புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !

புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017.
தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com 
பக்கம் 224 விலை ரூபாய் 150
கோபுர நுழைவாயில்:
பதினெண்கீழ்க்கணக்கு அக நூல்களில் ஒன்று ஐந்திணை ஐம்பது.இரா.இரவியின் பதின்மூன்று நூல்களில் ஒன்று அகமும் புறமுமான திறனாய்வு ஐம்பது! ஆம்!தாம் படைத்த ஆறைம்பது( 300)திறனாய்வுகளில் ஐம்பது முத்தானவற்றைத் தேர்வுசெய்து மெருகேற்றித் தங்கச் சிலம்பிலிட்டு தமிழன்னையின் பாதங்களுக்கு ஆபரணம் சூட்டி அழகு பார்த்திருக்கின்றார் இரா.இரவி. நூலின் பகுதிகள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து,அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்விதம் கூறுவது பகுப்புமுறைத் திறனாய்வு.நூலின் பல்வேறு தன்மைகளை ஆய்வுசெய்து முடிவாக அதன் பொதுத் தன்மை எவ்விதமாய் உள்ளது என்பதனைக்கூறுவது செலுத்துநிலைத் திறனாய்வு.இவை இப்படியிருக்க, 'புத்தகம் போற்றுதும்' என்ற இரா.இரவியின் நூலானது பாராட்டுமுறைத்திறனாய்வு என்னும் வகையாக நூலின் நலன் மற்றும் நயங்களை எடுத்துரைக்கும் ஒன்றாக உள்ளது. எனலாம்.
திறனாய்வா?புலனாய்வா?
அயல்நாடுவாழ் அறிஞரின் அணிந்துரை ஒன்று!உள்நாடுவாழ் மூதறிஞரின் முகவுரை மற்றொன்று என நூலின் அழகுக்கு மேலும் அழகு ஊட்டுகின்றது முதல் பதின்பக்கங்கள்!திறனாய்வு என்பவள் முயற்சி-உண்மை என்ற பெற்றோரின் மூத்த புதல்வி.இவள் நடுவுநிலைமை என்னும் தாதியால் மெய்யறிவு என்னும் அரண்மனையில் வளர்க்கப்பெற்றவள் -என்பது வெளிநாட்டு அறிஞர் டாக்டர் ஜான்சன் அவர்களின் கூற்று!திறனாய்வு குறித்த இந்த வரையறை இரா.இரவிக்கும் அவரது இந்நூலுக்கும் சரிவரப்பொருந்தும். ஒருநூலின் நிலைபேறுடைய பகுதி எது?வாழ்கின்ற காலத்திற்கேற்ற பகுதி எது?என்று பாகுபாடு செய்து கவி இரா.இரவி இந்த ஐம்பது நூல்களையும் திறனாய்வு செய்திருக்கின்றார்.
விருந்தா?மருந்தா?
நூலாசிரியர் மதிப்பீட்டிற்குள் நுழையும் முன்பே அந்நூலின் அட்டைப்படம்,அணிந்துரை,பதிப்பு,உள் அச்சு,ஆசிரியரின் பண்புநலன்,நூலில் சொல்லப்பட்டக்கருத்துக்களுக்கு ஏற்ப சமூகத்தில் நிகழ்த்து கொண்டிருக்கும் நடப்பியல்செய்திகள்,தற்கால கவிஞர்களின் படைப்பை ஒத்த முற்காலப்புலவர்களின் கூற்று எனப் பல்வேறு தீங்கனிகளின் சாற்றைப் பிழிந்து சரியானப் பக்குவத்தில் பழரசமாக இலக்கியத் தாகம் மிக்கவர்க்கு பகிர்ந்தளித்துள்ளார்.
எதுமுதல் எதுவரை?
