மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மண்ணுக்கல்ல பெண் குழந்தை !



நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

9.சிந்தாமணி தெரு ,ஐயப்பன் கணபதி அடுக்ககம் ,செந்தில் நகர், திருமுல்லைவாயில் ,சென்னை . 600062. விலை ரூபாய் 45.

இந்த நூல் 3 வருடங்களுக்கு முன்பு  சென்னை சென்ற போது இனிய நண்பர் கவிஞர் வசீகரன் கொடுத்து அனுப்பினார்கள் .விமர்சனம் எழுதலாம் என்று எடுத்துப் படித்த போது இன்ப அதிர்ச்சி .இந்த நூலை எனக்கு காணிக்கை ஆக்கி இருந்தார்கள் நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் .நூல் காணிக்கை  ஆக்கும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல சிறியவன்தான் .இருந்தபோதும் அன்பில் மிகுதியால் காணிக்கை ஆக்கி உள்ளார்கள் . நன்றி . எனக்கு காணிக்கையான முதல் நூல் இது .தாமதமான பதிவிற்கு மன்னிக்க  வேண்டுகிறேன் .

 " ஹைக்கூப் பூக்களாய் தன் இதயத்தை அலங்கரித்து வரும் சகோதரர் இரா .இரவி அவர்களுக்கு ." என்று எழுதி உள்ளார்கள் .

ஹைக்கூ கவிதை எழுதுவது ஒரு வகை நுட்பம் .அதையும் தாண்டிய நுட்பம் லிமரைக்கூ கவிதை எழுதுவது .மூன்று வரிகளில் முதல் வரியின் இறுதி எழுத்தும்  மூன்றாவது வரியின் இறுதி எழுத்தும் ஒன்றி வருதல் .இறுதி எழுத்து ஒன்றி வரும்  இயைபு நயம் நல்குவது லிமரைக்கூ.

மனிதநேயமற்ற பெண் சிசுக் கொலையை மையக் கருவாகக் கொண்டு மிகச் சிறப்பாக லிமரைக்கூ.வடித்துள்ளார்கள் .நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு இந்த நூல் 29 வது நூல். தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி .பல்வேறு இதழ்களில் எழுதி வரும் உழைப்பாளி .

பாவலர் மணிமேகலை குப்புசாமி ,முனைவர் சு .மணி இருவரின் அணிந்துரை  மிக நன்று .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று .

பெண்களின் பிறப்பு விகிதம் வருடா வருடம் குறைந்து வருகின்றது. இதற்கு மூல காரணம்  பெண் சிசுக் கொலைதான் .இந்தக் குறைவு இயற்கை அல்ல செயற்கை .மனிதநேய மாண்பாளர்கள் அனைவரும் உரக்கக் குரல் கொடுத்து  பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறையாமல் காக்க வேண்டும் . அவசர  அவசியமாகும் .

பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல் போட்டுக் கொள்ளும் அவலம் இன்றும் நடைபெற்று வருவது இழுக்கு .அதனை உணர்த்தும் லிமரைக்கூ .

உணவாகி வாழ வைக்கும் நெல் 
உனது உயிரையே பறிக்க பயன்படுத்துகிறாய் 
நியாயமா இது சொல் !

மனிதநேயமற்ற மிருகத்தனமான செயலை கண்டிக்கும் அல்ல அல்ல மிருகங்கள்  கூட தன் குட்டியைக் கொல்வது இல்லை . எனவே மிருகத்திற்கும் கீழான  செயல்  செய்வோர் மனிதர்களா ? மறுபரிசீலனை செய்ய  வேண்டும் .

குழந்தை என்பது புனிதம் 
பெற்ற குழந்தையைக் கொல்வதா - ஐயோ 
எங்கே செல்கிறது மனிதம் ! 
.
பெண் குழந்தையை செலவு என்றும் துன்பம் என்றும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுவோம் .

பெண் என்றால் பாரம் 
கருத்தை மாற்றுதல் அதி அவசியம் 
பெண்தானே புவிக்கு ஆதாரம் !

அயல் நாட்டில் பிறந்து, இந்திய நாட்டில் சிறந்து, உலகப் புகழ் நோபல் பரிசு வென்ற அன்னை தெரசாவின் பெயரை தன் பெயரில் வைத்து இருப்பதால் ,நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்கள் அன்புள்ளத்துடன்  லிமரைக்கூ   வடித்துள்ளார்கள். பாராட்டுக்கள்  

பெண் குழந்தைகள் பாசம் மிக்கவர்கள் .நேசம் மிக்கவர்கள் .அறிவு மிக்கவர்கள் .ஆற்றல்  மிக்கவர்கள் .மனித சமுதாயம் இதனை உணர்ந்திட வேண்டும் .

பெண் ஒரு தேன்கூடு 
இதனை அறியாமல் நீ உடன் 
அனுப்பி வைக்கிறாய் சுடுகாடு !

ஆணாதிக்க சிந்தனை அகற்றப்பட  வேண்டும் .பெண்ணிய சிந்தனை விதைக்கப்பட வேண்டும் .பெண்ணை சக மனுசியாக மதிக்க வேண்டும் .அவளுக்கும் மனசு உள்ளது . அவள் கருத்துக்கும்  மதிப்பு அளிக்க வேண்டும் .

பெண் ஒரு குல விளக்கு 
பெண்ணால் கஷ்டம் நஷ்டம் என்ற 
மூட நம்பிக்கையை உடன் விலக்கு !

படைப்பாளிகள் அனைவருமே பெண் சிசுக் கொலைக்கு எதிராக படைப்புகள் படைக்க வேண்டும் எண்டு வலியுறுத்தும் விதமான   லிமரைக்கூ .

பெண்சிசுக் கொலை என்பது மடமை 
இதை மாற்றிட பாடுபடுதல் ஒவ்வொரு 
எழுத்தாளனின் தலையாய கடமை !

பிறந்த பெண் குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை .ஆனால் அதற்கு தண்டனை தருவது முறையோ ? இது தகுமோ ? என்பதை உணர்த்தும் லிமரைக்கூ .

பெண் செய்தது என்ன பழி ?
பிறந்த உடன் சமுதாயம் அவளுக்கு 
ஏன் காண்பிக்கிறது குழி ?

அறிவியல் வளர்ச்சியை மனித சமுதாயம் ஆக்க வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்து  வேண்டும் .அறிவியல் வளர்ச்சியை அழிவுக்குப் பயன்படுத்துவது மடமை .இன்று கருவில் இருப்பது ஆணா ? பெண்ணா ?  என்பதை அறிந்து பெண்  என்று  தெரிந்ததும் கருவிலேயே கதை முடிக்கும் அவலம் நகரங்களில் நடந்து வருகின்றது .அந்த அவலத்தையும்  சாடி உள்ளார் .

கள்ளிப்பாலும் நெல்லும் உயிர் குடிக்கும் 
பிறப்பதற்கு முன்பே ஸ்கேன்  கருவி 
பெண் குழைந்தையின் உயிர் முடிக்கும் !

சொல் விளையாட்டு விளையாடி லிமரைக்கூ .வடித்துள்ளார். தாய்மை உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டி உள்ளார் .

பாட இயலாது தாலாட்டு 
தாய்மனம் சோர்ந்து துவண்டு 
இசைக்கிறது துயர் பாட்டு !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா அவர்களுக்கு பாராட்டுக்கள் .ஓய்வின்றி தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி இன்னும் இன்னும் படைக்க வாழ்த்துக்கள் .


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்