வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2

நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன்


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26.  அலைபேசி : 98410 42949,  விலை : ரூ. 150.  பக்கம் : 208

*****
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது.  கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  இப்படித்தான் பல இணையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  வெகு சிலர் மட்டுமே இரண்டு பேரும் இலக்கிய ஆர்வமுள்ள இணையர்களாக இருக்கிறார்கள்.  தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் என்ற இலக்கிய இணையர் வரிசையில் புதுகை மு. தருமராசன் அவர்களையும் பேராசிரியர் பானுமதி அவர்களையும் சேர்க்கலாம்.  புதுகைத்தென்றல் என்ற மாத இதழின் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் மனைவி என்பதற்காக வாய்ப்பு வழங்காமல் எழுத்தின் வலிமை கண்டு உணர்ந்து புதுகைத் தென்றலில் தொடராக பிரசுரிக்க வாய்ப்பு வழங்கி அதனை தொகுத்து நூலாகவும் பதிப்பித்தவருக்கு பாராட்டுக்கள்.
பெண் குழந்தை பிறந்தால் பேதலிக்கும் அனைவரும், இந்த நூல் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். பெண்ணின் பெருமையை, ஆற்றலை, தியாகத்தை, உழைப்பை, புகழை, போராட்டகுணத்தை, துணிவை, வீரத்தை, இலட்சிய வேட்கையை, தாகத்தை உணர்த்தும் உன்னத நூல் இது.
16 கட்டுரைகளிலும் தொடக்கமாக சதுரத்திற்குள் சிறு குறிப்பு உள்ளது.  அதனைப் படிக்கும் போதே முழுவதையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார்கள்.  சிறு சுருக்கமே அவர்கள் யார் என்ற பிம்பத்தை வாசகர்களுக்கு உணர்த்தி விடுகின்றன.
கவிக்குயில் சரோஜினி தேவி தொடங்கி இரமணி நல்லதம்பி வரை 16 வைர மங்கையரின் வரலாற்றை ஆய்வுக்கட்டுரை போல பதிவு செய்துள்ளார்கள்.
காந்தியடிகள் பாராட்டிய கவிக்குயில் சரோஜினிதேவி என்பது மட்டுமே அறிந்த எனக்கு அவர் பற்றிய சுருக்க வரலாறு படித்து வியந்து விட்டேன்.  நூலில் உள்ள வரலாற்றில் இருந்து சில வரிகள் இதோ!
கவிக்குயில் சரோஜினிதேவி (1879-1949) இப்படி ஒவ்வொருவருக்கும் பிறப்பு, இறப்பு ஆண்டுகளை எழுதி இருப்பதிலிருந்தே வரலாற்றின் நுட்பத்தை உணர முடிகின்றது.  15வது கட்டுரையான மணலூர் மணியம்மாள் அவர்களின் பிறப்பு ஆண்டு விடுபட்டு உள்ளது.  அடுத்த பதிப்பில் சேர்த்து விடுங்கள்.
“கவிக்குயில் சரோசினி தேவி” கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறு குறிப்பு :
“பாரத கோகிலம்” என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர்.  இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர்.  தொண்டாற்றியவர்.  வெளிநாடுகளில் இந்திய சுதந்திரத்திற்காக வாதாடியவர்.  இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி, உப்பு அறப்போர் வீராங்கனை.  சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்”.
திருமணத்திற்குப் பின்னர் சரோஜினி ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்தார். ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்குச் சென்றார்.  தாஜ்மகால் விடுதியில் தங்கிப் பல கவிதைகள் எழுதினார்.  மக்கள் இவரை ‘கவியரசி’, ‘கவிக்குயில்’ என்று போற்றினர்.
இன்றும் பல பெண் கவிஞர்கள் திருமணமானதும் கவிதை எழுதுவதையே விட்டு விடுகின்றனர். கவிக்குயில் சரோஜினிதேவி  போல திருமணமான பின்னும் கவிதை எழுதிட வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                        
வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
பதக்கம் வேண்டாம் :  அதில் பஞ்சாப் இராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகளை விளக்கினார். அக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம், தமக்களித்த ‘கெய்சரிஹிந்த்’ என்ற பதக்கத்தை அணிந்து கொள்ள முடியாது என்று கூறி அதைத் திரும்ப அனுப்பி விட்டார்.  ‘இந்தப் பதக்கத்தை அணிந்து கொள்வது என் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு’ என்று தெரிவித்தார்.  இச்செய்கை நாட்டில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  அவரைப் போன்றே பலரும் பட்டம் பதவிகளைத் துறந்தனர்.  பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நெஞ்சில் துணிவுடன், நேர்மை திறத்துடன் சரோஜினி தேவி விளங்கினார் என்ற வரலாறு படிக்கப் படிக்க பெண்ணின் பெருமையை மேலும் மேலும் உயர்த்துவதாக நூல் உள்ளது.  நூலாசிரியர் பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு கட்டுரை எழுதுவதற்கு அவர்கள் எவ்வளவு தேடுகிறார்கள்.  எவ்வளவு திரட்டுகிறார்கள் என எண்ணும் போது பிரமிப்பாக உள்ளது.  புள்ளி விபரங்களும் மிக நுட்பமாக வைர மங்கையரின் வரலாறு ஆய்வுக்கட்டுரை என சிறப்பாக வடித்து உள்ளார்கள்.    
சுதந்திரப் போராட்டம் என்பது எத்தனை பேரின் தியாகத்தால் குறிப்பாக பல பெண்களின் அளப்பரிய தியாகத்தால் வந்தது என்பதை நூல் நன்கு உணர்த்தி உள்ளது.  பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும்.
கடலூர் அஞ்சலையம்மாள் (1890-1961)
‘நீல் சிலை அகற்றும் போராட்ட”த்தின் போது அஞ்சலையம்மாளுக்கு கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  அவரது மகள் ஒன்பது வயதுச் சிறுமி அம்மாக்கண்ணு நான்கு ஆண்டுகள் சென்னையில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.  அஞ்சலை அம்மாளின் கணவர் முருகப்ப படையாட்சியும் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.  கர்ம வீரர் காமராசரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்ற செய்தியும், மேலும் காமராசர், காந்தியடிகளிடம் 1927ஆம் ஆண்டு ஆதரவு கேட்டார் என்ற செய்தியும் நூலில் உள்ளது.
இப்படி குடும்பம் குடும்பமாக சிறை சென்றனர். ஒரே அறையில் கழிவறையும் இருக்கும், வெளியே வர முடியாத கொடுமையான சிறை, தில்லையாடி வள்ளியம்மையும் இதுபோன்ற கொடுமை அனுபவித்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது.  கடுங்காவல் சிறை என்றால் மிகவும் கொடூரமானது.  இவ்வளவு கொடுமைகள் அனுபவித்து பெற்றுத் தந்த விடுதலையை நாம் மதிக்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல பெண்மணிகள் தியாகம் செய்துள்ளனர்.
இந்த நூலில் 16 வைர மங்கையரின் வீர வரலாறு நமக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது.  இன்றைய பெண்கள் அனைவரும் சிந்தனையை சிதைக்கும் தொலைக்காட்சிச் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரயம் செய்வதை விடுத்து இதுபோன்ற நூல்களை படித்து சிந்தையை சிறப்பாக்க முன் வர வேண்டும்.  
*****

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்