மூதறிஞர் முதல் முதுமுனைவர் வரை,கலைமாமணி முதல் கவிக்கோ வரை,தமிழ்த்தேனீ முதல் தமிழ்ச்சுடர்வரை,மருத்துவர் முதல் மாற்றுத்திறனாளிகள் வரை,பத்திரிகையாளர் முதல் பொறியாளர்வரை,ஆணையாளர்கள் முதல் ஆட்சியாளர்கள்வரை என பால்பேதம் - சமயபேதம் பாராது பல்வேறு துறை சார் இலக்கியவாதிகளது படைப்புக்களின் திறனாய்வும் இந்நூலுக்குள் அடக்கப்பட்டிருப்பது ஆச்சிரியத்திலும் ஆச்சிரியமே! மதிப்பீட்டாளராகிய இரா.இரவி ஒவ்வொரு நூலையும் வார்த்தைக்கு வார்த்தை,வரிக்குவரி வாசித்து, உள்வாங்கி விமர்சித்திருப்பதைப் பக்கத்திற்குப்பக்கம் உணரமுடிகின்றது.நாவல்,வரலாற்று நூல்,கவிதை,கட்டுரை,ஒப்பீட்டு இலக்கியம்,தன்னம்பிக்கை நூல்,ஹைக்கூ,சென்ரியு -என அன்றுமுதல் இன்றுவரையிலான இலக்கியவகைகள் விமர்சிக்கப்பட்டுள்ளதைக்காணும்பொழுது ஒரு தமிழறிஞரால் மட்டுமே செய்ய இயன்ற ஒரு செயல்பாட்டை துணிவுடன் செய்வதற்கென இரா.இரவி விமர்சனக்களத்தில் இறங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்றே! விமர்சகராகிய இரா.இரவி ஒரு சமூக சீர்திருத்தாளர்,தமிழுணர்வுமிக்கவர்,தேசப்பற்று மிகுந்தவர் என்பதனை அவரது திறனாய்வில் இடம்பெறும் மேற்கோள்வழி உணரமுடிகின்றது.
பாரதி வாழவே இல்லை
என்கிறது பொருளாதாரம்!
சாகவே இல்லை
என்கிறது சரித்திரம்!(நெல்லை ஜெயந்தா-நிலாவனம். ப 129)
கல்வெட்டு வாசகம்:
எடுக்கும்போது வாள்!
தடுக்கும்போது கேடயம்!
எழுதும்போது கலப்பை!
அள்ளும்போது அகப்பை!(டாக்டர்.வெ.இறையன்பு-ப.196
) பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டிய கவிதைவரிகள்:
கபடியில் விழுந்த
காயத்திற்கு மருந்து
உற்ற நண்பன் தூவும்
ஒருபிடி மண்"(ப.121- நட்பின் நாட்கள் பா.விஜய்)
படிக்கவேண்டும் என்ற ஆவலைத்தூண்டும் அளவிற்கு விமர்சிக்கப்பட்ட நூற்பட்டியல் இதோ!
திசைகளைத் திரும்பிப்பார்க்கிறேன் -கவிதாசன வா...வியாபாரி ஆகலாம்! -வெற்றியாளர் அமுதா பாலகிருஷ்ணன் வளையாத பனைகள்-இரா.நந்தகோபாலன் இ.ஆ.ப. கவிதைக்களஞ்சியம் -தமிழ்த்தேனி இரா.மோகன் அவ்வுலகம்--டாக்டர் இறையன்பு லிங்கூ-கவி லிங்குசாமி பெண்ணியநோக்கில் கம்பர் -முனைவர் லெஷ்மி மடித்துவைத்தவானம்-புதுயுகன் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரியில்லை!அப்துல்ரகுமான் நட்பின் நாட்கள் -வித்தகக் கவிஞர் பா.விஜய்
மனமார.....
வருடம் ஒருமுறை தமுக்கம் மைதானத்தில் நிகழும் புத்தகக் கண்காட்சியின் குறுமைவடிவமே இரா.இரவியின் இந்த 'புத்தகம் போற்றுவோம்"என்னும் திறனாய்வு நூல் எனலாம். ஹைக்கூ என்னும் வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருந்த கவிஞர் இரா.இரவி விமர்சனச் சாலையில் பயணிக்க எடுத்திருக்கும் புது முயற்சிக்கு இணையதளவாசகி என்ற முறையில் பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு தங்களின் இலக்கியப்பணி அலைகடல் தாண்டி அகிலம் வரை எட்ட வாழ்த்துக்கள்!
இலக்கியரசனை
மிகுந்தோர் இந்நூலை வாங்கிப்படியுங்கள்! கோடைகாலப் பழரசமாய் உங்கள் தாகம் தீர்க்கும்!

கருத்துகள்