'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா

'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா
*****
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
முயற்சி திருவினையாக்கும்

******

‘ஹைக்கூ ஆயிரம்’ என்னும் இரா. இரவியின் இந்நூல் வானதி திருநாவுக்கரசு தயாரிப்பில், வானதி பதிப்பகத்தில், 184 பக்கங்கள் கொண்டு ஆகஸ்டு 2013-இல் வெளிவந்துள்ளது.  மதுரை காமராசர் பலகலைக்கழக முன்னைத் தமிழ் பேராசிரியர் இரா. மோகன் அவர்களும், முதுமுனைவர்
வெ. இறையன்பு அவர்களும் அவரவர்க்குரிய பாணியில் கவிஞருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் பங்களிப்பு இந்நூலில் மகிழ்விக்கின்றது.  பேராசிரியர் ஹைக்கூ கவிதைகளை வகுத்தும், தொகுத்தும் 1000 ஹைக்கூக்களை 20 தலைப்புகளில் அடக்கியுள்ள பாங்கு சிந்தனைக்கு விருந்தாகிறது.

100, 110, 200 இவ்வாறு ஹைகூக்கள் நூலாக்கப்பட்டு கவிஞர்களின் ஹைக்கூ தொகுப்புகள் வெளிவரும் காலத்தில் 1000-க்கு மேற்பட்ட ஹைகூக்களை மேலை நாட்டினர்களைப் போன்று நாமும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது.  அப்படியொரு தொகுப்பு வந்தால் என்ன? அதுவும் உலகமொழியில் ஆங்கிலத்தில் வந்தால் நன்றாக இருக்குமே? ஹைக்கூ என்பது குறிப்பாக தமிழ் ஹைகூக்கள் உலக மக்கள் அறிந்து இன்புற்றால் என்ன? இந்திய மக்கள் தமிழ் ஹைக்கூக்களைப் படித்தறிந்து மகிழ்ந்தால் என்ன?  என்ற எண்ணத்தின் ஏக்கம், ஆக்கம் எனது 2000 ஹைக்கூக்களின் மொழிபெயர்ப்பு.  1000 ஹைக்கூக்களின் இந்தி மொழிபெயர்ப்பு என்பதனை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைத் தொடர்ந்து என் பாசத்துக்குரிய தம்பி முருகேஷ் 1000 ஹைக்கூக்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளார்.  அவரைத் தொடர்ந்து 1000 ஹைக்கூக்களை தனது 12-வது நூலாக, தமிழாகவே வாழ்ந்து, தமிழையே நினைந்து வாழும் – ஹைக்கூவினை – கணினி, இணையத்தளம், வலைப்பூ இவற்றில் தடம் பதித்த இரா. இரவி அதே தலைப்பில் வெளியிட்டுள்ள பாங்கு சிந்தனைக்கு விருந்தாக்கியுள்ளதை அறிகிறோம்.

இரா. இரவியின் ஹைக்கூக்களை நான் பெரிதும் விரும்பி, என் ஆய்வு நூல்களில் இடம்பெறச் செய்துள்ளேன்.  அவற்றுள் ஒன்று வாழ்க்கையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் உழைப்பு தான்.  இதனைத் திருவள்ளுவர் பெருந்தகையே,

“தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன்
      மெய்வருத்தக் கூலி தரும்”                   என்றார்.

எனவே, இரா. இரவியும்,

“உழைத்தால் உயர்வு,
      ஓய்ந்தால் தாழ்வு
      வாழ்க்கை”.                        

 (ப. 26)            என்கின்றார்.

மனித நேயம் :  என் இதயம் தொட்ட இன்னொரு அருமையான ஹைக்கூ.  மனிதவர்க்கம் மனதில் பதித்து படித்துப் படித்து செயல்பட வேண்டிய ஹைக்கூ.

      “செடி வளர்த்தோம்
      கொடி வளர்த்தோம்
      மனிதநேயம்?”                       (ப.32)       என்பதாகும்.

