படித்ததில் பிடித்தது ! .மழையே! முனைவர் ச .சந்திரா !

படித்ததில் பிடித்தது !

மழையே!  முனைவர் ச .சந்திரா !

வானத்திற்கும் பூமிக்குமான கலந்துரையாடல்


அடிக்கடி நிகழ்ந்தது அந்தக்காலம்!

இன்றோ பன்னாட்டு கருத்தரங்கமாய்

ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ

நலம் விசாரித்துச் செல்கிறாய் அயலான்போல்

சில வேளைகளில் துக்கம் விசாரிக்கிறாய்

“ வெள்ளம் ” ‍எனும் வேறொரு பெயரில்!

மழையே! அன்று நீ நதியாய் பிரவாகம்

எடுத்தாய்! நன்னிலம் பொன்னிலமாயிற்று!

மேகத்துக்கும் கடலுக்குமான ஊடலில்

இன்று விளைநிலங்கள் வீடுகளாகின்றன!

இயற்கை அன்னையின் இளம்புன்னகை

விலை பேசப்படுகிறது வேதனையுடன்

அந்நியரும் ஏக்கம்கொள்ளும் பசுமை அன்று

இந்தியா ஏற்றுமதி எனும் சொல்லைத்தன்

அகராதியிலிருந்து இழந்து நிற்கிறது இன்று

மழையே! மனிதனைத் தண்டிக்கிறேன் என்று

மண்ணோடும், வாழும் மரத்தோடும்

பகைமை கொண்டு வந்த வேகத்தில் திரும்பிச் செல்கிறாய்!

அவ்வப்போது பள்ளிக்குழந்தைகளின் இதயத்தில்

இடம் பெற்றுவிடுகிறாய் "விடுமுறை" எனும் வடிவில்!

சிணுங்கி சிணுங்கிப் பெய்யும் செல்ல மழையே!

எங்கள் மீது சினம் கொண்டு

அடித்துப்பெய்யும் நாள் எந்நாளோ

அந்நாளே எங்களுக்குப் பொன்னாள்!

கருத்துகள்