தமிழை வளர்ப்பது தமிழ் எழுத்து மட்டுமே ! கவிஞர் இரா .இரவி !

14.9.2014 அன்று  கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் பாடிய கவிதை !

தமிழை  வளர்ப்பது தமிழ் எழுத்து  மட்டுமே  !    கவிஞர் இரா .இரவி !

இருபத்தியாறு எழுத்துக்கள் மட்டுமே கொண்ட !
ஆங்கிலத்தை  உலக மொழி என்கின்றனர் !

இருநூற்றிநாற்பத்தேழு எழுத்துக்கள் கொண்ட !
இனிய தமிழ் மொழியே  உலகின் முதல் மொழி !

ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
எண்ணிலடங்கா  சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி !

கடல் போன்று  எழுத்துக்கள் இருக்கையிலே !
கடன் ஏன் வாங்க வேண்டும் வட மொழியில் ! 
.
உலகின் ஒப்பற்ற திருக்குறள் தந்த மொழி தமிழ் !
ஒருபோதும் தேவையில்லை பிற மொழி எழுத்துக்கள் !

பாலில் நஞ்சு கலப்பது போலவே சிலர் திட்டமிட்டு !
பைந்தமிழில் வடமொழி எழுத்து  நஞ்சை கலந்தனர் !

வடமொழி எழுத்துக்கள் எழுதுவதை இனி தவிர்ப்போம் !
வளமான தமிழ்மொழியின் எழுத்து வளம் காப்போம் !

ஆதியில் இல்லை வடமொழி எழுத்துக்கள் தமிழில் !
பாதியில் புகுத்தப்பட்டவைதான் இவைகள் !

தனித்தமிழ் இயக்கம் இனி  புத்துணர்வு பெறட்டும் !
தனித்தமிழில் எழுதிட உறுதிமொழி ஏற்ப்போம் !

மெல்லினம் வல்லினம் இடையினம் என்று !
மூன்று இனம் கொண்ட மொழி நம் தமிழ் !

உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய்யெழுத்து என்று 
மூன்றும் ஆயுத எழுத்தும் கொண்ட மொழி நம் தமிழ் !

உன்னதமான எழுத்துக்கள் உயர் தமிழில் உண்டு !
ஒருபோதும் ஈடாகாது தமிழுக்கு  பிற மொழி எழுத்து !

தமிழ் எழுத்து மட்டுமே நம் தமிழுக்கு உரம் !
தமிழ் எழுத்து மட்டுமே நம் தமிழுக்கு வரம் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்