‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.

‘புத்தகம் போற்றுதும்’

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன்,
தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், 
சென்னை-600 17.
பக்கங்கள் : 224, விலை : ரூ. 150
*****

*****
ஹைக்கூ கவிஞர் இரா. இரவியின் சமீபத்திய வெளியீடான “புத்தகம் போற்றுதும்” என்ற நூலைப் படித்தேன்.  இந்நூல் ஐம்பது படைப்பாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்வதோடு படைப்பின் வழி அறிந்து கொண்ட இனிய கருத்துக்களை நூலாசிரியர் இரவி பதிவு செய்துள்ளார்.  ஒவ்வொரு படைப்பாளர்களோடும் தமக்கிருந்த நெருக்கத்தையும், நட்பையும், மானசீக உறவையும் குறிப்பிடுகிறார். பின்னர் நூலின் முகப்பு அட்டை, நூலுக்கு அணி சேர்த்த அறிஞர்கள், கதை, கவிதை, கட்டுரையின் அழகு ஆகியவற்றைத் திறந்த மனதோடு வாழ்த்தி மகிழ்வதைக் காண முடிகிறது.
உண்மையில் கவிஞர் இரவிக்கு பெரிய மனசு தான். தன்னை எவரும் புகழ மாட்டார்களா? தனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்காதா என் ஏங்கித் தவிப்பவர்கள் பலர்.  ஆனால் கவிஞர் இரவி அப்படி அல்ல.  தமிழ் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடமுண்டு.  அதை எவராலும் தட்டிப் பறிக்க இயலாது என நம்பக்கூடியவர்.
ஒரு படைப்பாளர் மற்ற படைப்பாளரின் படைப்பை விமர்சனம் செய்யும் இக்காலத்தில், படைப்பாளர்களைக் கௌரவிக்கும் விதமாக, நூலைப் படித்து, பலரும் பயனுறும் வகையில் ஆராய்ந்து எழுதியிருப்பது கவிஞர் இரவி அவர்களின் பரந்த மனதைக் காட்டுகிறது.  பூக்களிலிருந்து மகரந்த்த்தைச் சேகரிக்கும் தும்பியைப் போல, தான் படித்த நூல்களில் பிடித்த, இரசித்த, உய்த்துணர்ந்த செய்திகளை வாசகர்கள் சுவைக்கும் படியாகத் தந்துள்ளார், அவற்றில் சில...
வெ. இறையன்பு-வின் ‘அவ்வுலகம்’ நாவல் மனிதர்களின் மரணம் பற்றிய பயத்தினைப் போக்கி, மூடப் பழக்கங்களைச் சாடுவதைக் காண முடிகிறது.
மு. இராசாராமின் ‘கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்’ எனும் நூல் கல்வி மொழி எல்லைக்கு அப்பாற்பட்டு ஒரே மைந்த இனம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.  கல்வி வருமானம் தரும் அட்சய பாத்திரம் என்ற ஆசிரியரின் கருத்தை நூலில் பதிவு செய்துள்ளார்.
கணினி யுகத்தில் மக்கள், ஜோதிடத்தை நம்புவது மடமை.  காலாவதியாகிப் போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறி விடும் என்று எச்சரிக்கை செய்யும் என்பதை பேரா. அருணனின் ‘மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை’ எனும் நூல் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
படிப்பது எளிது, படித்ததைப் பதிவு செய்வது அரிது.  தமிழ்த் தேனீ இரா. மோகன் படிப்பதைப் பதிவு செய்வதில் ஆர்வமுடையவர்.  புலமை மிக்கவரை வாழ்த்துவதில் வல்லவர், நல்லவர்.  அரிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்துபவர்.  இவர் வாசித்த நூல்களில் நேசித்த வரிகளையும், கவிதைகளையும் தொகுத்து ‘கவிதைக் களஞ்சியம்’ என்ற நூலாக்கியுள்ளதைக் கவிஞர் இரவி தம் நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும், மொழி வளத்தையும், தன்னம்பிக்கை மிகுந்த வரிகளால் வாசகனின் இதயத்தை வருடிய கு. ஞானசம்பந்தனின் ‘ஜெயிக்கப் போவது நீ தான்’ என்ற நூலையும்...
“உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
       உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை”     
... என்ற
வைர வரிகளோடு இலக்கிய உலகில் வலம் வருபவர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம். இவர் தரும்‘இன்று ஒரு தகவல்’ மனிதர்களுக்கு மகிழ்ச்சி உரமூட்டி வருகிறது.
       இரா.  நந்தகோபாலின் “வளையாத பனைகள்’ ஏழ்மையிலும் செம்மையாக வாழலாம்.  பணம் பெரிதல்ல மனமே பெரிது என்ற நடைமுறை எதார்த்தங்களைக் கதையின் கருவாக்கியுள்ளார்.
       பணங்களை விட மனங்களை நேசியுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் அகிலின் ‘கண்ணின் மணி நீயெனக்கு’...
       ‘கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப் பற்றி மாணவனுக்கு உணர்த்திய ம.ரா.போ. குருசாமியின் மூவா நினைவுகள்...
       பெண் என்பவள் போகப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் கம்பர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்துள்ளதை எம்.எஸ். ஸ்ரீ லக்ஷ்மியின் ‘பெண்ணிய நோக்கில் கம்பர்’ எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.
       மேத்தா, அப்துல் ரகுமான், மீரா, பா. விஜய், அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, இந்திரா சௌந்தர்ராஜன், தமிழருவி மணியன், லிங்குசாமி, புதுயுகன், கவிமுகில் என எண்ணற்ற கவிஞர்களின் நூல்களை வாசித்து நான்கு பக்கங்களில் நறுக்குத் தெரித்தாற்போல் நூற்சிறப்பைப் பாராட்டியுள்ளார் கவிஞர் இரவி என்பதைக் குறிப்பிட வேண்டும்.
       தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றிக் கொண்டு 13 நூல்களை எழுதியிருப்பது கவிஞரின் தமிழ்க்காதலைக் காட்டுகிறது.  தமிழில் வெளியான பலரின் நூல்களைப் பல நாள் படித்து, பலரும் வாங்கிப் படிக்கத் தூண்டும் விதமாக இனிய எளிய விமர்சனத்தை எழுதியுள்ளார்.  நூலின் தரம் குறைவு படாது, படைப்பாளர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாகப் பாராட்டுவதைப் ‘புத்தகம் போற்றுவோம்’ என்ற நூலெங்கும் காண முடிகிறது.
       நூலாசிரியர் இரா. இரவி ஒவ்வொரு நூலின் கருத்தையும் சின்னச் சின்ன வாக்கியங்களில் நல்ல நல்ல கருத்துக்களை மேற்கோளாக்க் காட்டியிருக்கிறார்.  கவிஞர் இரவியின் வெற்றிப் பயணம் தொடரட்டும். படைப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வானதி பதிப்பகத்தாருக்கு நன்றியும் பாராட்டும்!

.

கருத்துகள்