பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

பூ பூக்கும் வானம் !


நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மின்னல் கலைக்கூடம்   117. எல்டாம்ஸ்  சாலை ,சென்னை .600018
விலை ரூபாய் 50. பேச 9841436213.

நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் பாக்யா வார இதழ் வாசகர் என்பதால்  பாக்யா வார இதழ் ஆசிரியர் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்கள் .அணிந்துரை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .

ஹைக்கூ தளத்தில்  ஓய்வின்றி இயங்கி வரும் இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ,கவிஒவியா மாத இதழ்  ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி இருவரின்
அணிந்துரையும் மிக நன்று .பதிப்பாளர், பண்பாளர்,  இனியவர், பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர், கவிஞர் வசீகரன் அவர்கள் பதிப்புரையில் ' நயத்தக்க சுவை ' என்ற ஒற்றை வரியில் நூலின் தரத்தை உணர்த்தி உள்ளார் .

பார்த்ததை,ரசித்ததை, உணர்ந்ததை, உற்று நோக்கி சிந்தித்து அசை போட்டு ஹைக்கூ வடிப்பது  ஒரு   கலை . நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்களுக்கு அக்கலை  நன்கு கைவரப்பெற்ற காரணத்தால் ஹைக்கூ நன்கு வடித்துள்ளார். பாராட்டுக்கள் . 

தேர்தலின் பொது வறுமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி  தருகின்றனர் .வென்றது தன் குடும்ப வறுமையை ஒழித்து விட்டு மக்கள் வறுமையை மறந்து விடுகின்றனர் .ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை .வறுமை அப்படியே தொடர்கின்றது என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் ஹைக்கூ நன்று .

தேசிய உடை 
பரிசீலனையில் 
கோவணம் !

கடவுள் இல்லை என்று சொல்லும் போது கடவுள் என்ற சொல்லை வேறு வழியின்றி நாத்திகரும் பயன்படுத்த வேண்டி உள்ளது .அதனை கவனித்து நுட்பமாக வடித்த ஹைக்கூ நன்று .

இல்லை என்பதில் 
ஒளிந்திருக்கிறார் 
இல்லாத கடவுள் !

காதலித்து விட்டு குடும்ப  சூழ்நிலை  காரணமாக காதலனை மறந்து விடு என்று சொன்னால் .அந்தச் சொல்லை அவன் உயிர் உள்ளவரை மறப்பது இல்லை என்பது உண்மை .அதனை உணர்த்தும் ஹைக்கூ 
ஒன்று மிக நன்று .

மறந்து விடுங்கள் 
அவள் சொன்னதை 
மறக்க முடியவில்லை !

பெண்ணைப் பெற்றவளின் தந்தை கடனை வாங்கி வட்டிக்கு வாங்கி மகளுக்கு தங்க நகை ,சீர் வாங்கும் அவலம் இன்றும் தொடர்கின்றது. மகள் தந்தையின் துன்பம் நினைத்து வருந்துவாள் .காலங்கள் மாறியபோதும் வரதட்சணைக் கொடுமைகள் மட்டும் மாறவே இல்லை .

முதலிரவு ருசிக்கவில்லை 
வருந்தும் நினைவுகள் 
தந்தை பட்டகடன் !   

ஈழ விடுதலை சாத்தியமில்லை என்று சிலர் உளறி வருகின்றனர். முயன்றால் முடியாதது எதுவுமில்லை .ஈழ விடுதலை சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தும் ஹைக்கூ .

தெற்கு சூடான் விடுதலை
தமிழர்களுக்கு வந்தது 
தமிழீழ நம்பிக்கை !

மீன்களை  நம்  கண்  முன்  காட்சிப்படுத்தி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .
  
அடித்து செல்லும் வெள்ளம் 
எதிர்த்து  நீந்தும் மீன்கள் 
தன்னம்பிக்கை !

வெங்காயம் உரிக்கும்போது கண்ணில் கண்ணீர் வரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அதனை ஹைக்கூ பார்வையில் பார்த்துள்ளார் பாருங்கள் .

துகிலுரிப்பவனை
அழ வைக்கிறாள் 
வெங்காயப் பாஞ்சாலி !

ஈழத்தில் நடந்த கொடுமைகள் மறக்கவும் ,மன்னிக்கவும் முடியாதவை ஈழக் கொடுமைகள் புரிந்த கொடூரன் ஐ .நா .மன்றத்தால் விரைவில்   தண்டிக்க வேண்டும் என்பதே ஒட்டு  மொத்த  உலகத் தமிழர்களின் விருப்பம் .

இந்தியப் பெருங்கடல்  
நிறம் மாறுகிறது 
ஈழத்தமிழர் ரத்தம் ! 

பூ பூக்கும் வானம் நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வானில் பூ பூக்குமா ? பூக்கும் .வானில் தெரியும் நட்சத்திரமே வானில்  பூத்த  பூ .
நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் புதுக் கவிதை எழுதியவர் ஹைக்கூ எழுத முன் வந்துள்ளார் ..பாராட்டுக்கள்.
பூ பூக்கும் வானம் என்ற இந்த நூல் படித்தால் படிக்கும் வாசகர் மனதில் இன்ப பூ பூக்கும் என்பது உண்மை .தொடர்ந்து எழுதுங்கள் .முன் பின்  அட்டை வடிவமைப்பு , உள் அச்சு ,பொருத்தமான புகைப்படங்கள் யாவும் மிக நேர்த்தியாக  பதிப்பித்த  பதிப்பாளர்  கவிஞர் வசீகரன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .
 .
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்