறிவிட்டனர்.  அன்பு செலுத்த நேரமின்றி, இயற்கையை ரசித்திட நேரமின்றி, ஓடி ஓடி பணம் சேர்த்து, மனச்சோர்வு அடைந்து, மருத்துவரை நாடி வருகின்றனர்.  அவர்களுக்கான கவிதை இதோ!

       பூ நுகர மறந்தவனே 
 புலம்புவதால் என்ன பயன்?
       ஏன் வந்த பகல் தொலைத்தாய்? 
 இருள் அழகை தொடர்கின்றாய்?

       சிலர் என்னிடம் அதில் குறை, இதில் குறை என்று குறைபட்டுக் கொண்டே தாழ்வு மனப்பான்மையுடன், வாழ்க்கையை ரசித்து வாழாமல் புலம்பி வாழ்கின்றனர்.  அவர்களுக்கான அறிவுரை கூறும் கவிதை.

       குறையெல்லாம் குறையல்ல 
 குறைவில் தான் வாழ்வியக்கம்
       நிறை வளரும் பாத்திகளைக் 
 குறைவென்றா நினைக்கின்றாய்?

       தன்னை விட வலியவர்களிடம் யாரும் வீரம் காட்டுவதில்லை.  எளியவர்களிடமே வீரம் காட்டி வீர வசனம் பேசுவார்கள்.  மனிதாபிமானம் வேண்டும் என்று அறிவுறுத்தும் கவிதை. 
       வலியுடன் வாழ்வென்றால் 
 வாழ்ந்திடுவாய் வாழ்த்திடுவோம்
       மெலிந்தவர்கள் தலை மேலே 
 வெற்றித் தேர் ஓட்டாதே!

       சிலர், நான் அவர் போல ஆக வேண்டும், இவர் போல ஆக வேண்டும் என்றே முனைந்து, தனது சுயம் இழந்து, வாடுவதைக் காண்கின்றோம்.  அவர்களுக்கான கவிதை.

       எவரைப் போல் வாழ்வதென 
 ஏனென்ணிக் கலங்குகிறாய்?
       அவரவரும் அவரவராய் 
 வாழ்ந்தாலே அதுபோதும்.

       இயல்பாக இரு, நீ நீயாக இரு என்று வாழ்வியல் கருத்துக்களை, சித்தர்கள் போல சிந்தித்து கவிதை வடித்துள்ளார் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.  எண்பது வயதைத் தொட்டு விட்ட போதும் ஓய்வின்றி படைத்து வருகிறார்.  தமிழ் கூறும் நல்உலகிற்கு இலக்கியத்தை ஈந்து வருகிறார் ஓய்வறியா படைப்பாளி.

       கேள்விகள் கேட்டு, விடை சிந்திக்க வைத்து, நுட்பம் உணர்த்துவது ஒரு வகை.  அவ்வகையிலான கவிதைகள் நூலில் சில உள்ளன.  அவற்றில் பதச்சோறாக ஒன்று.

       நதியுறக்கம் மந்தமென்றால் 
 நாம் சாட்டை எடுப்போமா?
       விதையுறக்கம் கலைப்பதற்கு 
 வெந்நீரை விடுவோமா?
       ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால், அக்குழந்தையிடம் சில பெற்றோர்கள் கடுமையாக நடந்து கொண்டு தண்டிப்பதைக் காண்கிறோம்.  அவர்களுக்கான வரி தான் இது, ‘விதையுறக்கம் கலைப்பதற்கு வெந்நீரை விடுவோமா? சிலர் கடுஞ்சொல் என்ற வெந்நீரை குழந்தை என்ற விதையின் மீது ஊற்றி விடுகின்றனர்.  பாராட்டு என்ற நந்நீரே விதையினை வளர்க்கும் என்பதை கடிந்திடும் பெற்றோர்கள் உணர் வேண்டும்.

