பாரம் சுமக்கும் குருவிகள்! நூலாசிரியர் : கவிஞர் முனைவர் மரியாதெரசா நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

பாரம் சுமக்கும் குருவிகள்


நூலாசிரியர் :  கவிஞர் முனைவர் மரியாதெரசா 
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

9, சிந்தாமணி தெரு, ஐயப்பன் சாலை, அடுக்ககம், செந்தில் நகர், திருமுல்லைவாயில், சென்னை-600 062. விலை:ரூ. 45.   
*****
            இல்லற விழிப்புணர்வு கவிதைகளை லிமரைக்கூ வடிவில் வடித்துள்ளார்கள்.  நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரிய தெரசா அவர்கள் ஜப்பானிய மொழியில் மிக பிரபலமான ஹைக்கூ வடிவத்தை மட்டுமின்றி லிமரைக்கூ சென்ரியூ வடிவத்தையும் செம்மொழி தமிழ் உள்வாங்கி நிற்பது தமிழின் சிறப்பு.  நூலாசிரியரின் புனைவு மிக நன்று.
      இந்த நூலை நல்ல பல கவிதைகள் எழுதி வரும் கவிஞருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள்.
      “இந்நூல் பாவெழுதி புகழ் கொய்த பூவை
      பாவைக்கு பாதை சொல்லும் கோதை
      ஆண்டாள் பிரியதர்ஷிணி அவர்களுக்கு”
      ஹைக்கூ லிமரைக்கூ சென்ரியூ தொடர்பாக யார் அணிந்துரை கேட்டாலும் இன்முகத்துடன் தந்து உதவிடும் இனிய நண்பர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரை நூலிற்கு சிறப்பு சேர்ப்பதாக உள்ளது. பாராட்டுக்கள்.  முனைவர் ப.ச. ஏசுநாதன் அவர்களின் அணிந்துரையும் மிக நன்று.  இனிய நண்பர் கவிஞர் வசீகரன் பதிப்புரையும் நன்று.
      பாரம் சுமக்கும் குருவிகள்” நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது.  குடும்பத்திற்காக உழைப்பவர்களை குறீயீடாக குறிப்பிட்டு உள்ளார்கள்.  குடும்பம் பற்றிய புரிதல் இல்லாமல், விரைவாக காதல், விரைவாக திருமணம், விரைவாக மணவிலக்கு என்று, எல்லாம் விரைவாக நடைபெற்று விடுகின்றன.  இந்த நூலில் உள்ள லிமரைக்கூ கவிதைகளை கடைபிடித்து நடந்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும். 
      விட்டுக் கொடுத்தல் இன்பம்
      இதை புரியாது ஒருவருக்கு ஒருவர்
      தேடிக் கொள்கிறீர்கள் துன்பம்
      இணையர்கள் இணைபுரிவதன் காரணமாக அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையும் பாதிக்கின்றது என்பதை உணர வேண்டும். 
      உங்கள் கோபத்திற்கு பலி
      நீங்கள் பெற்ற பிள்ளைகள் இது
      நெஞ்சுக்கு தீராத வலி!
      காதல் திருமணம் புரிந்தோர் கடைசி வரை வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.  காதல் திருமணம் புரிந்தோர் பிரிவதால் காதலையே இகழ்கின்றனர் சிலர்.  எனவே கவனமாக பிரியாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
      வாழ்ந்து காட்ட வேண்டும்
      காதல் திருமணம் முறிவதா? நீ
      யோசித்து முடிவெடு மீண்டும்?
      மணவிலக்கு என்பது மிகவும் கொடியது.  வாழ்நாள் முழுவதும் வடுவாக இருந்து வலி தரும்.  கூடிய மட்டும் பிரியாமல் கூடி வாழ்வதே நன்று.
      வேண்டாம் மணமுறிவு
      பணிவுடன் கரம் கூப்பி கேட்கிறேன்
      மேவட்டும் உந்தன் அறிவு
      குடும்பத்தலைவன் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும்.  அவசரம் கூடாது.  கோபம் கூடாது என்பதை வலியுறுத்தும் லிமரைக்கூ .
      குடும்பத் தலைவன் நீ
      உன் கூட்டில் நீயே ஏன்
      வைத்து கொள்கிறாய் தீ
      பொறுமையின்றி பிரிய நினைக்கும் இணையர்களுக்கு புத்தி புகட்டும் விதமாக நூல் முழுவதும் நல்ல நெறி போதிக்கும் விதமாக வாழ்வியல் அறிவுரை கூறும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.
      நன்றாக யோசித்துப் பார்
      குடும்பத்தை பிரிப்பது தவறு தவறு
      வாழ்க்கை அழகுத் தேர்!
      மணவிலக்கு வேண்டி விண்ணப்பித்த வழக்குகளின் எண்ணிக்கை மிகுதி.  அவர்கள் இந்த நூல் படித்தால் இணைவது உறுதி!.
      ஏறாதே நீதிமன்ற படி
      குடும்ப சண்டை தெருவுக்கு ஏன்
      சமாதானமாய் பேசி முடி.
      ஆண் பெண் பேதமின்றி இருபாலருக்கும் நல்ல கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக படைத்து உள்ளார்.
      உனதன்பு கணவன் தானே
      விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்
      வாழ்வை ஆக்காதே வீணே!
      ஆணாதிக்க சிந்தனையை அகற்றும் விதமாக படைத்துள்ளார் சென்ரியூ.
      மனைவி அடிமை அல்ல
      சமத்துவத்தால் முயன்றிடு நீ தம்பி
      மனைவி மனத்தை வெல்ல.
      சூழ்நிலை காரணமாக சினம் காரணமாக பிரிந்தவர்கள் இணையவும் ஆலோசனை வழங்கி உள்ளார்.
      வாழ்க்கை என்பது கரும்பு
      புரிந்து பிரிவை துறந்து மீண்டும்
      குடும்ப வாழ்வுக்கு திரும்பு!
      பெற்ற பெற்றோரைப் பிரிந்து, கணவருடன் வாழ்ந்து வருபவர் பெண்.  அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டியது கணவனின் கடமை.
      தாய் தந்தையரை விட்டு
      உன்னோடு வாழ வந்தவள் மனைவி
      சொல் மனம் தொட்டு.
      இந்த நூலை திருமணத்தின் போது பரிசாக வழங்கலாம்.  இந்த நூல் படித்தால் இணையர்கள் பிரிய மாட்டார்கள்.  பிரிந்தவர்கள் இணைவார்கள்.  நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்