ஜென் :  ஜென்னின் பிறிதொரு பரிமாணம், எதையும் அதன்அதன் போக்கில் விட்டு விடுவது.  பூவென்றால் பெண்மக்கள் சூட வேண்டும்.  இறைவனுக்குத் தூவப்பட வேண்டும்.  இவை இரண்டும் இல்லையென்றால் அதற்காக வருந்த வேண்டியதில்லை.  இதனை எருக்கம்பூவின் வாயிலாக ஜென் தத்துவம் மூலம் உணர்த்தப்படுகிறது.  கவிஞர் இரா. இரவியின் அத்தத்துவம் வெளிப்படும் ஹைக்கூ.

      “மனம் வருந்துவதில்லை
      மங்கையர் சூடாத்தற்க்கு
      எருக்கம் பூக்கள்’                      (ப.68) என அவர் எழுதியதாகும்.

தொன்மக் குறியீடு :  கர்ணன், இராமன், இராவணன், ஏகலைவன் போன்ற தொன்மக்குறியீட்டு மாந்தர்களை இரா. இரவி குறிப்பிட்டு கவிதையாக்கி உள்ளார்.

தொன்மம் :  கர்ணன், கொடைத் தன்மையின் குறியீடு. இக்குறியீட்டு மாந்தனைக் கொண்டு நவீனத் தொன்மக் குறியீடாக்கியுள்ளார் கவிஞர்.  இன்று கொடைத் தன்மை குறைந்து வருவதால் கர்ணன் என்னும் பெயரை மட்டுமே உள்ளவர்களைக் காணலாம்.  ஆனால் கொடைத்தன்மை அவர்களிடம் காண இயலாது.

இராமன், இராவணன் என்னும் மன்னர்களின் ஆட்சி நடந்தால் கூட யாராலும் வறுமையை ஒழிக்க இயலாது.  இங்கு இராவணன், இராமன் ஆகியவர்கள் தொன்மாந்தர்கள்.

ஏகலைவன் “பாரதக்கதையில் வரும் தொன்ம மாந்தர்.  அவன் குருவுக்கு அன்று தனது கட்டை விரலையே காணிக்கையாக்கினான்.  ஆனால் இன்று அவன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதனையும்,

இராமயணத்தில் இராமனின் தந்தைக்கு 60,000 மனைவியர் இருந்ததாகக் குறிப்புள்ளது.  ஒருவனுக்கு ஒருத்தி என்னும் பண்பு, அதனால் இல்லாது போனது.

இந்நான்கு ஹைக்கூக்களில் கொடை, வளமை, குருபக்தி, கற்பு இவை குறியீடுகளாக்கப்பட்டுள்ளதை,

      “குணம் மாறி இருப்பான்
      இன்று இருந்திருந்தால்
      கர்ணன்”                       (ப.118)

      “இராமன் ஆட்சி
      இராவணன் ஆட்சி
      ஒழியாத வறுமை”              (ப.120)

      “கட்டைவிரல் கேட்ட
      நாக்கை வெட்டினான்
      நவீன ஏகலைவன்”

      “ஒருவனுக்கு ஒருத்தி
      இராமன் தந்தைக்கு
      அறுபதினாயிரம் மனைவிகள்”    (ப. 108)

என்னும் ஹைக்கூகளால் அறியலாம்.  இங்கெல்லாம் தொன்மங்கள் நவீன குறியீடுகளாக்கப்பட்டுள்ள கவிஞரின் திறம் காணலாம்.

இயற்கை :  ஹைக்கூவின் உயிர்நாடியே இயற்கை.  இயற்கைச் சித்தரிப்பில் 147 ஹைக்கூக்கள் நூலில் இடம் பெற்றுள்ளன.  அவற்றுள் ஒன்று என் கண்ணிற்கும் மனதிற்கும் பெருமகிழ்ச்சி அளித்து குளிரச் செய்ய வைப்பது, கவிஞர் எழுதிய,

      “கண்ணிற்குக் குளிர்ச்சி
      மனதிற்கு மகிழ்ச்சி
      இயற்கை”.                  

 (ப. 60)            என்னும் ஹைக்கூவாகும்.

சூழல் மாசு :  இன்று ஆற்றின் குருதி மணல் சமூக விரோதிகளால் நாளும் அள்ளப் பெற்று வருகின்றது. அதனைத் தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும், நல்ல அதிகாரிகளும் எவ்வளவு தான் முயன்றாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.  சுயநலமிக்கவரகளால் மணற்கொள்ளையால் ஏற்படும் விபரீதத்தினை, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இருப்பிடம் அமைக்கவும், சமூக விரோதிகளால் காடுகள் அழிக்கப்பெறுவதால் புவிவெப்பம் பெருகி வருவதாலும் ஓசோன் ஓட்டை அடைந்து வருவதைக் கவிஞர் இரா. இரவி ஹைக்கூ ஆக்கியதை,

      “வெட்டுகின்றனர்
      மரணக்குழி
      மணற்கொள்ளை”                     (ப. 42)

      “தாங்க முடியவில்லை வெப்பம்
      பெரிதானது
      ஓசோன் ஓட்டை”                     (ப. 167)

என்னும் ஹைக்கூகளால் அறிந்து மனம் வருந்துகிறது.  இவற்றை மக்கள் இனியாவது தவிர்த்தால் நாட்டுக்கும், உலகுக்கும் நன்மை கிட்டும்.

      நூலில் நம்பிக்கை ஊட்டும் நல்ல கவிதைகளை பதிவு செய்ய விரும்புகின்றேன்.  அவை,

      “வயது தடையல்ல
      எந்த வயதிலும் புரியலாம்
      சாதனை”                             (ப. 81)

      “இமயம் செல்லலாம் இன்று
      இரு கால்கள்
      நம்பிக்கை இருந்தால்”              

 (ப. 26)                        என்பன.

      இவை மட்டுமின்றி நூலில் ஒருதலைக்காதல் (98), பெண் விடுதலை (97), பெண்ணடிமை (87), விழிக்கொடை (87), உடல்தானம் (79), நிலாச் சோறு (86), மூடநம்பிக்கை (104), எழுத்தாளர் (108), நெல்மணி (105), சிலுவை (110),
பட்டதாரி (112), எயிட்ஸ் (113), கணிப்பொறி (114), விலைவாசி (114),
விலைமகள் (115), தனிக்குவளை (116), நோன்பு (118), தற்கொலை (118),
மனசு (119), வெங்காயம் (120), திருவள்ளுவர் (122), பாரதி (123),
புரட்சிக்கவிஞர் (124), கவியரசர் (125), பெரியார் (126), காமராஜர் (123),
மது, மதுக்கடை, குடிகாரன் (129), நெசவாளி (130), நெசவாளர் வாழ்க்கை, ஆலைக்கழிவு (130), தங்கம் (131), பங்குச்சந்தை (29), சுற்றுலா (ப. 22),
ஈழத்தமிழர் (19) என்னும் பொருள் கொண்டு கவிஞர் ஹைக்கூவாக்கியுள்ளதை காணலாம்.  பேராசிரியர் இரா. மோகன் குறிப்பிட்டுள்ளது போல் இரா. இரவியிடம் ஆளுமைக் கூறுகளையும், புனைவுக் கூறுகளையும் நூலில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன என்பதனை நூலை வாங்கிப் படிப்போர் நன்கறியலாம்.

      இத்தகையத் திறம் வாய்ந்த கவிஞர் இரா. இரவி அவர்களை நெஞ்சாரப் பாராட்டி இவரது கவிதைத் தொண்டு மேன்மேலும் சிறக்க வேண்டுகின்றேன்.



கருத்துகள்