‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன்

‘புத்தகம் போற்றுதும்’



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை :
ஆசிரியர் : கலைமாமணி ஏர்வாடி எஸ். இரா
தா கிருஷ்ணன்

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17.
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150
*****

கவிதை உறவு, மனிதநேய இலக்கியத் திங்களிதழ் (செப்.2014)420-E, மலர் குடியிருப்பு, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 040.
தனி இதழ் ரூ. 15/-  ஆண்டுச் சந்தா : ரூ. 180/-  புரவலர் நிதி : ரூ. 5000/-
மின்னஞ்சல் : 
kavithaiuravu@gmail.com
*****
கவிஞர் இரா. இரவி சிறந்த கவிஞர் என்பது போலவே சிறந்த சுவைஞரும் கூட.  அவரது இணையதளத்தில் தாம் வாசித்த சிறந்த நூல்களை மதிப்பீடு செய்து வெளியிடுவது அவரது பழக்கம் மட்டுமல்ல. பண்புநலனும் கூட.  நல்ல நூல்களை மதிப்பீடு செய்கிறவர்கள் தம்மை இரண்டு வகைகளில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.  ஒன்று, நிறைய வாசிக்கிறார்கள் என்பது.  அடுத்தது அவற்றை மதிப்பீடு செய்வதின் மூலம் தம் பெருந்தன்மையைப் புலப்படுத்துகிறார்கள் என்பது. 

 இவ்விரண்டு பண்புகளும் கவிஞர் இரவி அவர்களிடம் உள்ளதால் இந்நூல் சாத்தியமாகியிருக்கிறது.  இந்நூலில் 50 சிறந்த நூல்களை, கவிஞர் இரவி பார்த்த கண்ணோட்டம் இடம்பெற்றுள்ளது.  பெரும்பாலான நூல்கள் கவிதை நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் புகழ் வாய்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  முதல் நூல் ‘அவ்வுலகம்’’ முனைவர் இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதிய நாவல்.  மரணம் குறித்த பயத்தை விரட்டுகிற நூல்.  மரணத்தைக் கூடப் பலருக்கு அறிவிக்கத் தயங்குகிறோம் நாம்.  காரணம், பார்த்துவிட்டு வந்து குளிக்க வேண்டுமே என்று வருந்துவது தான் என்பது யதார்த்தமான உண்மை.  முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப. அவர்களும் ஒரு நல்ல எழுத்தாளராகத் தம்மை நிறுவியவர்.  கற்றல் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் LEARNING-ல் ‘‘L’-ஐ எடுத்துவிட்டால் EARNING அதாவது சம்பாதித்தல் என்ற பொருள் வரும்.  படித்தால் சம்பாதிக்கலாம் என்று முடிவு தருவது அருமை.
  தாம் ரசித்த கவிதைகளை, பேராசிரியர் மோகன் அவர்கள் சுவைத்ததன் விளைவாக ஒரு நூல் உருவானது போல அதைப் படித்த இரவிக்கு ஒரு கட்டுரை உருவாகியுள்ளது. சிறந்தவற்றுள் சிறந்தவை என்பதாக இரவி தேர்ந்துள்ள கவிதைகள் மேலும் இனிமை. 
 மனம் ஒரு மர்மதேசம், மனம் குறித்த செய்திகள் செறிந்த இந்திரா சௌந்திரராஜனின் படைப்பு.  நம்பிக்கை தரும் சிறந்த பகுதிகள் மதிப்பீட்டில் உள்ளன.  அகில் அவர்கள் கனடாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்.  அவரது ‘கண்ணின் மணி நீ எனக்கு’ நாவலின் கதை சுருக்கத்தோடு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.  மதிப்புரைகள் மொத்தமாகி ஒரு புத்தகமாவது இதுவே முதன்முறையாக இருக்கலாம்.  வானதி பதிப்பகத்துடன் இணைந்த இரவி இதைச் சாதித்துள்ளார்.  பாராட்ட வேண்டும்.

கருத்துகள்