தலைப்பு ; பாரடா உனது மானிடப்பரப்பை !
கவிபாரதி மு .வாசுகி , மேலூர் .
திருப்பரங்குன்றம் கவிஞர் பேரவையில் ரூபாய் 5000 பரிசு பெற்ற கவிதை !
ஆணாதிக்க மணவாழ்விலே
பெண்பாதிக்கும் நிலைவரினும்
தேக்கிய வேதனைக்கு
திறவுகோள் கிடைக்காமல்
கங்கையின் புதிய கிளையை
கண்களில் திறக்கிறார்கள் !
' நிலைவரையே பயணிக்கும் 'கதவு ' போல
வரையறைக்குள் வாழ்ந்து வாழ்ந்து
வாசற்படி தாண்டாமலே
வயோதிகத்தை அடைகிறார்கள் !
அடுப்பங்களை அனல் கூட
குறைவாகத்தான் சுடுகிறது !
அடுக்கடுக்காய் அநீதி இழைக்கும் - சில
ஆண்களோடு ஒப்பிடுகையில் !
அன்று , அந்நியரிடம் அடிமையாயிருந்ததில்
அதிசயம் ஒன்றுமில்லை !
இன்றோ ,
நம்முக்குள்ளே தான் நடந்து கொண்டிருக்கிறது
கூலிப்படைகொண்டு
குண்டு வெடிப்பும் ,கொலைகளும் !
'ஆவி ' பிடித்த பெண்ணிற்கு கூட
அல்லல்கள் அதிகமில்லை !
'காவி ' பிடித்த பெண்ணிற்குத்தான்
காலத்திற்கும் சீரழிவு !
எத்தனை நாளைக்குதான் நீடிக்கும் இந்த அவலம் ?
எனக்கேட்டு ,
மாற்றுக் கருது வெளியிட்டவரெல்லாம்
மாற்றுத்திறனாளியே ஆகிறார்கள் !
இவ்வுலகை மாற்ற இனி ஒரு பாரதி போதாது !
ஒவ்வொருவரும் பாரதியாக வேண்டும் !
இல்லையேல் ,
புறாக்களுக்குள்ளும் போர்க்குணம் புகுந்தால்
சமாதானமுமிங்கே சமாதியாகிவிடும் ! எனவே
பெண்ணடிமைக்கு விடை கொடுங்கள் ! அவர்களின்
பெருமைக்கு கை கொடுங்கள் !
நாளைய விடியலாவது - பெண்களின்
விழிகளுக்குச் சொந்தமாகட்டும் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக