தமிழ் இயலன் கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தமிழ் இயலன் கவிதைகள் !



நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அக்கம்பக்கம் 29/14, நியூ காலனி, 3-வது தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015.  மின்ன்ஞ்சல்akkampakkam@gmail.com விலை : ரூ. 100
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
*****
       ‘’தென்னாற்காடு மாவட்டம் தந்த ஒரு திறன்மிகு படைப்பாளி தமிழ் இயலன். இவர் முத்தமிழில் மோனையைப் போல் முன்னே எனத் தம் பெயரினைக் கொண்டு கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து வருபவர்.  ச. தனசேகரன் என்பது இவரது இயற்பெயர்.  தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றுள்ளவர்”   இப்படி  நூலாசிரியர் கவிஞர் தமிழ் இயலன் பற்றி நூலின் அணிந்துரையில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் படம் பிடித்துக் காட்டி உள்ளார்.
       சிறப்பான கவிதைகளின் தொகுப்பு.  சிந்திக்க வைக்கின்றன.  சமுதாய அக்கறையுடன் வடித்த கவிதைகள் மிக நன்று.  உள்ளத்து உணர்வுகளை எழுத்துக்களாக்கி, எண்ண விதை விதைத்துள்ளார். பாராட்டுக்கள்.  குழந்தைகள் நேசிப்பு பல கவிதைகளில் உள்ளன.  மனிதநேயம், மனிதாபிமானம் கற்பிக்கும் கவிதைகளும் உள்ளன.
       குழந்தைகள் கிறுக்குவதை ரசிக்க வேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும். சிலர் கிறுக்குவதைக் கூட கண்டிப்பார்கள்.  அவர்களுக்கான கவிதை நன்று. 
       சுவர் மறுத்தாலும் 
 தாள் கொடுத்தாவது
       கிறுக்க விடுங்கள் 
 வெளிப்படட்டும் மனம்
       வெற்றியடையட்டும் திறன் 
 குறுக்கே நிற்காதீர்கள்
       கிறுக்கர்களே!
       குழந்தை கை தவறி பொருளை உடைத்து விட்டால் உடன் கடிந்து கொள்பவர்கள்,  குழந்தையை அடிப்பவர்கள் உண்டு.  ஒரு முறை எடிசனின் உதவியாளர் ஒரு பொருளை உடைத்ததற்கு அவர் கடிந்து கொள்ளவில்லை.  ஏன்? என்று கேட்ட போது பொருள் உடைந்தால் செய்து கொள்ளலாம், ஆனால் அவர் மனம் உடைந்தால் ஒட்ட முடியாது என்றார்.  அது போல பிஞ்சுக்-குழந்தைகளைக் கடிந்து கொள்வதை நிறுத்த வேண்டும்.  அதற்கு இக்கவிதை உதவும்.

       உடைத்துத் தொலைக்காதீர்!

              கண்ணாடிக் கோப்பை 
 துண்டானதற்காய்த்
       
       திட்டித் தீர்க்காதீர்கள் 
 சுட்டிச் செல்வங்களை
       
       உடையும் பொருள் 
 கைக்கெட்டும் தூரமெனில்
       
       நமக்கும் பங்கு உண்டு 
 நொறுங்காத உண்மை இது.

