.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் விமர்சனம் : முனைவர் வா.மு..சே. ஆண்டவர்,
vimalaandu@gmail.com பேராசிரியர் பச்சையப்பன் கல்லூரி, சென்னை-30.
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் .
சென்னை .17
தொலைபேசி 044-24342810 , 044- 24310769.
மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.
சங்கத்தமிழ் வளர்த்த மதுரையின் தங்கக் கவிஞராக உலா வரும் அன்புக்குரிய நண்பர் ஹைக்கூ கவிஞர் இரவியின் “ஆயிரம் ஹைக்கூ”" என்ற நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன்.
இளைய சமுதாயம் தமிழின் பக்கம் தலை வைத்துப் படுக்க மறுக்கும் இக்காலகட்டத்தில், தமிழுக்காக தன் தலையையும், எந்த விலையையும் தரக்கூடியவர் தான் கவிஞர் இரவி.
இணையத்தில் ஹைக்கூவிற்காக அவர் வைத்துள்ள www.kavimalar.com www.eraeravi.com
இணையத்தளங்கள் உலகப்புகழ் பெற்றவை .. பெரும்பொருட்செலவு செய்து இணையத்தில் கவிதைத் துறையினை வளர்த்து வருகிறார். பாரதி சொன்ன நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செறுக்குடன் வலம் வரும் இளைஞர்.
ஹைக்கூ கவிதைக்கென்று இளைய வாசகர்கள் உண்டு. அந்த வரிசையில் முன்னணியில் இருக்கும் கவிஞர் இரவி. மற்ற எல்லா கவிஞர்களுக்கும் இடையே இவருக்குள்ள சிறப்பு, ஹைக்கூவை இயக்கமாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
ஜப்பானிய இலக்கிய வடிவமான இவ்வடிவத்தில் நம் தமிழ் மண்ணுக்குரிய பாடுபொருள்களை சமைத்து ஹைக்கூவை புதிய திசையினை நோக்கி நகர்த்துகிறார். தமிழ், சமூகம், மூடநம்பிக்கை ஒழிப்பு, இயற்கை, தத்துவம், பெண்கள் மேம்பாடு, போலி அரசியல் என பல பாடுபொருள்களில் இவரது கவிதைகள் செல்கின்றன.
உலகளாவிய நிலையில் பறந்த தமிழன், இன்று தனக்கென்று நாடு இல்லாமல் அகதிகளாக இருக்கும் நிலையைக் கண்டு கொதித்தெழுகிறார்.
இல்லாத நாடில்லை
இவனுக்கென்று ஒரு நாடில்லை
தமிழன் !
என்கிறார்.
அண்மையில் “ஈழ ஏதிலியர் (அகதிகள்) ஓர் அறைகூவல்" என்ற தொகுப்பு நூலை இரா. இரவி மதுரையில் மிகச்சிறப்பாக, அரசரடியில் இறையியல் கல்லூரியில் வெளியிட்டார். ஈழ மக்கள் மீதும், ஈழ மண் மீதும் அவர் வைத்துள்ள அன்பு, எங்களையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்தது. கவிதை எழுதுவது மட்டுமல்ல; செயல் துடிப்புள்ள வீர இளைஞர் இவர்.
சில நேரங்களில் “போலிகள் வென்று விடும்; நிஜங்கள் தோற்று விடும், இதனை அழகிய கவிதையாக வடிக்கிறார்.
அசலை வென்றது
நகல்
செயற்கைச் செடி !
என்ற வரியில் இவரது கூரிய பார்வை தொடுகிறது.
மேலும் பல முற்போக்கு சிந்தனைகளின் விளைநிலமாக இரவி திகழ்கிறார். உலக நாடுகள் எல்லாம் தூக்குத் தண்டனை ஒழித்து மனித உரிமையை போற்றி வரும் இந்த நாளில், தமிழ்நாட்டில் பேரறிவாளன், முருகன், நளினி போன்றவர்கள் தூக்கு தண்டனை கைதிகளாய் சிறைக்குள் இருப்பதனை தன் கவிதையில் சாடுகிறார்.
கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித் தனம்
தூக்குத் தண்டனை !
முரட்டுத் தனமான கொடிய சட்டங்கள் இந்த ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல . என உரைக்கிறார்.
அண்மையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் ‘கருப்பு மை' வைத்து வாக்காளர்கள் முகத்தில் கரி பூசும் நிகழ்ச்சியாகவே இருக்கிறது. இன்று வறுமைக்கோட்டுக்கு கீழ் 30 கோடி மக்கள் வாழ்கிறார்கள். வாக்காளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதனை சிறந்த கவிதையாக வடிக்கிறார்.
இலவு காத்த கிளியாய்
விடியல் நோக்கி
வாக்காளர்கள் !
என்கிறார்.
அற்புதமான இயற்கை ஆர்வலராக இருப்பது அவர் கவிதை வழி எனக்குத் தெரிந்தது.
மழையில் நனைந்தும்
வண்ணம் மாறவில்லை
வண்ணத்துப்பூச்சி !
மிகச் சிறப்பான கவிதை. இக்கவிதை சிறப்பை விரிவாக பேச முடியும். இன்னொன்று பட்டுப் புடவை அணிந்து வரும் பெண்கள். ஆனால் இரவி அழகை பார்க்காது, பட்டு புடவைக்காக அழிக்கப்பட்ட பட்டு புழுக்களைப் பற்றி கவலைப்படுகிறார். இங்கே தான் கவிஞர் நிற்கிறார்.
பட்டுப் பூச்சிகளின்
அழுகுரல்கள்
பட்டுப் புடவைகளில் !
நேர்த்தியான ஹைக்கூ கவிதை.
நீ-கோன் என்ற ஜப்பானிய சொல்லுக்கு, சூரியன் வலம் வருதல் என்று பொருள். அதே போல் தமிழ் வானில் உலா வரும் கவிஞர் என்ற சூரியன் இன்னும் பெரிய சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.
ஜப்பானிய மொழி நான் படித்தேன். இரண்டு முறை ஜப்பான் சென்று வந்து என் ஹைக்கூ நூலினை ஜப்பானில் வெளியிட்டேன். அங்கு நம் இரவி போன்ற கவிஞர்களின் கவிதைகளை ஜப்பானில் எடுத்து சொன்னேன். ரசித்தனர். நம் தமிழ் இன ஹைக்கூ கவிஞர்கள் கவிதைகளை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்து அதனை ஜப்பானில் வெளியிட வேண்டும். அதற்கு ஜப்பானிய மொழி அறிந்த பேராசிரியர்களும், இரவி போன்ற இளைய கவிஞர்களும் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்தால் “வானம் நமக்கு வசப்படும்".
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக