ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு முனைவர். பா. சிங்காரவேலன் தமிழ் உதவிப் பேராசிரியர்

ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா. இரவியின் பங்களிப்பு

முனைவர்.  பா. சிங்காரவேலன்தமிழ் உதவிப் பேராசிரியர்
அரசு கலைக்கல்லூரி, மேலூர்.
98650 55421
 

ஜென் குருக்கள் தமது ஆன்மீகத்தின் கணநேர அனுபவங்களைச் சிக்கெனப் பதிவு செய்ய வடித்துக் கொண்ட வடிவமே ஹைக்கூ.  கருத்துக்களைச் செறிவுடன் செறித்து வைக்கச் செப்பு போல் இடந்தரும் கவிதை வடிவமே ஹைக்கூ என்று பாரதியார் குறிப்பிடுகிறார். 
மின்னல் கவிதைகள், மின்மினிக் கவிதைகள், நறுக்குகள் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் ஹைக்கூ கவிதையைக் கவிஞர் இரவி, ‘அளவு சிறியது / அர்த்தம் பெரிது / ஹைக்கூ (ப.12) என்கிறார்.  இவர் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார்.  சுருக்கமும், நுண்மையும், தெளிவும் நிறைந்த ஹைக்கூ கவிதையின் வழி சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு எழுதத் தொடங்கி
12 நூல்களை வெளியிட்டுள்ளார்.  இணையங்களின் ஆசிரியராக இருந்து கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்களை எழுதி வருகிறார்.  இவருடைய ‘மனதில் ஹைக்கூ
 என்ற நூலில் இடம் பெற்ற கவிதையின் கருத்தாழத்தைக் காண்போம்.
அனுபவக் களஞ்சியம்
அறிவு நிறைந்து அனுபவக் களஞ்சியமாகத் திகழ்பவர்கள் முதியோர்கள். புது உலகில் வாழ்ந்தாலும் பழமையின் பிடி தளராமலும், மாறாமலும் வாழ்ந்தவர்களை, வாழ்ந்து வருபவர்களை நினைவூட்டும் பழைய பொருட்களைக் கவிதையில் பதிவு செய்துள்ளார் கவிஞர்.  ‘தாத்தா, பாட்டியை / நினைவூட்டியது / வெற்றிலைப் பெட்டி (ப.9).
வெண்மை நிற வெற்றிலைப் பெட்டி, வெண்கல உரல், உலக்கை, வாசனைச் சுண்ணாம்பு, சீவல், புகையிலை, ஏலக்காய் என்ற கலவையை வாயில் குதப்பி மணக்க மணக்க வெற்றிலை போடுவதும், விருந்தினரை உபசரிப்பதும், உரையாடுவதும், வெளிப்படையாகக் கருத்தைப் பதிவு செய்வதுமான முதியோரின் மரணம் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதையும், நினைவுச் சின்னங்களாக வெற்றிலைப்பெட்டி இருப்பதையும் கவிதையில் காட்சிப்படுத்தியுள்ளார்.  அதுபோல் பிள்ளைகள், பெற்றோரைக் காப்பகங்களில் சேர்க்கும் அவல நிலையை, ‘குஞ்சுகள் மிதித்து / கோழிகள் காயம் / முதியோர் இல்லம் (ப.6) என்றும், மேற்கத்திய இசையின் ஆதிக்கத்தால் தொன்மையான இசைக்கருவிகளை புல்லாங்குழலும், வீணையும் காட்சிப்பொருளாகக் கிடப்பதை‘ரசனையற்றவனுக்கு / வெறும் குச்சி தான் / புல்லாங்குழல் (ப.34) என்றும், ‘பயனற்ற போதும் / பயனானது காட்சிப்பொருளாய் / வீணை (ப.46) என்று கவிதை இயற்றியுள்ளார்.
கவிஞர்கள்
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை வெறும் புகழ்ச்சியில்லை
.    (பாரதியார் கவிதைகள், ப.45) என்று
பாரதி தாம் நேசித்த கவிஞர்களைப் பாடினார்.  அதுபோல் கவிஞர் இரவி இறவாப் புகழுடைய கவிதையைப் புனைந்த பாரதியை, ‘மண் பெண் / விடுதலைக்குப் பாடியவர் / மகா கவி (ப.28) என்று குறிப்பிடுகிறார்.
