மழைச்சுவடு ! நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மழைச்சுவடு !

நூல் ஆசிரியர் : கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

யாழினி வெளியீடு, 30/8, கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை-18. பேச : 98412 36965, விலை : ரூ. 60
*****
நூல் ஆசிரியர் கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன் இந்நூலை அவரது பெற்றோர்களான திரு. சுப்பிரமணியன், திருமதி புனிதா சுப்பிரமணியன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளது சிறப்பு.  மறக்காமல் நண்பர்கள் பெயரை பட்டியலிட்டு நன்றியையும் பதிவு செய்துள்ளார்.  ஹைக்கூ இலக்கியத்தை முன் எடுத்து செல்லும் புதுவை முன்னவர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மற்றும் சிற்றிதழ்களில் பரிசுத்தொகையை வாரி வழங்கி வரும் வள்ளல் கார்முகிலோன், கவிஞர் திருவை பாபு ஆகியோரின் அணிந்துரையும் மிக நன்று.  இனிய நண்பர் கன்னிக்கோவில் இராஜாவின் பதிப்புரையும் நன்று.
பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன்.  இயற்கை பற்றி பாடுவதில் தமிழகக் கவிஞர்கள் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் விதமாக உள்ளது நூலின் முதல் ஹைக்கூ.
செடிகள் தோறும்
      முத்தங்கள்
      மழைச்சுவடு!
மழையை நூலாசிரியர் பார்த்த பார்வை மிகவும் வித்தியாசமானது.  விசித்திரமானது.
நம் நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகின்றனர். ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர்.  பணக்காரர்களிடம் உள்ள பணமும் யாருக்கும் பயன்படாமல் இருந்து வருகின்றது.  ஏழைகளோ அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர்.  இதனை உணர்த்துவதாகவே என் பார்வைக்குப் பட்ட ஹைக்கூ.
மூடிய தொட்டிக்குள்
      தண்ணீர்
      தாகத்துடன் காகங்கள்!
ஒரு ஹைக்கூ எழுதும் போது படைப்பாளி பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு வாசகர் வேறு பார்வையும் பார்க்கலாம் என்பதற்கு சான்று.
தாய் தகப்பன் இழந்து அல்லது புறக்கணிக்கப்பட்டு ஆதரவற்ற குழந்தைகள் உருவாகின்றனர்.  தவறு எதுவும் செய்யாமலே வாழ்நாள் தண்டனை அடைகின்றனர்.
சோகம் மறந்து
      சிரிக்கும் பூக்கள்
      அனாதை இல்லம்!
விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது.  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்று ஊதியம் உயர்ந்து விடுகின்றது.  ஆனால் பொதுமக்களுக்கு விலைவாசி உயர்வு வேதனையைத் தருகின்றது. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
ஏறும் விலைவாசி
      நாடும் நடுத்தர மக்கள்
      அடகு கடை.
தினந்தோறும் தனியார் நிதி நிறுவனங்களின் மோசடிச் செய்தி வந்து கொண்டே இருக்கின்ற  ஆனால் மக்கள் ஏமாறுவது தொடர்கதையாகின்றது.  மக்களிடையே தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதில்லை என்ற விழிப்புணர்வு வர வேண்டும்.
கவர்ச்சித் திட்டங்கள்
      ஏமாற்றம்
      நிதி நிறுவனம்
ஒரு வாகனத்திற்கும், பின்னே வரும் வாகனத்திற்கு இடைவெளி தேவை.  இடைவெளி விட்டு வந்தால் விபத்து தவிர்க்கலாம்.  ஆனால் சில ஓட்டுனர்கள் இடைவெளி விடாமல் பின்னே சென்று விபத்தில் சிக்குகின்றனர்.  அதனை உணர்த்தும் ஹைக்கூ.
இடைவெளி தேவை
      பின்புற வாசகம்
      எல்லை மீறும் ஓட்டுனர்!
அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் சிலர் நிறுத்தங்களில் நிறுத்தாமல் தள்ளி வந்து நிறுத்தி பயணிகளை ஓட விடும் நிகழ்வை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.
நாள்தோறும்
      மாரத்தான் ஓட்டம்
      தள்ளி நிற்கும் பேருந்து!
எந்த ஒரு படைப்பாளியாலும் ஈழக்கொடுமைகள் பற்றி படைக்காமல் இருக்க முடியாது மனசாட்சி படைக்கச் சொல்லும் இவரும் படைத்துள்ளார் பாருங்கள்.
கேட்பாரற்று
      அழுகிறது குழந்தை
      பதுங்குகுழி!
நூலின் தலைப்பை நினைவூட்டும் இரண்டாவது ஹைக்கூ ஒன்று மிக நன்று.
முத்துக்களை
      தூவிச் செல்கின்றன
      மழைச்சுவடு!
நம் நாட்டில் ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் பெருமையாக இருந்தது.  இன்று தனிக்குடித்தனம் பல்கி பெருகி விட்டதை உணர்த்தும் ஹைக்கூ.
உறவுகள்
      சுருங்கின
      தனிக்குடித்தனம்!
மரங்களை வெட்டாமல் இருந்தால் மழை பொய்க்காமல் இருக்கும்.  ஒரு பக்கம் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டே மறுபக்கம் மழைக்காக யாகம் பூசை நடத்தும் முரண்பாட்டை உணர்த்தும் ஹைக்கூ.
மழை வேண்டி
      பூசை
      அழியும் காடுகள்.
ஹைக்கூவிற்கு பொருத்தமான புகைப்படங்கள் தேர்ந்தெடுத்து வடிவமைத்து அச்சிட்ட பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜாவிற்கு பாராட்டுக்கள். மிக நுட்பமான ஹைக்கூ கவிதைகள் வடித்த கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரனுக்கும் பாராட்டுக்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்