       சிறு துளி பெரு வெள்ளம் என்பதை அறிந்து இருக்கிறோம்.  ஆனால் இவர் கடைசித் துளியே குடம்பால் ஆகும் என்று வித்தியாசமாக உணர்த்துகின்றார், பாருங்கள்.  குடத்துப்பாலையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

       ஒரு குடம் பால் நிரம்ப இன்னும் 
/ ஒரு துளி தான் தேவையெனில்
       ஒரு துளியாய்க் காத்திருப்பாய் 
/ ஒரு குடம் பால் நீ ஆவாய்!

       வாழ்க்கையை செம்மையாக வாழ் ;  வாழ்வில் பிழை நேர்ந்தால் திருத்திக் கொள் ;  எல்லாவற்றிற்கும் நீயே பொறுப்பு ; தீதும் நன்றும் பிறர் தர வாரா ;  உனக்கு நீயே நீதிபதி ; வாழ்வாங்கு வாழ நீ பழகு இப்படி பல கருத்துக்களை வலியுறுத்தும் வண்ணம் குறியீடாக சொற்கள் உள்ளன.

       இருப்பதுவும் இயங்குவதும் 
 மட்டுமில்லை! இவையிரண்டில்
       உருவாகும் பிழையும் நீ 
 உருவாக்கும் திருத்தமும் நீ

       தன்னலமின்றி பொது நலனுக்காக வாழ்ந்தவர்கள், மரணத்திற்குப் பின்னும் மக்கள் மனங்களில், எண்ணங்களில் வாழ்கின்றனர்.  தன்னலம் மிக்கவர்களோ வாழும் பொழுதே இறந்து விடுகின்றனர்.  யாருக்கும் உதவாத பணக்காரர்களை செத்த பிணம் என்றே வள்ளுவர் சொல்கின்றார்.  எனவே நடமாடும் நடைப் பிணங்கள் நம் நாட்டில் ஏராளம் உண்டு. வெளிநாட்டு வங்கியில் பணம் பதுக்குபவர்களும் செத்த பிணம்தான் .   மறைந்தும் மறையாத மாமனிதர்களின் தியாகம் உணர்த்தும் கவிதை மிக நன்று.  நான்கே வரிகள் தான், நமக்கு 40 சிந்தனைகளை விதைக்கின்றன.

       உடலுருகி உளமுருகி 
 ஒளி தருமே மெழுகு திரி
       கடமையில் தேய்பவரே 
 காலமெலாம் வளர்கின்றார்.

       ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர்.  அந்த புத்தரை கடவுளாக வணங்குபவரும் ஆசை பிடித்து அலைந்ததன் காரணமாக பிறரை அழித்து மகிழ்ந்து வருகின்றனர்.  மகிழ்ச்சி நிரந்தரமன்று என்பதை உணராதவர்கள்.  அவர்களுக்கு உணர்த்தும் கவிதை.

       அழிகிறதே ஆசையென 
 ஆசைகளாய் வாழ்ந்தாலும்
       அழிகின்றாய் அழிவதன் முன் 
 ஆசைகளை அழிப்பாயா?

       உன்னை நீ நம்பு ; உனக்குள்ளே தான் விளக்கு உள்ளது ; அதுவே உனக்கு வழிகாட்டும் ; திசை காட்டும்என்று நம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். 

       நமக்குள்ளே ஒளியேற்ற 
 நாமே தான் திரியாவோம்
       நமக்குள்ளே சுடர் பரவ 
 நாமே தான் விளக்காவோம்

       வாசித்து விட்டு வைத்து விடும் சராசரி நூல் அல்ல இது.  மனதில் கவலை வரும்பொழுதெல்லாம் மறுவாசிப்பு செய்து கவலை அகற்றிக் கொள்ள உதவிடும் நூல்.  .80 வயது   ஆன பின்னும் இலக்கியத்தில் சுறுப்பாக இயங்கி படைத்து வரும் படைப்பாளி விஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு பாராட்டுக்கள்


.

கருத்துகள்