      பாரதியின் படைப்பில் ஈடுபாடு கொண்ட கனக சுப்புரத்தினம், பாரதிதாசன் என்று புனைப்பெயரை வைத்துக் கொண்டு தந்தை பெரியாரின் திராவிட இயக்கச் சிந்தனையைத் தம் படைப்பின் வழி எடுத்துரைத்தவர் என்பதைக் கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  ‘பெரியாரின் போர் முரசு / பார்போற்றும் பா அரசு / புரட்சிக்கவிஞர்(ப.32).  பண்டிதர்கள் படித்துப் பயன்பெற்ற சங்க இலக்கியத்தைப் பாமரனும் அறிந்து இன்புறும்படிப் பாடல் புனைந்த கவியரசு கண்ணதாசன்.  ‘சங்க இலக்கியத்தை / சாமானியருக்குச் சமர்ப்பித்தவர் / கவியரசு (ப.35)என்கிறார்.  இப்படிக் காலத்தால் காவியமான கவிஞர்களைப் பாடியதோடு, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உயிரிரக்கம் பாடிய வள்ளலாருக்கு ஒப்புமையாக பெருந்தலைவர் காமராசரின் மதிய உணவுத் திட்டத்தின் சிறப்பினைபசியாற்றிப் படிப்புத் தந்த / படிக்காத வள்ளலார் / காமராசர் (ப.24) என்று கவிதையாக்கியுள்ளார்.
ஊடகம்
      பத்திரிகை, வானொலி, வார, மாத இதழ்களை வாங்கிப் படிப்போரைக் காட்டிலும் தொலைக்காட்சியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருகி விட்டன.  மாநில அரசு வாக்காளர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியதை யாவரும் அறிவர்.  அத்தகைய தொலைக்காட்சி என்ற ஊடகம் மனித மனங்களில் ஏற்படுத்திய மாற்றம் தான் என்ன? எவற்றைப் பதிவு செய்கின்றன என்பதைக் கவிஞர் இரவி கவிதையில், ‘தமிழ்ப் பண்பாடு சிதைப்பு / தமிழர் திருநாளில் /  தொ(ல்)லைக் காட்சிகள் (ப.10) என்று சாடுகிறார்.  தமிழர் திருநாளில் தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைக் கடந்து, தமிழறியா நடிகர், நடிகையரின் பேட்டி, ஆட்டம், பாட்டம் என்று இடம்பெறுவதும், அன்றாட வாழ்வில் குறிப்பிட்ட நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டதையும், சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்தைத் தாண்டி குடும்பத்தினருக்குள் அன்னியப்பட்டுக் கிடக்கும் நிலையையும், தொலைக்காட்சிப் பெட்டி மனிதர்களை மனநோயாளிகளாக மாற்றி வருகின்ற அவலத்தையும் கவிஞர் கவிதையாக்கி உள்ளார்.  ‘வெற்றி பெற்றன / ஊடகங்கள் / பெருகும் மனநோயாளிகள் (ப.53) தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தி விடுங்கள் என்ற எச்சரிக்கைகளைத் தாண்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முட்டாள் பெட்டிக்குள் முடங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது. 
தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடுத்த தகவல் தொடர்பு ஊடகமாக அலைபேசி விளங்குகிறது.  வாகனம் ஓட்டும் போதும், நடக்கும் போதும் அலைபேசியில் பேசக்கூடாது என்ற எச்சரிக்கை வாசகங்களைப் பொருட்படுத்தாத மக்கள் மணிக்கணக்காய் பேசுவதால் தீய விளைவைக் கவிஞர் இரவி, ‘மூளைப்புற்று நோய் / முற்றிலும் இலவசம் / செல் பேசியவுடன் (ப.52) என்ற கவிதையில் பதிவு செய்துள்ளார். 
மேலும் திரைப்படம் என்ற வெகுசன ஊடகத்தில், பொருந்தாத கதைகள், மனதுக்கு ஒவ்வாத காட்சிகள், சிலேடை வசனங்கள், தமிழறியா வெள்ளைத் தோல் நடிகையரின் கவர்ச்சிகள், மேற்கத்திய இசை ஆதிக்கம் என்ற நிலையில் விற்பனையை முன்னிறுத்திய திரைப்படங்களின் வருகையையும், பண்பாட்டுச் சீர்குலைவையும் எண்ணிப் பின்வருமாறு கவிதை புனைந்துள்ளார்.  ‘கதையை விட / சதைக்கே முன்னுரிமை / திரைப்படத்தில்(ப.54). ‘தொகை கூடக் கூட / துணி குறைந்தது / நடிகைக்கு (ப.62).