       தமிழர்களின் திருநாள் தைத்திங்கள் பெருநாள் தான்.  மூடநம்பிக்கை தொடர்பான தீபாவளியை எனக்கு விபரம் தெரிந்த்து முதல் பல வருடங்களாக  நான் கொண்டாடுவதில்லை.  தீபாவளி குறித்த கவிஞர் தமிழ் இயலன் கவிதையில் எனக்கு உடன்பாடு உண்டு.  படித்துப் பார்த்தால் நீங்களும் உடன்படுவீர்கள்.
       தீப’வலி’
 கருகிக் கிடக்கும் 
 சிவகாசி மொட்டுக்கள்
 மாசு மண்டலம் 
 ஆக்கப்படும் 
 காற்று மண்டலம் 
 உடைகளில் 
 வெளிப்படும் 
 ஏற்றத்தாழ்வு
 எண்ணெய் பொருள்
 மிகுதியால் 
 நலக்குறைவு
 வட்டி கடன் 
 மதவாதம் 
 மன அழுத்தம் 
 மதுக்கடை 
 கறிக்கடைகளில் 
 மந்தைக்கூட்டம்
 இறப்பைக் கொண்டாடும் 
 மாந்தநேய எதிர்ப்பு
 வேண்டாம் நமக்கு.
       மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் திரும்ப வருவது உறுதி இல்லை.  சிலர் பிணமாகவும் வருகின்றனர்.  சிலர் காணாப் பிணமாகவும் போய் விடுகின்றனர்.  சிலர் கைதிகளாகி விடுகின்ற்னர்.  மீனவர் வாழ்க்கையைச் சிதைக்கும் வேலையை தொடர்ந்து சிங்களப்படை செய்து வருகின்றது.  இதற்கு ஒரு முடிவு காண யாராலும் முடியவில்லை. மீனவர்களின் இன்றைய நிலையை உணர்த்திடும் கவிதை ஒன்று 
கப்பல்!.
       முத்தும் மிளகும் 
 அனுப்பி வைத்தோம் அன்று
       குத்தும் கொலையும் 
 திரும்பி வருகின்றன இன்று.

       உலகம் முழுவதும் வன்முறை.  சிலர் ஆயத வியாபாரம் நடத்த வேண்டும் என்பதற்காகவே சில உலக சண்டைகளை மூட்டியும் வருகின்றனர்.  ஆயுதம் அழிய வேண்டும், மனித நேயம் மலர வேண்டும்.கவிஞரின் ஆசை  நிறைவேற வேண்டும் .உலகமே அமைதி நிலவ வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்கள் அனைவரின் விருப்பம் 

       துப்பாக்கில் கிடங்குகள் 
 துடைக்கப்பட்டால் அன்றிக்
       குருதி இழப்பு குறையாது 
 உலக உருண்டையில்
       அது வரை 
 துயர நாட்களைக் 
       கடத்த மட்டுமே முடியும்
வெளிச்சம் அறியாய் 
      பதுங்கு குழிகளில்.
       கையூட்டு எங்கும் எதிலும் என்றாகி விட்டது.  முன்பெல்லாம் கையூட்டு வாங்காதவர்களை நல்ல மனிதர்கள் என்றார்கள்.  ஆனால், தற்போது மக்களே, ‘அவர் மிகவும் நல்லவர், கை நீட்டி வாங்கி விட்டால் காரியத்தை முடித்து விடுவார்’ என்கின்றனர்.  எப்படி வந்த்து இந்த மாற்றம்?

       கையூட்டு!

              வெள்ள நிவாரணம் 
 வேண்டி நிறபவனும்
              கொஞ்சம் தள்ள வேண்டும் 
 கள்ளத்தனமாய்
              உங்களின் 
 இறப்புச் சான்றுக்கு 
              மட்டும் நீங்கள்
 ஏதும் தர வேண்டாம் 
              கறந்து கொள்வார்கள்
 உங்கள் 
              வாரிசுகளிடமிருந்து!
  பூசை ,சடங்கு போன்ற மூடநம்பிக்கைகளைச் சாடியவர் .பசியாற்றி   மகிழ்ந்தவர் . அன்றே பகுத்தறிவு சோதி ஏற்றியவர் .     வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பற்றி கவிதை அவரை படம் பிடித்துக் காட்டும் விதமாக உள்ளது.
       வள்ளலார் !

              மண்ணில் வாழ்ந்தவர்க்கிடையே 
 மண்ணுக்காக வாழ்ந்தவர்
              மனிதர்களை 
 மறந்து துறந்தவரிடையே 
              துறந்தும்
 மனிதர்களை 
              மறக்காதவர்.
 பெருவாழ்வு வாழ்ந்த 
              ஒரு கதிர்தாங்கி 
 உயிர்களுக்கு
              மறு காற்றூட்டம் செய்த 
 வெள்ளைத் தங்கம்.

       காதல் பற்றி பாடாமல் ஒரு கவிஞரால் இருக்க முடியாது.  நூலாசிரியர் தமிழ் இயலன் காதல் கவிதை எழுதி உள்ளார்.  இக்கவிதையை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல், மலரும் நினைவுகளாக மலரும் என்று உறுதி கூறலாம்.

       சிறியதும்  பெரியதும் !

 ஏறக்குறைய 
 ஒரே வயது தான் 
 நான் உன்னைக்
 காதலித்த போதும் 
 நீ என்னை 
 நிராகரித்த போதும்
 சந்திக்கத் துணிந்தில்லை 
 இடையில் ஒரு போதும்
 பயணம் தொடர்கிறது 
 உன்னை விட  மிக மூத்தவனோடு
 நீயும் 
 என்னைவிடச் 
 சிறியவளோடு 
 நானுமாய்!
       மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்தவர், மண்ணின் பெருமையை மண்ணின் மைந்தர்களுக்கு உணர்த்திய மாமனிதர் வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பற்றிய கவிதை நன்று.

 செயற்கைக்கெல்லாம் 
 தடைகளைப் போட்டு 
 இயற்கை
 உரமெனும் 
 மடையைத் திறந்தவர்
 களையாய் இருக்கும் 
 வேதிப் பொருட்களைக்
 கலைத்துப் போட்டு 
 உண்மைகளை சொன்னவர்
 இனிவரும் நாட்களில்
 நமதுஆழ்வார்  தனித்தமிழ்
 உழவரின் 
 ஏரென வாழ்வார்.

மாறிய போது உணர்ந்தேன் புலம் பெயர்ந்தோர் வலி ! என்று நான் ஒரு ஹைக்கூ எழுதினேன். சொந்த மண்ணை விட்டு விட்டு வேறு மண்ணில் வாழ்பவர்களுக்கு உடல் தான் இங்கு இருக்கும் .உள்ளமோ சொந்த மண்ணை நினைத்துக் கொண்டே இருக்கும் .
       நூலாசிரியர் தமிழ் இயலன் புலம் பெயர்ந்தோர் பற்றி எழுதிய கவிதை.

 புலம் பெயர் வாழ்க்கை!
 வாதிட்டு மடிவது ஏன் 
 வரப்போரச் சண்டைகளில்
 நாட்டைத் துறந்தவனின் ஒரு கேள்வி 
 மொழிக்காக
 விழி பிதுங்கினோம் 
 வெளிக்கடைச் சிறையில் அன்று
 வெளிநாட்டு மண்ணில் இன்று 
 அடிதடி கொலை உறுதி
 அமைதியைச் சொன்ன 
 ஆண்டவன் பெயராலும்.
       இப்படி பல கவிதைகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன, சிலிர்ப்படைய வைக்கின்றன.  பாராட்டுக்கள்.நூல் ஆசிரியர் : கவிஞர் தமிழ் இயலன் அவர்கள் திரைப்பட இயக்குனர் கவிதைக்கும் நேரம் ஒதுக்கி எழுதுவதற்கு பாராட்டுகள் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் .

இந்த நூலை விமர்சனம்  எழுதுவதற்காக என்னிடம் வழங்கிய தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கும் நன்றி .
.

கருத்துகள்

  1. நண்பர் தமிழ் இயலன் எனக்குஅறிமுகமானவர். தங்கள் பதிவில் அவரது கவிதை நூல் விமர்சனம் கண்டு மகிழ்ச்சி. அவருக்கும், விமர்சித்த தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக