கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி



கடவுளின் நிழல்கள் !


நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
திருமகள் நிலையம், புதிய எண். 13, பழைய எண். 28, சுகான் அடுக்ககம், சிவப்பிரகாசம் சாலை, தி. நகர், சென்னை – 600 017.  விலை : ரூ. 90  
மின் அஞ்சல்  : enquiry@thirumagalnilayam.com

*****
நூலாசிரியர் பெயர் கவித்தாசபாபதி.  பெயர் போலவே கவிதையும், கவிதைக்கான தலைப்பான ‘கடவுளின் நிழல்கள்’ என்ற தலைப்பும் மிக வித்தியாசமாக உள்ளன.
சாகித்ய அகதெமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது.  கவியரசு நா. காமராசன் அவர்களின் அணிந்துரை, தோரண வாயிலாக உள்ளது.
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.  இந்த நூலை நூலாசிரியர் எனக்கு அனுப்பி விமர்சனம் வேண்டி இருந்தார்.  ‘கடவுளின் நிழல்கள்’ என்ற தலைப்பைப் படித்தவுடன், நாம் நாத்திகர், இதற்கு எழுதலாமா? என்று யோசித்தேன்.  ஓர் உருவம் இருந்தால் தான் நிழல் இருக்கும்.  கடவுள் இருந்தால் தான் நிழல் இருக்கும். ‘கடவுளின் நிழல்கள்’ என்று தலைப்பு வைத்துள்ளார்.  ஒரு கடவுளுக்கு பல நிழல்களா? இப்படி பலவாறு யோசித்து விட்டு, தலைப்பு எப்படி இருந்தாலும் கவிதைகளைப் படித்து விட்டு, விமர்சனம் எழுதுவோம் என்று எழுதி உள்ளேன்.
சலனம்
தனக்குத் தானே / லயித்திருக்கும் ஏரி
       ஏரியின் சலனம் / ஏரியினுடையதே
       கால் சதங்கை கட்டிச்செல்லும் / காட்டு நதி
       நதியின் சலனம் / நதியினுடையதே
.
இயற்கையை எழுதி வாசகர் கண்முன் ஏரியையும், ஏரியின் சலனத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார்.
சந்நிதி
மனம் வெறும் / சதைச் சுவரென்றால்
       எண்ணங்கள் / சித்திரங்கள்
       மனம் பரந்த / வானமென்றால் / நினைவுகள் நட்சத்திரங்கள்
       மனமொரு / சந்நிதியென்றால் / சோகமே அதன் நிம்மதி.
       உன் கண்களில் / கனிவாக வடியும்
       கருணையின் ஈரம் தானோ / சோகம்?
சோகத்தையும் சுகமாக, நிம்மதியாகப் பார்க்கும் பார்வை நன்று.  நூல் முழுவதும் அழகியல் சார்ந்த கவிதைகளே உள்ளன.  நூலாசிரியர் கவித்தாசபாபதி அவர்களுக்கு இயற்கையை உற்று நோக்கும் ஆற்றல் மிகுதியாக இருப்பதால் மிகவும் ரசித்து, ருசித்து கண்ட காட்சிகளை, கவிதையாக வடித்துள்ளார்.
வாழ்க்கை பற்றி வித்தியாசமான விளக்கம் தந்துள்ளார்.  ரசிக்கும்படியாக உள்ளது.
பொற்கணம்
விபத்துக்கும் / தப்பித்தலுக்கும் / இடையேயான
       தூரத்தில் / வாழ்க்கை.
       இக்கணத்தை இனிமைப்படுத்தலே
       அதன் நோக்கம்.
       இதை உணர்தலே என் பலம்
       இதை உணர்தலே என் அமைதி
       இதுவே என் அழகு...!
என்ன பார்வை உந்தன் பார்வை என்பதைப் போல பார்வையின்
ஆற்றலை உணர்த்திடும் கவிதை நன்று.
பொன்வாசல்
உனது பார்வை / காலைக் கதிரவனின்
       ஒளிவீச்சில் / ஒரு சக்தியாகப் பாய்ந்து வரும்
காதலி பேசுவதை விட மௌனமாக இருப்பதும் அழகு தான்.  உதடுகள் பேசாததை விழிகள் பேசி விடும்.
மவுனம்
மவுனமே / சப்தத்தின் நிழலே / தென்றலில் மிதக்காத
       தேவ சங்கீதமே / உதட்டுச் சீமையின் / ஊமையழகியே !
       நீ / வார்த்தை வரம் கிட்டாத / சாப மொழியா?
       இல்லை / வார்த்தைகளையே தியானித்துப் பெற்ற
       மொழியின் வரமா?
பஞ்ச பூதம் என்பார்களே அதில் ஒன்றான காற்று பற்றிய கவிதை நன்று.
காற்று!
காற்றில் விரியும் / மகரந்த சிறகுகள்
       காற்றில் உதிரும் / பூவின் சருகுகள்
       காற்றில் மிதக்கும் / மெல்லிசை லயங்கள்
       காற்றில் படியும் / மாசுக் கறைகள்
       காற்றில் பரவும் / மரணத் துகள்கள்
மனிதனின் துடிப்பை உறுதி செய்யும் இதயத்துடிப்பிற்கு காரணமான இதயம் பற்றிய கவிதை நன்று.
இதயம்
மெய்யெனும் ஆலையின் / மின்சார அறையே
       ஆலையெங்கிலும் ஒளிபாய்ச்சி / நீ மட்டும்
       இருண்டிருக்கிறாய் ...!
       என் உயிர்த்துடிப்பே / வாழ்நாள் முழுமையும்
       ஓயாமல் ஓயாமல் / துளியேனும் தூங்காமல்
       எனக்காகத் துடிக்கும் உனக்கு / என்ன கைமாறு செய்வேன்?
இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.  இயந்திரமயமான உலகில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர்.  இயற்கையை நேரம் ஒதுக்கி ரசிக்க வேண்டும்.  ரசித்தால் மன அழுத்தம் குறையும்.  மன அமைதி நிலவும், மனமகிழ்ச்சி வரும்.
குறிஞ்சி உலா !
பச்சைமலை பள்ளமெலாம் / பனிப்பூக்கள் – அங்கு
       மலைத்தேன் சேகரிக்கும் – தேனீக்கள்.
ஒரு மலரின் கானம்!
நான் செடியின் சிரிப்பு / என் வசீகர புன்னகையில் தான்
       வசந்தம் தனது / வரவேற்புரையை / வாசிக்கும்.
நூலின் முன்அட்டை, பின் அட்டை வடிவமைப்பு மிக நன்று.  உள்அச்சு கவிதைகளில் நிறைய இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன.  அடுத்த பதிப்பில் பிழை நீக்கி பிரசுரம் செய்யுங்கள்.


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்