வெற்றி உங்களை அழைக்கிறது நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
வெற்றி உங்களை அழைக்கிறது
நூலாசிரியர் : கவிஞர் நீல நிலா செண்பகராஜன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியனஞ்சான் தெரு, சிவகாசி 626 123. விலை : ரூ. 80
*****
வெற்றி உங்களை அழைக்கிறது. நூலின் தலைப்பே நம்மை படிக்க அழைக்கும் விதமாக உள்ளது. அட்டைப்பட வடிவமைப்பு நன்று. மனதை திறக்கும் சாவியின் படம் நன்று.
நூலாசிரியர் கவிஞர் நீல நிலா செண்பகராஜன் அவர்களின் இரண்டாவது நூல் இது. முதிர்ச்சி மிக்க அனுபவம் மிகுந்த எழுத்தாளர் போன்று, தன் முன்னேற்ற சிந்தனை விதைக்கும் விதமாக, நூல் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் உண்டு. அது விளக்கு போல தூண்டி விட, சுடர் விட்டு எரிந்து ஒளி தரும். தன்னம்பிக்கையை தூண்டி விடும் விதமாகவும், நேர்மறை சிந்தனையை விதைக்கும் விதமாகவும் நூல் உள்ளது. பாராட்டுக்கள். குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.
நூலில், திருக்குறள், திரைப்படப்பாடல், ஆங்கிலப் பொன்மொழிகள், கவிதைகள், வெற்றி பெற்ற மனிதர்கள் என மேற்கோள் காட்டி சிறப்பாக எழுதி உள்ளார். “பாதங்கள் நடக்கத் தயாரானால் பாதைகள் எளிதாக வழிகாட்டும்” - மேற்கோள் காட்டியுள்ள கவிதை நன்று.
நல்ல பெயரைச் சம்பாதிப்பதற்கு நமக்கு தேவையான உத்திகள் குறித்து நேரிய பார்வை, கொண்டிருக்கும் கொள்கையில் உறுதி, இன்பத்தையும், துன்பத்தையும் சரிசமமாகப் பார்க்கும் மனோபாவம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு, தைரியம், முடிவு எடுக்கும் திறன் – என மிக நுட்பமாக வகைப்படுத்தி உள்ளார்.
நூலாசிரியர் கவிஞர் நீல நிலா செண்பகராஜன் குறிப்பிட்டுள்ளவை-களை வாழ்வில் கடைபிடிக்கத் தொடங்கினால் வெற்றி உறுதி என்று அறுதியிட்டு கூறலாம். பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் பெற்ற படைப்பாளி. பல்வேறு இதழ்களில் எழுதி வரும் கவிஞர்.
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ, துன்பங்கள், கவலைகள் மறக்க, வாழ்வியல் ரகசியம் எழுதி உள்ளார். தியானம் செய்தல், யோகாசனம் செய்தல், நல்ல இசை கேட்டல், நல்ல புத்தகம் படித்தல், ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவழித்தல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மனம் விட்டு பேசுதல், பொழுதுபோக்கில் ஈடுபடுதல் இவற்றை கடைபிடித்து வாழ்ந்தால் வாழ்க்கை சிறக்கும். இனிக்கும். உடல்நலம் பேண வேண்டிய அவசியத்தையும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கவியரசர் பாரதியார், ஆஸ்கார் விருதாளர் எ.ஆர். ரகுமான், நகைச்சுவை மன்னர் என்.எஸ். கிருஷ்ணன், பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மட்டைப்பந்து விளையாட்டு வீரர் சச்சின் - இப்படி வெற்றி பெற்ற பலரையும் மேற்கோள் காட்டி வாசகர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக நூல் எழுதி உள்ளார், பாராட்டுக்கள். இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து உலகப்புகழ் அடைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றியும், கனவு காணுதல் பற்றியும் எழுதி உள்ளார்.
நகைச்சுவை உணர்வை வளர்த்தல், மொழி ஆளுமையை வளர்த்தல், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதுல், மனிதநேய சிந்தனை வளர்த்தல் பற்றி விரிவாக விளக்கமாக எழுதி உள்ளார்.
“வெற்றி என்னும் குழந்தையைக் கடின உழைப்பு என்னும் பிரசவத்தின் மூலமே பிரசவிக்க முடியும்” இந்தக் கருத்தை நூலின் பின் அட்டையில் பிரசுரம் செய்துள்ளார்.
“தோல்வி என்னும் முட்களுக்குப் பயந்தால் வெற்றி என்னும் ரோஜாவைப் பறிக்க இயலாது”.
நூலாசிரியர் நீல நிலா செண்பகராஜன் கவிஞர் என்பதால், தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் கவித்துவமாக நூல் எழுதி சிந்திக்க வைத்து வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைத்து உள்ளார். பாராட்டுக்கள்.
******
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக