சிறு துளியில் சிகரம் ! நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சிறு துளியில் சிகரம் !


நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

யாழினி வெளியீடு, 30/8, கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை-18. பேச : 98412 36965, விலை : ரூ. 25.
*****
நூலாசிரியர் கவிநயச்செல்வர் மன்னை பாசந்தி அவர்களின் மூன்றாவது நூல் முத்தாய்ப்பாக வந்துள்ளது. யாழினியின் பெருமைமிகு வெளியீடாக வந்துள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு அனைத்தும் வெகு நேர்த்தியாக உள்ளன. நூலாசிரியர் ஹைக்கூ உலகில் ஓய்வின்றி உழைத்து வரும் படைப்பாளி. குழந்தை இலக்கிய படைப்பாளி தந்தை மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி பெயரில் அறக்கட்டளை நிறுவி இலக்கியப்பணி செய்து வரும் பண்பாளர்.
நூலாசிரியரின் நண்பர் திரு. யு.எஸ்.எஸ்.ஆர்.கோ. நடராசன் அவர்களின் அணிந்துரை விரிவாகவும், விளக்கமாகவும், நூலிற்கு வரவேற்பு தோரணமாகவும் உள்ளது. 
தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் அடிக்டி கொள்ளை நடப்பதை செய்தித் தாளில் படித்து வருகிறோம்.  வயதான காவலர்களை கொலை செய்தும் வருகின்றனர்.  இதனைக் கவனித்த நூலாசிரியர் உடன் ஒரு ஹைக்கூ வடித்து விட்டார் பாருங்கள்.
கணினி யுகம்
      காணாமல் போனது
      வங்கி உண்டியல்!
அரசாங்கத்தில் முன்பு நாணயம் வெளியிட்ட போது 5 ரூ., 2 ரூ., 1 ரூ., அளவுகளில் வித்தியாசமாக இருக்கும்.  பார்வையற்ற சகோதரர்கள் தடவிப் பாரத்தால் அளவை வைத்தே கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் தற்போது குழப்பும் விதமாக பலவேறு வடிவத்தில் 1 ரூபாய் வடிவில் 2 ரூபாய் நாணயமும், 1 ரூபாய் வடிவில் 5 ரூபாய் நாணயமும் வருகின்றன.  இதனை உற்று நோக்கிய நூலாசிரியர் ஒரு ஹைக்கூ வடித்துள்ளார்.
நாணயங்களின் அளவு
      தடுமாறும்
      மாற்றுத் திறனாளிகள்!
ஹைக்கூ வடிப்பதில், காட்சிப்படுத்துதல் ஒரு வகை.  ஒரு ஹைக்கூ படிக்கும் போதே, படித்த வாசகர் சிந்தையில் ஹைக்கூவில் படித்த சொற்கள் காட்சிகளாக விரிவடையும்.  அது தான் ஒரு ஹைக்கூ படைப்பாளியின் வெற்றி.  அந்த வகை ஹைக்கூ கவிதைகள் நூலில் நிறைய உள்ளன.  அவற்றில் ஒன்று பதச்சோறாக.
உயர்ப்பிச்சை கேட்டும்
      பலனில்லை
      அலகில் மீன்.
இந்த ஹைக்கூ படிக்கும் போது, நமக்கு அலகு என்பது இலங்கை சிங்களப்படையும், மீனாக தமிழக மீனவர்களும் நம் சிந்தைக்கு வருகின்றனர்.
திரைப்படம் மீது ஆசை கொண்டு பலர் முயற்சி செய்கின்றனர். சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். திரைப்படத் தயாரிப்பு தொழிலே ஒரு சூதாட்டம் போல ஆகி விட்டது.  பலர் பல கோடிகளை இழந்தும் வருகின்றனர்.  இதனைக் கண்ணுற்ற நூலாசிரியர் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.
இலட்சாதிபதியானான்
      கோடீஸ்வரன்
      படமெடுத்து.
நூலில்  விலை ரூ. 25 மட்டுமே.  மிகக் குறைவான விலையில் நிறைவான ஹைக்கூ கவிதைகள் வெளியிட்ட யாழினிக்கு பாராட்டுக்கள்.
