சைவம் ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

சைவம் !  
திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
இயக்கம் :  திரு. ஏ.எல். விஜய்
நடிப்பு :திரு. நாசர், சாரா

*****
       மசாலாப் படம் எடுக்கும் இயக்குநர்கள் அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய படம்.  படத்தில் வெட்டுக்குத்து இல்லை, குத்துப்பாட்டு இல்லை, வெளிநாட்டில் பாடல் காட்சி இல்லை.  ஆனால் படம் வெற்றி பெற்றுள்ளது.  காரணம் கதையும், நடிகர் நாசரும், சிறுமி சாராவும்.  மிக நல்ல படம்.  இந்தப் படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  தெய்வத் திருமகள் படத்தில் நடித்து இருந்த சிறுமி சாரா, சைவம் படத்திலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளாள்.  சிறுமி சாரா, தமிழ் என்ற பாத்திரத்தில் வருகின்றாள்.  குட்டி தேவதையாக வலம் வருகின்றாள்.
       கடவுளுக்கு நேர்ந்து விட்ட சேவலை படைக்க மறந்து விட்டனர்.  குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்ததும் பூசாரி சொல்லியதும் நினைவிற்கு வந்து சேவலை படையல் வைக்க முடிவு செய்கின்றனர். சாராவிற்கு சேவல் மீது மிகுந்த அன்பு உண்டு.  அதனால் அன்போடு வளர்க்கும் ‘பாப்பா என்ற சேவலை வீட்டின் மாடியில் ஒளித்து வைத்து, உணவு கொடுத்து பாதுகாத்து வருகின்றாள்.  வீட்டில் உள்ள அனைவரும் சேவலைக் காணவில்லை என்று ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள்.  குடும்ப உறுப்பினர்கள் பலரும் புதுமுக நடிகர், நடிகை என்ற போதும் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக நடித்து உள்ளனர்.
       படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.  ஊரிலிருந்து நாசரின் மகன், மகள் என ஒட்டுமொத்த குடும்பமும் வந்தது கண்டு மகிழ்ச்சி பொங்கிட மிகவும்  நெகிழ்ச்சியாக நடித்து உள்ளார் நடிகர் நாசர். இயக்குனராக இருந்து பல படங்கள் இயக்கியவர், நல்ல நடிகர், பாத்திரத்தை உணர்ந்து பாத்திரமாகவே மாறி மிக நன்றாக நடித்துள்ளார்.  சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கலாம்.  பிம்பம் பற்றிய கவலையின்றி தலையை வழுக்கை ஆக்கி முதியோர் வேடத்தில் மிக நன்றாக நடித்துள்ளார்.
       ஊரிலிருந்து வந்த சிறுவன் போட்டி பொறாமையில் சரவெடி வைத்து விட ஆடு, மாடு, கோழிகள் மிரண்டு ஓட, ஆங்கிலம் மட்டுமே பேசித் திரியும் நகரத்து சிறுவனிடம் கிராமத்து பள்ளியில் படிக்கும் சிறுமி தமிழ், “ஆங்கிலத்தில், வெடி போட்டு விலங்கு, பறவைகளை துன்புறுத்தலாமா? இனிமேல் இதுபோன்று செய்யாதே! என அறிவுறுத்தும் காட்சி நன்று.  எங்கு படித்தாலும் படிக்கும் குழந்தை நன்கு படிக்கும் என்ற வசனம் நன்று.
       நலிந்து வரும் விவசாயத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளார் இயக்குனர் விஜய்.  படத்தில் ஆபாசம் எதுவுமின்றி இயக்கி உள்ளார்.  குடும்பத்துடன் தைரியமாக பயமின்றி சென்று பார்க்கும் படமாக இயக்கி உள்ளார்.  பாராட்டுக்கள்.  கிராமங்களில் உள்ள மூடநம்பிக்கைகளை மிக இயல்பாக சாடி உள்ளார். வெற்றிலையில் மை போட்டு பார்க்கும் பித்தலாட்ட சாமியார் முகத்திரையை கிழித்து உள்ளார்.  அன்போடு வளர்த்த கோழி, சேவலை அடித்து உண்பது அன்பன்று.
       சிறுமி தமிழ், ஏதாவது தவறு செய்தால், தாத்தாவிடம் உக்கி (தோப்புக்கரணம்) போடுவாள். சேவலை மறைத்து வைத்து இருப்பதை சிறுவன் பார்த்து விடுகிறான். அவனிடமம் யாரிடமும் சொல்லாதே எனக் கெஞ்சுகிறாள்.  அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் வணக்கம் செய் என்று மிரட்டி வைக்கின்றான். வீட்டில் உள்ள ஒவ்வொருவராக சேவலை ஒளித்து வைத்து இருப்பதை பார்த்து விட ஒவ்வோரிடமும் கெஞ்சி தாத்தாவிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள்.  கடைசியில் சேவல் மாடியில் இருப்பதை சிறுவன் சொல்லிவிட சேவலை சாமிக்கு படையல் செய்ய கொண்டு வந்து விடுகின்றனர்.
       தவறு செய்தது யார் என்று கேட்க, சிறுமி தமிழ் உள்பட குடும்பமே உக்கி போடுகின்றனர்.  தாத்தா நாசர் மனம் மாறி, வெட்டப்பட உள்ள சேவலை காப்பாற்றி நாங்கள் சைவம் ஆகி விட்டோம் என்கின்றனர். 
       இப்படி ஒரு நிகழ்வால் சைவமாகியதாக இயக்குனர் விஜய் அம்மா சொன்னதாக கடைசியில் எழுத்து வருகின்றது.  காய்கறி சந்தை சத்தம் படம் முடியும் போது கேட்கின்றது. 
       இயக்குனர் விஜய் படம் முழுவதும் தனி முத்திரை பதித்து உள்ளார்.  தெய்வத்திருமகள் என்ற அற்புதமான திரைப்படம் தந்த இயக்குனர் விஜய்-யின் அற்புதமான படம் சைவம். 
       கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
       எல்லா உயிரும் தொழும். 
           குறள் 260
என்னும் திருக்குறள் விளக்கமாக வந்துள்ளது.  பாராட்டுக்கள்.  குடும்பத்துடன் சென்று பாருங்கள்.
-- 

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்