நம்பிக்கை
      நம்பிக்கை, ‘மனிதனின் மூன்றாம் கை என்பர்.  இன்றைக்கு மக்கள் தங்களின் அன்றாடப் பிரச்சினைகளிலிருந்து விடுபட சோதிடம், வாஸ்து, வழிபாடு, இடமாற்றம் என்று மனதுக்கு அமைதி தரும் போக்கில் இறங்குகின்ற நிலையைக் காண முடிகிறது. 
      ‘ஏமாற்றிப் பிழைப்பவர்களின் / ஏக வசனம் / சோதிடம் (ப.14)
      ‘உழைக்காமல் உண்ணும் / சோம்பேறிகளின் உளறல் / வாஸ்து
 (ப.26)
      ‘மழலைகளிடம் / மூட நம்பிக்கை விதைப்பு / மயிலிறகு குட்டி போடும்
 (ப.22)
என்பவை மூடநம்பிக்கைகளாகும். 
உழைப்பும், முயற்சியும், தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றும் என்று தன்னம்பிக்கை இல்லாதவர்களால் வளர்க்கப்படும் மூடநம்பிக்கைகளைச் சாடுகிறார்.  ஆனால் மன ஒருமைப்பாட்டை, மத வேறுபாட்டைக் களையும் தியானத்தைப் போற்றுகிறார்.  ‘உடல் தூய்மை நீரால் / உள்ளத் தூய்மை / தியானத்தால் (ப.50) என்கிறார்.  ‘மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்ற திருமூலரின் வாக்கிற்கு ஏற்ப மனதை ஒரு நிலைப்படுத்தும், மன அழுக்கை அகற்றும் மனம் வாக்கு காயத்தின் மகிமையை அறிந்து கொள்ளும் தியானத்தின் மகிமையை, ‘புறக்குப்பை உரமாகும் / அகக்குப்பை / தாழ்வாகும். (ப.56.)
      உள்ளத்தில் உண்மையொளி உண்டாகின் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்பார் பாரதியார்.  அத்தகு ஞானஒளி, ஒவ்வொரு மனிதனின் மனதுக்குள்ளும் உருவாக வேண்டும் என்பதை ஆன்மீகச் சிந்தனையோடு கவிஞர் இரவி கவிதையாக்கி உள்ளார்.
      மனித வாழ்க்கை அர்த்தம் நிறைந்தது.  ஒவ்வொறு மனிதனும் மண்ணில் வாழ்ந்ததற்கான அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும்.  அது தான் வாழ்க்கை.  ‘கருவறை கல்லறை / இடைவெளி மட்டுமல்ல / வாழ்க்கை (ப.45) மனிதர்கள் வாழும் காலத்தில், அறிவது அறிந்து, அஞ்சுவது அஞ்சிச் செயலாற்ற வேண்டும் என்கிறார் கவிஞர்.
பெண்கள்
      பருவ வயதில் அரும்பும் காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம்.  காதலைக் கண்டுபிடித்தவன் நன்றிக்குரியவன் என்கிறார் வாலி.  காதல் ஒரு தேன்கூடு என்கிறார் கவியரசு கண்ணதாசன்.  காதலித்துப்பார், உன்னைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும் என்கிறார் வைரமுத்து இப்படி உடலில் ஏற்படும் மாற்றங்களை, புலனின்பங்களைக் கவிஞர் ‘இரசாயன மாற்றம் / ரசனைக்குரிய மாற்றம் / காதல் (ப.16) என்கிறார். 
நீரிலிருந்தும், சூரிய வெப்பத்திலிருந்தும் மின்சாரத்தைக் கண்டுபிடித்த அறிவியல் விஞ்ஞானிகளே, கன்னியர்களின் கண்களிலிருந்தும் மின்சாரம் எடுக்கும் அறிவியலைக் கண்டுபிடியுங்கள் என விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றார். ‘விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் / கண்டுபிடியுங்கள் மின்சாரம் / மங்கையர் விழிகளில் (ப.50). இன்றைக்கு நிலம், நீர், காற்று, மாசுபட்டுக் கிடப்பதால் செயற்கை நீர் மற்றும் காற்றைக் காசு கொடுத்து வாங்கும் அவல நிலை பெருகி விட்டதை ‘இன்று குடிநீர் / நாளை சுவாசக் காற்று / விலைக்கு வாங்கிவோம் (ப.64)  கவிதையாக்கி உள்ளார். 
வரதட்சணைக் கொடுமையால் கன்னியர்கள் முதிர்கன்னியாக உலவும் அவலத்தை ‘கல்யாணி இராகம் / தினமும் பாடும் பாகவதர் / மகள் திருமணமின்றி (ப.46) என்றும், வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளோடு மகிழ்ந்திருப்பதையும், தாயின் விடுமுறைக்காகப் பிள்ளைகள் ஏங்கிக் கிடப்பதையும் கவிஞர் கவிதையாக்கி உள்ளார்.  ‘அம்மாவை விட / குழ்ந்தைகள் மகிழ்ந்தன / அம்மாவிற்கு விடுமுறை (ப.22).
ஈழம்
      ஈழப்போராட்டத்தில் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் அவல நிலையையும் மீட்டெடுக்கப் போராடுவோரையும், தனி ஈழக்கோரிக்கையயை முன்னெடுத்து சென்ற போராளிகளைக் கவிஞர் பீனிக்ஸ் பறவையோடு ஒப்புமைப்படுத்துகிறார்.  ‘இன்னும் வாழ்கின்றனர் / பீனிக்ஸ் பறவைகள் / போராளிகள் (ப.20).
தன் வீட்டையும் நாட்டையும் பற்றிக் கவலைப்படாது மதுவுக்கு அடிமைப்பட்டுக் கிடப்போரை எண்ணி வருந்திய கவிஞர் ‘ஈழம் அழிந்தாலும் / தமிழினம் ஒழிந்தாலும் / நிரம்பி வழியும் மதுக்கடை (ப.20) என்றும், ‘அரசாங்கம் நடத்தும் / அவமானச் சின்னம் / மதுக்கடை என்ரும் கவிதை புனைந்துள்ளார்.
தானம்
      ‘தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற நிலை மாறி இரத்த தானம், கண் தானம், உடல் தானம் என்ற கருத்து வளர்ச்சி பெற்றுள்ளது.  இத்தகைய தானங்களால் பயன்பெறுவோர் பலராவர்.  மண்ணுக்கும் தீயிக்கும் இரையாகும் உடம்பை மற்றவர் பயன்பெறுமாறு தானம் செய்யலாம் என்ற முற்போக்குச் சிந்தனையையும் கவிஞர் கவிதையில் காண முடிகின்றது.  ‘இறந்த பின்னும் / இயற்கையை ரசியுங்கள / விழிக்கொடை (ப.18). ‘படிக்காவிட்டாலும் / பாடமாகுங்கள் மருத்துவமனைக்குள் / உடல் தானம் (மேலது).
தீண்டாமை
      ‘தீண்டாமை ஒரு பாவச் செயல் மனிதர்களுக்குள் வேறுபாடு காண்பதும், ஒதுக்குவதும் குற்றமாகும். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய தேசத்தில் தீண்டாமை குறித்துச் சிந்திப்பது சிறுமை.  ‘பொக்ரான் சோதனை / சந்திராயன் பெருமை / தீண்டாமை சிறுமை (ப.26)என்றும், ‘மனித விலங்குகளின் / மனதில் தோன்றுவது தீண்டாமை (மேலது) என்றும், ‘கூடி வாழும் பறவைகள் / மோதி வீழும் மனிதர்கள் / யார் உயர்திணை? (ப.38) என்ற வினாவையும் முன்னெடுத்துச் செல்கிறார்.
முடிவுரை
      புத்தகங்களை வாங்குவதும், வாசிப்பதும் படைப்பையும், படைப்பாளர்களையும் நேசிப்பதுமான நிலைப்பாடு அருகிவரும் காலத்தில், ஹைக்கி கவிதைகளை இயற்றி சமகாலச் சிந்தனையைப் பதிவு செய்து வருகிறார் கவிஞர் இரவி.  மூன்று வரிகளுக்குள் கருவை உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளர் இரவி, தமிழன்பன், அறிவுமதி, கழனியூரன், மித்ரா போன்ற ஹைக்கூ படைப்பாளரின் வரிசையில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை.
 

.

கருத்துகள்