 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று பொன்மொழி உண்டு.  நோயின்றி நலமுடன் வாழ வேண்டும்.  இரவில் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும்.  ஆனால் பல கோடீஸ்வரர்களுக்கு பல நோய்கள் இருக்கும்.  பணம் கோடிகள் இருந்தும், பிடித்த உணவை உண்ண முடியாத, நோய் இருக்கும்.  இரவில் படுத்தால் தூக்கம் வராது. ஆனால் பணமற்ற ஏழை, நோயின்றி நலத்துடன் குடிசையில் நிம்மதியாக உறங்குவான். ஏழைகளிடம்  உடல்  உழைப்பு உள்ளதால் நோய்கள் வருவதில்லை .இந்த வாழ்வியல் எதார்த்தத்தை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.
வாழ்ந்தான் ஏழை
கோடீஸ்வரனாக
நோயே இல்லை!
அய்ந்தறிவு உள்ளவை விலங்குகள் என்கிறோம்.  ஆனால் அவைகள் ஆறறிவு படைத்த மனிதனை விட நன்றி உணர்வு மிக்கவையாக உள்ளன.  மனிதன் தான் நன்றி மறந்து விடுகின்றான்.  அதனால் தான் உலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவர் நன்றி மறப்பது நன்றன்று என்றார்.
நாயென்று திட்டாதீர்
      நன்றியுணர்வு உள்ளது
      நாய்!
குடி குடியைக் கெடுக்கும் என்று படித்து விட்டு குடிக்கின்றனர்.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.  மொத்த மக்கள் தொகையில் 6-ல் 1 பங்கு குடிகாரர்கள் தமிழகத்தில் பெருகி விட்டனர் என்று ஒரு புள்ளி விபரம் சொல்கின்றது.  இந்நிலை இப்படியே தொடர்ந்தால் தமிழகம் குடியில் மூழ்கி விடும்.  கேரளா போல தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடி விட முன்வர வேண்டும்.மனிதனை மிருகமாக்கும் குடி ஒழிக்கப்பட வேண்டும்.அதற்காக படைப்பாளிகள் குரல் தர வேண்டும்.
வாகனச் சத்தம்
      அயர்ந்து உறங்கினான்
      சாலையில் குடிகாரன்
குடிகாரன் தன்நிலை மறந்து விலங்காக மாறி விடுகிறான்.  நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு மதுவே காரணமாக உள்ளது.
       இப்படி சமுதாய உணர்வுடன், மனித நேயத்துடன் அற்புதமான ஹைக்கூ கவிதைகளை தொகுத்து நூலாக்கி உள்ளார்.  ‘சிறு துளியில் சிகரம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.  கீழிருந்து பார்த்தால் சிகரமும் சிறு துளியாகவே தெரியும்.  ஹைக்கூ பார்க்க மூன்று வரிகளாகத் தெரிந்தாலும் அதில் உள்ள கருத்துக்கள் இமயம் போன்றவை.
       நூல் முழுவதும் நிறை தானா?  குறையே இல்லையா? என்று கேட்கலாம்.  சின்னக் குறைகள் உள்ளன. 
       காதல் வலையில்
       இளம்பெண்
       பெற்றோர் கவலை
என்ற ஹைக்கூ 12ஆம் பக்கமும், 21ஆம் பக்கமும் இரண்டு முறை வந்துள்ளன. ஒரே கருத்தை வலியுறுத்தும் விதமாக இரண்டு ஹைக்கூ 24, 25 அடுத்தடுத்த பக்கத்தில் வந்துள்ளது. 
       மனம் விட்டுப் பேசியதும்
       இலகுவானது
       கனத்த இதயம்!
              மனம் நிறைவானது
              மகிழ்ச்சி பொங்கியது
              மனம் திறந்த பேச்சு!
       அடுத்த பதிப்பில் இக்குறைகள் தவிர்த்து வெளியிடுங்கள். மற்றபடி மன நிறைவு தரும் தொகுப்பு.  பாராட்டுக்கள். சிறு துளியில் சிகரம் ஹைக்கூ விருந்து .சமுதாய நோய் நீக்கும் மருந்து   .
       நூல் ஆசிரியர் : கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி அவர்களுக்கும் நூலை மிக நேர்த்திய வடிவமைத்து வெளியிட்ட இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களுக்கும் பாராட்டுக்கள் .


கருத்துகள்